Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 7 ஜூலை, 2020

பட்டாணிக்குத் தையல்

ஒரு நாள் ஒரு பாட்டி சமையல் செய்வதற்காக, மண் அடுப்பில் சட்டியை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்தாள். தண்ணீர் கொதித்ததும் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்த சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, என்னை சமைக்கவேண்டாம் என்று கத்தியது.

பாட்டி நீ மரியாதையாக சட்டிக்குள் போ. இல்லையென்றால் உன்னை நசுக்கி விடுவேன் என்றாள். பட்டாணி பாட்டி சொல்வதைக் கேட்காமல் அங்கிருந்து வேகமாக ஓடியது. அப்போது நில் நில் ஓடாதே உன்னுடன் நானும் வருகிறேன் என்றது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி. அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன் என்றது நிலக்கரி.

என்ன வெளியுலகத்திற்கா? அப்படியென்றால் நானும் வருகிறேன் என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று. சரி, என்றபடி மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. 

இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது என்று நிலக்கரியும், பட்டாணியும் திரும்பி போக நினைத்தது. நண்பர்களே நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி செல்லுங்கள் என்று நம்பிக்கை காட்டியது, வைக்கோல்.

முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.

பட்டாணி சிரித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி, அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன. அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டது.

தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்ததால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்க வேண்டியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!