Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஜூலை, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 061

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்...!!

சோழவள நாட்டில் பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை வயம், கழுமலம் என்னும் பன்னிரு திருப்பெயர்களை உடைய ஊர்தான் சீகாழிப்பதி.  கவுணியர் கோத்திரத்தில் அந்தணர் குலத்தில் சிவபாத இருதயர் என்னும் வேதியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர்தம் அருமை துணைவியாராக அமைந்தவர் பகவதியார் ஆவார். இருவரும் இணைந்து சிவநெறி போற்றி வாழ்ந்து வந்தாலும் அனைவரும் போற்றும் வகையில் இல்லற வாழ்க்கை நடத்தி வந்தார்கள். 

அவர்கள் வாழ்ந்து வந்த காலத்தில் சைவ சமயம் பலம் குறைந்து சமண, புத்த சமயங்கள் தலைதூக்கி நின்றன. பிறவியை பற்றி எடுத்து உரைக்கும் சைவ மதத்தில் மக்கள் ஆர்வம் இன்றி மற்ற சமயங்களின் மீது மக்கள் ஈடுபட்டு இருப்பதைக் கண்டு மனம் வாடினார்கள். அவற்றைக் கண்ட சிவபாத இருதயர் பரசமயம் நிராகரித்து நீறாக்கும் மைந்தர் ஒருவரை தமக்கு தந்தருளுமாறு திருத்தோணிபுரத்து இறைவனை வேண்டி அவருக்கு தம்மால் இயன்ற தொண்டுகளை செய்து வந்தார். இவர்கள் செய்துவந்த அரும் பணியால் மனம் மகிழ்ந்த திருத்தோணிபுரத்து இறைவர் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அருள்புரிய துவங்கினார்.

அதாவது, எம்பெருமானின் அருளால் பகவதியார் கருவுற்றாள். வைகாசி முதல் நாளன்று சைவம் தழைக்க திருஞானசம்பந்த பெருமான் பகவதியாருக்கும், சிவபாத இருதயருக்கும் திருமகனாய் அவதாரம் செய்தார். தங்களுக்கு மகன் பிறந்த செய்தியை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை புதல்வரை காண வந்த அனைவருக்கும் பொன்னும், பொருளும் கொடுத்து அனுப்பினார்கள். மகன் பிறந்த மகிழ்ச்சியில் எம்பெருமானுக்கு பலவிதமான அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ந்து கொண்டு இருப்பது யாவற்றையும் காணும் பொழுது ஏதோ திருவிழா நிகழ்ந்ததைப் போல அவ்வூர் மக்களுக்கு காட்சி அளித்தது.

குழந்தையான திருஞானசம்பந்தர் அன்னையின் மடியிலும், தந்தையின் அன்பிலும் வளர்ந்து வந்தார். காலங்கள் உருண்டோட தொடங்கின. சிறு குழந்தை பருவத்தை மகிழ்ச்சியோடு கழித்து கொண்டிருந்தார். விதியின் வலிமையை வேறுவிதமாக செயல்பட துவங்கியது. யாராலும் எதிர்பார்க்க முடியாத, எவரும் சிந்திக்காத ஒரு எதிர்பாராத நிகழ்ச்சியானது திருஞானசம்பந்தர் வாழ்க்கையில் ஒரு பாக்கியமாகவே அவருக்கு கிடைக்க தொடங்கியது.

எப்போதும் போல் சிவபாத இருதயர் கோவிலை அடுத்துள்ள பொற்றாமரை குளத்திற்கு நீராட சென்றார். அப்பொழுது இரண்டு வயதை நிறைவு செய்து மூன்றாம் வயதில் அடியெடுத்து வைத்தார் சம்பந்தர். அவ்வயதில் தனது தந்தை செல்வதை கண்டதும் உடனே அவர் தன்னுடைய அழகிய கமலப் பாதங்களால் அவரை பின்தொடர்ந்த வண்ணமாகவே சென்று கொண்டு இருந்தார். தன்பிள்ளை அடி எடுத்தும், தவழ்ந்தும் வருவதை கண்டதும் மனம் மகிழ்ந்த சிவபாத இருதயர் மகனை விட்டு செல்ல மனமில்லாமல் தன்னுடனே நீராட அழைத்துச் சென்றார்.

நீராடும் குளத்திற்கு அருகில் வந்ததும், தனது புதல்வனை குளத்தின் கரையிலேயே பாதுகாப்பாக வைத்துவிட்டு நீராடுவதற்காக குளத்தில் இறங்கினார். மனதில் மந்திரங்களை கூறிய வண்ணமாக குளத்து நீரில் மூழ்கினார். கரையிலிருந்த வண்ணமாக தன் தந்தையை கண்டு வந்த சம்பந்தர் தன் தந்தையை காணாது மனம் கலங்கினார். கண்களில் நீர் கசிய சுற்றும் முற்றும் பார்த்த வண்ணமாக குளத்தின் அருகில் இருந்த கோவிலின் கோபுரத்தை கண்ட வண்ணமாக அம்மே.. அப்பே.. என தன்னுடைய கமல இதழ்களால் கூறிய வண்ணமாக அழ துவங்கினார். அவ்வேளையில் வான் வீதி வழியாக பேரொளி எழும்ப தோணியப்பரும், உமாதேவியாரும் அவ்விடத்தில் எழுந்தருளினர்.

எம்பெருமான் உமாதேவியாரிடம் நமது தொண்டனுக்கு சிவஞானம் முழுவதுமாக நிரம்பிய பாலை பொற்கிண்ணத்தில் ஊட்டுவாயாக... என்று கூறினார். தேவியோ குழந்தையின் அருகில் சென்றதும் குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். குழந்தையை தம் மடியின் மீது படுக்க வைத்து தன்னுடைய மார்பில் இருக்கும் பாலை பொற்கிண்ணத்தில் ஏந்திய வண்ணமாக குழந்தையின் விழிகளில் வழிந்தோடிய நீரைத் துடைத்தார். சிவஞான அமுதம் கலந்த கரங்களில் ஏந்திய வண்ணமாக குழந்தையின் கையைப் பிடித்தவாறு பார்வதி தேவியார் பாலை பருகச் செய்தார்.

பாலை குடித்ததும் குழந்தை அழுவதை நிறுத்தி புன்னகை பூக்கத் துவங்கியது. திருத்தோணியப்பராலும், உமாதேவியாராலும் ஆட்கொள்ளப்பெற்ற குழந்தை ஆளுடைப் பிள்ளையார் என்னும் திருநாமம் பெற்றது. அமரருக்கும், அருந்தவசியருக்கும் அறிவதற்கு அரிய பொருளாகிய ஒப்பற்ற சிவஞான செல்வத்தை சம்பந்தம் செய்ததனால் சிவஞான சம்பந்தர் என்னும் திருநாமமும் பெற்றார். அப்பொழுதே சம்பந்தர் உவமையில்லாத கலைஞானத்தைப் பெற்று விளங்கும் பெருமகனானார்.

குளத்தில் மூழ்கி நியமங்களை முடித்து கரையேறினார் சிவபாத இருதயர். பிள்ளை ஒப்பற்ற ஞானத்தோடு பேருணர்வு பெற்று விளங்குகின்றார் என்ற உண்மையை அவர் அறிந்திலார். குழந்தையருகில் வந்த சிவபாத இருதயர் தனது குழந்தையின் பிஞ்சு கரங்களில் பொற்கிண்ணம் இருப்பதை கண்டார். செக்க சிவந்த செங்கனி இதழ்களில் பால் வழிவதனையும் கண்ட அந்தணர் ஐயமுற்றார். பால் மணம் மாறாத பாலகனுக்கு எவரோ எச்சிற்பால் ஊட்டிச் சென்றனரே என ஐயமுற்றார்.

எதுவும் அறியாத சிறு பாலகனை கோபம் கொண்ட பார்வையோடு பார்த்தது மட்டும் இல்லாமல் பாலகனுக்கு அருகில் கிடந்த சிறு குச்சியை தம்முடைய கரங்களில் எடுத்துக் கொண்டார். பின்னர் பாலகன் அருகே சென்று உமக்கு எச்சிற்பாலை கொடுத்தது யார்? என்று எனக்கு காட்டு என்று மிகுந்த சினத்துடன் கேட்டார். தந்தையின் கோபம் கொண்ட மொழிகளை கேட்டதும் சம்பந்தர் கண்களில் கண்ணீர் ததும்பியது.

ம்பந்தர் ஒரு காலை தூக்கி ஒரு திருக்கை விரலை உச்சி மேல் உயர்த்தி விண்ணில் விடையின் மேல் பேரொளியோடு எழுந்தருளிய எம்பெருமானை சுட்டிக்காட்டினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர்ந்த ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்து தனக்கு பாலளித்த உமையம்மையின் தோடணிந்த திருச்செவியை சிறப்பிக்கும் முறையில் 'தோடுடைய செவியன்" என்ற முதற்பெரும் பாடலால் தனக்கு பாலளித்த கடவுளின் அடையாளங்களை சுட்டி திருப்பதிகம் அருளினார். 

அதனைக் கேட்ட சிவபாத இருதயர் அடித்ததற்கு என ஓங்கிய கோலானது அவரையும் அறியாமல் அவருடைய கரங்களில் இருந்து நழுவி கீழே விழுந்தது. தம்முடைய மகன் இறைவனின் பரிபூரண அருளை பெற்றுள்ளான் என்பதை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல் ஆனந்தக் கூத்தாடினார்.

செந்தமிழ் பதிகத்தால் மெய்ப்பொருளை உணர்த்திய தம்முடைய புதல்வரின் முகத்தில் இறைவனின் தோற்றத்தை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் சிவபாத இருதயர். பின்பு சம்பந்தர் தோணியப்பர் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு செல்ல மெல்ல தம் சீரடிகளை எடுத்து வைத்தார். திருஞானசம்பந்தர் தந்தையாருடன் வர... ஆலயம் சென்ற சம்பந்தர் பிரமபுரத்துப் பெருமானை வணங்கிப் போற்றி பதிகம் ஒன்றைப் பாடினார். இந்த நிகழ்வானது கதிரவனின் ஒளி பரவுவது போல நாட்டின் எட்டு திக்கிலும் பரவ துவங்கியது.

உமையவளின் ஞானப்பாலை உண்ட திருஞானசம்பந்தரின் அருஞ்செயலை நேரில் காண ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். திருஞானசம்பந்தர் தம்மை காண வந்த அனைவருக்கும் எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மேல் வந்து தம்மை ஆட்கொண்டு அருளிய நிகழ்வினை எடுத்து உரைத்தார். இதனை கேட்ட அனைவரும் திருஞானசம்பந்தரை போற்றிய வண்ணமாக வரவேற்க, சிவபாத இருதயர் பிள்ளையாரை தம் தோள் மேல் அமர்த்தி கொண்டு தம் இல்லம் சென்றடைந்தார்.

பகவதியார் தமது தவச் செல்வனை ஆரத்தி எடுத்து வாரி அணைத்து முத்தமாரி பொழிந்தார். அந்த நொடியில் இந்த உலகையே மறந்து மகிழ்ச்சி கொண்டார் திருஞானசம்பந்தர். வியக்கத்தக்க திருவருளை பரமனின் அருளால் பெற்ற திருஞானசம்பந்தர் தந்தையாருடன் சிவத்தலங்கள் தோறும் சென்று ஆலய தரிசனம் செய்ய எண்ணினார். ஒரு நாள் தந்தையாருடன் ஆலய தரிசனம் காணப் புறப்பட்டார். அடுத்துள்ள திருக்கோலக்காவை அடைந்தார். அங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமானை வழிபட்டார்.

கையினால் தாளம் போட்டு கொண்டே, மடையில் வாளை பாய எனத் தொடங்கும் பதிகம் ஒன்றை பாடி கொண்டிருந்தார். பிஞ்சுக்கரம் சிவக்கத் தாளம் போடுவதை பார்த்த செஞ்சடை வண்ணர் ஐந்தெழுத்து மந்திரம் எழுதிய பொன்னாலான இரண்டு தாளங்களை திருஞானசம்பந்தரின் திருக்கை மலரில் வந்து தங்குமாறு திருவருள் பாலித்தார். திருஞானசம்பந்தர் இறைவனின் கருணையை எண்ணி உள்ளமும், உடலும் பூரித்தார். இறைவன் அருளால் தம் அங்கை மலரிலே வந்து தங்கிய பொற்தாளங்களை சிரம் மீது எடுத்து வணங்கினார். அவற்றாலே தாளம் போட்ட வண்ணம் ஏழிசைகளும் தழைத்தோங்குமாறு, பக்திப் பெருக்கோடு தமிழிசை பொழிந்து திருக்கடைக் காப்பு சாற்றி நின்றார்.

திருஞானசம்பந்தருக்கு பொன்னாலான தாளம் அளித்தமையால் அங்கு எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு திருத்தாளமுடையார் கோவில் என்று அத்தலத்திற்கு சிறப்பு பெயர் தோன்றியது. அத்தலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை கண்டு மனம் மகிழ்ந்த தந்தையார் திருஞானசம்பந்தரை தம் தோள் மீது சுமந்து கொண்டு சீர்காழிக்கு வந்து நின்றார். எம்பெருமானின் திருவிளையாடல் தீப்பொறி போல அனைத்து இடங்களிலும் பரவியது.

திருஞானசம்பந்தர் சீர்காழி நோக்கி வந்து கொண்டு இருக்கிறார் என்ற தகவல்களை அறிந்ததும் சீர்காழியில் உள்ள தொண்டர்களும், சுற்றுப்புற ஊர்களிலுள்ள சிவத் தொண்டர்களும் கூட்டம் கூட்டமாக திருஞானசம்பந்தரை காண வந்தனர். சீர்காழியில் தன்னைக் காண வந்த அடியார்களுடன் சம்பந்தர் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு சென்றார். தோணியப்பரை எட்டுப் பதிகங்கள் அடங்கிய கட்டளை ஒன்றில் அமைந்த 'பூவார் கொன்றை" என்ற தேவாரப் பதிகம் பாடி வணங்கினார்.

எம்பெருமானின் பரிபூரணமான அருளைப் பெற்ற சிவனருட் செல்வரான திருஞானசம்பந்தரை கண்டதில் சீர்காழி அன்பர்கள் மட்டற்ற மகிழ்ச்சியும், பேரின்பத்தையும் பெற்றார்கள். சிறுவயது முதலே எம்பெருமானுக்கு சம்பந்தர் பலவிதமான தொண்டுகளையும் செய்து கொண்டு வந்திருந்தார். இவ்விதமாக திருத்தொண்டு புரிந்து வரும் நாளில் திருநனிப்பள்ளியில் இருக்கும் சிவ அன்பர்கள் தங்களை காண திருநனிப்பள்ளி ஊருக்கு எழுந்தருள வேண்டும் என்று திருஞானசம்பந்தரை கேட்டு கொண்டனர்.

ஒருநாள் திருஞானசம்பந்தர் தாயின் ஊராகிய திருநனிப்பள்ளிக்கு புறப்பட்டார். தந்தையார் தனது மகனை தோளில் சுமந்தபடி நடந்தார். திருநனிப்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் பெருமானை தமிழ்மறை பல பாடி வணங்கியவாறு புறப்பட்டார். திருவலம்புரம், பல்லவனீச்சரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருமுல்லைவாயில் முதலிய சிவத்தலங்களை தரிசித்த வண்ணம் மீண்டும் சீர்காழியை வந்தடைந்தார் திருஞானசம்பந்தர். பின் அவர் சீர்காழியில் இருந்த வண்ணமாக சுற்றுப்புறத்திலுள்ள பல சிவத் தலங்களை தரிசித்து பதிகங்கள் பாடி வந்தார்.

திருஞானசம்பந்தர் எம்பெருமானுக்கு செய்து வரும் திருப்பணியை கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவரது மனைவியாராகிய மதங்கசூளாமணியாரும் திருஞானசம்பந்தரை தரிசிக்க சீர்காழிக்கு வந்தனர். திருஞானசம்பந்தர் அவர்கள் தம்மை வீழ்ந்து வணங்கும் முன்பே அன்போடு வீழ்ந்து வணங்கி எழுந்தார் யாழ்ப்பாணர். திருஞானசம்பந்தர் தேவார அமுதும் பொழிந்தார்.

அத்தேவார அமுதத்தைப் பாணர் தம்பதியர் யாழிசைத்து மகிழ்ந்தனர். திருஞானசம்பந்தர் பைந்தமிழால் எம்பெருமானை போற்றி பாட... அவருடைய பாடலுக்கு பாணர் யாழிசைக்க... அப்பாடலும், இசையும் பரவிய இடமெங்கும் பாலும், தேனும் கலந்தாற்போல் எங்கும் தமிழ் மழை பொழிந்தது. யாழ் இசைத்தவர்கள் இதனால் அடைந்த மகிழ்ச்சி என்பது சொல்லில் அடங்கா வண்ணமாக இருந்தது.

இவ்விடத்தில் கிடைத்த மகிழ்ச்சி எந்நாளும் கிடைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்கசூளாமணியாரும் திருஞானசம்பந்தருடனேயே இருந்து அவருடைய பாசுரங்களை யாழில் இசைக்கும் அரும் பெரும் தொண்டை மனங்குளிர, பரமன் செவி குளிர... கேட்போர் உள்ளம் உருக... தொடர்ந்து நடத்தினார். இவ்விதமாக வாழ்ந்து வரும் நாளில் திருஞானசம்பந்தருக்கு தில்லையில் எழுந்தருளியிருக்கும் நடராசப் பெருமானை வழிபட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. தம் மனதில் எழுந்த எண்ணத்தை தன் தந்தையாரிடம் கூறினார். இவ்வெண்ணத்தின் விளைவாக யாழ்ப்பாணரோடு தந்தையாரையும் அழைத்துக் கொண்டு தில்லைக்கு புறப்பட்டார் திருஞானசம்பந்தர். தந்தையார், திருஞானசம்பந்தரை தோளில் சுமந்து கொண்டு மகிழ்வோடு புறப்பட்டார்.

சீர்காழியில் இருந்து வந்த சிவ அன்பர்களும் திருஞானசம்பந்தரின் பயணம் நன்முறையில் அமைய எம்பெருமானை மனதில் எண்ணிய வண்ணம் வழி அனுப்பி வைத்தனர். எம்பெருமானின் அருள்பெற்ற திருஞானசம்பந்தர் தில்லைக்கு வந்து கொண்டு இருக்கின்றார் என்ற செய்தியை அறிந்ததும் அவரை வரவேற்க தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள துவங்கினார்கள். திருஞானசம்பந்தர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியை கடந்து தில்லையை சென்றார். தில்லைவாழ் அந்தணர்கள், திருஞானசம்பந்தரை பூரண பொற்கும்ப கலசங்கள் வைத்து வரவேற்று வீதி வழியே அழைத்துச் சென்றனர்.

தில்லை திருவீதியையும், எழுநிலைக் கோபுரத்தையும் வணங்கியவாறே ஆலயத்தை வலம் வந்த திருஞானசம்பந்தர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. பதிகம் பாடிக்கொண்டே தெற்கு ராஜகோபுரத்தின் தென்திசை வாயில் வழியே ஆலயத்தினுள் சென்று எம்பெருமானை வணங்கி 'கற்றாங்கு எரியோம்பி", 'ஆடினாய் நறுநெய்" என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார். அவரது பாடல்களை பாணரும், அவரது மனைவியாரும் யாழில் இசைத்தனர். 

தில்லையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை விட்டு பிரிய மனம் இல்லாமல் பல நாட்கள் அங்கேயே தங்கியிருந்து எம்பெருமானை வழிபட்டு வந்தார். தில்லையில் தங்கியிருந்த காலத்தில் திருஞானசம்பந்தர் தில்லைக்கு அருகிலுள்ள திருவேட்களம் சென்றார். அங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமானை வழிபாடு செய்த வண்ணமாக திருக்கோவிலிலேயே தங்கி இருந்து அரணாரை பைந்தமிழால் பாடி, உள்ளம் உருகி மகிழ்ந்தார். 

அவ்விடத்தில் இருந்து எம்பெருமானை வழிபாடு செய்து வந்தாலும் அவர் அடிக்கடி தில்லைக்கு வந்து சிற்றம்பலத்தையும் தரிசனம் செய்து வந்தார். அவ்வேளையில் அவர்களுடன் இருந்து வந்த யாழ்ப்பாணரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடைய சொந்த ஊராகிய திருஎருக்கத்தம்புலியூருக்கு வருகை தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருஞானசம்பந்தர் புறப்பட்டார். அவ்விதம் பயணம் மேற்கொள்ளும்போது ஆங்காங்கே எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு திருப்பதிகங்களை பாடி கொண்டே சென்றார். திருஎருக்கத்தம்புலியூரை அடைந்தவுடன் 'இத்தலம் அடியேன் பிறந்த தலம்" என யாழ்ப்பாணர் கூறக்கேட்டு மகிழ்ந்து திருக்கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார். 

திருஞானசம்பந்தர் திருஎருக்கத்தம்புலியூரிலிருந்து திருமுதுகுன்றம், திருப்பெண்ணாகடம் ஆகிய தலங்களை வணங்கி கொண்டு திருநெல்வாயில் அரந்துறையை தரிசிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அத்தலத்தில் இருக்கும் இறைவனுக்கு உச்சிநாதர் என்று பெயர். அப்பெயரின் காரணத்திலேயே அத்தலத்திற்கு திருவுச்சி என்றும் பெயர் ஏற்பட்டது.

தம் மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தந்தையார் அவரை தம்முடைய தோள்களில் சுமந்த வண்ணமாக புறப்பட்டார். தந்தையார் தம்மை தூக்கிக்கொண்டு நடப்பதை கண்டு திருஞானசம்பந்தர் மனம் கலங்கினார். தந்தையாரிடம் தம்மை தோளில் தூக்கி செல்ல வேண்டாம் என்று கூறிய திருஞானசம்பந்தர், தமது பட்டுப்பாதம் நோவதையும் அறியாது தம்முடன் வந்தவர்களுடன் நடக்க துவங்கினார்.

தம்முடைய மகன் கால்கள் நோக நடந்து வருவதை கண்ட தந்தையாரும், அவர்களுடன் இருந்த மற்ற அடியவர்களும் மிகவும் பரிவுற்றனர். திருநெல்வாயில் அரத்துறையை அணுகியபோது மாலை நேரம் வந்தது. இவர்கள் பயணம் மேற்கொண்ட வழியின் வழியே மாறன்பாடி என்னும் தலம் ஒன்று எதிர்ப்பட்டது. நடந்த வந்ததால் களைப்பு ஏற்பட... இரவு நெருங்கவே திருஞானசம்பந்தர் அடியவர்களோடு மாறன்பாடி என்ற தலத்தில் தங்கினார்.

திருஞானசம்பந்தர் பாதம் வலிக்க நடந்து வருவதை அறிந்த எம்பெருமான் அரத்துறையில் வாழ்ந்து வந்த சிவனடியார்களின் கனவில் தோன்றி என்னை காண்பதற்காக என் அடியான் மிகவும் வருந்தி நடந்து வந்து கொண்டு இருக்கின்றான். அவனுக்காக முத்து சிவிகையில், முத்து குடையையும், முத்து சின்னங்களையும் வைத்திருக்கின்றோம். அவற்றை எடுத்து சென்று எம்மை வழிபட வருகின்ற சம்பந்தரை அழைத்து வர வேண்டும் என எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.

எம்பெருமான் அடியார்களின் கனவில் தோன்றி மறைந்ததும் அடியவர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்து, என்ன செய்ய வேண்டும்? என தெரியாமல் அனைவரும் விழித்தனர். பின்னர் எம்பெருமானின் ஆணையை நிறைவேற்றுவது என்ற எண்ணம் கொண்டு திருஞானசம்பந்தரை காண எம்பெருமான் அருளிய பொருட்களை எடுத்துச் செல்ல பொழுது என்றும் பாராமல் ஆயத்தமானார்கள்.

எம்பெருமான் திருஞானசம்பந்தர் சொப்பனத்தில் தோன்றி உனக்கு யாம் மகிழ்ந்து அளிக்கும் முத்து சிவிகை, முத்துக்குடை முதலியவற்றை ஏற்றுக் கொண்டு என்னை காண வருவாயாக என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார் திருஞானசம்பந்தர். எம்பெருமானுடைய அருளின் மகிமையை எண்ணி அவரை போற்றி பதிகம் ஒன்றை பாடினார்.

பொழுதும் தொடங்க எம்பெருமானின் ஆணைப்படியே அரத்துறையில் வாழ்ந்த வந்த அடியார்கள், திருஞானசம்பந்தரை அழைத்து செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். வந்திருந்த அடியவர்கள் திருஞானசம்பந்தரை வணங்கி அவரிடம் எம்பெருமான் சொப்பனத்தில் கூறியவற்றை எடுத்துரைத்து அவரை முத்து சிவிகையில் எழுந்தருளுமாறு வேண்டினர்.

முத்து சிவிகையில் எழுந்தருளிய திருஞானசம்பந்தரை அடியவர்கள் தூக்கிச் செல்ல துவங்கினார்கள். திருநெல்வாயில் மெய்யன்பர்கள் திருஞானசம்பந்த பெருமானையும், அவரது தந்தையாரையும், உடன் வந்த அடியார்களையும் திருநெல்வாயில் அரத்துறை திருக்கோவிலுக்கு மேளதாள இன்னிசை முழக்கத்துடன் அழைத்து கொண்டு புறப்பட்டனர். திருஞானசம்பந்தர் அரத்துறை அரணாரை வழிபட்டு பதிகம் பலவற்றை பாடினார்.

திருஞானசம்பந்தர் பாடிய பதிக பாடலால் மனம் மகிழ்ந்த அடியவர்கள் சில நாட்கள் இவ்வூரில் தங்குமாறு வேண்டி கேட்டு கொண்டனர். அடியார்களின் விருப்பத்திற்கு இணங்கி சில காலம் திருநெல்வாயிலில் தங்கினார் திருஞானசம்பந்தர். அங்கு இருந்த வண்ணமாக அருகிலுள்ள எம்பெருமான் எழுந்தருளியுள்ள பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு பிறகு சீர்காழியை வந்தடைந்தார்.

சீர்காழி பகுதியில் தங்கிய திருஞானசம்பந்தர் தமக்கு கிடைத்த ஒவ்வொரு நாட்களையும் தோணியப்பரை பாடி பரவசமுற்றார். திருஞானசம்பந்தருக்கு உரிய பருவத்தில் அவரது பெற்றோர்கள், முப்புரி நூலணியும் சடங்கினை அனைவரும் வியக்கும் வண்ணமாக சீரோடும், சிறப்போடும் செய்து முடித்தனர். திருஞானசம்பந்தர் சீர்காழியில் தங்கி இருக்கும் நாளில் திருஞானசம்பந்தருடைய அன்பையும், அருளையும், ஞானத்தையும், மேன்மையையும் கேள்வியுற்ற திருநாவுக்கரசர் சீர்காழிக்கு வந்தார்.

அவரது வருகையை முன்னதாகவே தெரிந்துக்கொண்ட திருஞானசம்பந்தர் அன்பர் புடைசூழ அப்பரடிகளை எல்லையிலேயே எதிர்கொண்டு வரவேற்றார். அதன்பின் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அகமகிழ்ந்து களித்தனர்.

திருஞானசம்பந்தர் கரங்குவித்து இன்பம் பெருக இன்மொழியால் 'அப்பரே" என்றழைக்க...

திருநாவுக்கரசர் அவரை நோக்கி அடியேன் என்று உள்ளம் உருக வணங்கினார்.

ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கொண்டிருந்த காட்சியை கண்ட அங்கு இருந்த சிவனடியார்கள் அனைவரும் மகிழ்ச்சி கொண்டனர். பின்பு இருவரும் மங்கள இசை முழங்க எம்பெருமான் வீற்றிருக்கும் திருக்கோவிலுக்கு சென்று பதிகம் பாடி எம்பெருமானை வழிபட்டனர். பின்பு தம்முடைய மாளிகைக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தார் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தரின் வேண்டுகோளை தவிர்க்க இயலாமல் அவருடன் அவரது மாளிகைக்கு எழுந்தருளினார் திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர் தமது வீட்டில் எழுந்தருளிய திருநாவுக்கரசருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், பணிகளையும் செவ்வனே செய்து அவருக்கு வேண்டிய திருவமுது அளித்து மனம் மகிழ்ந்தார். சில நாட்கள் திருஞானசம்பந்தருடன் திருநாவுக்கரசர் தங்கி இருந்தார்.

பின்பு எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் பிற தலங்களை திருநாவுக்கரசர் வழிபட விரும்பியதால் திருஞானசம்பந்தரிடம் தம்முடைய மனதில் தோன்றிய விருப்பத்தை தெரிவித்தார். பின் திருஞானசம்பந்தரும் அவரை தடுக்க இயலாமல் அவரின் விருப்பத்திற்கு இணங்க மகிழ்ச்சியுடன் அவரோடு திருக்கோலக்கா வரைக்கும் சென்று, சீர்காழிக்கு புறப்பட்டார்.

திருஞானசம்பந்தர் திருத்தோணியப்பரை செந்தமிழ் மாலை விகற்பங்களான திருமொழி மாற்று, திருமாலை மாற்று, வழிமொழி திருவிராகம், திருஏகபாதம், திருவிருக்குறள், திருவெழுக் கூற்றிருக்கை போன்ற பற்பல திருப்பதிகங்களை உள்ளம் உருக பாடிப் பரவசம் பூண்டார். இவைகள் எல்லாவற்றையும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் விறலியாரோடும் பாடி, யாழில் இட்டு வாசித்துக் கொண்டு பிள்ளையாரோடு சீர்காழியில் இருந்தார்.

இப்பதிகங்கள் யாவும் வீடு பேற்றினை அடைவதற்கான வழிகளை விளக்கும் வண்ணமாக அமைந்துள்ளன. சில நாட்கள் சென்றபின், திருஞானசம்பந்தர் தனது தந்தையாரிடமும் மற்ற அந்தண மக்களையும் நோக்கி இந்த தமிழ்நாட்டிலுள்ள அகில உலக நாயகனான சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் அனைத்து தலங்களுக்கும் சென்று எம்பெருமானை தரிசனம் செய்து திருப்பதிகம் பாடிக்கொண்டு இங்கே வருவேன் என்று கூறினார்.

திருஞானசம்பந்தர் கூறியதை கேட்டதும் மனம் மகிழ்ந்த தந்தையார் உம்மை விட்டு எள்ளளவும் எம்மால் பிரிந்திருக்க முடியாது. ஆகவே யாமும் உன்னுடன் வருகின்றோம் என்றார். பிள்ளையார் அதற்கு இசைந்த வண்ணமாக தோணியப்பரை வணங்கி விடைபெற்று கொண்டு, தந்தையார் பின்வர, முத்து சிவிகை மேற்கொண்டு, முத்துக்குடை நிழலில், திருநீலகண்டப் பெரும்பாணரோடும், மற்ற அடியார்களுடனும் சென்றார்.

பின்பு திருக்கண்ணார் கோவிலை அடைந்து அங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமானை வணங்கிக் கொண்டு, காவேரிக்கு வடக்கே மேற்கு திசை நோக்கிப் பயணம் மேற்கொண்டு திருப்புள்ளிருக்குவேள%2Bர், திருநன்றியூர், திருநீடூர், திருப்புன்கூர், திருமண்ணிப்படிக்கரை, திருக்குறுக்கை, திருவன்னியூர், திருப்பந்தணைநல்லூர், திருமணஞ்சேரி, திருவெதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி, திருக்கோடிக்கா, கஞ்சனூர், திருமங்கலக்குடி சென்றார்.

பின்பு திருவியலூர், திருந்துதேவன்குடி, திருவின்னம்பர், வடகுரங்காடுதுறை, திருப்பழனம், திருவையாறு, திருப்பெரும்புலியூர், திருநெய்த்தானம், திருமலபாடி, திருக்கானூர், திருவன்பிலாலந்துறை, திருமாந்துறை என்னும் தலங்கள் தோறும் சென்று எம்பெருமானை தரிசனம் செய்த வண்ணமாக திருப்பதிகம் பாடினார். சோழ நாட்டிலுள்ள சிவபெருமான் எழுந்தருளியுள்ள பல்வேறு தலங்களை தரிசித்த வண்ணமாக திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்தனர்.

அந்நகரத்திலே கொல்லி மழவன், தன்னுடைய புத்திரி முயலகனென்னும் நோயினால் வருந்துதலைக் கண்டு, கவலையுற்று, வேறொரு மருந்துகளாலும் நீங்காமை கண்டு, தான் சைவ பரம்பரை ஆனதால் அவளை எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோவிலினுள்ளே கொண்டு போய் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் சன்னிதானத்திலேயே வைத்தான்.

திருஞானசம்பந்தர் வந்து கொண்டு இருக்கிறார் என்ற தகவலை கேட்டதும் திருஞானசம்பந்தரால் எப்படியும் தன் மகளுக்கு உடல் பூரண குணமடையும் என்று மனம் குளிர்ந்த மழ நாட்டு தலைவன் திருஞானசம்பந்தரைக் காண கொல்லி மழவன், புத்திரியைவிட்டு விரைந்து சென்று திருப்பாச்சிலாச்சிராமத்தை மிகவும் எழில்மிகு மலர்கள் மற்றும் வாசனை நிரம்பிய மலர்களால் அலங்கரித்து திருஞானசம்பந்தரை எதிர்கொண்டு மலர்கள் தூவி, முத்து சிவிகைக்கு முன்னே அடியற்ற மரம்போல விழுந்தான்.

அதைக் கண்டதும் திருஞானசம்பந்தர் 'எழுக" என்று உரைத்த வண்ணமாக கொல்லி மழவன் எழுந்து மனம் மகிழ்ந்து சிரசின்மேல் கரங்கள் வைத்த வண்ணமாக சென்றான். திருஞானசம்பந்தருடன் வேந்தனும் திருக்கோவில் கோபுரத்திற்கு வந்த உடனே, முத்து சிவிகையினின்றும் இறங்கி, உள்ளே பிரவேசித்து கோபுரத்தை வலம் வந்து சன்னிதானத்திற்கு சென்றார்.

இவர்கள் உள்ளே சென்ற பொழுது மதியற்ற நிலையில் நிலத்தில் கிடக்கின்ற கன்னியை கண்டதும் இந்த பெண்மணி யார்? என்றும், ஏன் இவ்விதம் இவ்விடத்தில் இருக்கின்றார்? என்று வினவினார். அவருடன் நின்று கொண்டிருந்த மழவன் திருஞானசம்பந்தரை வணங்கி நின்று இக்கன்னியார் அடியேனுடைய புதல்வி என்றும், இவள் முயலகனென்னும் நோயினால் மிக வருந்துவதால் இவளை சுவாமி சன்னிதானத்தில் கொணர்வித்தேன் என்று விண்ணப்பம் செய்தான். 

திருஞானசம்பந்தப்பிள்ளையார் மன்னன் கூறியதைக் கேட்டு அவர் அடைந்து உள்ள இன்னலை போக்கும் வண்ணமாக அவ்விடத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வணங்கினார்.

பின் அவளிடம் குடி கொண்டு இருக்கும் நோயை நீக்கும் வண்ணமாக பொருள் கொண்ட 'துணிவளர் திங்கள்" என்றெடுத்து, 'மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோவிவர் மாண்பே" என்னும் திருப்பதிகத்தை பாடியருளினார்.

எம்பெருமானின் திருவருளால் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி முடித்ததும் தலைவன் மகளின் உடலில் இருந்துவந்த நோயானது முழுவதுமாக நீங்கி சுய உணர்வு பெற்று எழுந்தாள். அவ்விடத்தில் இருந்த அனைவரும் இக்காட்சியைக் கண்டதும் வியந்து நின்று கொண்டிருந்தனர். திருஞானசம்பந்தரின் வியக்கத்தக்க இவ்வருட்செயலை எண்ணி உள்ளமும், உடலும் பொங்கி பூரித்துப்போன தலைவனும், தலைவனின் மகளும் எம்பெருமானின் அருள் முழுவதும் நிறைந்து இருக்கக்கூடிய உமையவளின் ஞானப்பாலை பருகிய தெய்வத் திருமகனின் காலில் வீழ்ந்து வணங்கினர்.

பின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க நின்றனர். பின்னர் பிள்ளையார் தலைவன் மற்றும் அவருடைய புதல்வி ஆகியோர் அங்கே எழுந்தருளி இருக்கும் எம்பெருமானை தரிசனம் செய்து அங்கு இருந்து விடைப்பெற முற்பட்டார் திருஞானசம்பந்தர். பின்னர் மன்னர் அவர்களுடன் இருந்த பல அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சில நாள் அங்கேயே தங்கியிருந்தார். அதன்பின் பிள்ளையார் திருப்பைஞ்ஞீலியையும், திருவீங்கோய் மலையையும் வணங்கி கொண்டு பின் கொங்கு தேசத்தில் காவேரி தென்கரைக்கு சென்றார்.

பின்பு திருக்கொடி மாடச் செங்குன்றூரை அடைந்து எம்பெருமானை தரிசனம் செய்து கொண்டிருந்தார். அவ்விதம் எம்பெருமானை வழிபட்டு கொண்டு இருக்கும் நாளில் திருநணாவிற்கும் சென்று திருப்பதிகம் பாடினார். பின்னர் திருக்கொடிமாடச்செங்குன்றூருக்கு திரும்பிவிட்டார். அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பொழுது மழைக்காலம் நீங்கி பனிக்காலம் பிறந்தது. எந்த வருடமும் இல்லாத அளவில் குளிர் மிகுந்து காணப்பட்டது.

அப்பொழுது பிள்ளையாருடைய பரிசனங்கள் நளிர்சுரத்தினால் வருத்தமுற்று பிள்ளையாரை வணங்கி அவருக்கு விண்ணப்பம் செய்தார்கள். பிள்ளையார் 'அவ்வினைக் கிவ்வினை" என்னும் திருநீலகண்ட பதிகத்தை பாடியருளினார். உடனே அந்நகரவாசிகளை துன்புறுத்தி வந்து கொண்டு இருந்த பனிப்பிணியானது அந்நகரம் முழுவதும் தீர்ந்தது. பிள்ளையார் சிலநாள் அங்கு தங்கியிருந்து பின் அவ்விடத்தை நீங்கி, திருப்பாண்டிக்கொடுமுடி, திருவெஞ்சமாக் கூடல், திருக்கருவூர் என்னும் தலங்களை வணங்கி கொண்டு கொங்குநாட்டைக் கடந்து சோழநாட்டை அடைந்தருளினார்.

சோழமண்டலத்தில் எம்பெருமான் வீற்றிருக்கும் தலங்களான திருப்பராய்த்துறை, திருக்கற்குடி மலை, திருமூக்கீச்சரம், திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, திருப்பாற்றுறை, திருவெறும்பியூர், திருநெடுங்களம், மேலைத்திருக்காட்டுப்பள்ளி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருவெண்ணி, திருச்சக்கரப்பள்ளி, திருப்புள்ளமங்கை, திருநல்லூர், திருக்கருகாவூர், திருவவளிவணனல்லூர், திருப்பரிதிநியமம், திருப்பூவனூர், திருவாரூர் ஆகிய இடங்களுக்கு சென்று எம்பெருமானை வணங்கி கொண்டு பின்பு திருவலஞ்சுழியை நோக்கி தமது பயணத்தை தொடர்ந்தார் திருஞானசம்பந்தர்.

திருவலஞ்சுழியில் எழுந்தருளி அருள்பாலித்து கொண்டு இருக்கும் சுவாமியை தரிசனம் செய்து கொண்டிருந்தார். இவ்விதமாக இவர் வழிபட்டு கொண்டு இருக்கும் நாட்களில் முதிர்வேனிற்காலம் தொடங்கியது. அம்முதிர்வேனிற்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் எம்பெருமானை கண்டு அவரை வழிபட வேண்டும் என்ற எண்ணமானது பிள்ளையாரை திருவலஞ்சுழியில் இருந்து புறப்பட்டு திருப்பழையாறை போவதற்கு அடியார்களுடன் செல்ல துவங்கினார்.

அவ்விதமாக செல்லும் வழியில் உள்ள திருவாறை மேற்றளியை அடைந்து வணங்கி, திருச்சத்தி முற்றத்திற்கு சென்று, சுவாமி தரிசனம் செய்து கொண்டு திருப்பட்டீச்சரத்திற்கு போக புறப்பட்டார். திருஞானசம்பந்தர் தம்மை காண வெயில் என்றும் பாராமல் நடந்து வருவதை கவனித்த எம்பெருமான் திருஞானசம்பந்தருக்கு உதவும் பொருட்டு அவருக்கு பூதகணங்களின் மூலம் முத்துப்பந்தல் அமைத்து நிழல் கொடுக்க செய்தார். முத்துப்பந்தலின் நிழலிலே திருப்பட்டீச்சரத்தை அடைந்த திருஞானசம்பந்தர் எம்பெருமானை வழிபட்டு பதிகம் ஒன்றை பாடினார்.

பின்பு அவ்விடத்திலிருந்து விடைப்பெற்று கொண்டு திருவாறை வடதளி, திருவிரும்பூளை, திருஅரதைப்பெரும்பாழி, திருச்சேறை, திருநாலூர்மயானம், திருக்குடவாயில், திருநாரையூர், அரிசிற்கரைப்புத்தூர், திருச்சிவபுரம், திருக்குடமூக்கு, திருக்குடந்தைக்காரோணம், திருநாகேச்சரம், திருவிடைமருதூர், திருக்குரங்காடுதுறை என்னும் தலங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வணங்கி கொண்டு திருவாவடுதுறையை அடைந்தார் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தர் திருவாவடுதுறையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் திருவாவடுதுறையில் இருந்த தொண்டர்களும், அடியார்களும், அந்தணர்களும், திருஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து வரவேற்று வணங்கினர். திருஞானசம்பந்தர் அத்தலத்தில் சில காலம் தங்கியிருந்தார். எம்பெருமான் எழுந்தருளியுள்ள பல தலங்களை தரிசித்த வண்ணமாக செங்காட்டங்குடி வழியாக திருமருகல் என்னும் தலத்தை வந்தடைந்தார்.

திருமருகல் கோவில் மடத்தில் தங்கியிருந்து எப்போதும் இறைவனை வழிபட்டு வந்தார் திருஞானசம்பந்தர். அப்போது யாரும் எதிர்பார்க்காத அரிய நிகழ்வானது நடைபெறுவதற்கான சூழல்கள் தோன்ற துவங்கின. செல்வந்தரான ஒரு வணிகரின் மகனும், அவருடைய உறவினர்களில் அவரை மணம் புரிந்து கொள்ளும் உறவு முறையும் கொண்ட ஒரு கன்னியும் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு கோவிலுக்கு புறத்திலே ஒரு மடத்தில் தங்கியிருந்தனர்.

அவர்கள் வந்த பொழுதில் ஆதவன் மறையவே... மதியானவன் தோன்ற நாளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணி இரவில் மடத்தின் ஒரு பகுதியில் படுத்து உறங்கி கொண்டிருந்தனர். நித்திரையில் ஆழ்ந்திருந்த பொழுது பாம்பானது அவ்விடத்தில் எதிர்பாராதவிதமாக வந்தது. பின் அவ்விடத்தில் மணமகன் உறங்கி கொண்டிருக்க பாம்பு மணமகனை தீண்டிவிட்டது.

பொழுதும் விடிய தன் மணாளனிடம் எந்தவிதமான செய்கையும் இல்லாததை எண்ணிய மணமகள் அவன் அருகில் வரவே... அவன் செயலற்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். பின்பு அருகில் இருந்த வைத்தியரை அழைத்து வரவே மணமகனை பரிசோதித்த பின் இவர் பாம்பு தீண்டி இறந்து விட்டார் என்று கூறினார். அதைக் கேட்டதும் இவ்வுலகில் யாவரும் அடையாத பெரும் துன்பத்தை அடைந்ததாக மனதில் எண்ணி தான் விரும்பியவரை தீண்டிய பாம்பானது தன்னை தீண்டாமல் போனதே என்று தரையில் விழுந்து புரண்டு அழுதாள்.

இவ்வுலகில் யாவரும் அடையாத பெரும் துன்பத்தை அடைந்ததாக மனதில் எண்ணி தான் விரும்பியவரை தீண்டிய பாம்பானது தன்னை தீண்டாமல் போனதே என்று தரையில் விழுந்து புரண்டு அழுதாள். பெற்றோருக்கு தெரியாமல் தன்னுடைய அத்தை மகனை மணக்க வேண்டும் என்று ஓடிவந்த தனது ஆசையில் இப்படியொரு பேரிடி வீழ்ந்ததே... என்று எண்ணி தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்தாள். அப்பெண்மணி வணிக மகனை தீண்ட முடியாத நிலையில் தாங்கொணாத் துயரால் என்று பலவாறு சொல்லி புலம்பிக் கொண்டே இருந்தாள்.

அக்கன்னிகை மிக அயர்ந்து புலம்பி எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கோவிலின் வாயிற்புறத்தை நோக்கிய வண்ணமாக கைதொழுது 

'அமுதம் கடைந்தபோது தேவர்களை காக்கும் பொருட்டு வெளிப்பட்ட நஞ்சை அமுதாக எண்ணி பருகிய பரம்பொருளே...

எமனின் பாச பிடியிலிருந்து மார்க்கண்டேயனின் உயிரை காப்பாற்றிய இமயவனே...

தேவரீர் இந்தக்கொடிய விஷம் நீங்கும் பொருட்டும், அடியேன் துக்க சாகரத்தினின்று கரையேறும் பொருட்டும், அருள்செய்யும்" என்று பிரார்த்தித்தாள்.

அவளது புலம்பலானது கோவிலில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வழிபாடு செய்ய வந்து கொண்டு இருந்த திருஞானசம்பந்தரின் செவிகளில் விழுந்தது. கன்னியரின் அழுகையையும், துன்பத்தையும் புரிந்து கொண்ட திருஞானசம்பந்தர் கன்னிகையின் அருகில் சென்று பயம் கொள்ளாதே... நிகழ்ந்த நிகழ்வுகளை கூறுவாயாக...!! என்று அப்பெண்மணியிடம் கேட்டார்.

அந்த நொடியில் துன்பத்தில் உழன்று கொண்டு யாது செய்வது? என்று அறியாமல் இருந்த கன்னியருக்கு திருஞானசம்பந்தரைக் கண்டதும் திருமருகல் தெய்வமே எழுந்தருளினாற்போல் எண்ணம் கொண்டாள். உடனே கன்னிகை விழிகளில் நீர் வழிய பிள்ளையாருடைய திருவடியில் விழுந்து வணங்கினாள். திருஞானசம்பந்தர் அப்பெண்மணிக்கு ஆறுதல் மொழியை கூறினார்.

பெண்மணி தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை எடுத்து உரைக்க துவங்கினாள். அதாவது, நான் பிறந்த ஊர் வைப்பூர். தாமன் என்பவர் என் தந்தை. என் தந்தைக்கு என்னுடன் ஏழு பெண்கள் உண்டு. என் தந்தை இங்கு இறந்து கிடக்கும் என் அத்தை மகனுக்கு தன் பெண்களில் ஒருவரை கொடுப்பதாக கூறினார். ஆனால் அவரோ மற்ற ஆறு பெண்களில் ஒருத்தியைக் கூட இவருக்குக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்.

என் தந்தை செய்த செயலால் மனம் வருந்தி பின்பு நானே இவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணி இவரை அழைத்து கொண்டு இரவென்றும் பாராமல் இரவோடு இரவாக இங்கு ஓடிவந்தேன். வந்த இடத்தில் விதியானது எனது வாழ்க்கையில் சதி செய்துவிட்டது. என்னுடன் இல்லறத்தில் வாழ வேண்டிய என் அத்தை மகன், பாம்பு தீண்டியதால் எனக்குமில்லாமல், இந்த உலகத்திலும் நில்லாமல் போய்விட்டார் என்று கூறி மேலும் புலம்பி கண்ணீர் வடித்தாள்.

திருஞானசம்பந்தர் பாதங்களில் விழுந்து அழுதாள் அந்த வணிக குலப்பெண்மணி. அந்த வணிக குல கன்னியருக்கு ஏற்பட்ட துன்பத்தினை நீக்கும் பொருட்டு திருஞானசம்பந்தர் திருமருகல் தெய்வத்தை பணிந்து எழுந்து விஷம் நீங்கும் பொருட்டு திருமருகல் கடவுள் மேல் 'சடையாய் எனுமால்" எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடியருளினார்.

ஆலகால விஷத்தை உண்ட நீலகண்டப் பெருமான், திருஞானசம்பந்தரின் செந்தமிழ் பாக்களால் இயற்றப்பட்ட பாடல்களை கேட்டதும் மனம் மகிழ்ந்தார். திருமருகலில் எழுந்தருளியுள்ள உமையொருபாகன், அரவத்தால் தீண்டப்பட்ட வணிக மகனைக் காத்தார். இறைவனின் கருணையால் வணிக மகன் உயிர் பெற்று எழுந்தான். அவ்விடத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் யாவற்றையும் கண்ட திருத்தொண்டர்கள் எல்லோரும் மகிழ்ந்தனர்.

வணிக மகனும், வணிக மகளும் திருஞானசம்பந்தரின் பாத கமலங்களில் வீழ்ந்து வணங்கினர். திருஞானசம்பந்தர் இருவரையும், திருமணம் செய்து கொண்டு என்றென்றும் நீடு புகழ் வாழ்வீராக...!! என்று ஆசி கூறி வழி அனுப்பினார். திருஞானசம்பந்தர் அத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து எம்பெருமானை இடைவிடாது வழிபாடு செய்து வந்தார். அந்நாளில் திருஞானசம்பந்தர் இந்த தலங்களில் இருப்பதை அறிந்த சிறுத்தொண்ட நாயனார் திருமருகலிற்கு வந்தார்.

தன்னைக் காண வந்த சிறுத்தொண்ட நாயனாரை கண்டதும் ஒருவரை ஒருவர் வணங்கி மகிழ்ந்தனர். இருவரும் இணைந்து திருமருகலில் எழுந்தருளியுள்ள நீலகண்டப் பெருமானை வழிபட்டவாறு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருச்செங்காட்டாங்குடிக்கு எழுந்தருள விருப்பம் கொண்டனர். பின் தன்னுடன் வந்திருந்த அடியாரோடு அத்திருமருகல் கோவிலிற்கு சென்று வணங்க... பரமசிவன் தான் திருச்செங்காட்டாங்குடியில் இருக்கின்ற திருக்கோலத்தை அவருக்கு அங்கே காட்டியருளினார்.

பிள்ளையார் அதுகண்டு மனமகிழ்ந்து, 'அங்கமும் வேதமு மோதுநாவர்" என்னும் திருப்பதிகம்பாடி, அந்தத் திருப்பதியில் தானே எழுந்தருளியிருந்தார். அங்கு கோவில் கொண்டுள்ள கணபதீச்சுரரை வணங்கி வழிபட்டு வாழ்ந்து வரலாயினர். சில நாட்கள் சென்றபின் அத்திருப்பதியை விட்டு நீங்கி தம்முடன் தொடர்ந்து வந்திருந்த சிறுத்தொண்ட நாயனாரிடம் இருந்து விடைப்பெற்று கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் பல சிவத்தலங்களை வழிபட துவங்கினார்.

பல தலங்களை வழிபட்ட பின்பு திருப்புகலூரை அடைந்தார். திருஞானசம்பந்தர் வந்துக் கொண்டு இருக்கும் தகவலை அறிந்ததும் அவரை எதிர்கொண்டு வணங்கிய முருகநாயனார் முதலிய அடியார்களோடு சென்று, திருக்கோவிலை அடைந்து எம்பெருமானை தரிசனம் செய்து முருக நாயனாருடைய திருமடத்திற்கு சென்றார். அவர் உபசரிக்க அங்கேயே தங்கியிருந்தார். இவ்விதம் தங்கி இருக்கும் நாட்களில் வர்த்தமானீச்சரத்தை வணங்கி, முருக நாயனாருடைய திருத்தொண்டை சிறப்பித்து திருப்பதிகம் பாடினார்.

முருக நாயனாருடன் மடத்தில் தங்கியிருந்த அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் திருப்புகலூரில் இருப்பதாக கிடைத்த செய்தியை அறிந்த அப்பரடிகள் தம்முடன் இருந்த தொண்டர்கள் பலருடன் திருப்புகலூரை வந்தடைந்தார். அப்பரடிகள் திருவாரூர் சென்று எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோலத்தை பற்றியும், அவரை கண்ட தரிசனத்தை பற்றியும் மனமும், சிந்தையும் மகிழ்ந்த விதத்தை பதிகத்தால் சிறப்புற எடுத்துரைத்தார்.

அப்பர் இயற்றியதை கேட்டதும் திருஞானசம்பந்தருக்கு திருவாரூர் சென்று புற்றிடம் கொண்ட எம்பெருமானை போற்றி பணிந்து பதிகம் பாடி வர வேண்டும் என்ற எண்ணமும், விருப்பமும் உண்டாயிற்று. திருஞானசம்பந்தர் அப்பரடிகளை திருப்புகலூரிலேயே சில காலம் தங்கி இருக்கும்படி கூறிவிட்டு திருவாரூருக்கு புறப்பட்டார். திருஞானசம்பந்தர் திருவாரூர் செல்லும் வழியில் உள்ள சிவத்தலங்கள் பலவற்றை தரிசித்து மகிழ்ந்தவாறே திருவாரூரை வந்தடைந்தார்.

திருவாரூரில் தியாகேசப் பெருமானை கண்குளிர கண்டு களித்தார். தமிழ் பாமாலை தொடுத்து இன்புற்றார். சில காலம் அங்கேயே தங்கியிருந்து பேரின்பம் கொண்டார். பின்பு திருவாரூரை விட்டு திருப்புகலூரை வந்தடைந்தார். அங்கு அப்பரடிகளோடு தங்கியிருந்து எம்பெருமானை வழிபட்டு வரலானார். இரு ஞான ஒளிகளும் திருப்புகலூர் பெருமானை வழிபட்டவாறு முருக நாயனார் மடத்தில் தங்கியிருந்தனர். அவ்வாறு தங்கியிருந்த நாட்களில் சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்க நாயனாரும் அவர்களோடு இணைந்து முருக நாயனாரின் மடத்திற்கு எழுந்தருளினர்.

இரு திருஞான ஒளிகளையும் வணங்கி மகிழ்ந்தனர். சில நாட்களுக்கு பின் சிவனருள் பெற்ற அடியார்களோடு முருக நாயனார் திருமடத்தில் தங்கியிருந்த திருஞானசம்பந்தருக்கும், அப்பரடிகளுக்கும் எம்பெருமானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பின் அவர்களிடம் விடைபெற்று கொண்டு தங்களுடைய சிவயாத்திரை பயணத்தை துவங்கினார்கள். இரு ஞானமூர்த்திகளும் கால்நடை பயணமாகவே சென்று கொண்டிருந்தனர்.

திருஞானசம்பந்தர் இறைவன் தமக்களித்த முத்துப்பல்லக்கில் அமர்ந்து வராமல் அப்பர் மூர்த்தியை விட்டு பிரியாமல் அவருடன் இணைந்து நடந்து வந்து கொண்டிருந்தார். திருஞானசம்பந்தர் தன்னுடன் முத்துப்பல்லக்கில் அமர்ந்து வராமல் நடந்து வந்து கொண்டிருப்பது அப்பருக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்தது. அப்பரடிகள் திருஞானசம்பந்தரை நோக்கி, முத்துச் சிவிகை தனித்து வரத் தாங்கள் கால் கடுக்க நடந்து வருதல் ஆகாது என்றும், தாங்கள் எம்பெருமான் அருளிய முத்துச் சிவிகையில் எழுந்தருள்க...! என்றும் அன்போடு வேண்டினார்.

அதை கேட்டு திருஞானசம்பந்தர் சிறிதும் மனம் ஒவ்வாத நிலையில் அப்பரிடம், தாங்கள் நடந்துவர நான் மட்டும் முத்துச் சிவிகையில் ஏறி வருவது முறையல்ல என்று கூறினார். எனினும் எம்பெருமானின் திருவருள் கருணையை எண்ணி பார்த்த திருஞானசம்பந்தர், தாங்கள் முன்னர் எழுந்தருளுங்கள், தங்கள் பின்னால் நான் மெதுவாக வந்து சேருகின்றேன் என்றார். அப்பரடிகளும் அதற்கு இசைந்தார்.

இவ்வாறாக அப்பரடிகள் முதலில் ஒரு திருத்தலத்தை சேர்வதும், பின்னர் திருஞானசம்பந்தர் முத்துச் சிவிகையில் அத்தலத்தை அடைவதுமாக, இரு சிவநேச செல்வர்களும் தங்கள் சிவயாத்திரையை தொடர்ந்தனர். இப்படியாக இரு திருத்தொண்டர்களும் திருப்புகலூர் புண்ணியாரின் அருளோடு திருக்கடவூர் என்னும் திருத்தலத்திற்கு புறப்பட்டனர்.

எம்பெருமானின் திருவருள் பெற்றவர்களான திருஞானசம்பந்தரும், அப்பரடியாரும் திருக்கடவூரை அடைந்து, கூற்றுவனை உதைத்தருளிய விமலநாதரை அமுதத்தமிழால் பாடிப்பணிந்து குங்குலியக்கலய நாயனார் மடத்தில் எழுந்தருளினார்கள். இவ்விரு ஞானமூர்த்திகளின் வருகையால் குங்குலியக்கலய நாயனார் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து இரு ஞான பேரொளிகளையும் இன்முகத்தோடு வரவேற்றார்.

குங்குலியக்கலய நாயனார் மடத்தில் திருஞானசம்பந்தரும், அப்பரடியாரும் தங்கியிருந்து, அமுதுண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். பின்பு குங்குலியக்கலய நாயனாரின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்திருநகரில் குங்குலியக்கலய நாயனாருடன் சில நாட்கள் தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தனர். சிறிது நாட்களுக்கு பின்பு இரு ஞானமூர்த்திகளும் குங்குலியக்கலய நாயனாரிடம் விடைபெற்று கொண்டு திருஆக்கூர் வழியாக தங்கள் சிவயாத்திரையை தொடங்கினர்.

சிவயாத்திரை மேற்கொண்டு செல்லும் வழிகளில் இருந்த பல புண்ணிய சிவத்தலங்களை தரிசித்து கொண்டே தங்களது பயணத்தை மேற்கொண்டனர். அரவணிந்து காட்சி அளித்த எம்பெருமானை அழகு தமிழில் வழிபட்டனர். அதன்பின் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். ஒரு சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான திருமால் எம்பெருமானிடமிருந்து சக்ராயுதம் பெறுவதற்காக 1008 கமல மலர்களை கொண்டு வழிபட துவங்கினார். சோதனை செய்வதில் வல்லவரான எம்பெருமான் அவர் வைத்திருந்த 1008 மலர்களில் ஒரு மலர் குறையுமாறு செய்தருளினார்.

இதை சற்றும் உணராத திருமால் ஒவ்வொரு ‌மலர்களாக எடுத்து அதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்து வந்தார். இறுதியில் ஒரு மலர் குறைகிறது என்பதை உணர்ந்து மனம் உருகினார். வேறு மலர்களை கொண்டு வருவதற்குள் தாமதம் ஏற்பட்டு மனதில் நினைத்த வழிபாடு தடைபட்டுவிடும் என்பதை உணர்ந்தார். ஆயினும் தமது மனதில் எண்ணிய வழிபாட்டை நிறைவோடு முடிக்க எண்ணம் கொண்டு தமது மலர் விழிகளில் ஒன்றை எடுத்து அர்ச்சனை செய்யலாம் என்று முடிவெடுத்தார்.

திருமால் தமது விழிகளில் ஒரு விழியைத் தோண்டி எடுக்க துணிந்தபொழுது எம்பெருமான் அவ்விடத்தில் எழுந்தருளி அவ‌ரை தடுத்தார். திருமாலின் அன்பிற்கு கட்டுப்பட்ட திருசடைப்பிரான் சக்ராயுதத்தை கொடுத்தருளினார். திருமால் விழிகளில் ஒன்றை ‌எடுத்து இறைவனுக்கு அர்ச்சிக்க துணிந்ததால் இத்திருத்தலம் திருவீழிமிழலை என்ற திருநாமத்தை பெற்றது.

திருவீழிமிழலை நகரில் அடியார்களின் கூட்டம் கடல் வெள்ளம் போல் அதிகரித்த வண்ணமாக இருந்தது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் எம்பெருமானை தரிசிக்க திருவீழிமிழலை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றார்கள் என்னும் செய்தியை அறிந்த அடியார்கள் அவர்களை வரவேற்க நகர்புறத்தில் காத்துக் கொண்டிருந்தனர். நகர்புறத்தை அடைந்த இரு ஞானமூர்த்திகளையும் அடியார்கள் எதிர்கொண்டு வணங்கி மலர் தூவி அவர்களை வரவேற்றனர்.

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்க தொண்டர் கூட்டத்தோடு கலந்து கொண்டு மாடவீதி வழியாக கோவிலினுள் எழுந்தருளினார்கள். திருத்தலத்தை வலம் வந்து எம்பெருமானின் முன் பக்தி பழமாக நின்ற இரு ஞானமூர்த்திகளும் தமிழ் பதிகத்தால் வீழி அழகரை துதித்தனர்.

அப்பரடிகள், திருவீழிமிழலையானைச் 'சேராதார் தீயநெறிக்கே சேர்கின்றாரே" என்ற ஈற்றடியினை கொண்‌ட திருத்தாண்டகப்பதிகம் பாடினார். திருவீழிமிழலை அன்பர்கள் இரு சிவனடியார்களும் தங்குவதற்கு தனித்தனி அழகிய திருமடங்களை ஏற்பாடு செய்தனர். இரண்டு மடங்களிலும் ஆண்டவன் ஆராதனையும், அடியார் துதி ஆராதனையும் சிறப்பாக நடந்தன.

இருவரும் அத்தலத்திலேயே சிலகாலம் தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தனர். இவ்விதம் இவர்கள் தங்கியிருந்த காலத்தில் அவ்விருவரும் இணைந்து பேணுபெருந்துறை, திலதைப்பதி என்னும் தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் திருவீழிமிழலைக்கு வந்தார்கள். திருஞானசம்பந்தரும், அப்பர் அடியாரும் தினமும் தவறாது திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் அரணாரை, அழகு தமிழ் பாமாலைகளின் மூலம் வழிபட்டு வந்தார்கள்.

இரு ஞான ஒளிகளான திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் அடியாரின் வழிபாடுகளால் ஊர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு சிவச் செல்வர்களை போற்றி பணிந்து பெருமிதம் கொண்டனர். அச்சமயத்தில் சீர்காழியில் இருந்து வந்திருந்த அந்தணர்கள், திருஞானசம்பந்த மூர்த்தியாரை காண வேண்டும் என்னும் விருப்பம் கொண்டனர். அதன்பின் அவர்கள் அனைவரும் திருவீழிமிழலையை அடைந்தனர்.

பின்பு அவர்களுடன் திருக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து கொண்டு திருமடத்திற்கு சென்றார். திருஞானசம்பந்த மூர்த்தி இருக்கின்ற திருமடத்திற்கு வந்திருந்த அந்தணர்கள் அவரை வணங்கி திருத்தோணியப்பரை தரிசிக்க சீர்காழிக்கு வருமாறு அவர்களை வேண்டினர். திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை இறைவன் விடை அளிப்பின் யாம் அங்கு வருவோம்...!! என்று மறுமொழி கூறினார்.

அன்றிரவு பிறைமுடி சூடிய எம்பெருமான் பிள்ளையாரின் சொப்பனத்தில் எழுந்தருளி 'யாம் திருத்தோணியில் வீற்றிருக்கும் கோலத்தை இத்திருவீழிமிழலையிலே உமக்காக காட்டுகின்றோம்" என்று கூறி மறைந்தருளினார். பொழுது விடிந்ததும் திருஞானசம்பந்தரும், அப்பர் அடியாரும் மற்றும் அவர்களுடன் மற்ற அந்தணர்களும் எம்பெருமானை வழிபட கோவிலுக்கு வந்தனர். இருவரும் அத்தலத்திலேயே சிலகாலம் தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தனர்.

இந்த சமயத்தில் கருமேகம் பொய்த்தது. மழையின்றி எங்கும் வறட்சி ஏற்பட்டது. நாடெங்கும் விளைச்சல் இல்லாமல் போனது. மக்கள் தாங்க முடியாத பஞ்சத்தால் பெரிதும் துன்பம் அடைந்தனர். மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை நீக்கும் பொருட்டு அப்பரும், ஆளுடைப் பிள்ளையாரும் என்ன செய்வது? என்று அறியாது சிந்தித்தனர். இறுதியாக திருவீழிமிழலை திருச்சடை அண்ணலை மனதில் தியானித்த வண்ணமாகவே இருந்தனர்.

ஒருநாள் எம்பெருமான் இரு ஞானமூர்த்திகளுடைய கனவிலும் எழுந்தருளி உங்களை நம்பி தொழுது வழிபடும் தொண்டர்களுக்காக உங்களுக்கு தினந்தோறும் படிக்காசு தருகின்றோம். அந்த படிக்காசுகளை கொண்டு அடியார்களின் அவலநிலையை அகற்றுங்கள்... என்று திருவாய் மலர்ந்து மறைந்தார். மறுநாள் எம்பெருமான் கனவில் எழுந்தருளி கூறியதற்கு ஏற்ப கிழக்கு பீடத்தில் திருஞானசம்பந்தருக்கும், மேற்கு பீடத்தில் அப்பரடியாருக்கும் ‌படிக்காசுகளை வைத்திருந்தார்.

திருஞானசம்பந்தர் அப்பரடியாரோடு திருக்கோவிலில் புகுந்தபோது கிழக்கு பீடத்தில் காசு இருப்பதை கண்டார். பின்னர் மகிழ்ச்சியோடு அதை எடுத்து எம்பெருமானை எண்ணிய வண்ணமாக நாள்தோறும் சிவனடியார்கள் எல்லோரும் வந்து அமுது படைப்போமாக என்று பறைசாற்றி தெரிவித்தார். அதன்பின் தம்முடைய திருமடத்தில் வரும் அடியார்களுக்கு நெய், பால், தயிரோடு அன்னமிட்டு கொண்டு இருந்தார்.

இவ்விதமாக நிகழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் அப்பரடிகளது திருமடத்தில் மட்டும் தொண்டர்கள் உரிய காலத்தில் திருவமுது செய்து கொண்டு இருந்தார்கள். திருஞானசம்பந்தர் திருமடத்தில் திருவமுது செய்து முடிக்க சற்று காலதாமதமானது. இதை உணர்ந்த திருஞானசம்பந்தர், தமது திருமடத்தில் அமுது படைக்க காலதாமதம் ஆவதன் காரணம் என்ன? என்று அடியார்களிடம் வினவினார்.

அதற்கு அவர்கள் திருஞானசம்பந்தரை நோக்கி, நம்முடைய பொற்காசு நல்ல காசல்ல என்று கூறி பண்டங்களை கொடுக்க காலதாமதம் செய்கின்றார்கள். ஆனால், நல்ல காசு பெற்ற அப்பரடியாருக்கு வியாபாரிகள் வேண்டும் பொருளை விரைவிலேயே கொடுத்து விடுகிறார்கள் என்ற உண்மையை விளக்கி கூறினர்.

அடியார்கள் மொழிந்ததை கேட்டு திருஞானசம்பந்தர் சிந்தித்து, அப்பரடிகள் கோவில் திருப்பணிகள் செய்ததின் பயனே இது என உணர்ந்து எம்பெருமானை வணங்கி வழிபட்டு,

'வாசிதீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீ ரேச லில்லையே" என பாடினார். 

இதை கேட்ட எம்பெருமான் திருஞானசம்பந்தருக்கு நல்ல பொற்காசுகளை கொடுத்தருளினார். உரிய காலத்தில் மக்களுக்கு அன்னதானம் புரிந்து பஞ்சத்தை போக்கினார். இவ்விரு சிவனடியார்களின் இருமடங்களிலும் தினந்தோறும் தொண்டர்கள் அமுதுண்டு மகிழ்ந்த வண்ணமாகவே இருந்தனர். இறைவனின் திருவருளாலே, மாதம் மும்மாரி பொழிந்தது. நெல்வளம் கொழித்தது. இரு சிவமூர்த்திகளும், தங்களின் சிவதரிசன யாத்திரையை தொடங்கினர்.

திருஞானசம்பந்தமூர்த்தியும், திருநாவுக்கரசரும் திருவீழிமிழலையில் இருந்து திருவாஞ்சியம், திருத்தலையாலங்காடு, திருப்பெருவேள%2Bர், திருக்கரவீரம், திருவிளமர், திருவாரூர், திருக்காறாயில், திருத்தேவூர், திருநெல்லிக்கா, திருக்கைச்சினம், திருத்தெங்கூர், திருக்கொள்ளிக்காடு, திருக்கோட்டூர், திருவெண்டுறை, திருத்தண்டலை நீணெறி, திருக்களர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, வேதாரண்யம் என்று அழைக்கப்படும் திருமறைக்காட்டிற்கான பயணத்தை மேற்கொண்டனர்.

அவ்விதம் பயணம் மேற்கொள்ளும் வழியில் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வழிபாடு செய்து கொண்டு இறுதியாக திருமறைக்காட்டினை அடைந்தார்கள். திருமறைக்காட்டில் உள்ள எம்பெருமானை வழிபடுவதற்காக திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருத்தலத்திற்கு வருகை தந்தனர். ஆனால் கோவிலில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. திருத்தலத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டதும் அவர்களுக்கு வியப்பாக இருந்தது. பின்பு திருத்தலத்தின் வாயில்கள் மூடப்பட்டு இருப்பதற்கான காரணம் யாது? என்று அங்குள்ள அடியார்களிடம் வினவினார்கள் இரு ஞானமூர்த்திகள்.

திருஞானசம்பந்தரையும், திருநாவுக்கரசரையும் அவ்விடத்தில் இருந்த அடியார்கள் யார்? என்பதை அறிந்து கொண்ட பின்னர் அவர்களை வணங்கி கதவு மூடப்பட்டு இருப்பதற்கான காரணத்தை எடுத்துரைக்க தொடங்கினார்கள். அதாவது, ஆதிகாலம் முதலே திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள பெருமானை மறைகள் வழிபட்டு பின்பு திருத்தலத்தின் வாயிலை மறைகாப்பினால் பூட்டி சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற அன்று முதல் இன்று வரை கதவு திறக்க படாமலேயே இருக்கின்றது.

வாயிலை திறக்க எவரும் இக்காலம் வரையிலும் வராமல் இருப்பதினால் நாங்கள் அரணாரை தரிசித்து வழிபட மற்றொரு வாயில் வழியாக சென்று கொண்டிருக்கின்றோம் என்று கூறினார்கள். அவர்கள் உரைத்ததை கேட்டதும் இரு ஞானஒளிமூர்த்திகள் எப்படியாவது இந்த கதவினை நாம் திறத்தல் வேண்டும் என்று எண்ணம் கொண்டனர். திருஞானசம்பந்தமூர்த்தி அப்பரடிகளை பார்த்து மறைகள் வழிபட்ட எம்பெருமானை நாம் எப்படியும் இந்த நேர்வாயிலின் வழியே சென்று தரிசித்து வழிபடுதல் வேண்டும். 

எனவே எம்பெருமானை நேர்வாயிலின் வழியாக சென்று வழிபட முடியாமல் தடையாக இருக்கும் இந்த பூட்டிய கதவு திறக்கும்படி திருப்பதிகம் பாடுவீர்களாக... என்று ‌கேட்டு கொண்டார். திருஞானசம்பந்த மூர்த்தியாரின் விருப்பத்தை கேட்டதும் மனம் மகிழ்ந்த திருநாவுக்கரசர் இறைவனை மனதில் நினைத்த வண்ணம், 'பண்ணின் நேர்மொழியாள்" எனத் தொடங்கும் பதிகத்தை பாடினார். அவர் பாடியும் கதவு திறக்க தாமதமாவதைக் கண்டு 'இறக்க மொன்றிவிர்" என்று திருக்கடை காப்பிலே என பாடினார்.

இவ்விதம் திருநாவுக்கரசர் மனம் உருகி பாடி முடிக்க திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள எம்பெருமானின் அருளால் தாள் நீங்கி திருக்கதவும் திறக்கப்பட்டது. கதவு திறந்ததை கண்டதும் அப்பரடிகளும், திருஞானசம்பந்த மூர்த்தியாரின் மனமும், அகமும் மலர்ந்தது. பின்பு அவ்விடத்தில் இருந்த அன்பர்களும், அடியார்களும் சிவநாமத்தை விண்ணெட்ட துதித்தனர். அடியார்கள் எல்லோரும் ஆனந்த கோஷம் செய்தார்கள்.

இருஞான மூர்த்திகளும் சில அடியார்களோடு வேதவனப் பெருமானின் திருத்தலத்திற்குள் சென்றனர். வேதவனப் பெருமானின் தோற்றத்தையும், பொலிவையும் கண்டு தம்மை மறந்து நின்றனர். இவ்வுலகிற்கு வந்த இவ்விரு அடியார்கள் அழகு தமிழால் வழிபட்ட பின் திருத்தலத்தின் வெளியே வந்தார்கள். திருத்தலத்தின் வெளியே வந்ததும் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்த மூர்த்தியை நோக்கி இம்மணிக்கதவும் எம்பெருமானுடைய திருவருளினாலே திறக்கப்பட வேண்டும் மற்றும் அடைக்கப்பட வேண்டும் என்றார்.

அதன் பொருட்டு தாங்கள் திருப்பதிகம் பாடி அருள்க... என்று வேண்டிக் கொண்டார். உமையவளின் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்த மூர்த்தி திருப்பதிகம் பாட துவங்கினார். அவர் பாடிய முதல் பதிகத்தில் திண்ணிய கதவும் தானே மூடிக்கொண்டது. அன்று முதல் ஆலயத்தின் மணிக்கதவுகள் எம்பெருமானை தரிசிக்கும் பொருட்டு தானாகவே திறக்கவும், மூடவும் அதற்கு தகுந்தாற்போல் அமைந்தது. இத்திருத்தலத்தில் இந்த அதிசய நிகழ்வை கண்ட மக்களும், அடியார் பெருமக்களும் மகிழ்ந்தனர்.

பின்பு அங்கிருந்த அனைவரும் இருஞான மூர்த்திகளையும் மலர் தூவி கொண்டாடினார்கள். திருநாவுக்கரசரின் மனமானது காலையில் நடந்த நிகழ்வுகளையே எண்ணி கொண்டிருந்தது. திருத்தலத்தில் வாயில் கதவு திறப்பதற்காக யான் இருமுறை பதிக பாடல் பாடிய பின்பே ஆலயத்தின் கதவும் திறந்தது. ஆனால் திருத்தலத்தின் வாயிற்கதவு மூடுவதற்காக திருஞானசம்பந்த மூர்த்தி ஒரு பாடல் பாடியதுமே கதவானது மூடியது.

அது ஏன்? யான் பதிக பாடல் பாட துவங்கிய உடனே, ஏன் ஆலயத்தின் கதவு திறக்கவில்லை? யான் இன்னும் எம்பெருமானின் திருவுள்ளத்தினை அறியாமல் இருக்கின்றேனோ? என்ற எண்ணம் அவரை நித்திரை கொள்ளவிடாமல் குழப்பத்தில் ஆழ்த்தியது. மதியோ கரைய... வேதாரண்யேஸ்வரர் திருவடிகளை எண்ணிய வண்ணமே இருந்தமையால் சிறிது நேரத்தில் நித்திரை கொண்டார் திருநாவுக்கரசர்.

எம்பெருமான் திருநாவுக்கரசரின் கனவில் தோன்றி யாம் திருவாய்மூரில் இருக்கின்றோம். அவ்விடத்திற்கு எம்மை தொடர்ந்து வருவாயாக... என்று அருளிச் சென்றார். எம்பெருமான் கனவில் தோன்றி அருளி மறைந்ததைக் கண்டதும் திருநாவுக்கரசர் நித்திரையிலிருந்து விழித்தெழுந்தார். நித்திரையில் இருந்து எழுந்ததும் திருநாவுக்கரசர் எம்பெருமானை பணிந்து 'எங்கே என்னை இருந்திடத் தேடிக்கொண்டு" எனத் தொடங்கும் பதிகம் ஒன்றை அவ்விடத்திலேயே பாடினார்.

பின்பு அந்த இரவு நேரத்திலேயே திருவாய்மூர் புறப்பட எண்ணம் கொண்டார். அந்த இரவு நேரத்தில் தான் மேற்கொள்ளும் பயணத்தைப் பற்றி திருஞானசம்பந்தரிடம் எடுத்துரைக்க சென்றிருந்தார். ஆனால் அவர் துயில் கொண்டிருந்ததை கண்டதும் அவர் துயிலை கெடுக்க மனமில்லாமல் அவர் அருகிலிருந்த சில அடியார்களிடம் மட்டும் கூறிவிட்டு தனது பயணத்தை துவங்கினார். வேதாரணியத்திலிருந்து புறப்பட்டு திருவாய்மூர் சென்றடைய அந்த இரவில் தமது பயணத்தை துவங்கினார். 

அவர் மேற்கொள்ளும் பயணத்திற்கு வழிகாட்டுவதற்கு ஏற்றார் போலவே எம்பெருமானும் அந்தணர் உருவம் கொண்டு அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். திருநாவுக்கரசரும் முன்னே செல்வது எம்பெருமானே என்று எண்ணி அவர் பின்னே சென்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் எம்பெருமானைக் காண ஆவல் கொண்டு தம்மால் முடிந்த அளவு வேகமாக நடக்கத் தொடங்கினார். இருப்பினும் இவருடைய வேகத்தை காட்டிலும் எம்பெருமானின் வேகம் அதிகமாக இருந்தமையால் அந்தணர் வடிவத்தில் இருந்த எம்பெருமானின் திருவுருவத்தை திருநாவுக்கரசரால் காண இயலவில்லை.

எம்பெருமானின் திருவருளால் இமை மூடி திறப்பதற்குள் திருநாவுக்கரசர் செல்லும் வழியில் ஒரு பக்கத்தில் ஒரு பொன்மயமான திருக்கோவில் ஒன்று எழுந்தது. அக்கோவிலில் எம்பெருமான் சென்று மறைந்தார். எம்பெருமான் சென்று மறைந்த அத்திருத்தலத்தில் எம்பெருமானை காண விரைந்து சென்றார் அப்பரடிகள். ஆயினும் அத்திருத்தலத்தில் எம்பெருமானை காணாது கண்களில் நீர் மல்க அவ்விடத்திலேயே துயில் கொண்டார். மறுநாள் திருஞானசம்பந்தர் அப்பரடிகள் இல்லாததைக் கண்டு அவர் ஏதேனும் உரைத்து சென்று உள்ளாரா? என்று அங்கிருந்த அடியார்களிடம் வினவினார்.

அடியார்கள் திருநாவுக்கரசர் உரைத்த செய்தியை திருஞானசம்பந்தரிடம் கூறினார்கள். அச்செய்தியை கேட்டதும் திருஞானசம்பந்தரும் திருவாய்மூர் செல்ல விரைந்து சென்றார். திருவாய்மூரில் எம்பெருமானால் உருவாக்கப்பட்ட பொன்வண்ணமான கோவிலை தமது தொண்டர்களுடன் வந்தடைந்தார் திருஞானசம்பந்தர். பின்னர் திருத்தலத்தில் துயில் கொண்டிருந்த அப்பரடிகளை கண்டதும் அப்பரே... என்று கூறிக்கொண்டு அவரின் அருகில் சென்றார்.

திருஞானசம்பந்தரின் குரல் கேட்டதும் அப்பர் அடிகளார் துயில் மற்றும் மன கலக்கத்தில் இருந்து விழித்தெழுந்து திருஞானசம்பந்தரை வரவேற்றார். பின்பு திருநாவுக்கரசர் எம்பெருமானிடம் தமது மனதில் இருந்த குறைகளை வெளிப்படுத்த துவங்கினார்.

ஐயனே...!!

என்னை இவ்விடத்திற்கு அழைத்து வந்து தங்களின் அருள் தோற்றத்தை காண்பிக்காமல் மறைந்து விட்டீர்களே...!!

வேதாரணியத்தில் என்னை சோதித்தீர்களே.

இந்த எளியவனின் மீது ஐயனின் அன்பு இவ்வளவுதானா?

உமது அன்பு தொண்டரான திருஞானசம்பந்தர் பதிகம் பாடி வேதாரணியத்தில் உள்ள திருத்தலத்தின் வாயில் கதவுகளை திறக்க வேண்டும் என்ற உங்களது திருவுள்ளத்தினை உணராமல் யான் பதிகம் பாடி காப்பு நீக்கச் செய்தது அடியேன் செய்த பிழைதான்.

அதற்காக அடியேனை அழைத்து வந்து இவ்விடத்தில் மாயமாய் ஒளிந்து கொண்டிருப்பது முறையாகுமா?

என்று உரைத்துக் கொண்டிருந்தார் திருநாவுக்கரசர். எம்பெருமானே...! தங்களுக்கு செய்த திருப்பணிகளின் மூலம் கிடைத்த புண்ணியத்தினால் முதற்பாட்டிலேயே தங்கள் விருப்பம் போல் கதவை அடைக்க செய்த திருஞானசம்பந்தரும் இவ்விடத்திற்கு வருகை தந்துள்ளார். தாங்கள் அவருக்கும் காட்சியளிக்காமல் இவ்வாறு மறைந்து கொண்டு இருப்பது முறையாகுமா? என்று வேண்டினார் திருநாவுக்கரசர்.

திருநாவுக்கரசர் உள்ளம் உருக இறைவனை வேண்டி நின்றதும் மதி சூடிய வேணியப்பிரான் உள்ளம் இறங்கி அவ்விடத்தில் இருந்த திருஞானசம்பந்தருக்கு காட்சியளித்தார். எம்பெருமா‌னை வழிபட்ட பின் இரு அடியார்களும் அவர்களுடைய மடத்திற்கு சென்றனர். பாண்டிய நாட்டில் சைவ சமயம் குன்றி சமண சமயம் வளர்ந்து வருவதை எண்ணி மங்கையர்க்கரசியார் மனக்கவலை கொண்டார்.

பாண்டியமாதேவியாருடைய ஒப்பற்ற சிவத்தொண்டிற்கு தம்மை உட்படுத்தி உண்மை தொண்டராகி பணியாற்றினார் குலச்சிறையார். குலச்சிறையார் சமண கொள்கைகளை பாண்டிய நாட்டில் பரவாமல் அதை தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு இருந்தார். பாண்டியனை சைவம் தழுவ வைக்க மங்கையர்க்கரசி செய்த அனைத்து முயற்சிகள் மட்டுமின்றி சைவம் தழைக்க அவர் செய்த அனைத்து செயல்பாடுகளும் வீணாகின.

மங்கையர்க்கரசியார் தனது முயற்சியை கைவிடாமல் தமது செயல்பாடுகளை செய்து கொண்டே இருந்தார். நாளடைவில் மக்கள் சமண மதத்தை பின்பற்ற வேண்டுமென்று நின்றசீர் நெடுமாற வேந்தன் உத்தரவையும் பிறப்பித்தார். இது மங்கையர்க்கரசியாருக்கும், குலச்சிறையாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மன்னனிடம் பேசும் துணிச்சல் அவர்களுக்கு ஏது? மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரவே மக்கள் பயந்தனர். மக்களின் வருகை இல்லாததால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த அவலநிலையை பற்றி, சொக்கநாதப் பெருமானிடமே சென்று பிரார்த்திக்க ராணி முடிவெடுத்தாள். குலச்சிறையாரையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்று, இருவருமாய் பிரார்த்தித்தனர். அப்போது சான்றோர் ஒருவர் அக்கோவிலின் சன்னதிக்கு வந்தார். கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உள்ளிட்ட யாருமே அரசரின் ஆணைக்கு பயந்து வராத நிலையில், ஒரு சான்றோர் மட்டும் மன்னரின் கட்டளையை மீறி எப்படி துணிச்சலாக உள்ளே வந்தார்? என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

சான்றோர் அரசியை வணங்கி, அரசியாரே! நான் சோழநாட்டில் வசிக்கிறேன். பல திருத்தலங்களுக்கும் சென்று வருகிறேன். மதுரையில் எம்பெருமானையும் தரிசிக்க வேண்டும் என எண்ணம் கொண்டு இங்கு வந்தேன். இங்கே யாருமே இல்லாததை கண்டு விசாரித்தேன். அப்போதுதான் சமணத்தை மக்கள் பின்பற்றுவதால் யாருமே இக்கோவிலுக்குள் வருவதில்லை என அறிந்து வருத்தமடைந்தேன். இருப்பினும், மீண்டும் சைவத்தை கொண்டு வர ஒரு மார்க்கம் உள்ளது என்று கூறினார். வழி இருப்பதை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த இருவரும் அம்மார்க்கத்தை கூற வேண்டும் என்று வேண்டி நின்றனர்.

பின்பு, அவர் சீர்காழியில் திருஞானசம்பந்தர் என்னும் தெய்வமகன் இருக்கிறார். அவர் மூன்று வயதில் உமையம்மையிடமே பால் குடித்த குழந்தையாவார். அவரை இங்கு வரவழைத்தால் சைவம் தழைக்க வழி செய்வார் என்று கூறினார். அவர்களும் அதற்கான முயற்சிகளில் இறங்கி செயல்பட துவங்கினார்கள். இவ்வாறு சிவநெறியில் வாழ்ந்து, அரசகருமம் செய்து வரும் நாளில் சிவநெறியை விளக்கும் திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு அருகாமையில் உள்ள திருமறைக்காட்டில் எழுந்தருளியிருப்பதாக செய்தியை அறிந்தார்.

இச்செய்தியினை அறிந்த பின்பு அவரை நேரில் கண்டு அடிபணிந்து மிகவும் மகிழ்ச்சி கொண்டார். இந்த செய்தியை பாண்டியமாதேவியாரிடம் எடுத்துரைத்தார். பாண்டிய நாடெங்கும் சைவம் ஓங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இருந்த பாண்டியமாதேவியாரோடு ஆலோசித்து திருஞானசம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு வரவழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்பு இவ்விரு ஞானஒளிகளும் எம்பெருமானை தரிசிக்க திருமறைக்காட்டில் தங்கியிருந்த சமயத்தில் திருஞானசம்பந்தரை காண மதுரையிலிருந்து (பாண்டிய நாட்டு தூதுவர்கள்) சிலர் வந்தனர். அவர்கள் திருஞானசம்பந்தரை வணங்கி பாண்டியமாதேவியும், அமைச்சர் குலச்சிறையாரும் அளித்த அரச ஒற்றை(செய்தி) அவரிடம் அளித்தனர். அதாவது அந்த ஒற்றில் பாண்டிய நாட்டில் சமணத்தின் வளர்ச்சியை தடுத்து சைவத்தை உயிர்ப்பித்து எடுக்கும் பொருட்டு தாங்கள் மதுரைக்கு எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தனர்.

பாண்டிய நாட்டு தூதுவர்கள் கொண்டு வந்த செய்தியை திருஞானசம்பந்தர் படித்ததும் அவர்களின் நல்ல எண்ணத்தை புரிந்து கொண்டு தன்னை காண வந்த ஒற்றர்களிடம் யாம் விரைவில் பாண்டிய நாட்டிற்கு வருவதாக கூறினார். அதற்கு தகுந்தாற்போல் திருஞானசம்பந்தரும் பாண்டிய நாடு செல்வதற்கான காலக்கட்டம் தோன்றியது.

மடத்தில் இருந்த அடியார்களின் மூலம் திருஞானசம்பந்தர் பாண்டிய நாடு செல்வதற்காக தயாராகி கொண்டு இருப்பதை அறிந்தார் திருநாவுக்கரசர். பின்னர் திருஞானசம்பந்தர் தங்கி இருக்கும் மடத்திற்கு விரைந்து சென்று அவருடைய பயணத்தை தவிர்க்க வேண்டும் என எண்ணம் கொண்டு அவ்விடத்திற்கு சென்றார். திருஞானசம்பந்தர் தம்மை காண வந்திருக்கும் திருநாவுக்கரசரை வரவேற்று என்னவாயிற்று? தாங்கள் ஏன் இவ்வளவு பதற்றமாக இருக்கின்றீர்கள்? என்று வினவினார்.

பதற்றத்தை தவிர்த்து மனஅமைதி கொண்ட திருநாவுக்கரசர் தன்னுடைய மனதில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்த துவங்கினார். அதாவது, தாங்கள் பாண்டிய நாடு செல்ல முடிவு செய்து உள்ளீர்களா? என்று வினவினார். திருஞானசம்பந்தரும் ஆம் என்றும், பாண்டிய நாட்டில் சமணர்களால் நிகழ்வனவற்றை எடுத்து உரைத்து அவர்களை தடுப்பதற்காக யாம் அங்கு செல்கிறோம் என்றும் கூறினார்.

அவர் இவ்விதம் கூறியதும் சிறிதும் யோசிக்காமல் வஞ்சக எண்ணம் கொண்ட, மாசு படிந்த உடலுடன் வாழும் மாயையில் வல்லவர்களாக திகழும் அந்த சமணர்களை ஒழிக்க தூய்மையும், வாய்மையும் மிக்க தாங்கள் செல்வது என்பது நன்றாக இருக்காது. ஏனெனில் அக்கயவர்கள் எமக்கு இழைத்த இன்னல்கள் என்பது மிகவும் கொடுமையாகும். ஆகவே தாங்கள் பாண்டிய நாட்டிற்கு செல்ல அடியேன் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என்று உரைத்தார்.

திருநாவுக்கரசர் தம்மீது கொண்டுள்ள அன்பைக் கண்டு மனம் மகிழ்ந்தார் திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசரிடம் பிறைசூடிய எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் பாண்டியமாதேவியும், அமைச்சர்களின் அழைப்பால் செல்வதால் எனக்கு எவ்விதமான இடர்பாடும் ஏற்படாது என்று கூறினார். சமண மதத்தை நம்பி அறம் தவிர்த்து அதர்ம வழியில் சென்று கொண்டிருக்கும் பாண்டிய மன்னனை கொண்டே சமணர்களின் ஆணவத்தை அடக்கி சைவ சமயத்தினை பாண்டிய நாட்டில் நிலைநாட்டுவேன் என்று கூறினார். 

அதுவரை தாங்கள் இவ்விடத்திலேயே இருங்கள்... எப்படியும் பாண்டிய நாட்டினை சூழ்ந்துள்ள மற்ற சமய இருளை நீக்கி, சைவ சமயத்தின் திருவிளக்கினை ஏற்றி, அந்த தீப ஒளியில் அவர்கள் கொண்ட மடமையை நீக்கி, வெற்றி வாகை சூடி வருகிறோம் என்று கூறினார். திருஞானசம்பந்தர் பேசிய உரையிலிருந்து அவரது மன உறுதியை கண்ட அப்பர் அடிகளார் மறு உரை உரைக்க இயலாது அவருடைய மனதிற்கு தகுந்தாற்போலவே அவரை பாண்டிய நாட்டிற்கு சென்று வெற்றி வாகை சூடி வர வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தார். 

திருஞானசம்பந்த பெருமான் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளும் செய்தி கிடைக்கும் முன்னரே அவரை வரவேற்க பலவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தன. பின்பு தூதுவர்கள் திருஞானசம்பந்த பெருமான் வருவதாக கூறிய செய்தியைக் கேட்டதும், அங்கிருந்த அனைவரும் அவரின் வருகையை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். மன்னரின் மனைவி, குலச்சிறையார் மற்றும் அங்கிருந்தவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக திருஞானசம்பந்த பெருமான் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளினார். 

திருஞானசம்பந்த மூர்த்தி வந்து கொண்டிருக்கின்றார் என்னும் செய்தியை கேட்டதும் குலச்சிறையார் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாதது. திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் எழுந்தருளியுள்ளார் என்னும் செய்தியை கூறியவருக்கு மங்கையர்க்கரசியார் மனம் மகிழ்ந்து பரிசுகள் பலவற்றை அளித்தார். அவ்வேளையில் குலச்சிறையாரும் வந்து மங்கையர்க்கரசியாரிடம் அடிபணிந்து நின்றார்.

திருஞானசம்பந்தரை அழைத்துவர எனக்கு தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டினார் குலச்சிறையார். தாங்கள் மட்டும் செல்லாமல் நானும் தங்களுடன் வந்து அவரை வரவேற்க எண்ணுகிறேன் என்றார் அரசியார். பின்பு மன்னரிடம் உரைத்து அனுமதி பெற்று வருகிறேன் என்று கூறினார். பின்பு சிறிது நேரத்திற்குள் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் திருஞானசம்பந்தரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

திருஞானசம்பந்தரை சூழ்ந்து வந்த தொண்டர் கூட்டம் மற்றும் பாண்டிய முதல் மந்திரியுடன் வருகை தந்த அமைச்சர்கள் என அனைவரும் அவரை பணிந்தபோதும் குலச்சிறையார் எழவில்லை. குலச்சிறையார் எழாததைக் கண்டு திருஞானசம்பந்தரின் தொண்டர் சிலர் சென்று சிவஞானச் செல்வரிடம் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கூறினார்கள். சிவஞானச் செல்வரும், முத்துச் சிவிகையிலிருந்து இறங்கி வந்து தம் கைமலர்களால் குலச்சிறையாரை எழுப்பி அவரை அணைத்தெடுத்தார்.

அவர்தம் அரவணைப்பினால் எழுந்த குலச்சிறையார் சிவஞானச் செல்வரான திருஞானசம்பந்தரைக் கைதொழுது நின்றார். திருஞானசம்பந்தருக்கு எதிர்செல்லாமல் மங்கையர்க்கரசியார் ஒரு புறமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். திருஞானசம்பந்தரோடு சென்று ஆலவாய் அவிர்சடைக் கடவுளை வழிபடும் பாக்கியமும், பேறும் பெற்றார். திருஞானசம்பந்தரது அருகில் நின்று கொண்டிருந்த குலச்சிறையார் தாங்களை இங்கே அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்ட பாண்டிய நாட்டின் வேந்தரான நின்றசீர்நெடுமாறனின் துணைவி இவர் என்று மங்கையர்க்கரசியாரை காட்டினார்.

குலச்சிறையார் அரசியாரை காட்டியதும் திருஞானசம்பந்தரும் அரசியார் பக்கமாகச் சென்றார். தமது அருகில் திருஞானசம்பந்தர் வந்ததும் அவருடைய பொற்பாதங்களில் வீழ்ந்து வணங்கிய மங்கையர்க்கரசியாரை திருஞானசம்பந்தர் பெருகிய அருளோடு கைகளால் மேலெழுப்பினார். எழுந்த அம்மையார் அவரை தொழுது விழிகளில் கண்ணீர் பெருக நானும், என் கணவரும் செய்த தவம் இவ்வுலகில் மிகப் பெரியது என்று கூறினார்.

சமண சமயம் பரவி கிடக்கும் இந்த பாண்டிய நாட்டில் எம்பெருமானின் திருவடியை எந்த சூழ்நிலையிலும் விடாமல் பற்றிக்கொண்டு இருக்கும் தங்களை காணவே யாம் இங்கு வருகை புரிந்தோம் என்று கூறினார் திருஞானசம்பந்தர். மங்கையர்க்கரசியாரோ தாங்கள் எழுந்தருளிய இவ்விடத்தில் இனி சைவம் தழைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று உரைத்து மனமகிழ்ச்சியோடு அரசியார் அரண்மனைக்கு சென்றார்.

பின்பு மங்கையர்க்கரசியாரின் ஆணைப்படியே குலச்சிறையார் திருஞானசம்பந்தர் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு திருஞானசம்பந்த பெருமானையும், அவருடன் வந்த தொண்டர் கூட்டத்தையும் அழைத்துச் சென்று திருமடத்தில் உறையச் செய்தார். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய அனைத்து தேவைகள் மற்றும் திருவிருந்தளிக்கும் பேறும் அவருக்கே வாய்த்தது. அன்று இரவு பள்ளியறைக்கு வந்த மன்னன் மங்கையர்க்கரசியாரிடம் யாதும் பேசாமல் கவலை கொண்ட முகத்துடன் காணப்பட்டார்.

அகத்தில் இருப்பது முகத்தில் தெரியும் என்பது போல மன்னர் ஏதோ கவலையில் இருக்கின்றார் என்பதை அறிந்து கொண்ட அரசியார் தங்களின் முகமானது மிகவும் கவலையுடன் இருக்கின்றதே... அதற்கு என்ன காரணம்? என்று வினவினாள். அதற்கு அரசன் சோழ நாட்டுச் சிவவேதியர் ஒருவர் சமண அடிகளாரை வாதினில் வெல்ல வந்திருக்கின்றார். இதைக் கேட்ட சமண அடிகளார் பாண்டிய நாட்டிற்கு ஏதோ ஆபத்து வர போகின்றது என்று பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை யாம் கேட்டதால் ஒரு விதமான கவலை கொண்டோம் என்று கூறினார்.

உடனே அரசியார் வாதத்தில் வெற்றி அடைந்தவர் பக்கம் சேருவதே முறையாகும் என்று கூறினார். அதன் பொருட்டு கவலை ஏன்? கவலை ஒழிக என அரசனுக்கு ஆறுதல் செய்தார் அரசியார். அரசனுக்கு ஆறுதல் கூறினாலும் அரசியார் கவலையுடனே அன்று இரவு இருந்தார். அதாவது வஞ்சனை எண்ணம் கொண்ட சமணர்களால் சம்பந்தப்பிள்ளையாருக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ? என்பதே அவர்தம் கவலை ஆகும். அவ்வாறு ஆபத்தேதும் நேரின் அவரை இங்கே அழைத்து வர காரணமாக இருந்த நானும் உயிர் துறப்பேன் என்று உறுதி பூண்டார் அரசி.

அரசியாரின் ஆணைப்படி அனைத்து செயல்களையும் மனநிறைவோடு செய்து முடித்தாலும் சமணர்களால் இவருக்கு தீங்கேதும் நேருமோ? என குலச்சிறையாரும் அஞ்சினார். அவ்விதம் ஏதேனும் நிகழுமாயின் தனது உயிரை துறப்பதும் சரியே... என்றும் எண்ணத் துவங்கினார். அவர்கள் இருவரும் அஞ்சிய வண்ணமே சமணத்துறவிகள் மதபேதத்தால் மதியிழந்து மன்னனின் ஆணையின் பேரில் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தனர் என்னும் செய்தியானது அவர்கள் இருவருக்கும் வந்தது. அதைக்கேட்டதும் அவர்கள் இருவரும் மிகவும் மனவேதனை அடைந்தனர்.

இருந்தாலும் சிவஞானச் செம்மலுக்கு தீங்கு ஏதும் நிகழவில்லை என்பதை அறிந்த பின்னரே அவர்கள் இருவரின் மனம் ஆறுதல் அடைந்தது. செய்யும் பிழைக்கு தண்டனை கிடைப்பது போல் அவன் இட்ட தீ அவனையே சென்று மெல்லத் தாக்கட்டும் என்று திருஞானசம்பந்தர் தீயின் தாக்கத்தை பாண்டியனுக்கே திருப்பிவிட்டார். பாண்டிய மன்னருக்கு வெப்பு நோயானது வருத்த துவங்கியது. இந்த நோயின் தாக்கத்தை குறைக்க சமணர்கள் செய்த எவ்விதமான மந்திரங்களும், சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை.

இந்த நோய்க்கு திருஞானசம்பந்தரின் மதியுரைதான் சிறந்த மருந்தாக இருக்கும் என்று மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் கூறினார்கள். மன்னனும் அவர்களின் ஆலோசனைப்படி திருஞானசம்பந்தரை அழைத்து வருமாறு பாண்டியமாதேவியாரையும், குலச்சிறையாரையும் பணித்தான். மன்னனின் விருப்பப்படியே பாண்டியமாதேவியாரும், குலச்சிறையாரும் குதிரையில் ஏறிச்சென்று திருஞானசம்பந்தப்பிள்ளையார் தங்கியிருக்கும் திருமடத்தை அடைந்தார்கள். அங்கே ஞானத்தின் திருவுருவாய் நின்ற திருஞானசம்பந்தரைக் கண்டனர்.

குலச்சிறையார் அவரை கண்ட பொழுதே சமணர்களின் கொடுந்தொழிலை நினைத்து கண்களில் நீர் வழிந்தோடியது. மேலும், தங்களது இருக்கரங்களை குவித்து திருஞானச்சம்பந்த பெருமானின் திருவடியில் வீழ்ந்து அழுதார். திருவடியைப் பற்றி விடாது இருந்தார். மேலும் அவரைப் புகலிவேந்தரே...! ஒன்றுக்கும் கவலை கொள்ள வேண்டாம் என்று ஆறுதல் கூறினார். பின்பு அபயமளித்த அவரை சிவிகையில் ஏறிவர அரச மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். பின் அரசனது தலைமாட்டில் பொற்பீடத்தில் அமரவைத்தார். பின்பு திருஞானசம்பந்தர் மந்திரம் ஜெபித்து மன்னருக்கு திருநீறு பூசியவுடன் நோயின் தாக்கமானது குறைய துவங்கியது. பின் மன்னரை முழுவதுமாக குணமடையச் செய்தார்.

நெடுமாற பாண்டியன் கூன் உடம்பு கொண்டவர். திருஞானசம்பந்தரின் அருள்மழையால் அவரது கூனும் நிமிர்ந்துவிட்டது. சிறிது நேரத்தில் சமணர்கள் வருகை தரவும் அவர்களுக்கு சைவத்தின் மீதும், திருஞானசம்பந்தரின் மீதும் இருந்த வெறுப்பு மற்றும் விரோதத்தினால் அவர் குணமானதை மந்திர தந்திர விஷயம் என்று கூறினர். ஆனால் திருஞானசம்பந்தரோ சிகையில் எவ்விதமான சினமும் இன்றி இதில் எவ்விதமான மந்திரமும் இல்லை... தந்திரமும் இல்லை... என்று கூறினார். திருஞானசம்பந்தரின் கூற்றுக்கு செவி சாய்க்காத சமணர்கள் தங்களோடு வாதமிட அழைப்பு விடுத்தனர்.

அனல்வாதம், புனல்வாதம் என்ற இருவாத முறைகளிலும், முறையாக மந்திரம் ஓதப்பட்ட ஏடுகளை தீயிலும், நீரிலும் இட்டாலும் எந்த ஏடு எரியாமலும், மூழ்காமலும் நிற்கிறதோ அவர்கள் வென்றதாக கருதப்பட வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை ஆகும். திருஞானசம்பந்தர் தன்னை போட்டிக்கு அழைத்த சமணர்களுடன் போட்டியில் பங்கு கொண்டு அனைத்திலும் வெற்றியும் பெற்றார். வாதத்தில் தோற்ற சமணர்களையும் மற்றும் அவர்களுக்கு உடன்பட்டவர்கள் என அனைவரையும் கழுவிலேற்றி முறை செய்யுமாறு வேந்தர் ஆணையிட்டார். மன்னரின் ஆணைப்படியே எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர்.

திருநீறணிந்த பாண்டிய மன்னனை பாண்டியமாதேவியாருடன் திருஞானசம்பந்தர் அழைத்துச் சென்று ஆலவாய் அண்ணலைப் போற்றினார். வேந்தருக்கும், பாண்டியமாதேவியாருக்கும், மந்திரியாருக்கும் திருஞானசம்பந்த மூர்த்தியாருடன் கூடிச்செல்வதே ஆசையாக இருந்தது. ஆனால் திருஞானசம்பந்தரோ வேந்தரையும், அவருடைய துணைவியாரையும் நோக்கி தாங்கள் இங்கு இருந்தே சிவநெறி போற்றியிருங்கள் என்று பணித்தார். சங்கத்தமிழ் வளர்த்ததோடு, சைவத்தையும் வளர்த்து, வான்புகழ் பெற்றார்.

பாண்டிய நாட்டிலுள்ள எம்பெருமான் எழுந்தருளியுள்ள பல திருத்தலங்கள் சென்று தரிசித்துப் பதிகம் பாடி ஆனந்தம் கொண்ட திருஞானசம்பந்தர் பாண்டியனிடம் விடைபெற்றுக் கொண்டு சோழ நாட்டை நோக்கிப் புறப்பட்டார். சோழநாட்டை அடைந்து, திருக்களர், திருப்பாதாளீச்சரம் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, முள்ளி வாய்க்கரையை அடைந்தார். முள்ளி வாய்க்கரை ஆற்றின் எதிர்க்கரையில் அமைந்திருக்கும் திருக்கொள்ளம் பூதூர் இறைவனைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.

திருஞானசம்பந்தர் திருக்கொள்ளம் பூதூர் இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சமயத்தில் ஆற்றில் வெள்ளம் எப்போதும் இல்லாத அளவில் மிகுந்து சென்றது. அதைக் கண்ட ஓடக்காரர்கள் ஓடம் செலுத்த மறுத்து நின்றார்கள். திருஞானசம்பந்தர் தம்முடன் வந்திருந்த அடியார்களுடன் ஓடமொன்றில் ஏறிக்கொண்டார்.

பின்பு அங்கு இருந்தவர்களிடம் ஓடத்தினை அவிழ்த்து விட சொன்னார். அவர்களும் அவ்விதமே செய்தனர். திருஞானசம்பந்தர் 'கொட்டமே கமழும்" என்னும் பதிகத்தை பாட பரமசிவனுடைய திருவருளினால் ஓடம் யாருடைய உதவியும் இன்றி தானாகவே சென்று எதிர்கரையை அடைந்தது. கரையை அடைந்ததும் திருஞானசம்பந்தர் அடியார்களுடன் இறங்கி திருக்கோவிலை அடைந்து எம்பெருமானை தரிசனம் செய்து அங்கே எழுந்தருளியிருந்தார்.

சிலநாட்களுக்கு பின் வாதத்தில் அக்கினியில் வேகாத திருப்பதிகத்தையுடைய எம்பெருமானை வணங்க விருப்பம் கொண்டு திருக்கொள்ளம் பூதூரை நீங்கி, திருநள்ளாற்றை அடைந்து, சுவாமிதரிசனம் செய்து, 'பாடகமெல்லடி" என்னும் வினாவுரை பதிகத்தை எம்பெருமானின் மீது பாடினார். பின்பு அங்கு சிலநாட்கள் தங்கி இருந்தார். 

பின்பு திருஞானசம்பந்தர் திருத்தெளிச்சேரியை அடைந்து எம்பெருமானை தரிசனம் செய்து கொண்டு செல்லும்போது பௌத்தர்கள் இருக்கின்ற போதிமங்கை என்ற இடத்தை அடைந்தார். சிவநாமத்தை முழங்கிய வண்ணமாக சங்கு, தாரை முதலிய பலவகைப்பட்ட வாத்தியங்களையும் முழங்கி ஆரவாரித்தார்கள். முத்துச் சின்னங்களெல்லாம் 'பரசமய கோளரி வந்தார்" என்று ஊதின. பௌத்தர்கள் அனைவரும் ஒன்றிணைத்து திருஞானசம்பந்தர் தங்கள் எல்லையில் எழுந்தருளும்போது அடியார்கள் எடுத்த ஆரவாரத்தினாலும், திருச்சின்னவொலியினாலும் பொறாமை கொண்டனர்.

பௌத்தர்களின் பொறாமையானது திருஞானசம்பந்தரை வாதில் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாக காரணமாக இருந்தது. அதனால் தங்கள் சமய நூலில் மகா பாண்டித்தியமுள்ள புத்தநந்தி என்பவனிடம் சென்று முறையிட்டனர். அவர்களுடைய கூற்றுகளும், திருஞானசம்பந்தர் முன் வருகின்ற திருச்சின்னவொலியும், அடியார்களுடைய ஆரவாரமும், காதினுள் கேட்டதை கொடுமையாக கருதிய புத்தநந்தி மிகவும் சினம் கொண்டார்.

பின்னர் புத்தநந்தி எழுந்து பௌத்தர் கூட்டம் சூழ சென்று சிவனடியார்களை சந்தித்து நீங்கள் எங்களை தருக்கத்தில் வென்றால் மட்டுமே உங்களின் வெற்றிச் சின்னங்களை ஊதல் வேண்டும் என்று கோபம் கொண்டு கூறினார். திருஞானசம்பந்தருடன் வந்த அடியார்களின் உள்ளம் பௌத்தர்களின் செயல்பாடுகளை கண்டு மிகவும் வருந்தின. பின்பு அவர்கள் முத்துச்சிவிகை மேல் எழுந்தருளியிருக்கின்ற திருஞானசம்பந்தரை சென்று முறையிட்டார்கள்.

அடியார்களின் கூற்றுகளைக் கேட்டு சினங்கொண்ட திருஞானசம்பந்தர், புத்தநந்தியை சபித்தார். உடனே இடியடித்து புத்தநந்தியுடைய சரீரத்தையும், தலையையும் வேறாக கூறுபடுத்தியது மட்டுமல்லாமல் மடிந்தும் போனார். அதைக்கண்ட பௌத்தர் கூட்டம் அஞ்சி ஓடினர். பின்பு திருஞானசம்பந்தர் அங்கிருந்த அனைவரையும் நீங்கள் எல்லோரும் ஹரஹர என்று ஆரவாரியுங்கள் என கூறினார்.

அடியார்கள் அனைவரும் எம்பெருமானின் திருநாமத்தை எழுப்பிய வண்ணமாக சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் எழுப்பிய ஒலியானது மிகுதியாகவே இதை மனதில் கொண்டு புத்தநந்திக்கு ஏற்பட்டதை எண்ணி அவர்களை பழிவாங்கும் எண்ணம் கொண்டு பௌத்தர்கள் சாரிபுத்தன் என்பவனை தங்கள் தலைவனாக கொண்டு திருஞானசம்பந்தரை வாதில் வெல்லக் கருதி வந்தனர்.

பௌத்தர்கள் அனைவரும் ஒன்று கூடி நீங்கள் செய்தது நியாயமன்று. உங்கள் சைவ சமயம் உண்மையெனில் மந்திரவாதமின்றி, எதிர்த்து தருக்கம் பேச வாருங்கள் என்று தங்களின் தலைவனாகிய சாரிபுத்தனையே முன்வைத்து உரைத்தனர். திருஞானசம்பந்தர், அவர்கள் உரைத்ததை கேட்டு மனம் மகிழ்ந்த வண்ணமாக முத்துச்சிவிகையில் இருந்து இறங்கி அருகில் இருந்த ஒரு சத்திரமண்டபத்தின் மேல் சைவர்கள் சூழ அமர்ந்து கொண்டார்.

தனக்கு முன்பாக உள்ள அடியார்களை நோக்கி என்னிடம் தருக்கம் பேச விருப்பம் உள்ள பௌத்தர்களை இங்கே அழைத்து வாருங்கள் என்று உரைத்தார். அடியார்களும் திருஞானசம்பந்தரின் ஆணையை ஏற்றுக்கொண்டு பௌத்தர்களின் கூட்டத்தை அடைந்தனர். பின்பு திருஞானசம்பந்த மூர்த்தியார் உங்கள் விருப்பத்தின்படி வாதம் செய்வதற்கு விருப்பம் உள்ளவர்களை மகிழ்ச்சியோடு அழைக்கின்றார் வாருங்கள் என்று அடியார்கள் அழைத்தனர்.

அதைக்கேட்ட சாரிபுத்தன் பௌத்தர்களோடு வந்து மண்டபத்தில் அமர்ந்து இருந்த திருஞானசம்பந்தருக்கு பக்கத்தில் நின்றான். சாரிபுத்தன் வாதத்தை துவங்க எம்பெருமானை மனதில் எண்ணிய வண்ணமாக திருஞானசம்பந்தர் அவர்களின் ஒவ்வொரு வாதத்திற்கும் பதில் அளித்தும், எதிர்வாதமும் செய்தார். பின்னர் பௌத்த சமயத்தை நிராகரணம் செய்து அவனை வென்றார். 

பௌத்தர்கள் தோற்று தங்கள் சமயம் பொய் நெறி என்று கண்டு, திருஞானசம்பந்தரை விழுந்து நமஸ்கரித்தார்கள். பௌத்த சமயமும், சமணத்தின் வழி சென்று திருஞானசம்பந்தரிடம் தோற்றது. திருஞானசம்பந்தர் மீண்டும் தமது பயணத்தை தொடர்ந்தார். தொண்டர்களுடன் அவர் முத்துச்சிவிகையில் புறப்பட்டு திருக்கடலூரை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனை பணிந்து வணங்கி சில நாட்கள் அவ்விடத்தில் தங்கினார்.

அடியார்கள் சிலர் திருஞானசம்பந்தரிடம் அப்பர் அடிகளார் திருப்பூந்துருத்தி என்னும் தலத்தில் இருப்பதாக கூறினார்கள். இச்செய்தியை அறிந்ததும் அப்பர் அடிகளாரை காண வேண்டும் என்ற எண்ணத்தோடு முத்துச்சிவிகையில் ஏறி அடியார்கள் புடைசூழ புறப்பட்டார் திருஞானசம்பந்தர். பாண்டிய நாட்டில் இருந்து, தம்மை காண திருஞானசம்பந்தர் வந்து கொண்டு இருக்கின்றார் என்னும் செய்தியை அறிந்ததும் அப்பர் அடிகளார் மகிழ்ச்சியுடன் அவரை அழைத்து வர புறப்பட்டார். அவர் எண்ணியதை போலவே திருஞானசம்பந்தர் முத்துச்சிவிகையில் அடியார்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தார்.

அவ்வேளையில் அந்த நிகழ்வினை கண்டதும் அப்பர் அடிகளாருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அதாவது, திருஞானசம்பந்தர் வீற்றிருக்கும் முத்துச்சிவிகையை தமது தோள் கொடுத்து சுமந்து வர வேண்டும் என்பதாகும். பின்பு எவரும் தம்மை அடையாளம் காணாத வகையில் தம்மை மறைத்து கொண்டு முத்துச்சிவிகையை சுமந்து வரும் அடியார் கூட்டத்தோடு இணைந்து திருஞானசம்பந்தர் வீற்றிருக்கும் முத்துச்சிவிகையைத் தமது தோள் கொடுத்து சுமந்து நடந்து கொண்டு வந்தார்.

திருப்பூந்துருத்திக்கு வந்திருந்த திருஞானசம்பந்தர் அப்பர் அடியாரை எவ்விடத்திலும் காணாது, அப்பரே... எங்கிருக்கிறீர்? என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதைக் கேட்டதும் திருநாவுக்கரசர் தேவருடைய அடியேன் தேவரைத் தாங்கிவரும் பெருவாழ்வை பெற்று இங்கு உள்ளேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார். அப்பருடைய ‌குரலைக் கேட்டதும் திருஞானசம்பந்தர் முத்துச்சிவிகையிலிருந்து விரைந்து கீழே இறங்கினார். அக்கணப்பொழுதில் திருஞானசம்பந்தரின் உள்ளமும், உடலும் பதைபதைக்க அப்பரடிகளை வணங்க வந்தார்.

அதற்குள் அப்பரடிகள் விரைந்து திருஞானசம்பந்தர் தம்‌மை வணங்குவதற்கு முன் அவரை வணங்கி மகிழ்ந்து உள்ளம் உருக... விழிகளில் ஆனந்த கண்ணீர் மல்க நின்றார். இவ்விடத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் காட்சியைக் கண்ட சிவனடியார்கள் அனைவரும் மெய்மறந்து நின்று கொண்டிருந்தனர். அடியார்கள் புடைசூழ அப்பரும், ஆளுடைப்பிள்ளையும் மங்கல வாத்தியங்கள் முழங்க எம்பெருமான் உறைந்திருக்கும் திருத்தலத்திற்கு சென்று திருப்பூந்துருத்திப் பெருமானை தமிழ் பாமாலையால் போற்றிப் பணிந்தனர்.

எம்பெருமானின் அருள் பெற்ற திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரை காண வந்த பக்தர்கள் பஞ்ச நந்தீசுவரனையும், பரமன் அருள்பெற்ற தவசியர்களையும் வணங்கி மகிழ்ந்தனர். ஒருநாள் திருஞானசம்பந்த மூர்த்தி, திருநாவுக்கரசரிடம் பாண்டிய நாட்டில் தாம் எவ்விதம் வாதத்தில் சமணர்களை வென்று வாகை சூடினோம் என்ற விவரத்தை கூறினார். பாண்டிய நாடெங்கும் சைவத்தை வளர்த்ததையும், மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையார் ஆகிய இருவரின் கீர்த்திகளையும் சொல்லியருளினார்.

இவ்விதம் உரைத்ததும் திருநாவுக்கரசருக்கு பாண்டிய நாடு செல்ல விருப்பம் தோன்றியது. திருநாவுக்கரசரும் தொண்டை நாட்டுக்கு சென்று அங்குள்ள சிவதலங்களை வணங்கினார். பின்னர் அவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை பற்றிய செய்திகளை திருஞானசம்பந்த மூர்த்திக்கு கூறிக்கொண்டு இருந்த வேளையில் திருஞானசம்பந்த மூர்த்திக்கு தொண்டை நாட்டில் உள்ள சிவதலங்களை வழிபட ஆவல் தோன்றியது.

தொண்டை நாட்டு பயணத்தை பற்றி கூறி முடித்தவுடன் அப்பரடிகள் திருஞானசம்பந்தரிடம் யான் பாண்டிய நாடு சென்று வருகிறேன் என்று கூற... ஆளுடைப்பிள்ளையாரும் யான் தொண்டை நாட்டு சிவதலங்களை வணங்கி வருகின்றோம்... என்று கூறினார். அவ்விருவரும் அவ்வாறே சித்தம் செய்ய ஒருவருக்கொருவர் விடைபெற்று கொண்டு தங்கள் பயணத்தை மேற்கொள்ள துவங்கினார்கள்.

ஓரிரு தினங்களுக்கு பின்பு அப்பர் மூர்த்தியாரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு பரம்பொருள் எழுந்தருளியிருக்கும் மற்ற தலங்களை தரிசிக்க தம்முடைய பயணத்தினை தொடர்ந்த வண்ணமாக காவேரி வடகரைக்கு சென்று திருநெய்த்தானம், திருவையாறு, திருப்பழனம் முதலிய தலங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வணங்கி கொண்டு நேராக சீர்காழியை அடைந்தார். சீர்காழியை நோக்கி திருஞானசம்பந்தர் வந்து கொண்டு இருப்பதை அறிந்த சிவபாதவிருதயர் திருத்தொண்டர்களுடன் சென்று திருஞானசம்பந்த பெருமானை எல்லையில் வரவேற்று அழைத்து வந்தார்.

திருஞானசம்பந்தர் சில காலம் பெற்றோர்களுடன் தங்கியிருந்தார். சீர்காழியில் தங்கியிருந்த நாட்கள் யாவும் தோணியப்பரை தரிசித்து ஆனந்தம் அடைந்தார். திருஞானசம்பந்தருக்கு அப்பர் உரைத்த தொண்டை மண்டலத்திற்கு யாத்திரை செல்ல வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கின. ஒருநாள் தோணியப்பரை வணங்கி விடைபெற்று கொண்டு அடியார்களோடு புறப்பட்டு தொண்டை மண்டலத்திற்கான பயணத்தை துவங்கினார் திருஞானசம்பந்தர்.

தம்மோடு வருவதற்கு தயாராகி இருந்த சிவபாதவிருதயரின் அருகில் சென்று... நீர் இங்கே யாகம் செய்து, சிவதரிசனம் செய்து கொள்ளுமாறு அவரிடம் உரைத்தார். பின்பு தன் தந்தையாரிடம் இருந்து விடைபெற்று கொண்டு தில்லைச் சிற்றம்பலத்தை வந்தடைந்த திருஞானசம்பந்தர் நடராசப் பெருமானை பணிந்து எழுந்தார்.

அங்கிருந்து புறப்பட்டுத் திருத்தினைநகர், திருமாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூர், திருவடுகூர், திருவக்கரை, திருவிரும்பைமாகாளம், திருவதிகை, திருவாமாத்தூர், திருக்கோவலூர், திருவறையணி நல்லூர், திருவண்ணாமலை என்னும் தலங்களை வணங்கிக் கொண்டு தொண்டை நாட்டை அடைந்தார். திருவோத்தூரை அடைந்து வேதபுரீசரரை வணங்கி வழிபட்டார். இத்திருத்தலத்தில் எம்பெருமான் அமரருக்கு வேதங்களை ஓதுவித்து அருள்புரிந்ததாகவும், வேதங்களுக்கு இறைவன் தமது திருக்கூடத்தினை காட்சியளித்து அருளியதாகவும் வரலாறு கூறுகிறது. 

இதனாலேயே இப்பெயர் பெற்றது. அத்து என்றால் வேதம் என்று பொருள். திருஞானசம்பந்தர் அத்திருத்தலத்தில் தங்கியிருந்து வேதபுரீசரரை தினமும் வணங்கினார். சுவாமி தரிசனம் செய்து கொண்டு தங்கியிருந்த நாட்களில் அந்தத் தலத்திலேயே இருந்த சிவனடியார் ஒருவர் திருஞானசம்பந்தரை வணங்கி நின்று சைவ மதத்தின் பெருமைகளை அனைவரும் அறியும் வகையில் செய்து... நீலகண்டனுக்கு தொண்டு புரிந்து கொண்டிருக்கும் அடியவரே... தம் மனதில் சில குறைகள் இருக்கின்றன... அதை தங்களிடம் உரைக்கலாமா? என்று வினவினார்.

திருத்தொண்டரின் விருப்பத்தை அறிந்ததும் ஐயனே...! உங்கள் உள்ளத்தில் இருக்கும் குறைகளை உரைப்பீர்களாக...!! எம்மால் முடிந்த அளவு உதவி செய்கின்றோம் என்று கூறினார் திருஞானசம்பந்தர். வந்திருந்த அடியார், சில நாட்களுக்கு முன்பு அடியேன் நட்ட பனைகள் காய்க்காத பனைகளாக இருக்கின்றன. அதைக்கண்ட சமணர்கள் எம்மை நகைப்பு ஏற்படுத்தும் விதமாக என்னிடம் ஆண் பனை எங்கேயாவது காய்ப்பதுண்டா? என கேட்டு இகழ்ந்து சொன்னார்கள்.

அவர்கள் செய்த தவறினை உணர்த்தும் விதமாக தேவரீர் திருவருள் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார். திருஞானசம்பந்தர் அடியார் கூறியதை கேட்டதும் எழுந்து, விரைந்து திருக்கோவிலிற்கு சென்று, சுவாமியை வணங்கி, 'பூந்தொத்தாயின" என்னும் திருப்பதிகம் பாடியருளினார். அத்திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்பிலே 'குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்" என்று அருளிச் செய்தார்.

திருஞானசம்பந்தர் பாடிய பதிக பாடல்களால் மனம் மகிழ்ந்த எம்பெருமான் அருள்புரிய ஆண் பனைகள் எல்லாம் நற்பனைகளாக மாற துவங்கின. ஆண் பனைகளெல்லாம் குரும்பைக் குலைகளை உடையனவாய் பெண் பனைகளாயின. அதனைக் கண்டவர்கள் எல்லோரும் ஆச்சரியம் கொண்டார்கள். திருஞானசம்பந்தருடைய செய்கையை கண்ட சமணர்கள் அந்நாட்டை விட்டு ஓடினார்கள். அவர்களில் சிலர் மட்டும் சிவபெருமானே உண்மைக்கடவுள் என்று துணிந்து சைவர்களாகினர்.

திருஞானசம்பந்தருடைய திருவாக்கில் பிறந்ததால் அப்பனைகளெல்லாம் தங்கள் காலத்தைக் கழித்து ஒழியாப் பிறவியை ஒழித்து, சிவத்தை அடைந்தன. திருஞானசம்பந்தர் சில நாட்களுக்கு பின், அத்திருப்பதியை நீங்கி திருமாகறல், திருக்குரங்கணில்முட்டம் என்னும் தலங்களை வணங்கிக் கொண்டு, காஞ்சிபுரத்தை அடைந்தார்.

காஞ்சிபுரத்தை நோக்கி திருஞானசம்பந்தர் வந்து கொண்டிருப்பதை அறிந்ததும் அவரை வரவேற்க அந்நகர மக்கள் நகரை அழகு செய்தனர். கமுகு, வாழை, கொடி, மாலை முதலியவை நிறைந்த அழகிய பந்தல்கள் வீதியெங்கும் அமைத்தனர். மங்கள ஒலி எழுப்பி மறைவேதம் எங்கும் முழங்கியது. காஞ்சியின் எல்லையில் அன்பர்களும், தொண்டர்களும், மங்கள மங்கையர்களும் புடை சூழ்ந்து கொண்டு காத்திருந்தனர்.

எல்லையை வந்தடைந்த திருஞானசம்பந்தரை வணங்கி அடியவர்கள் பூரண பொற்கும்ப கலசங்கள் வைத்து எதிர்கொண்டு நகருக்குள் அழைத்து வந்தனர். கண்களில் பக்தி வெள்ளம் பெருக பதிகம் ஒன்றை பாடிய வண்ணமாக காஞ்சிபுரத்தில் காஞ்சி காமாட்சியை தொழுதெழுந்தார். ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் வந்து பெருமானை தூய பதிகத்தால் ஏற்றிப் பணிந்தார். காஞ்சியிலுள்ள பல சிவ சன்னிதிகளுக்கு சென்று வழிபாடு செய்தார் திருஞானசம்பந்தர்.

காஞ்சிபுரத்தில் சில நாட்கள் தங்கியிருந்து திருப்பணிகள் பல புரிந்து வந்த திருஞானசம்பந்தர் திருவேகம்பம், திருக்கச்சிநெறிக்காரைக்காடு, திருஅனேகதங்காவதம், திருக்கச்சிமேற்றளி என்னும் தலங்களை வணங்கி கொண்டு சில நாட்கள் தங்கியிருந்தார். பின்பு அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு திருமாற்பேறு, திருவல்லம், திரு இலம்பையங்கோட்டூர், திருவிற்கோலம், திருவூறல் முதலாகிய தலங்களை வணங்கிக் கொண்டு, பழையனூர் திருவாலங்காட்டிற்கு அருகில் சென்றார்.

அவ்விடமானது காரைக்கால் அம்மையார் திருத்தலமானது. அதை மிதிக்க மனமில்லாமல் அதற்கு அருகில் உள்ள ஓர் ஊரில் தங்கியிருந்து பள்ளி கொண்டருளினார். திருவாலங்காட்டில் எழுந்தருளியிருக்கும் அந்த சமயத்தில் சொப்பனத்தில் தோன்றி 'எம்மை பாடுவதற்கு மறந்தனையோ" என்று அருளி மறைந்தனர். எம்பெருமான் கனவில் மறைந்ததும் உடனே திருஞானசம்பந்தர் விழித்து எழுந்து எம்பெருமானின் திருவருளை துதித்து 'துஞ்சவருவாரும்" என்னும் திருப்பதிகம் பாடியருளினார்.

திருஞானசம்பந்தர் மறுநாள் காலையில் தம்முடன் வந்திருந்த சிவனடியார்களிடம் இரவு பொழுதில் எம்பெருமானால் நிகழ்ந்த நிகழ்வுகளை சொல்லியருளினார். பின்பு திருப்பாசூர், திருவெண்பாக்கம், திருக்காரிக்கரை முதலிய தலங்களை வணங்கி கொண்டு திருக்காளத்திமலைக்கு சென்றார்.

பின்பு அவ்விடத்தில் கண்ணப்ப நாயனாருடைய திருத்தொண்டை சிறப்பித்து 'வானவர் கடானவர்கள்" என்னும் திருப்பதிகம் பாடிக் கொண்டு மலைமேல் ஏறி, எம்பெருமான் இருக்கும் சன்னிதானத்தை அடைந்து சுவாமியை வணங்கினார். எம்பெருமானின் திருவருளால் அன்பின் உருவமாகிய கண்ணப்ப நாயனாரை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார் திருஞானசம்பந்தர்.

பின்பு மலையிலிருந்து இறங்கி ஒரு திருமடத்தில் எழுந்தருளியிருந்தார். அவ்விடத்தில் தங்கியிருந்த காலத்தில் திருக்காளத்தியப்பரை வணங்கி கொண்டு வடதிசையிலும், மேற்கு திசையிலும் தமிழ்மொழி வழக்கு இன்மையால் உத்திர கைலாயம், திருக்கேதாரம், திருக்கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திர நீல பருப்பதம் முதலிய தலங்களை அங்கிருந்தே வணங்கி திருப்பதிகம் பாடினார்.

சில தினங்களுக்கு பின் திருக்காளத்தியை நீங்கி திருவேற்காடு, திருவலிதாயம் முதலிய தலங்களை வணங்கி கொண்டு, திருவொற்றியூரை அடைந்தார். முத்துச்சிவிகையிலிருந்து இறங்கி 'விடையவன்" என தொடங்கும் பாசுரம் ஒன்றை பாடிய வண்ணமாக திருக்கோவிலிற்குள் சென்று திருவொற்றியூரான் திருவடிகளை போற்றி பணிந்தார் திருஞானசம்பந்தர்.

திருவொற்றியூரானை விட்டு பிரிய மனமில்லாமல் சில காலம் தங்கியிருந்து நாள்தோறும் இறைவனை வழிபட்டு வந்தார் திருஞானசம்பந்தர். திருமயிலையில் சிவநேசர் என்னும் பெயருடைய வணிகர் குடியில் பிறந்த வள்ளல் ஒருவர் இருந்தார். அவர் சிவனாரிடத்தும், சிவனடியார்களிடத்தும் அன்புடையவராய் திகழ்ந்தார். எம்பெருமானின் மெய்ப்பொருளையே ஆராய்ந்து அறியும் ஆற்றல் மிக்க அருந்தவத்தை உணர்ந்து வாழ்வை நடத்தி வந்தார்.

பொய்மையில்லாத இவ்வணிக குலப்பெருந்தகையார் வாணிபம் செய்து பெரும் பொருள் ஈட்டினார். திருஞானசம்பந்த மூர்த்தியார் அம்மையிடம் இருந்து ஞானப்பால் உண்டமையை கேள்வியுற்று, உலகம் உய்யும் பொருட்டு, திருப்பதிகங்களில் மக்கள் கொண்டுள்ள பௌத்தத்தை இகழ்ந்து உரைப்பதையும், சமணர்கள் பலரை வெற்றி கொண்டதை கேள்விப்பட்டதும் மனம் மகிழ்ந்தார் சிவநேசர்.

மற்றவர்கள் அவரை பற்றி கூற கேட்டு அவருடைய திருவடிகளில் இருக்க விருப்பம் கொண்டார். அவரிடம் அளவற்ற செல்வங்கள் மற்றும் செல்வாக்கு இருந்தும் அதை ஆள்வதற்கு பிள்ளைப்பேறு இல்லாமையால் மிகவும் வருத்தம் கொண்டார் சிவநேசர். எம்பெருமானை மனதார வழிபட அவரின் அருளால் தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் லட்சுமிதேவியை போல் பொலிவு கொண்ட ஒரு பெண்பிள்ளையை பெற்றார்.

அவளுக்கு பூம்பாவை என்னும் பெயரிட்டு சீரோடும், சிறப்போடும் வளர்த்து வந்தார். அவள் வளர வளர அவளிடம் காணப்பட்ட குணாதிசயங்களை கண்டு வியப்புற்ற தந்தை மனம் மகிழ்ந்து தம்முடைய மகளை மனம் புரிபவரோ தன்னுடைய அனைத்து செல்வங்களுக்கும் உரியவர் என்று உறுதி பூண்டார்.

திருஞானசம்பந்தர் எம்பெருமானின் மீது கொண்டுள்ள பக்தியையும், அவர் செய்து வரும் செயல்களையும் கண்டு திருஞானசம்பந்தரை மனதிலே தியானித்து வந்தார் சிவநேசர். அவரையே தன் குலத்தின் முழுமுதற்கடவுள் எனக் கருதி வந்த சிவநேசர் தமது அருமை மகள் பூம்பாவையையும், பொன், பொருள் மற்றும் தன்னையும் திருஞானசம்பந்தருக்கே அர்ப்பணம் செய்வதாய் உறுதி பூண்டார். 

ஒருநாள் பூம்பாவை தன் தோழியர்களுடன் பூங்காவனத்திற்கு மலர் பறிக்க சென்றபோது மல்லிகைப் பந்தலில் மறைந்திருந்த அரவம் ஒன்று அவளுடைய விரலில் தாவக் கடித்துவிட்டது. பின் அவளுடைய உடலில் நஞ்சை செலுத்தி மேலே எழுந்து படம் விரித்து நின்றபடி, அவ்விடத்தில் இருந்து சென்றது. பூம்பாவை அவ்விடத்தில் மயங்கி விழ... பூம்பாவையுடன் வந்திருந்த சேடியர்கள் அவளைத் தாங்கி கொண்டு கன்னிமாடத்திற்கு அழைத்து சென்றனர்.

சிவநேசருக்கு தகவல் தெரிந்ததும் மனக்கலக்கத்துடன் சுற்றத்தாரோடு அழுது கொண்டே வந்தார். தோழியர்கள் சிலர் விஷ வைத்தியர்களுக்கு தகவல் அனுப்பினார்கள். அவர்களும் தனித்தனியே மந்திர ரீதியான செயல்களை செய்தும், எண்ணிறந்த ஒளஷதங்களை பல பிரயோகித்தும், விஷம் நீங்காமல் இருந்தது. மருத்துவர்கள் சிவநேசருடைய மகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் புரிய துவங்கினார்கள்.

ஆயினும் பலர் முயன்றும் மருத்துவத்தினால் சிவநேசர் மகளின் ஆரோக்கியத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் மயங்கிய நிலையிலேயே இருந்தார். தம்முடைய மகளின் இந்த நிலையை கண்டதும் சிவநேசரும், உறவினர்களும் என்ன செய்வது? என்று புரியாமல் மனம் வருந்தி கொண்டே இருந்தனர். தமது மகளின் நிலையை கண்டு மிகவும் மனம் உடைந்த சிவநேசர் தனது மகளை யார் காப்பாற்றினாலும், அவர்களுக்கு என்னிடம் உள்ள அனைத்து செல்வங்களையும் தருவதாக கூறினார்.

சிவநேசர் தமது மகளின் நிலையை கண்டு மிகவும் மனம் உடைந்து தனது மகளை யார் காப்பாற்றினாலும், அவர்களுக்கு என்னிடம் உள்ள அனைத்து செல்வங்களையும் தருவதாக கூறிய தகவலானது அனைவரிடத்திலும் செல்லும் வகையில் பரை மூலம் தெரிவிக்கப்பட்டது. பலரும் சிவநேசர் அளிக்கும் பொருட்களுக்காக அவரின் மகளை காப்பாற்றுவதற்கு, தனக்குத் தெரிந்த மருத்துவத்தையும், சமஸ்கிருதம் அறிந்த சில மந்திரவாதிகளையும் முயற்சி செய்தனர்.

எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களின் ஆரோக்கியத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. மூன்று நாட்களாகியும் பூம்பாவையின் உடலில் எந்தவிதமான அசைவும் இல்லாமல் இருந்தது. அவர்களின் உடலில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லாமல் இருப்பதை உணர்ந்ததும் மருத்துவர்களும், மந்திரம் அறிந்தவர்களும் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சிவநேசரிடம் கூறி சென்றனர். சிவநேசர், அவர்கள் உரைத்ததைக் கேட்டதும் சிறிது மயங்கிய நிலையில் ஆழ்ந்தார்.

பின்பு, இவளை திருஞானசம்பந்தருக்கு என்று எண்ணி சொல்லியதனால் நான் துன்புற வேண்டியதில்லை எனவும், மனக்கவலை நீங்கிய வண்ணம் திருஞானசம்பந்தர் வரும் காலம் வரை இவ்வுடலைத் தகனம் செய்வேன் எனவும் கூறினார். மேலும் எலும்பையும், சாம்பலையும் சேமித்து வைப்பேன் என்று துணிந்து உரைத்து அதற்கு தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள துவங்கினார்.

அப்படியே தகனம் செய்து எலும்பையும், சாம்பலையும் ஓர் குடத்தில் இட்டு, கன்னிமாடத்தில் வஸ்திரம் சாற்றி, ஆபரணங்கள் அணிந்து, பஞ்சணைமேல் வைத்தார். தினந்தோறும் தவறாமல் மஞ்சனம், மாலை, சந்தனம், அன்னம், விளக்கு முதலியவைகளை அமைத்தார். அதனை அறிந்த யாவரும் வியப்புற்றார்கள்.

சிவநேசர் தன் மகளை தகனம் செய்து எலும்பையும், சாம்பலையும் குடத்தில் இட்டு மாலை அணிவித்து செய்து வரும் காலங்களில் திருஞானசம்பந்தர் திருக்கூட்டத்தோடு திருவொற்றியூரில் எழுந்தருளினார். திருஞானசம்பந்தர் திருவொற்றியூரில் எம்பெருமானை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார் என்ற செய்தியை அந்த ஊர் மக்கள் பலர் வந்து சிவநேசரிடம் கூறினார்கள். அவர்கள் கூறியதை கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் சிவநேசர்.

தமது எண்ணங்களின் வலிமையால்தான் திருஞானசம்பந்தர் இங்கு எழுந்தருளியுள்ளார் என எண்ணினார் சிவநேசர். திருவொற்றியூர் மக்கள் தெரு எங்கும்

வாழைகளும் நட்டு...

தோரணங்கள் கட்டி...

கொடிகள் கட்டி...

மாலைகளால் அலங்கரித்தார்கள்.

மக்கள் வஸ்திரங்களையும், விலை உயர்ந்த பொன், பொருள்களையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் திருவொற்றியூரில் எழுந்தருளிய திருஞானசம்பந்தருக்கு கொடுத்து வரவேற்றனர். 

திருவொற்றியூருக்கு சென்று திருஞானசம்பந்தருடைய திருவடிகளை வணங்குவேன் என்று எழுந்து, அத்திருமயிலாப்பூரில் இருக்கின்ற சிவனடியார்களுடன் திருவொற்றியூருக்கு சென்றார் சிவநேசர். அப்பொழுது திருஞானசம்பந்தரும் திருவொற்றியூரிலிருந்து திருமயிலாப்பூரை நோக்கி அடியார் கூட்டத்தோடு எழுந்தருளியிருந்தார்.

சிவநேசரும், சிவனடியார்களும் அடியார் திருக்கூட்டத்தை தூரத்தில் கண்டு சிவபெருமானின் அருள் பெற்ற திருஞானசம்பந்த மூர்த்தியார் எழுந்தருளி வருகின்றார் என்பதைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு நிலத்தில் விழுந்து நமஸ்கரித்தார்கள். அடியார்கள் செய்வதை கண்டதும் திருஞானசம்பந்தர் முத்துச்சிவிகையில் இருந்து இறங்கி அவர்களுக்கு எதிரே எழுந்தருளினார்.

திருஞானசம்பந்தர் தன்னுடன் இருந்த அடியார்களுடன் சிவநேசருடைய செயல்களை கேட்டுக் கொண்டே திருமயிலாப்பூரை அடைந்தார். சிவநேசர் திருஞானசம்பந்தரை வரவேற்க பல வகையான ஏற்பாடுகளை செய்தார். திருஞானசம்பந்தர், மயிலையில் எழுந்தருளியிருக்கும் கபாலீசுவரரை தரிசிக்க அடியார்களுடன் முத்துச்சிவிகையில் புறப்பட்டு வந்தார்.

சிவநேசர் மகிழ்ச்சி பொங்க, எதிர்சென்று திருஞானசம்பந்தரை வரவேற்று வணங்கினார். திருஞானசம்பந்தர் சிவநேசருடன் மயிலையை அடைந்து கோவிலில் எழுந்தருளியிருக்கும் அருள் தரும் அம்பிகை கற்பகாம்பாளையும், கருணைக் கடலான கபாலீசுவரரையும் பைந்தமிழ் பாசுரத்தால் போற்றினார். 

திருக்கோவிலின் வெளிப்புறத்திற்கு வந்ததும், அவ்விடத்தில் சிவநேசர் இருப்பதைக் கண்டதும் திருஞானசம்பந்தர் சிவநேசரிடம், உம்முடைய மகளின் சாம்பலும், எலும்பும் நிறைந்த குடத்தை மதிற்புற வாயிலின் முன்பு கொண்டு வருக...! என்று பணித்தார். சிவநேசர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு நிலத்தில் விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். 

பின்னர் தம்முடைய வீட்டை அடைந்து, கன்னிமாடத்தில் புகுந்து சாம்பலும், எலும்பும் நிறைந்த குடத்தை எடுத்துக் கொண்டு சேடியர்கள் பலர் சூழ்ந்து செல்லும்படி கோவிலுக்குப் புறத்தே திருஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த முத்துச்சிவிகையின் முன்னால் வைத்தார்.

சிவநேசரின் செயல்களை கண்டதும் திருமயிலாப்பூரில் இருக்கின்றவர்களும், மற்ற ஊர்களில் இருந்து வந்தவர்களும், சமணர் முதலாகிய மற்ற சமயத்தை சார்ந்தவர்களும் பார்க்கும் பொருட்டு பக்கத்தில் வந்து சூழ்ந்தார்கள். நிகழப்போகும் அதிசயத்தை தேவர்கள் முதலானோர் ஆகாயத்தில் வந்து நெருங்கினார்கள்.

பூம்பாவையினது அத்தியிருக்கின்ற மட்குடத்தை கண்டதும் பரமசிவனுடைய திருவருளின் பெருமையை எண்ணிய வண்ணமாக...

இப்பூமியிலே இறந்தவர்களுடைய எலும்பை பின்னும் நன்னெறிப்படுத்த...

அந்நன்மை அவ்வெலும்போடு தொடர்ச்சியாகும் என்று...

திருவருணோக்கிலே 'பூம்பாவாய்" என்று விளித்து...

பூமியிலே மானுடப்பிறப்பு எடுத்தவர்களின் பெரும்பயன் அன்புடனே சிவபெருமானுடைய அடியார்களைத் திருவமுது செய்வித்தலும்...

சைவ ஆகமவிதிப்படி செய்யப்படுகின்ற அவருடைய திருவிழாவை தரிசித்து ஆனந்தம் அடைதலுமே என்பது சத்தியமாயின்...

நீ இவ்வுலகர்முன் வருவாய் என்று 'மட்டிட்டபுன்னை" என்னும் திருப்பதிகத்தை பாடியருளினார்.

அதில் அருளி செய்யப்பட்ட 'போதியோ" என்னும் திருவாக்காகிய அமிர்தம் அவ்வங்கத்திலே பொருந்த...

அது குடத்தினுள்ளே மெய் சரீரமாய்ப் பரிணமித்தது.

பூம்பாவை முதல் இரு பாட்டில் வடிவு பெற்று, வேறெட்டுப் பாட்டில் பன்னிரண்டு வயதையடைந்து குடத்தினுள் அடங்கியிருந்தாள்.

பின்பு திருஞானசம்பந்தர் சமணர்களும், பௌத்தர்களும் இந்த செய்கையானது இயலாது என்று எடுத்து உரைப்பார்கள் என்னும் கருத்தை கொண்டு பத்தாந்திருப்பாட்டை அருளிச் செய்தார். சமணர்களையும், பௌத்தர்களையும் குறிப்பிட்ட வண்ணம் பாடி முடித்ததும் பூம்பாவை உடலை வைத்திருந்த குடமானது உடையத் துவங்கியது.

பூம்பாவை எழிலோடும், பதுமம் மலர்தனில் வீற்றிருக்கும் திருமகளை போன்ற பேரழகு வடிவம் கொண்டவளாக எழுந்து நின்றாள். பூம்பாவை நிற்பதைக் கண்டதும் திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு சாற்றியருளினார்.

பூம்பாவை எழுந்து நிற்பதை கண்டதும் திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்புச் சாற்றியருளிய பின் உயிர் பெற்று... மெய் பெற்று... அழகு பதுமையாக நின்று கொண்டிருக்கும் பூம்பாவையை கண்டவர்கள் எல்லோரும் இங்கு நிகழ்வது யாது? என்று புரியாமல் வியப்பின் உச்சிக்கே சென்றனர். எம்பெருமானை வழிபடும் அடியார்கள் யாவரும் 'ஹர ஹர" என்று ஒலியை எழுப்பிய வண்ணமாக இருந்தனர்.

தேவலோகத்தில் வாழும் தேவர்களும்...

எம்பெருமானை எண்ணி தவம் புரிந்து கொண்டிருக்கும் முனிவர்களும்...

எம்பெருமானின் திருவருட் சிறப்பை நோக்கி புஷ்பமாரி பொழிந்தார்கள்...

மண்ணுலகில் வாழும் மனிதர்கள் இவ்விடத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் செயலானது எம்பெருமானின் கருணையாகும்...

என்று எண்ணிய வண்ணமாக சிரசின் மீது கரம் குவித்த வண்ணமாக...

எம்பெருமானை மனதில் எண்ணிய வண்ணமாக...

ஆனந்த பராயணராய் வீழ்ந்தார்கள்.

இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் செயல்களையும், செயல்களின் விளைவுகளையும் கண்ட மற்ற சமயத்தினர் என்ன சொல்வது?... செய்வது?... என்று தெரியாமல் யாவரும் நம்மை காண்பதற்கு முன்பாக இவ்விடத்தை விட்டு செல்வது உசிதமாகும் என்று எண்ணி அவ்விடத்தை விட்டு அகன்றனர். 

இனிமேல் எந்த நிலையிலும் தன்னுடைய புதல்வியான பூம்பாவையை காண முடியாது என்று நினைத்து மனம் வருந்தி கொண்டிருந்த சிவநேசர், தம் புதல்வியை மீண்டும் கண்டதும் உரைப்பதற்கு வார்த்தைகளும், சொற்களும் இன்றி விழிகளில் ஆனந்த கண்ணீருடன் புதல்வியின் அருகில் சென்றார். தம் புதல்வியை ஆர தழுவிய வண்ணமாக நீண்ட நாட்களுக்கு பின்பு கவலைகள் யாதும் இல்லாதவராக மகிழ்ச்சி அடைந்தார் சிவநேசர்.

சிவநேசர் தம்முடைய புதல்வி மீண்டும் கிடைக்க உதவியாக இருந்த திருஞானசம்பந்தருடைய திருவடிகளில் விழுந்து நமஸ்கரித்தார். பூம்பாவை சிவபெருமானை வணங்கிய பின்பு திருஞானசம்பந்தரை நமஸ்கரித்து எழுந்து நின்றாள். திருஞானசம்பந்தர் சிவநேசரை நோக்கி, உங்களது புதல்வியை வீட்டிற்கு அழைத்துச் செல்வீர்களாக..! என்று திருவாய் மலர்ந்தருளினார்.

திருஞானசம்பந்தரின் திருவடிகளை வணங்கி துதித்த வண்ணமாக சுவாமியே... அடியேன் ஈன்ற புதல்வியை எம்பெருமானின் பரிபூரண அருள் பெற்ற தாங்கள் திருமணம் செய்து அருள வேண்டுமென்று வேண்டுகின்றேன் என கூறினார் சிவநேசர். திருஞானசம்பந்தர் புன்முறுவலோடு சிவநேசரை கண்டு உன்னுடைய மகள் அரவம் தீண்டி இறந்துவிட்டாள்.

ஆனால் இவளோ எம்பெருமானின் அருளால் மறுபிறவி எடுத்து இன்று நம்முடன் நின்று கொண்டிருக்கிறாள். எனவே இவள் என் மகளுக்கு இணையாக இருக்கக்கூடியவள் ஆயிற்றே. என் மகளை எவ்விதம் நான் திருமணம் செய்துகொள்ள இயலும்?... இது முறையானதல்ல... என்று கூறினார். யாவரும் எதிர்பார்க்காத இந்த வார்த்தைகளின் மூலம் சிவநேசர் மிகுந்த துயரத்திற்கு ஆளாகினார்.

பின்னர் அவ்விடத்திலேயே கண்களில் கண்ணீர் வழிய திருஞானசம்பந்தரின் திருவடிகளில் விழுந்து அழத் துவங்கினார். திருஞானசம்பந்தர், அவர்கள் கொண்டிருக்கக்கூடிய பெரும் துயரத்தை நீக்கும் பொருட்டு தேருளி சிவாகமத்துணிவை அவர்களுக்கு எடுத்து போதித்தார். அதைக்கேட்ட சிவநேசரும், அவருடைய உறவினர்களும் மனதிலிருந்த கவலைகள் யாவும் நீங்கிய வண்ணமாகவும், உண்மையை உணர்ந்து திருஞானசம்பந்தரின் திருவடிகளில் வணங்கி தன் மகளோடு வீட்டிற்கு திரும்பினார்.

சிவநேசர் தம்முடைய மகள் பூம்பாவையை வேறு எவருக்கும் திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லாததால், அவளை கன்னிமாடத்தில் தங்க வைத்தார். பூம்பாவையும் இப்பூமியில் வாழும் நாட்கள் யாவும் எம்பெருமானின் நாமங்களை துதித்த வண்ணமாக வாழ்ந்தும், எம்பெருமானை எண்ணி தவம் இருந்தும் பரம்பொருளான சிவத்தை அடைந்தாள்.

பூம்பாவைக்கு மறுபிறவி கொடுத்த கற்காம்பாள் சமேத கபாலீசுவரரை வணங்கி விட்டு... சில காலம் தங்கியிருந்து... கபாலீசுவரனின் திருவருளை துதித்து... திருப்பதிகம் பாடிக் கொண்டிருந்தார் திருஞானசம்பந்தர். சில நாட்களில் திருஞானசம்பந்தர் தம்முடைய புனித யாத்திரையை தொடர்ந்தார்.

அந்த வகையில் திருமயிலாப்பூரில் இருந்து தம்முடன் வந்திருந்த திருத்தொண்டர்களுடன் அவ்வூரில் இருந்த திருத்தொண்டர்களிடம் இருந்து விடைபெற்று கொண்டும், சிவநேசருக்கும் வருத்தம் நீங்கும் படியாக மதுரமொழியை அருளி... விடை கொடுத்து சென்றார் திருஞானசம்பந்தர். அதன் பின்னர் திருவான்மியூர், திருவிடைச்சுரம், திருக்கழுக்குன்றம், திருஅச்சிறுபாக்கம், திருஅரசிலி, திருப்புறவார்பனங்காட்டூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு சிதம்பரத்தை அடைந்தார்.

தில்லையை நோக்கி திருஞானசம்பந்தர் வந்து கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்த தில்லைவாழ் அந்தணர்கள் அவரை எதிர்கொண்டு அழைத்து வந்தனர். தில்லையில் எழுந்தருளி அருள்பாலித்து கொண்டிருக்கும் அம்பல நடராஜப் பெருமானை தரிசிக்க தகுந்த ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

pருஞானசம்பந்தர் அம்பலவாணரை தரிசிக்க இரு கண்கள் போதாதே...!! என்று எண்ணும் பட்சத்தில் அவரை நன்கு தரிசித்து, பைந்தமிழ் பாமாலைகளின் மூலம் ஆடிக்கொண்டிருக்கும் கூத்தனை மென்மேலும் மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் பாடினார். அங்கிருந்த காலங்கள் யாவும் அம்பலவாணரை பைந்தமிழ் பாக்களால் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்.

சில தினங்களுக்கு பின்பு சபாநாயகரை மனதார வழிபட்டு மகிழ்ச்சி அடைந்த பின்பு முத்துச்சிவிகையில் புறப்பட்டு தமது பிறந்த ஊரான சீர்காழியில் தம்முடன் வந்திருந்த அடியார்களுடன் வந்து கொண்டிருந்தார். தமது மகன் சீர்காழிக்கு வந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்ட பெற்றோர்களும், மற்றவர்களும் அவரை வரவேற்க மேளதாளத்துடன் எதிர்கொண்டு சென்று அவரை நன்முறையில் வரவேற்று அழைத்து வந்தனர்.

சீர்காழியின் எல்லைப் பகுதியில் நின்ற வண்ணமாக மனதில் தோணியப்பரை நினைத்து தோணியப்பர் அரசாண்டு கொண்டிருக்கும் சீர்காழியில் எழுந்தருளினார். சீர்காழியில் தோணியப்பர் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அவரை வழிபட்ட பின்பு அன்பர்களும், தொண்டர்களும் புடைசூழ தமது திருமாளிகைக்கு எழுந்தருளினார்.

திருஞானசம்பந்தர் சீர்காழியில் இருக்கின்றார் என்ற செய்தியை அறிந்ததும் திருமுருக நாயனார் மற்றும் திருநீலநக்க நாயனார் முதலிய எம்பெருமானின் அருள் பெற்ற செல்வர்கள் தங்கள் சுற்றத்தாருடன் சீர்காழிக்கு வந்தனர். திருஞானசம்பந்தர் அவர்களை வணங்கி வரவேற்றார். அவர்களிடம் தாம் மேற்கொண்டு வந்த சிவ பயணங்களை பற்றி எடுத்து உரைத்தது மட்டுமல்லாமல், அவர்கள் எம்பெருமானால் கிடைக்கப்பெற்ற அனுபவங்களையும் கேட்க பெற்று மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருந்தனர்.

திருஞானசம்பந்தரும் தம்மை காண வந்த அடியார்களை சிறப்பித்தார். அவர்களோடு தங்கியிருந்த நாட்கள் முழுவதும் திருத்தோணியப்பர் எழுந்தருளியிருக்கும் ஆலயத்திற்கு சென்று சிவ பாடல்களை பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார். காலங்கள் விரைந்து ஓடிக்கொண்டிருக்க திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோர்களும், அவரது உறவினர்களும் தீர்மானித்தார்கள்.

தங்கள் எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு திருஞானசம்பந்தரை அணுகி வேத முறைப்படி பல கேள்விகளை எழுப்பியும், அதன் அடிப்படையில் பல வேள்விகளையும் மேற்கொள்ள திருமணம் செய்து கொள்வது அவசியமாகும் என கூறினர். உறவினர்களும், பெற்றோர்களும் மொழிந்ததை கேட்டதும் திருமணம் செய்து கொள்ள இது தருணம் அல்ல என்றும்... ஆனால், உங்கள் முடிவுகள் உலகில் உள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் என்று கூறினார்.

ஆனால் தற்போது இருக்கும் சூழலில் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் சற்றும் விருப்பம் இல்லை என்று விடை கூறினார் திருஞானசம்பந்தர். உலகப்பற்று என்னும் அன்பு, பாசம் ஆகியவற்றை கடந்து, எம்பெருமானின் திருவருளால் இறைவனை அடையும் நிலையை பெற்றுள்ளமையால் எமக்கு இல்லற வாழ்க்கையில் ஈடுபட விருப்பம் இல்லை என்று தெளிவாக எடுத்து உரைத்தார்.

ஆனால் பெற்றோர்களும், உறவினர்களும் விடாது அவரிடம் மறையவர்களுக்கு உண்டான அறத்தையும், தர்மத்தையும் வைதீக முறைப்படி எடுத்துரைத்து, இத்தருணத்தில் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொள்வது சிறப்பாகும் என்று மொழிந்தனர். பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் விருப்பங்களை அறிந்த பின்பும் அவர்களுக்கு பலவகையில் எடுத்துரைத்தார் திருஞானசம்பந்தர். ஆனால், அவர்கள் தங்களின் கருத்துக்களில் நிலையாக இருந்தனர்.

பெற்றோர்களும், உறவினர்களும் அவர்களுடைய கருத்தில் நிலையாக இருந்ததால், இங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்துமே எம்பெருமானின் செயலாகும் என்று எண்ணி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் திருஞானசம்பந்தர். அவர் விருப்பம் தெரிவித்ததை கேட்டதும் பெற்றோர்களும், உடனிருந்த சுற்றத்தார்களும் எண்ணிலடங்கா வண்ணம் மகிழ்ச்சி அடைந்தனர்.

நிகழ்வது எல்லாம் எம்பெருமானின் செயல்தான்... அவரின் ஆசிகள் இல்லாமல் எதுவும் நடைபெறாது என்பதை அனைவரும் அறிந்த வண்ணமாக மகிழ்ச்சி கொண்டிருந்தனர். பெற்றோர்களும், உறவினர்களும்

திருஞானசம்பந்தருடைய வாழ்க்கைக்கு உகந்த துணையாகவும்,

சிறந்ததொரு மனையாளாக இருக்கக்கூடியவராகவும்,

மேலும் தங்கள் வீட்டிற்கு ஒரு அன்பு மகளாக இருக்கக்கூடிய ஒரு புதல்வியை தேட துவங்கினார்கள்.

இறுதியாக பல தேடல்களின் பலனாக திருஞானசம்பந்தருக்கு உரிய மனையாளை பெற்றோர்கள் தீர்மானித்தார்கள். அதாவது, திருப்பெருமணநல்லூரில் வாழும் நம்பியாண்டார் நம்பியின் புதல்வியே திருஞானசம்பந்தரின் துணையாக இருக்க அனைத்து தகுதிகளையும், சிறப்புகளையும் உடையவள் என்று எண்ணி முடிவு செய்தார்கள்.

திருஞானசம்பந்தரின் தந்தையாராகிய சிவபாதவிருதயர் அந்தணர்களோடும், திருத்தொண்டர்களோடும் எம்பெருமானின் அருள் பெற்றவரான திருஞானசம்பந்தருக்கு விவாகம் பேசுவதற்கு திருநல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியை காண்பதற்கு சென்றார்கள். திருநல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பி தம்மை காண வந்தவர்களை தம்முடைய சுற்றத்தாரோடு சென்று எதிர்கொண்டு வணங்கி அவர்களை தம்முடைய வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

நம்பியாண்டார் நம்பி தன்னுடைய வீட்டிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் தேவையான பணிவிடைகள் யாவும் செய்யப்பட்டு... நன்முறையில் அவர்கள் வரவேற்கப்பட்டு... அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. வந்தவர்களிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு, எம்மை காண வந்த நோக்கம் யாது? என்று நம்பியாண்டார் நம்பி சிவபாதவிருதயரிடம் வினவினார்.

அதற்கு சிவபாதவிருதயர் தம்முடைய மகனான திருஞானசம்பந்தருக்கு இவ்வூரிலுள்ள புத்திரியை திருமணம் செய்து வைப்பதற்காக யாம் இங்கு வந்திருக்கின்றோம் என்று கூறினார். இச்செய்தியை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்த நம்பியாண்டார் நம்பி இவ்வூரில் பிறந்தமைக்கு என்ன புண்ணியம் செய்தோம் என்று தெரியவில்லையே?... இவ்வூரில் எந்த வீட்டின் புத்திரியை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா? என்று வினவினார்.

சிவபாதவிருதயர் நீங்கள் இந்த ஊரில் பிறந்தமைக்கு மகிழ்ச்சி அடைந்தீர்கள் என்றால்... திருஞானசம்பந்தருக்கு மனைவியாக போகின்ற புதல்வியை பெற்ற தாங்கள் எவ்வளவு புண்ணியம் செய்து இருப்பீர்கள்? என்று கூறினார். அவர் கூறியதை கேட்டதும் மிகவும் பெருமகிழ்ச்சி அடைந்தார் நம்பியாண்டார் நம்பி. 

சிவபாதவிருதயர் கூறியதை கேட்டதும் மகிழ்ச்சி நிலையான ஆனந்த பெருக்கில் இருந்து வெளிவந்த நம்பியாண்டார் நம்பி விழிகளில் நீர் பெருக...

சிவபாதவிருதயரை நோக்கி...

தேவர்களுடைய பெரும் தவத்தினாலே... திரு அவதாரம் செய்து...

இம்மண்ணுலகில் வாழும் உலகிற்கு அன்னையாக இருக்கக்கூடிய உமாதேவியிடம் பாலுண்டவருமான...

திருஞானசம்பந்த பிள்ளையாருக்கு அடியேன் நானும், எனது குலமும் பெருமை மற்றும் மோட்சம் அடையும் பொருட்டு...

எங்களுடைய குலப்பெண்ணை விவாகம் செய்து கொடுப்பதற்கு இப்பிறவியில் என்ன தவம் செய்தோமோ? என்று தமது மனதில் இருந்து வந்த மகிழ்ச்சி நிலையை எடுத்துரைத்தார்.

நம்பியாண்டார் நம்பி எங்களுடைய பெண்ணை உங்களுக்கு விவாகம் செய்து கொடுப்பதற்கு நாங்கள் என்ன தவம் செய்தோமோ? என உரைத்ததை கேட்ட சிவபாதவிருதயர் மகிழ்ச்சி அடைந்தார். பின்பு உறவினர்களுக்கு, வந்த நோக்கத்தை எடுத்துரைத்து அவர்களின் விருப்பத்துடன் மகிழ்ச்சியான செய்தியோடு தனது மகனை காண சீர்காழிக்கு சென்றார்.

பின்னொரு சுபமுகூர்த்த தினத்தில் ஜோதிடர்களை கொண்டு விவாகத்திற்கு தேவையான சுபமுகூர்த்த தினம் நிச்சயிக்கப்பட்டு, எவ்விடத்தில் திருமணம் நடைபெற வேண்டும்? என்று நிர்ணயம் செய்யப்பட்டது. உறவினர்களுக்கு சிறப்போடு பொருட்களை அனுப்பி வைத்து திருக்கல்யாணத்திற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள துவங்கினார் சிவபாதவிருதயர்.

நம்பியாண்டார் நம்பியும் தம்முடைய புதல்வியை திருஞானசம்பந்தருக்கு மனம் முடித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல், அச்செய்தியை உறவினர்களோடு பகிர்ந்து... திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், சிறந்ததொரு முறையில் அனைவரும் வியக்கும் வண்ணம் மேற்கொள்ளத் துவங்கினார்.

திருமணத்திற்கு தகுந்த ஏற்பாடுகள் யாவும் முறையாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தன. திருமணத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்பாகவே சுற்றமும், நட்பும் சிவபாதவிருதயர் இல்லத்திற்கு வருகை தந்தனர். அவருடைய உறவினர்கள் தங்களுக்கென்று தனித்தனி பணிகளை மேற்கொண்டு அனைவரும் இத்திருமண விழாவில் மிகவும் மகிழ்வுடன் பங்கேற்க தொடங்கினார்கள்.

திருஞானசம்பந்தரின் திருமண வைபோகமானது இம்மண்ணுலகில் உள்ள அனைவரும் வியக்கும் வண்ணம் இருக்கும் வகையில் சிறு சிறு விஷயங்களையும் முழு கவனத்துடனும், அதிக அக்கறை கொண்டும் மேற்கொள்ளப்பட்டன.

ஊரின் எந்த பக்கம் திரும்பினாலும் விதவிதமான அலங்காரங்களும்...

அழகிய மாவிலைத் தோரணங்களும் அமைத்து...

புதிய மலர்களால் கட்டப்பட்ட பூ மாலைகளும் அழகாக தொங்கவிடப்பட்டன.

ஆலயத்தை காண்பவர் வியக்கும் வண்ணம் வழியில் அழகிய பிரம்மாண்டமான அலங்கார பந்தல்கள் செம்மையான முறையில் அமைக்கப்பட்டு இருந்தன.

தினம் தினம் முரசங்கள் முழங்க...

இசைக்கருவிகள் ஒலிக்க...

அழகிய வாசனை திரவியங்கள் யாவும் தெளிக்கப்பட்டு இருந்தன.

மாட மாளிகைகளும்... பயணிகள் வந்து தங்கும் மணி மண்டபங்களும்...

கண்களை கவரும் வகையிலான வண்ண ஓவியங்கள் மூலம் அலங்கரித்திருந்தனர்.

வேதியர் குலப்பெண்கள் இல்லங்களின் வெளிப்புறத்தில் அழகான கோலமிட்டும், தீபங்களையும் ஏற்றினார்கள். ஊரின் எந்த பக்கம்; திரும்பினாலும் திருஞானசம்பந்தரின் திருமண வைபோக விழாவை பற்றிய பேச்சுக்கள் நிறைந்து காணப்பட்டன.

தேவர்களும், மானுடர்களும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காகவே இவ்விடத்தில் வந்தமை போல், பல ஊர்களில் இருந்தும் அடியார்கள் வர தொடங்கினார்கள். சிவபாதவிருதயர் சீர்காழியில் உள்ள திருத்தொண்டர்களை நல்முறையில் வரவேற்றார்.

திருத்தொண்டர்களுக்கு தேவையான பணிவிடைகள் யாவும் நன்முறையில் அமையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள அனைவரையும் உபசரித்து மனமகிழ்ச்சி அடைய செய்தார் சிவபாதவிருதயர். தமது மகனின் திருமண விழாவிற்காக தான, தர்மங்களை தம்மால் இயன்றளவு செய்து கொண்டிருந்தார்.

திருமணம் நடைபெறும் பகுதியை சுற்றி எங்கு நோக்கினாலும் மகிழ்ச்சி வெள்ளம் ஓட துவங்கியது. திருமணத்திற்கு முதல்நாள் மறையோர்களும், எம்பெருமானின் மீது பற்று கொண்ட தொண்டர்களும், திருஞானசம்பந்தருக்கு இறைவனின் திருவருள் பொருந்திய திருக்காப்பு நாணினை செய்தனர். அந்த அருள் முழுவதும் நிரம்பியிருந்த திருக்காப்பு நாணினை மக்கள் அனைவரும் காணும் வகையில் நகர்வலம் கொண்டு வந்தனர்.

வேத கீதம் முழங்க...

மங்கள இசை ஒலிக்க...

பொன் அணிகளும், அழகிய துகிலும் அணியப் பெற்று மலரணையில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரின் திருக்கையில், முறைப்படி வேதியர்கள் திருக்காப்பு நாணினை கட்டினார்கள். மறுநாள் திருமணத்தன்று சூரியன் உதிக்கும் முன்பாக எழுந்து, தன் கடமைகளை முடித்துவிட்டு திருஞானசம்பந்தர் திருத்தோணியப்பர் தரிசனத்திற்காக திருக்கோவிலுக்கு சென்றார்.

பின்பு திருத்தோணியப்பரை மனம் குளிர வணங்கிவிட்டு, திருமண சடங்குகளை மேற்கொண்டார். சீர்காழியிலிருந்து எழில்மிகு மலர்களாலும்... பொன்னொளி வீசும் முத்துச்சிவிகையில் அமர்ந்து கொண்டு திருநல்லூர் பெருமணம் என்னும் திருப்பதிக்கு எழுந்தருள எண்ணம் கொண்டார். பின்னர் எம்பெருமானின் அருளோடு முத்துச்சிவிகைக்கு முன்னும், பின்னும் மங்கள இசை வாத்தியங்களும், தேவ துந்துபிகளும் முழங்கின.

சிவயோகிகள், அடியார்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ திருஞானசம்பந்தர் திருசடைபிரானின் திருவடிகளை தமது உள்ளத்தில் சிந்தித்த வண்ணமாக திருநல்லூர் பெருமணம் என்னும் தலத்தை அடைந்தார். திருநல்லூரில் இருந்த அடியார்களும், பெண் வீட்டார்களும் திருஞானசம்பந்தரை வரவேற்க ஊரின் எல்லையிலேயே காத்திருந்தனர்.

திருஞானசம்பந்தர் முத்துச்சிவிகையில் எல்லையை வந்தடைந்ததும்

வீணை ஒலியும்,

வேத ஒலியும்,

எம்பெருமானின் திருநாமங்கள் விண்ணை முட்டும் வகையில் ஒலிக்கத் துவங்கின.

அடியார்கள் திருஞானசம்பந்தரை வரவேற்று திருவீதி வழியாக கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். கோவிலில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வழிபட்டு அவர் மீது பைந்தமிழ் பாக்களால் பணிந்து பாடி மனம் மகிழ்ந்தார்.

திருஞானசம்பந்தரை திருமணக்கோலத்தில் கண்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். சுந்தர கோலத்துடன் அவரைக் கண்டதும் எம்பெருமானே இங்கே எழுந்தருளியுள்ளார் என அங்கிருந்த அனைவரும் எண்ணினர். சுந்தர கோலத்துடன் கண்ட வயதில் மூத்த அந்தணர்கள் அவரை பொற்பீடத்தில் அமர செய்து, தூய்மையான திருமஞ்சன நீரை எண்ணற்ற பொற்குடத்தில் கொண்டு வந்து நீராட்டினார்கள். தூய்மையான, வெண்மையான பட்டாடைகளை அணிவித்தனர். நறுமணம் மிக்க சந்தன கலவையை அவருடைய திருமேனியில் பூசினார்கள்.

மூத்த அந்தணர்கள், திருஞானசம்பந்தரின் திருவடிகளில் முத்துக்களால் செய்யப்பட்ட அழகிய செயல்பாடுகள் மிகுந்த வளையத்தினை அணிவித்தனர். முத்துக்களைக் கொண்டு கோர்க்கப்பட்ட அணி வடத்தினை மணிக்கட்டில் புனைந்தார்கள். அழகிய செயல்பாடுகளும் காண்போரை கவரும் வண்ணம் இருக்கும் வகையில் முத்துக்களை கொண்டு பலவிதமான அணிகலன்களை அவருக்கு அணிவித்தனர். காண்பதற்கு தேவலோகத்தில் இருக்கும் இந்திரனே திருஞானசம்பந்தரிடம் தோற்றப்பொலிவில் தோற்பது போல் அத்தனை அழகுடன் காணப்பட்டார்.

திருமணத்திற்கு தேவையான அலங்காரத்தை முடித்து கொண்டிருந்த திருஞானசம்பந்தர் தான் என்றும் அணிவித்திருக்கும் ருத்ராட்ச மாலையை எடுத்து எம்பெருமானின் திருநாமத்தையும், பஞ்சாட்சர மந்திரமான 'நமசிவாய" என்ற திருநாமத்தையும் மனதில் எண்ணிய வண்ணமாக தொழுது பின்பு தாமாகவே கழுத்தில் அணிந்து கொண்டார்.

திருஞானசம்பந்தர் திருமண வைபோக அலங்காரத்தில்

ஆயிரம் சூரியன்கள் ஒருங்கிணைந்து கதிர்களை வெளியிட்டால் எவ்வளவு பிரகாசம் இருக்குமோ...

அவ்வளவு தெய்வ பிரகாசமான ஒளியுடன்...

காண்பவர்களை வியப்பின் எல்லையில் ஆழ்த்தும் வகையில்...

தெளிவான சிந்தனை கொண்ட முகத்துடனும்...

புத்துணர்ச்சியான செயல்பாடுகளுடன் அன்பர்கள், அடியார்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் சூழ்ந்துவர...

திருமண நடக்க இருக்கும் நம்பியாண்டார் நம்பியின் பெரும் மனைக்குள் எழுந்தருளினார்.

திருமண பந்தலில் போடப்பட்டு இருந்த,

முத்துக்குடை நிழலின் கீழ் பலகையில் அமர்ந்திருக்க...

சங்க நாதங்களும்...

சுந்தர கீதங்களும்...

மங்கள இசைக்கருவிகளும் முழங்கிய வண்ணம்... மங்கள ஒலிகளை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

வாழ்த்து ஒலிகளும், வேதங்களும் இடைவிடாது அனைத்து திசைகளில் இருந்தும் எதிரொலித்து கொண்டிருந்தன. அதே சமயத்தில் நம்பியாண்டார் நம்பியின் புதல்விக்கு காப்பு கட்டி சங்கல்பம் முதலிய வேத சடங்குகளை மரபு முறைப்படி செய்தனர்.

பெண்ணுக்கு வைரத்தாலும், நவமணிகளால் செய்யப்பட்ட பசும் பொன் ஆபரணங்களையும் வரிசையாக அணிவித்து அலங்கார பொன் விளக்கு போல் பேரொலி பெற செய்தனர். பெரியோர்களால் குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில்... எம்பெருமானின் பரிபூரண அருள் பெற்றிருந்த திருஞானசம்பந்தரை கரம்பிடிக்க இருக்கின்ற பொற்கொடி போன்ற நற்குணங்கள் நிரம்பிய நங்கையும்... ஆதி பூமி என்னும் மணவறையின்னுள்ளே எழுந்தருளி அவரின் அருகில் அமர்ந்தார்.

நம்பியாண்டார் நம்பி திருஞானசம்பந்தருடைய திருக்கரத்தை பற்றி... தனது புதல்வியின் திருக்கரத்தை எடுத்து... அவர் கரத்தின் மீது வைத்து... மங்கள நீரினை மும்முறை வார்த்து தனது மகளை திருஞானசம்பந்தருக்கு மனைவியாக தாரைவார்த்து கொடுத்தார். திருஞானசம்பந்தரும், மங்கையின் கரத்தை பற்றிய வண்ணமாக ஓம குண்டலத்தை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார்.

வலம் வந்து கொண்டிருக்கையில் யாரும் எதிர்பாராத ஒரு செயலானது அவ்விடத்தில் நிகழத் தொடங்கியது. ஓம குண்டலத்தை வலம் வந்து கொண்டிருக்கையில் திருஞானசம்பந்தரின் மனதில் எமக்கு எதற்கு இந்த இல்லற வாழ்க்கை அமைந்துள்ளது? என்றும், சிற்றின்பத்தில் விழுந்து வாழ்வதை காட்டிலும் என் மனைவியுடன் எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து பேரின்பம் பெற வேண்டும் என்ற ஆசையும் அவருடைய மனதில் அமிர்தம் போல சுரக்கத் தொடங்கியது.

அவருடைய அத்தகைய எண்ணம் அங்கிருந்த அனைவருக்கும் பல யுகங்கள் தவமிருந்து கிடைக்க முடியாத பேரின்ப வாழ்க்கையை அவர்களுக்கு கிடைக்கப்பெற உதவியாக அமைந்திருந்தது. மெய்ஞான சிந்தனையோடும், திருஞானசம்பந்தர் தனது வாழ்க்கைத் துணையோடும், அவர்களுடைய உற்றார், உறவினர்களோடும் என திருமணத்தை காண வந்திருந்த அனைவரும் திருமண பெருங்கோவிலை வந்தடைந்தனர்.

எம்பெருமானை மனதில் நிலைநிறுத்திய வண்ணமாக தன்னை அவருடைய திருவடியில் சேர்த்துக் கொண்டு அருள வேண்டும் என்ற கருத்துக்கள் நிரம்பப்பெற்ற 'நல்லூர்ப் பெருமணம்" என துவங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடத் துவங்கினார். அப்பதிகம் மூலம் மகிழ்ச்சி கொண்ட எம்பெருமான் அசரீரி வழியாக நீயும், உன் மனைவியும், உன்னுடைய புண்ணிய திருமணத்தை காண வந்தவர்கள் என அனைவரும் எம்மிடம் ஜோதி வடிவமாக கலந்தடையுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

எம்பெருமான் கூறிய வண்ணமே மூன்று உலகங்களும் தம் ஒளியால் விளங்கும் வண்ணமாக ஆதியும், அந்தமும் இல்லாத ஜோதிலிங்கமாக காட்சியளித்தார். அதில் எழும்பிய பேரொளி திருக்கோவிலையும் தன்னகத்தே கொண்டு ஒளிமயமாக மேலோங்கி நின்றது. அவ்விதமாக காட்டிய ஜோதியில் ஓர் வாயிலையும் காட்டியருளினார். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உய்ய சிவஞான நெறியினை எல்லோருக்கும் அளிக்கவல்ல 'நமசிவாய" என்னும் திருவைந்தெழுத்து பெருமந்திரமாகும் என்று திருவாய் மலர்ந்து கூறினார் திருஞானசம்பந்தர். அதுமட்டுமல்லாமல் 'காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி" எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகத்தினை விண்ணில் உள்ள தேவர்களும், மண்ணவரும் கேட்கும் வண்ணம் பாடினார் திருஞானசம்பந்தர்.

பின்பு அங்கிருந்த அனைவரையும் நோக்கிய திருஞானசம்பந்தர் பிறவித் துயரம் தீர யாவரும் இப்பேரொளியில் புகுவீர்களாக...!! என்று உரைத்தார். திருஞானசம்பந்தர் உரைத்ததும் அங்கிருந்த அனைவரும் 'சிவாய நமக சிவாய நமக" என்ற வேத மந்திரத்தினை விண்ணை முட்டும் வண்ணமாக ஒலிகளை எழுப்பி வாழ்த்தினார்கள். பின்பு திருஞானசம்பந்தரின் திருவடியை தொழுது, நமசிவாய மந்திரத்தை மனதில் தியானித்த வண்ணம் மக்கள் அனைவரும் எம்பெருமானால் உருவாக்கப்பட்ட ஜோதியினுள் புகுந்தனர்.

திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், சிவபாதவிருதயர், நம்பியாண்டார் நம்பி ஆகிய சிவனருட் செல்வர்கள் தம் இல்லறத்தாருடன் பேரொளியில் புகுந்தனர்.

ஏனையவர்களும், திருமணத்திற்கு வந்தவர்களும்... 

திருமணத்திற்கான பணிகளை செய்தோரும் தத்தம் மனையார்களோடு பேரொளியில் புகுந்தார்கள்.

அருந்தவசிகளும்... 

மறைமுனிகளும்...

ஆலயம் தொழ வந்த சால்புடை மக்களும் ஜோதியினுள் கலந்தனர்.

பேரின்ப வீட்டிற்கு பெருவழிகாட்டிய திருஞானசம்பந்த பெருமான் தம் மனைவியாரின் கரத்தை பற்றி ஜோதியினை வலம் வந்து நமசிவாய என்ற நாமத்தை முழங்கிய வண்ணமாக ஜோதியினுள் புகுந்தார்.

திருஞானசம்பந்தர் ஜோதியினுள் புகுந்ததும் அப்பேரொளியில் காணப்பட்ட வாயிலும் மூடிக்கொண்டது. பேரொளி புகுந்த சிவனருட் செல்வர்களைத் தமது திருவடி நிழலை அடைந்து திருப்பணி புரியும் திருப்பேறை அளித்தார்.

🙏🙏**சுபம்**🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக