கொரோனாவால் இந்தியாவில் பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டு நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை, முதலீட்டுச் சந்தை, பொருளாதார வளர்ச்சி எனச் சகலமும் பாதிக்கப்படைந்திருக்கும் நிலையில் டெலிகாம் துறை இக்காலகட்டத்தில் அதிகளவிலான பாதிப்பைச் சந்தித்துள்ளது. நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் பல கோடி மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சொந்து ஊருக்கே செல்லும் மோசமான நிலையில் ஏற்பட்டது.
இது டெலிகாம் நிறுவனங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு பக்கம் Work From Home முடிவால் மக்கள் அனைவரும் அதிகளவிலான இண்டர்நெட் டேட்டாவை பயன்படுத்தினாலும், மறுபக்கம் அதிகளவிலான டெலிகாம் வாடிக்கையாளர்கள், ரீசார்ஜ் செய்யப் பணம் இல்லாமலும், சொந்த ஊருக்குச் செல்லும் காரணத்தாலும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கிட்டதட்ட 1 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
டெலிகாம் நிறுவனங்களாகத் திகழும் ஏர்டெல் மற்றும் ஐடியா வோடாபோன் ஏப்ரல் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1 கோடி வாடிக்கையாளர்களை இழந்து ஒட்டுமொத்த டெலிகாம் துறையை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தத் திடீர் வாடிக்கையாளர்கள் சரிவின் மூலம் ஜூன் காலாண்டு வருவாய் மற்றும் லாப அளவீடுகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்களுக்கும் இது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகவே உள்ளது.
1 கோடி வாடிக்கையாளர்கள்
ஏப்ரல் 2020ல் மட்டும் ஏர்டெல் 52.6 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஐடியா வோடபோன் 45.1 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாகிய காரணத்தால் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வெளிமாநில ஊழியர்களும், குறைவான சம்பளம் கொண்ட வாடிக்கையாளர்களும் தங்களது மொபைல் இணைப்பை துண்டித்துள்ளதாகத் தெரிகிறது.
ஜியோ
ஆனால் இதே காலக்கட்டத்தில் இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் மற்றும் ஐடியா வோடபோன் நிறுவனங்களுடன் கடுமையாகப் போட்டி போட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ 15.7 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாகச் சேர்த்துள்ளது.
இந்த மோசமான காலக்கட்டத்திலும் ஜியோவின் Work From Home ஆஃபர் மற்றும் மலிவான டேட்டா கட்டணம் எனப் பல்வேறு சலுகையின் காரணமாகப் புதிதாக 15.7 லட்ச வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது ஜியோ.
மொத்த வாடிக்கையாளர்
இதன் மூலம் ஏப்ரல் மாத முடிவில் இந்திய டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 82.3 லட்சம் குறைந்து, மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 114.9 கோடியாகக் குறைந்துள்ளது.
கட்டண உயர்வு
கடந்த டிசம்பர் மாதத்தில் தான் ஏர்டெல், ஐடியா வோடபோன் மற்றும் ஜியோ ஆகிய 3 நிறுவனங்களும் தனது ப்ரீபெய்டு கட்டணங்களை 3 வருடத்தில் முதல் முறையாக 14 முதல் 33 சதவீதம் உயர்த்தியது. இந்தக் கொரோனா காலகட்டத்தில் சாமானியர்களிடம் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் பல இணைப்புகளுக்குச் செலவு செய்ய முடியாமல் இணைப்பைத் துண்டித்துள்ளனர்.
சீனா
டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் சீனாவிலும் கொரோனா பாதித்த ஜனவரி முதல் மார்ச் மாத காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.
சீனா டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை எப்போதும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும் ஆனால் முதல் முறையாகச் சரிவைச் சந்தித்துச் சீன டெலிகாம் சந்தையைப் பயமுறுத்தியது மறக்கமுடியாத. தற்போது இதேபோன்ற நிகழ்வு இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக