இராவணன் போரில் தன் மகன், தம்பி உள்பட பலரை இழந்தான். இருந்தாலும் அவன் பின்வாங்காமல் தன் மகன் இந்திரஜித்தை போருக்கு அனுப்பி வைத்தான். ஆனாலும் ஏனோ இராவணனின் மனம் பயந்தது.
தன் மகனையும் இழந்து விடுவோமோ என்று மனம் கலங்கினான். போரில் பல உயிர்களை இழந்து, இப்போது தன் மகனையே பலி கொடுக்க அனுப்புகிறோமே என்று அஞ்சினான் இராவணன். இராவணன், போரில் தன் மகன் இந்திரஜித்தை இழந்து விடக் கூடாது.
அதே சமயம் இராமனையும் வீழ்த்த வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தான். தன் மகன் இந்திரஜித், ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவி பக்தன் என்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.
உடனே இந்திரஜித்திடம், நீ ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பக்தன். ஆகவே நீ போரில் வெற்றி பெற, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோன்றுவித்து, ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம் செய்தால் உன்னை யாராலும் வீழ்த்த முடியாது என்றான் இராவணன்.
தன் தந்தை இராவணன் ஆலோசனைப்படி பிரம்மாண்டமான நிகும்பலா யாகம் செய்தான் இந்திரஜித். அனுமன் இராவணனின் திட்டத்தையும், இந்திரஜித்தின் நிகும்பலா யாகத்தையும் அறிந்து கொண்டான்.
உடனே அனுமன் இராமரிடம் விரைந்து வந்தான். தங்களை வீழ்த்த இந்திரஜித் நிகும்பலா யாகம் செய்து ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை தனக்கு உதவி செய்ய அழைக்கிறான் என்றான் அனுமன்.
இதை கேட்ட இராமர், அனுமனே! நீ கவலை கொள்ள வேண்டாம். தேவி பிரத்தியங்கிரா, எப்போதும் நல்லமுறையில் நடப்பவர்களுக்குதான் துணையாக இருப்பாள்.
நேற்றுவரையில் இந்திரஜித் நல்லமுறையில் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பக்தனாக இருந்து வந்தான். அதனால் அவனுக்கு தேவி துணையாக இருந்தாள்.
ஆனால் இன்றோ அவன் தவறான செயலுக்கு தேவியை துணைக்கு அழைக்கிறான். நிச்சயமாக அவன் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் அருளை பெற மாட்டான் என்று கூறினார். பிறகு இராமர், ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை மனதால் வணங்கி நல்ல எண்ணத்தோடு பூஜை செய்தார். இராமர் மற்றும் இந்திரஜித் இருவரும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பக்தர்கள். இருவரும் தேவியின் அருளுக்காக கடுமையாக பூஜை செய்தனர்.
இவர்களில் யாருக்கு ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி துணையிருந்து உதவி செய்வாள்? என்று தேவலோகமே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி இந்திரஜித்தின் முன் தோன்றினாள். இந்திரஜித், நீ மிகச் சிறந்த என்னுடைய பக்தன். உன் தந்தை இராவணனின் தீய எண்ணத்துக்கு நீ துணை போகலாமா? தீய எண்ணத்துக்காக நீ எவ்வளவு நிகும்பலா யாகம் செய்தாலும் நான் உனக்கு துணையாக இருக்கமாட்டேன்.
இருந்தாலும் நீ என் தீவிர பக்தனாக இருப்பதால் உலகம் இருக்கும்வரை உன் புகழ் இருக்கும். நீ யாகம் செய்த இந்த இடமும் உன் புகழ் பேசும் என்று ஆசி வழங்கினாள் தேவி. பிறகு ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி இராமர் முன் தோன்றி, உன் பூஜைக்கான எண்ணம் மிகவும் சிறந்தது.
இந்த போரில் நீ வெற்றி பெறுவாய். நான் உனக்கு துணையாக இருப்பேன் எனக் கூறி மறைந்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக