Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஜூலை, 2020

சீன பொருட்களுக்கு தடை... பொருளாதார யுத்தத்தை தொடங்கிய இந்தியா!

இந்தியா - சீனா பொருளாதார யுத்தம்

சுமார் 370 சீன பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டிக்டாக், ஹெலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு ஏற்கெனவே மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், பொம்மைகள், ஸ்டீல் பார், ரப்பர் பொருட்கள், ஸ்டீல் குழாய்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், தொலைத்தொடர்பு பொருட்கள், கனரக இயந்திரங்கள், காகிதம், கண்ணாடி உள்ளிட்ட 371 வகைப் பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இப்பொருட்களை இந்திய தரநிலை திட்டத்தின் கீழ் கட்டாயமாக கொண்டுவர அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், தரக்குறைவான பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக 371 வகைப் பொருட்களை மத்திய வர்த்தக அமைச்சகம் இதுவரை கண்டறிந்துள்ளது.

ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்யவும், இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கவும் சீன பொருட்களையும், தரக்குறைவான பொருட்களையும் கட்டுப்படுத்துவதற்கான பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய தரநிலைகள் ஆணையத்தின் பிரமோத் திவாரி பேசுகையில், “சீன பொருட்கள் உட்பட 317 வகைப் பொருட்களை மத்திய வர்த்தக அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இப்பொருட்களுக்கு கட்டாய தரநிலைகளை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சில பொருட்கள் மிகக்குறைந்த அளவில் இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றுக்கு தரநிலைகள் தேவையில்லை. சில பொருட்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். இதர பல பொருட்களுக்கு அடுத்த மார்ச் மாதத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் நிலையில், சீன ஆப்கள், சீன பொருட்கள் என சீனாவுக்கு பல்வேறு வகையில் இந்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதுபோக, சீன முதலீடுகளை தணிக்கை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு, மின்சாரம் ஆகிய முக்கிய துறைகளில் விடப்படும் ஏலங்களில் சீன நிறுவனங்களை நுழைய விடாமல் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சீனா தரப்பில் இதுவரை பதிலடி கொடுக்கப்படவில்லை. எனினும், சீனாவுக்கு எதிராக இந்தியா பொருளாதார யுத்தத்தை தொடங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக