சனி, 18 ஜூலை, 2020

இராமரின் துயரம்!...

மறுபடியும் மகோதரன், இந்திரன் போல் உருவம் கொண்டு ஐராவரத்தின் மீது ஏறிக் கொண்டு வானரங்களுக்கு எதிராக போர் செய்து கொண்டு இருந்தான். ஆனால் இலட்சுமணனுக்கு இந்திரன் போல் வந்திருப்பது மாய வேலையில் வல்லவனான மகோதரன் என்பது தெரியவில்லை. இதைப் பார்த்த இலட்சுமணன் அனுமனிடம்,

நாம் இந்திரன் முதலிய தேவர்களை காக்கும் பொருட்டு தான் இராவணனுடன் போர் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் இந்திரன் முதலியவர்கள் நம்மீது போர் செய்ய என்ன காரணம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை பிரயோகம் செய்து இலட்சுமணன் மீது ஏவினான். அனுமன், பிரம்மாஸ்திரத்தை ஏவியவனை நான் கொல்வேன் எனத் துணிந்தான். ஆனால் அனுமன் பிரம்மாஸ்திரத்தின் தாக்கத்தால் மயங்கி கீழே விழுந்தான்.

பிரம்மாஸ்திரத்தால் இலட்சுமணன், சுக்ரீவன், அங்கதன் முதலிய வானர வீரர்கள் உயிர் நீத்தனர். நளன் முதலிய வானரப் படைகளும் பிரம்மாஸ்திரத்தால் உயிர் நீத்தனர். அங்கிருந்த வானர வீரர்கள் அனைவருமே வீழ்ந்தனர். பிறகு இந்திரஜித் வெற்றி முழக்கமிட்டு அரண்மனைக்குச் சென்றான்.

இராவணனிடம் சென்று, தந்தையே! பிரம்மாஸ்திரத்தால் இராமனை தவிர மற்ற அனைவரும் உயிர் நீத்தனர் என்றான். இதைக்கேட்டு இராவணன் மகிழ்ச்சியடைந்தான். ஆனால் இராமன் சாகவில்லை என்பதை நினைத்து வருந்தினான். அதற்கு இந்திரஜித்,

இராமன் போர்க்களத்தை விட்டு வெகுதூரம் சென்றதால் அவனை பிரம்மாஸ்திரம் தாக்கவில்லை எனக் கூறினான். இருந்தாலும் இராமனின் படைகள் அழிந்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தான். பிறகு இராவணன், இந்திரஜித்துக்கும், மகோதரனுக்கும் விடைகொடுத்து அவரவர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு கூறினான்.

இராமர் தன் படைகலன்களின் பூஜையை முடித்துவிட்டு திரும்பி வந்தார். வரும் வழியில் பிரம்மாஸ்திரத்தால் தாக்கப்பட்டு வீழ்ந்து கிடப்பவர்களை பார்த்தார். இதைப் பார்த்த இராமர் தன் படைகள் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு வருந்தினார்.

சுக்ரீவனைப் பார்த்து அன்பு தம்பியே! நட்பின் திலகமே! எனக்கு துணையாக வந்த நீ வீழ்ந்து கிடக்கிறாயே எனக் கூறி புலம்பி அழுதார். அனுமனை பார்த்த இராமர், வலிமையில் சிறந்தவனே! சீதைக்கு உயிர் கொடுத்த சேவைமிக்க பண்புடையவனே! தேவர்கள் உனக்கு சாகா வரம் கொடுத்தார்களே.

அந்த வரம் பொய்யாகுமா? நான் கனவிலும் உனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என நினைக்கவில்லையே எனக் கூறி புலம்பி அழுதார். இராமர் தன் தம்பி இலட்சுமணன் பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இலட்சுமணனை மார்போடு தழுவிக் கொண்டார்.

தம்பி! எனக்கு தாயும் நீ! எனக்கு தந்தையும் நீ தான். எவ்வாறு நீ என்னை விட்டு பிரிந்துச் சென்றாய். என் ஆருயிர் தம்பியே! கானகத்தில் இந்த 14 வருடம் எனக்கு காய், கனிகள் கொடுத்து நீ உண்ணாமல் இருந்தாய். எனக்கு தூக்கத்தை கொடுத்து நீ தூங்காமல் இருந்தாய். இந்த வனவாசத்தில் நீ எனக்கு துணையாக இருந்து சேவை புரிந்தாயே.

இனி எனக்கு துணையாக யார் இருப்பார்கள். நீ என்னைவிட்டு பிரிந்த பின் நான் மட்டும் வாழ்ந்து என்ன பயன்? தம்பி! நீ எனக்காக உன் மனைவியை விட்டு, அரண்மனையை விட்டு, உன் உணர்வையும், தூக்கத்தையும் விட்டு எனக்காக பணி செய்தாயே! நீ இல்லாமல் எனக்கு இந்த புகழ் எதுவும் வேண்டாம்.

இனி நானும் உயிர் வாழ மாட்டேன் என பலவாறு கூறி புலம்பி அழுதார். தன் மனச்சுமையையும், துக்கத்தையும் தாங்காமல் இராமர் மயங்கி விழுந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்