அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வட தமிழ்நாட்டில் அப்பர் என்னும் திருநாவுக்கரசரும், தென் தமிழ்நாட்டில் திருஞானசம்பந்தரும், சமணர்களை வென்று சைவ சமயப் பேரெழுச்சியை உண்டாக்கினார்கள். அந்த எழுச்சியின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் சிவபெருமானுக்குக் குடைவரை கோவில்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம் ஆகும்.
இந்த ஆலயம் கட்டும் பணி 8-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் பல கல்வெட்டுகள் மாறவர்மன் திருப்புவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவன் என்னும் பாண்டிய மன்னன் ஆற்றிய பணிகளை பட்டியலிட்டுக் காண்பிப்பதாக இருக்கிறது. எனவே திருக்கோளக்குடி ஆலயத்தின் திருப்பணிகள், 13-ம் நூற்றாண்டில் முழுமை பெற்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
திருக்கோளபுரம் என்று வழங்கப்பெறும் இத்தலம் முல்லைக்குத் தேர் தந்த வள்ளலான பாரி வேந்தன் ஆட்சி செய்த பறம்பு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது. மேலும் பூங்குன்ற நாட்டில் ‘யாதும் ஊரே.. யாவரும் கேளிர்’ என்று 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே, உலக ஒருமைப்பாட்டையும், மனித நேயத்தையும் ஏற்றமிகு குரலில் எடுத்து முழங்கிய கணியன் பூங்குன்றனார் பிறந்த மகிபாலன்பட்டிக்கு வடக்கில் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல பூங்குன்றநாடு, கோனாடு, கானாடு, கல்வாயில்நாடு என்னும் நான்கு நாடுகளுக்கும் நடுவில் அமைந்துள்ளது. அந்த நான்கு நாட்டாரும் வந்து வழிபடும் சிறப்பு பெற்ற ஆலயம் என்பதால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை ‘நானாட்டீசர்’ என்று தல புராணம் போற்றிப் புகழ்கிறது.
திருக்கோளக்குடி கிராமத்தின் மேற்கு எல்லையில் பெரியனவும், சிறியனவுமான கோளப்பாறைகளை சுமந்தபடி எழுந்து நிற்கிறது ஒரு குன்று. அதன் நடுவில் பெரியதொரு கோளக்குன்று அமைந்துள்ளது. அதில் தான் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது திருக்கோளக்குடி மலைக்கோவில். இந்தக் குன்றின் வடக்கு பக்கத்தில் ‘உலக்கைக் குன்று’ என்ற பெயரிலும், தென்கிழக்கு பகுதியில் ‘பிச்சூழிப்பாறை’ என்ற குன்றும் காணப்படுகின்றன. இந்தக் குன்றின் பாறைக் கோளங்கள் எந்த தருணத்தில் கீழே உருண்டு விழுமோ? என்று காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்த மலை மீது 4 ஆலயங்கள் இருக்கின்றன. அடிவாரம் ‘பொய்யாமொழீசர் ஆலயம்’, அதற்கு சற்று மேலே ‘சிவ தருமபுரீசர் ஆலயம்’, மேல் பகுதியில் ‘திருக்கோளபுரீசர் கோவில்’, அதற்கும் கொஞ்சம் மேலே ‘முருகப்பெருமான் ஆலயம்’ ஆகியவை காணப்படுகின்றன. ஒரு மலை மீது 4 ஆலயங்கள் அமைந்திருக்கும் சிறப்பு வாய்ந்த தலமாகவும் திருக்கோளக்குடி உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதியை ‘சிவபுரம்’ என்றும், ‘திருக்கோளபுரம்’ என்றும், ‘கன்னிமாநகரம்’ என்றும் அழைத்திருக்கிறார்கள்.
புண்ணியம்மிகுந்த பாண்டிய நாட்டில் ஏராளமான சிவதலங்கள் இருக்கின்றன. பாண்டிய நாட்டிற்குள் இருந்து தொடங்கும் பொதிகை மலைக்கு, திருக்கோளக்குடியில் உள்ள கன்னி மலையே மூல இடமாக விளங்குகிறது. பொதிைக மலையை விடவும், கன்னி மலையில் உள்ள சிவதருமபுரம் மிகவும் பெருமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில் பூமி, அந்தரம், சொர்க்கம் என மூன்று நிலைகளில், பரமனின் அந்தரங்க இடமாக இந்த திருக்கோளக்குடி விளங்குகிறது. கயிலை மலைக்கு ஒப்பான திருத்தலம் இது என்றும், மூவுலகத்திலும் இதற்கு ஈடான பெருமை கொண்ட தலம் இல்லை என்றும் சொல்கிறார்கள். இத்தலத்தில் பெயர் களைச் சொன்னாலே, அனைத்து வினைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.
ஓர் உருவும் இல்லாத இறைவனை, அகத்தியர், புலத்தியர் என்று இருபெரும் முனிவர்கள் பலா மர வடிவம் கொண்டு வழிபட்டது இத்தலத்தின் பெருமையாகும். இரண்டு முனிவர்களும் நான்கு யுகங் களாக மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆன்மா, சூரியன், சந்திரர் என எட்டு வடிவங்களில் இறைவனை நினைத்து வழிபாடு செய்திருக்கிறார்கள். இந்தத் தலத்தில் அமர்ந்து உணவு உண்பது, வேள்வி செய்வதற்கு ஒப்பானதாகும். இங்கு உறக்கம் கொள்வது, சிவ யோகம் செய்வது சமமானது. அதே கோவிலை வலம் வருவது திருவிழா நடத்தியதற்கு சமமானதாகும்.
கொலை செய்தவர், பிறர் பொருளைக் களவு செய்தவர், பசுவை கொன்றவர், வேதத்தை பழித்தவர், கற்புடைய பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள், இத்தல இறைவனை வழிபட்டால், அவர்கள் திருந்தி வாழும்படியாக அவர்களை இறைவன் ஆட்கொள்வார் என்று கூறுகிறார்கள். இத்தல இறைவனை வழிபடுபவர்களை எந்த தீங்கான செயலிலும் ஈடுபடாதவாறு இறைவன் தடுத்தாட் கொள்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆலயத்தின் அடிவாரத்தில் பொய்யாமொழீசர் ஆலயம் இருக்கிறது. இங்கு கருவறையில் லிங்கத் திருமேனியில் இறைவன் மேற்கு நோக்கிஎழுந்தருளியுள்ளார். அன்னை மரகதவல்லியம்மை நின்ற கோலத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தின் திருப்படிக்கு முன்பாக ‘திருப்பாறை’ என்ற பெயரில் ஒரு சிறு பாறை நிலத்திற்குள் இருந்து, சுமார் 10 சதுர அடி பரப்பளவில், ஓர் அங்குல உயரத்திற்கு வெளிப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்தப் பாறை இறைசக்தி கொண்டது என்றும், பக்தர்களுக்கு முறையீடுகளுக்கு நீதி வழங்கும் ஆற்றல் கொண்டது என்றும் சொல்கிறார்கள். பொய்யாமொழீசரின் திருவருள் இந்தப் பாறையில் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் பாதையில் 60 படிகளைக் கடந்த நிலையில் காணப்படுகிறது, சிவதருமபுரீசர் திருக்கோவில். இந்த ஆலயம் இறைவனின் பூமி, அந்தரம், சொர்க்கம் ஆகிய நிலைகளில் நடுநிலையான அந்தரம் என்று சொல்லப்படுகிறது. இத்தல மூர்த்தியான சிவதருமபுரீசர் லிங்க வடிவத்தில் உள்ளார். இவர் சுயம்புமூர்த்தியாவார். இந்த இறைவனுக்கு பின்புறத்தில் ‘தவளை படாதச்சுனை’ என்ற பெயரில் தீர்த்தம் ஒன்று உள்ளது. அதன் அருகே உட்சரிவான பாறையின் நெற்றிப்பரப்பில் மிகப்பெரிய தேன் கூடு வடிவில் சப்த கன்னியர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி மலைமூர்த்தி விநாயகர் உள்ளார். இவருக்கு பல பெயர்கள் உண்டு. அதில் முக்கியமானது ‘வீரகத்தி விநாயகர்’ என்பதாகும். இவரை வழிபடுபவர்களுக்கு வீரமும், பொறுமையும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவதருமபுரீசர் கோவிலின் வடக்கே கிழக்கு நோக்கியபடி சிவகாமவல்லியம்மை தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.
மலையின் மேல் பகுதியில் திருக்கோளபுரீசர் வீற்றிருக்கும் குடவரைக் கோவில் உள்ளது. இத்தல இறைவன் ககோளபுரீசர் என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இறைவன் சன்னிதியை பார்த்தபடி இருக்கும் பாறையிலேயே நந்தியின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. கரு வறையில் உள்ள சிவலிங்கத் திருமேனி பாறையிலே வடிவமைக்கப்பெற்றது.
முகப்பு மண்டபமும், விமான அமைப்புடன் கூடிய கருவறையும் கொண்ட அழகிய ஆலயம் இது. தனிச் சன்னிதியில் அன்னை ஆத்ம நாயகி (ஆவுடைநாயகி) அருள்பொழியும் திருமுகத் தோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
இதற்கு மேல் பாறையில் படி அமைக்கப்பட்ட பாதைகள் உள்ளது. மேலே சென்றால் ஆறு திரு முகங்களும், பன்னிரு கரங்களுமாக, வள்ளி- தெய்வானையுடன் மயில் வாகனத்தில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியரை தரிசனம் செய்யலாம்.
இவர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அதற்கு பக்கத்தில் குன்று ஒன்று இருக்கிறது. அதில் ஒரு மண்டபம் உள்ளது. அதற்குள் ‘அன்ன லிங்கம்’ என்ற பெயரில் ஒரு சிவலிங்கம் கிழக்கு பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு தெற்கேயுள்ள உயரமான நீண்ட கோளப்பாறையின் உச்சியில், திருக்கார்த் திகைத் தீப மண்டபம் உள்ளது. இந்த தீப மண்டபம் தான் திருக்கோளகிரியின் சிகரமாகும்.
தவளை இல்லாத தீர்த்தம் :
சிவபெருமான் திருமுடியில் இருந்த நாகம், திருமாலின் வாகனமான கருடனைப் பார்த்து ‘கருடா சுகமா?’ என்று கேட்டது. அந்தக் கேள்விக்கு கருடன், ‘எவரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எந்தக் குறையும் வராது’ என்று பதிலளித்தது.
நாகத்தின் கர்வத்தை உணர்ந்த சிவபெருமான், அதனை பூலோகத்தில் வாழும்படி சாபம் கொடுத்தார். உடனே நாகம் தன்னுடைய சாபத்தை நீக்கியருளும்படி வேண்டியது.
ஈசன், ‘நீ! ககோளபுரம் சென்று தவமிருந்தால், உன்னுடைய சாபம் நீங்கும்’ என்றார்.
அதன்படி நாகம் இத்திருத்தலத்திற்கு வந்து தவம் செய்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த சுனையில் இருந்த தவளைகளை, பறவைகள் பிடித்துச் சென்று கொன்று தின்பதைப் பார்த்தது. அதைக் கண்டு வருந்திய நாகம், இறைவனை மனமுருக வேண்டியது.
உடனே ஈசன், ‘இன்று முதல் இந்தச் சுனையில் தவளைகள் இல்லாமல் விலக்கினோம்’ என்று அருள் புரிந்தார்.
தவளைகள் இல்லாத சுனைத் தீர்த்தம் என்பதால் இதற்கு ‘தவளைபடாதச் சுனை’ என்று பெயர் வந்தது. தவிர சிவகங்கை, நெல்லியடித் தீர்த்தம், ககோளத் தீத்தம், தேன் தீர்த்தம், சப்த கன்னிமார் தீர்த்தம், சிவதரும தீர்த்தம் என்ற பெயர்களும் இந்தச் சுனைக்கு உண்டு.
இந்த தீர்த்தக் கரையில் இருந்து சிவபூஜை செய்தாலோ, பித்ரு கடன் செய்தாலோ சிறப்பான பலன் கிடைக்கும். மேலும் இந்தத் தீர்த்தத்தை பருகி இத்தல இறைவனை வழிபடுவோர் இன்பமான வாழ்வைப் பெறுவார்கள்.
இந்த ஆலயத்தில் ஆனித் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் தேரோட்டம், சுவாமி வீதிஉலா போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பு வாய்ந்தவை. மார்கழி திருவாதிரை, தைப்பூசம், பிரதோஷம், சங்கடகர சதுர்த்தி, பவுர்ணமி, சிவராத்திரி போன்ற நிகழ்வுகளும் சிறப்பு மிக்கவை.
அமைவிடம் :
புதுக்கோட்டையில் இருந்து ராங்கியம் வழியாக 40 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோளக்குடி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் செவ்வூர் வழியாகவும் ஆலயத்திற்கு செல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக