மங்கையர்க்கரசியார் நாயனார்...!!
மங்கையர்க்கரசியார் சோழமன்னனின் மகளாக பிறந்தாள். மானி என்னும் இயற்பெயரைக் கொண்டவர். சிறுவயது முதலே சிவபெருமானின் மீது பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். இவர் வளர வளர மங்கையர்களுக்கெல்லாம் தலைவியாக இருந்து அவர்களை வழிநடத்தும் பேறு பெற்றதால் மங்கையர்க்கரசியார் என்னும் பெயரை பெற்றார். மங்கையர்க்கரசியார் எம்பெருமானின் மீது மிகுந்த அன்பும், அவரை வழிபடும் அடியார்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்தார்.
சைவ சமயத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். சிறுவயது பருவம் முடிந்து திருமண பருவம் அடைந்தார். சோழ மன்னன் தனது மகளை நின்றசீர்நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னருக்கு திருமணம் செய்து வைத்தார். அத்துடன், குலச்சிறையார் என்ற அறிவார்ந்த அமைச்சரையும் மதுரைக்கு அனுப்பி, தன் மருமகனுக்கு ஆலோசனைகள் வழங்குமாறு அறிவுறுத்தினார்.
குலச்சிறையார் இளமை பருவம் முதற்கொண்டே கங்கை சூடிய முக்கண்ணனின் பாத கமலங்களில் தம்முடைய சிந்தனைகள் மற்றும் எண்ணத்தை செலுத்தி சிவனடியார்களுக்கு தேவையான திருத்தொண்டுகள் புரிவதில் ஆர்வத்துடனும், மிகுந்த ஈடுபாட்டுடனும், உண்மையுடனும் விளங்கியதோடு மட்டுமல்லாமல் அனைவராலும் போற்றப்பட்டார். அடியார்களுக்கு வேண்டிய உதவிகளை புரிவதால் பிறவா நிலையாகிய பேரின்ப வீடு அடைவதற்கான வழியை நன்கு உணர்ந்திருந்தார்.
சோழ மன்னனின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு இவர் மதுரையை ஆண்டு வந்த நின்றசீர் நெடுமாறனிடம் தலைமை அமைச்சராய் பணியாற்றி வந்தார். பாண்டிய மன்னன் சமண சமய கொள்கைகளின் மூலம் ஈர்க்கப்பட்டு சமண சமயத்தை தழுவ துவங்கினார். சமண சமய குருமார்களை சான்றோர்களாகவும், அவர்களை மிக உயர்வாகவும் எண்ணி போற்றி மதித்தார். அரசன் மட்டும் சமண சமயத்தை தழுவியது மட்டுமல்லாமல் குடிகளையும் தழுவ வைத்துக் கொண்டிருந்தார்.
குலச்சிறையார் அமைச்சராக பணிபுரிந்து வரும் நாளில் பாண்டிய நாட்டில் சமணர்கள் தங்கள் சமயத்தின் கருத்துக்களையும், ஆதிக்கத்தையும் பரப்ப பல வழிகளில் முயன்றார்கள். ஆனால் குலச்சிறையாரோ தாம் பின்பற்றி வருகின்ற சைவ மத கொள்கைகளை விடாமல் பற்றிக் கொண்டு ஒழுகினார். மன்னரின் அரசவையில் குலச்சிறையார் என்ற ஒரு அமைச்சரை தவிர மற்ற அமைச்சர்கள் எல்லோரும் சமண சமயத்தவராகவே இருந்தனர்.
பாண்டிய நாட்டில் சைவ சமயம் குன்றி சமண சமயம் வளர்ந்து வருவதை எண்ணி மங்கையர்க்கரசியார் மனக்கவலை கொண்டார். பாண்டியமாதேவியாருடைய ஒப்பற்ற சிவத்தொண்டிற்கு தம்மை உட்படுத்தி உண்மை தொண்டராகி பணியாற்றினார் குலச்சிறையார். குலச்சிறையார் சமணக் கொள்கைகளை பாண்டிய நாட்டில் பரவாமல் அதை தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு இருந்தார்.
பாண்டியனை சைவம் தழுவ வைக்க மங்கையர்க்கரசி செய்த அனைத்து முயற்சிகள் மட்டுமின்றி சைவம் தழைக்க அவர் செய்த அனைத்து செயல்பாடுகளும் வீணாகின. மங்கையர்க்கரசியார் தனது முயற்சியை கைவிடாமல் தமது செயல்பாடுகளை செய்து கொண்டே இருந்தார். நாளடைவில் மக்கள் சமண மதத்தை பின்பற்ற வேண்டுமென்று நின்றசீர் நெடுமாற வேந்தன் உத்தரவையும் பிறப்பித்தார். இது மங்கையர்க்கரசியாருக்கும், குலச்சிறையாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், மன்னனிடம் பேசும் துணிச்சல் அவர்களுக்கேது? மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரவே மக்கள் பயந்தனர். மக்களின் வருகை இல்லாததால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த அவலநிலையை பற்றி, சொக்கநாதப் பெருமானிடமே சென்று பிரார்த்திக்க ராணி முடிவெடுத்தாள். குலச்சிறையாரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று, இருவருமாய் பிரார்த்தித்தனர். அப்போது சான்றோர் ஒருவர் அக்கோவிலின் சன்னதிக்கு வந்தார்.
கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உள்ளிட்ட யாருமே அரசரின் ஆணைக்கு பயந்து வராத நிலையில், ஒரு சான்றோர் மட்டும் மன்னரின் கட்டளையை மீறி எப்படி துணிச்சலாக உள்ளே வந்தார்? என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். வந்தவர் அரசியை வணங்கி, அரசியாரே! நான் சோழநாட்டில் வசிக்கிறேன். பல திருத்தலங்களுக்கும் சென்று வருகிறேன். மதுரையில் எம்பெருமானையும் தரிசிக்க வேண்டும் என எண்ணம் கொண்டு இங்கு வந்தேன். இங்கே யாருமே இல்லாததைக் கண்டு விசாரித்தேன்.
அப்போதுதான் சமணத்தை மக்கள் பின்பற்றுவதால் யாருமே இக்கோவிலுக்குள் வருவதில்லை என அறிந்து வருத்தமடைந்தேன். இருப்பினும், மீண்டும் சைவத்தைக் கொண்டு வர ஒரு மார்க்கம் உள்ளது என்று கூறினார். வழி இருப்பதை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த இருவரும் அம்மார்க்கத்தை கூற வேண்டும் என்று வேண்டி நின்றனர். பின்பு, அவர் சீர்காழியில் திருஞானசம்பந்தர் என்னும் தெய்வமகன் இருக்கிறார். அவர் மூன்று வயதில் உமையம்மையிடமே பால் குடித்த குழந்தையாவார். அவரை இங்கு வரவழைத்தால் சைவம் தழைக்க வழி செய்வார் என்று கூறினார்.
அவர்களும் அதற்கான முயற்சிகளில் இறங்கி செயல்பட துவங்கினார்கள். இவ்வாறு சிவநெறியில் வாழ்ந்து, அரசகருமம் செய்து வரும் நாளில் சிவநெறியை விளக்கும் திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு அருகாமையில் உள்ள திருமறைக்காட்டில் எழுந்தருளியிருப்பதாக செய்தியை அறிந்தார். இச்செய்தியினை அறிந்த பின்பு அவரை நேரில் கண்டு அடிபணிந்து மிகவும் மகிழ்ச்சி கொண்டார். இந்த செய்தியை பாண்டியமாதேவியாரிடம் எடுத்துரைத்தார். பாண்டிய நாடெங்கும் சைவம் ஓங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இருந்த பாண்டியமாதேவியாரோடு ஆலோசித்து திருஞானசம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு வரவழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டனர்.
பாண்டிய நாட்டு தூதுவர்கள் திருஞானசம்பந்தரை சந்தித்து அரச ஒற்று ஒன்றை அவரிடம் அளித்தனர். அச்செய்தியை படித்ததும் அவர்களின் நல்ல எண்ணத்தை புரிந்து கொண்ட திருஞானசம்பந்த பெருமானும் பாண்டிய நாட்டிற்கு வருவதாக கூறினார். திருஞானசம்பந்த பெருமான் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளும் செய்தி கிடைக்கும் முன்னரே அவரை வரவேற்க பலவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தன. பின்பு தூதுவர்கள் திருஞானசம்பந்த பெருமான் வருவதாக கூறிய செய்தியைக் கேட்டதும், அங்கிருந்த அனைவரும் அவரின் வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
மன்னரின் மனைவி, குலச்சிறையார் முற்றும் அங்கிருந்தவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக திருஞானசம்பந்த பெருமான் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளினார். திருஞானசம்பந்தமூர்த்தி வந்து கொண்டிருக்கின்றார் என்னும் செய்தியை கேட்டதும் குலச்சிறையார் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாதது. திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் எழுந்தருளியுள்ளார் என்னும் செய்தியை கூறியவருக்கு மங்கையர்க்கரசியார் மனம் மகிழ்ந்து பரிசுகள் பலவற்றை அளித்தார். அவ்வேளையில் குலச்சிறையாரும் வந்து மங்கையர்க்கரசியாரிடம் அடிபணிந்து நின்றார்.
ஆளுடைய பிள்ளையாரை அழைத்துவர எனக்கு தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டினார். தாங்கள் மட்டும் செல்லாமல் நானும் தங்களுடன் வந்து அவரை வரவேற்க எண்ணுகிறேன் என்றார். பின்பு மன்னரிடம் உரைத்து அனுமதி பெற்று வருகிறேன் என்று கூறினார். பின்பு சிறிது நேரத்திற்குள் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் ஆளுடைய பிள்ளையாரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
ஆளுடைய பிள்ளையாரை சூழ்ந்து வந்த தொண்டர் கூட்டம் மற்றும் பாண்டிய முதல் மந்திரி மற்றும் அவருடன் வருகை தந்த அமைச்சர்கள் என அனைவரும் அவரை பணிந்தபோதும் குலச்சிறையார் எழாததைக் கண்டு ஆளுடைய பிள்ளையாரின் தொண்டர் சிலர் சென்று சிவபுரச் செல்வரிடம் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கூறினார்கள். சிவஞானச் செல்வரும், முத்துச் சிவிகையின்றும் இறங்கி வந்து தம் கைமலர்களால் குலச்சிறையாரை எழுப்பி அவரை அணைத்தெடுத்தார். அவர்தம் அரவணைப்பினால் எழுந்த குலச்சிறையார் சிவஞானச் செல்வரான ஆளுடைய பிள்ளையாரைக் கைதொழுது நின்றார்.
சம்பந்தப்பிள்ளையாருக்கு எதிர்செல்லாமல் மங்கையர்க்கரசியார் ஒரு புறமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். ஆளுடைய பிள்ளையாரோடு சென்று ஆலவாய் உறையும் அவிர்சடைக் கடவுளை வழிபடும் பாக்கியமும், பேறும் பெற்றார். பிள்ளையாரது அருகில் நின்று கொண்டிருந்த குலச்சிறையார் தாங்கள் இங்கே அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்ட பாண்டிய நாட்டின் வேந்தரான நின்றசீர்நெடுமாறனின் துணைவி இவர் என்று மங்கையர்க்கரசியாரை காட்டினார்.
குலச்சிறையார் அரசியாரை காட்டியதும் பிள்ளையாரும் அரசியார் பக்கமாகச் சென்றார். தமது அருகில் பிள்ளையார் வந்ததும் அவருடைய பொற்பாதங்களில் வீழ்ந்து வணங்கிய மங்கையர்க்கரசியாரை பிள்ளையார் பெருகிய அருளோடு கைகளால் மேலெழுப்பினார். எழுந்த அம்மையார் அவரை தொழுது விழிகளில் கண்ணீர் பெருக நானும், என் கணவரும் செய்த தவம் இவ்வுலகில் மிகப் பெரியது என்று கூறினார்.
சமண சமயம் பரவி கிடக்கும் இந்த பாண்டிய நாட்டில் எம்பெருமானின் திருவடியை எந்த சூழ்நிலையிலும் விடாமல் பற்றிக்கொண்டு இருக்கும் தங்களை காணவே யாம் இங்கு வருகை புரிந்தோம் என்று கூறினார் திருஞானசம்பந்தர். மங்கையர்க்கரசியாரோ தாங்கள் எழுந்தருளிய இவ்விடத்தில் இனி சைவம் தழைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று உரைத்து மனமகிழ்ச்சியோடு அரசியார் அரண்மனைக்கு சென்றார்.
பின்பு மங்கையர்க்கரசியாரின் ஆணைப்படியே குலச்சிறையார் அவர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு திருஞானசம்பந்த பெருமானையும், அவருடன் வந்த தொண்டர் கூட்டத்தையும் அழைத்துச் சென்று திருமடத்தில் உறையச் செய்தார். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய அனைத்து தேவைகள் மற்றும் திருவிருந்தளிக்கும் பேறும் அவருக்கே வாய்த்தது. அன்று இரவு பள்ளியறைக்கு வந்த மன்னன் மங்கையர்க்கரசியாரிடம் யாதும் பேசாமல் கவலை கொண்ட முகத்துடன் காணப்பட்டார்.
அகத்தில் இருப்பது முகத்தில் தெரியும் என்பது போல மன்னர் ஏதோ கவலையில் இருக்கின்றார் என்பதை அறிந்து கொண்ட அரசியார் தங்களின் முகமானது மிகவும் கவலையுடன் இருக்கின்றதே... அதற்கு என்ன காரணம்? என்று வினவினாள். அதற்கு அரசன் சோழ நாட்டுச் சிவவேதியர் ஒருவர் சமண அடிகளாரை வாதினில் வெல்ல வந்திருக்கின்றார். இதைக் கேட்ட சமண அடிகளார் பாண்டிய நாட்டிற்கு ஏதோ ஆபத்து வர போகின்றது என்று பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை யாம் கேட்டதால் ஒரு விதமான கவலை கொண்டோம் என்று கூறினார்.
உடனே அரசியார் வாதத்தில் வெற்றி அடைந்தவர் பக்கம் சேருவதே முறையாகும் என்று கூறினார். அதன் பொருட்டுக் கவலை ஏன்? கவலை ஒழிக என அரசனுக்கு ஆறுதல் செய்தார் அரசியார். அரசனுக்கு ஆறுதல் கூறினாலும் அரசியார் கவலையுடனே அன்று இரவு இருந்தார். அதாவது வஞ்சனை எண்ணம் கொண்ட சமணர்களால் சம்பந்தப்பிள்ளையாருக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என்பதே அவர்தம் கவலை ஆகும். அவ்வாறு ஆபத்தேதும் நேரின் அவரை இங்கே அழைத்து வர காரணமாக இருந்த நானும் உயிர் துறப்பேன் என்று உறுதி பூண்டார் அரசி.
அரசியாரின் ஆணைப்படி அனைத்து செயல்களையும் மனநிறைவோடு செய்து முடித்தாலும் சமணர்களால் இவருக்கு தீங்கேதும் நேருமோ? என குலச்சிறையாரும் அஞ்சினார். அவ்விதம் ஏதேனும் நிகழுமாயின் தனது உயிரை துறப்பதும் சரியே... என்றும் எண்ணத் துவங்கினார். அவர்கள் இருவரும் அஞ்சிய வண்ணமே சமணத்துறவிகள் மதபேதத்தால் மதியிழந்து மன்னனின் ஆணையின் பேரில் ஆளுடைய பிள்ளையார் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தனர் என்னும் செய்தியானது அவர்கள் இருவருக்கும் வந்தது. அதைக்கேட்டதும் அவர்கள் இருவரும் மிகவும் மனவேதனை அடைந்தனர்.
இருந்தாலும் சிவஞானச் செம்மலுக்கு தீங்கு ஏதும் நிகழவில்லை என்பதை அறிந்த பின்னரே அவர்கள் இருவரின் மனம் ஆறுதல் அடைந்தது. செய்யும் பிழைக்கு தண்டனை கிடைப்பது போல் அவன் இட்ட தீ அவனையே சென்று மெல்லத் தாக்கட்டும் என்று திருஞானசம்பந்தர் தீயின் தாக்கத்தை பாண்டியனுக்கே திருப்பிவிட்டார். பாண்டிய மன்னருக்கு வெப்பு நோயானது வருத்த துவங்கியது. இந்த நோயின் தாக்கத்தை குறைக்க சமணர்கள் செய்த எவ்விதமான மந்திரங்களும், சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை.
இந்த நோய்க்கு திருஞானசம்பந்தரின் மதியுரைதான் சிறந்த மருந்தாக இருக்கும் என்று மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் கூறினார்கள். மன்னனும் அவரின் ஆலோசனைப்படி திருஞானசம்பந்தரை அழைத்து வருமாறு பாண்டியமாதேவியாரையும், குலச்சிறையாரையும் பணித்தான். மன்னனின் விருப்பப்படியே பாண்டியமாதேவியாரும், குலச்சிறையாரும் குதிரையில் ஏறிச்சென்று திருஞானசம்பந்தப்பிள்ளையார் தங்கியிருக்கும் திருமடத்தை அடைந்தார்கள். அங்கே ஞானத்தின் திருவுருவாய் நின்ற திருஞானசம்பந்தரைக் கண்டனர்.
குலச்சிறையார் அவரை கண்ட பொழுதே சமணர்களின் கொடுந்தொழிலை நினைத்து கண்களில் நீர் வழிந்தோடியது. மேலும், தங்களது இருக்கரங்களை குவித்து திருஞானச்சம்பந்த பெருமானின் திருவடியில் வீழ்ந்து அழுதார். திருவடியைப் பற்றி விடாது இருந்தார். மேலும் அவரைப் புகலிவேந்தரே...! ஒன்றுக்கும் கவலை கொள்ள வேண்டாம் என்று ஆறுதல் கூறினார். பின்பு அபயமளித்த அவரை சிவிகையில் ஏறிவர அரச மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். பின் அரசனது தலைமாட்டில் பொற்பீடத்தில் அமரவைத்தார். பின்பு திருஞானசம்பந்தர் மந்திரம் ஜெபித்து மன்னருக்கு திருநீறு பூசியவுடன் நோயின் தாக்கமானது குறைய துவங்கியது. பின் மன்னரை முழுவதுமாக குணமடையச் செய்தார்.
நெடுமாற பாண்டியன் கூன் உடம்பு கொண்டவர். திருஞானசம்பந்தரின் அருள்மழையால் அவரது கூனும் நிமிர்ந்துவிட்டது. சிறிது நேரத்தில் சமணர்கள் வருகை தரவும் அவர்களுக்கு சைவத்தின் மீதும், திருஞானசம்பந்தரின் மீதும் இருந்த வெறுப்பு மற்றும் விரோதத்தினால் அவர் குணமானதை மந்திர தந்திர விஷயம் என்று கூறினர். ஆனால் திருஞானசம்பந்தரோ சிகையில் எவ்விதமான சினமும் இன்றி இதில் எவ்விதமான மந்திரமும் இல்லை... தந்திரமும் இல்லை... என்று கூறினார். திருஞானசம்பந்தரின் கூற்றுக்கு செவி சாய்க்காத சமணர்கள் தங்களோடு வாதமிட அழைப்பு விடுத்தனர்.
அனல்வாதம், புனல்வாதம் என்ற இருவாத முறைகளிலும் முறையே மந்திரம் ஓதப்பட்ட ஏடுகளை தீயிலும், நீரிலும் இட்டாலும் எந்த ஏடு எரியாமலும், மூழ்காமலும் நிற்கிறதோ அவர்கள் வென்றதாக கருதப்பட வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை ஆகும். திருஞானசம்பந்தர் தன்னை போட்டிக்கு அழைத்த சமணர்களுடன் போட்டியில் பங்கு கொண்டு அனைத்திலும் வெற்றியும் பெற்றார். வாதத்தில் தோற்ற சமணர்களையும் மற்றும் அவர்களுக்கு உடன்பட்டவர்கள் என அனைவரையும் கழுவிலேற்றி முறை செய்யுமாறு வேந்தர் ஆணையிட்டார். மன்னரின் ஆணைப்படியே எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர்.
திருநீறணிந்த பாண்டிய மன்னனை பாண்டியமாதேவியாருடன் திருஞானசம்பந்தர் அழைத்துச் சென்று ஆலவாய் அண்ணலைப் போற்றினார். வேந்தருக்கும், பாண்டியமாதேவியாருக்கும், மந்திரியாருக்கும் திருஞானசம்பந்த மூர்த்தியாருடன் கூடிச்செல்வதே ஆசையாக இருந்தது. ஆனால் திருஞானசம்பந்தரோ வேந்தரையும், அவருடைய துணைவியாரையும் நோக்கி தாங்கள் இங்கு இருந்தே சிவநெறி போற்றியிருங்கள் என்று பணித்தார். சங்கத்தமிழ் வளர்த்ததோடு, சைவத்தையும் வளர்த்து, வான்புகழ் பெற்றார்.
திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாலவாயில் உள்ள இறைவனைத் தரிசித்திருந்த காலத்தில் தாமும் தம் பதியாரோடு சென்று அவர் திருப்பாதத்தைப் பணியும் பாக்கியம் பெற்றார் மங்கையர்க்கரசியார். அத்துடன் மன்னனுக்கு நெடுங்காலம் சைவ வழித்துணையாயிருந்த மங்கையர்க்கரசியார் மன்னவனோடு ஈசன் இணையடி அடைந்தார்
சிவபுராணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக