மேற்கு வங்காளத்தின் (West Bengal) துர்காபூரைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியர் (Teacher) சிரஞ்சித் திபார் (Chiranjit Dibar), கொரோனா வைரஸ் கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபரானார். வரும் நாட்களில், வைரசுக்கு எதிரான ஆண்டி பாடிக்களை உருவாக்கும் ஆண்டிஜனைப் பெற, திபார் ஒடிசாவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திபார் ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டராவார். கோவிட் தடுப்பு மருந்துக்கான மனித சோதனையின் (Human Trial) பல்வேறு கட்டங்களில் கலந்துகொள்ள அவர் தானாக முன்வந்துள்ளார். இந்த தடுப்பு மருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் பாரத் பயோடெக் (Bharat Biotech) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு வருகிறது. தனது பேஸ்புக் பக்கத்தில் செய்தியை உறுதிப்படுத்திய திபார், தான் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாகவும், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மருத்துவ பரிசோதனைக்காக தனது உடலை நாட்டிற்கு தானம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் எழுதியுள்ளார். ஏப்ரல் மாதத்திலேயே இந்த மருத்துவ பரிசோதனைக்கு திபார் விண்ணப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) அன்று, திபார் ஐ.சி.எம்.ஆரின் பாட்னா மையத்திலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அழைப்பு வந்தது.
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் CDSCO (மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு), இந்தியாவில் தயாரிக்கப்பட்ட COVAXIN மற்றும் ZyCovid-D ஆகிய இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளின் மனித மருத்துவ பரிசோதனைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூற்றுப்படி, உலகெங்கிலும் தற்போது 140 க்கும் மேற்பட்ட COVID-19 தடுப்பு மருந்துகள் உருவாக்கத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அவற்றில் 11 மனித சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக