யானைகள் ஊருக்குள் வலம் வருகின்றன, விவசாய நிலங்களைச் சேதப்படுத்திவிட்டன என்ற செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்துகொண்டிருக்கும் நிலையில் கோவையில் உடல் நலிவுற்ற காட்டு யானைக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சுமார்10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உடல் மெலிந்து நடக்க முடியாமல் சோர்வுடன் படுத்திருப்பதாக கிராம மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து வனக் கால்நடை மருத்துவர் சுகுமாரன் தலைமையில் சென்று மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சையளித்தனர். இதையடுத்து சற்று குணமடைந்த அந்த இளம் யானை தள்ளாடியபடி நடந்து காட்டுக்குள் சென்றது. மேலும் யானையை கண்காணிக்க வேட்டைத் தடுப்பு காவலர்களைக் கொண்ட தனிக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த யானை நடக்க முடியாமல் மீண்டும் வனப்பகுதியில் படுத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வனச்சரக அலுவலர் செந்தில்குமார், மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமாரன் தலைமையில் உடல் நலிவடைந்த நிலையில் உள்ள இளம் ஆண் யானைக்கு குளுக்கோஸ், மற்றும் ஊட்டசத்து மருந்துகள் அளித்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் யானையின் சாணம், மற்றும் சிறுநீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே யானையின் நோய்க்கான காரணம் தெரிய வரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக