Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 16 ஜூலை, 2020

மகரக்கண்ணனின் போர்...!

போரில் வேள்விப்பகைஞன், இலட்சுமணனுடன் போர் புரிந்து மாண்டான். வச்சிரப்பல்லன் அனுமனின் கையால் மாண்டான். இலட்சுமணன், பிசாசன் என்னும் வீரனையும் கொன்றான். இராமர் ஆறு கோடி சேனைகளை அழித்தார். இலட்சுமணன், நான்கு கோடி சேனைகளை அழித்தார்.


போரில் படைத்தலைவர்கள் மாண்டச் செய்தியை தூதர்கள் இராவணனிடம் சென்று கூறினர். இதைக் கேட்டு இராவணன் மிகவும் கோபங்கொண்டான். இராவணன் தம்பி கரன். இவனின் மகன் மகரக்கண்ணன். ஒருமுறை காட்டில் இராமரும், இலட்சுமணரும் இருந்தபோது சூர்ப்பனகை அவர்களிடம் தவறாக நடக்க முற்பட்டாள். அப்பொழுது கோபங்கொண்ட இலட்சுமணன் சூர்ப்பனகையின் காதையும், மூக்கையும் அறுத்தான். உடனே தன் அண்ணன் இராவணனிடம் சென்று முறையிட்டாள்.

அப்பொழுது இராமரிடம் போர் புரிய சென்றவர்களுள் ஒருவன் தான் கரன். காட்டில் போர் புரியும் போது கரன் இராமரால் மாண்டான். மகரக்கண்ணன் இராவணனை தொழுது, பிதாவே! என் தந்தையை கொன்ற இராமனை நான் கொன்று என் பழியை தீர்த்துக் கொள்கிறேன். தாங்கள் என்னை போருக்கு அனுப்பி வையுங்கள். நான் இப்போரில் தங்களுக்கு வெற்றியை தேடித் தருவேன்.

நான் போருக்குச் செல்ல தாங்கள் விடை தாருங்கள் என்றான். இராவணன் அவனை அன்போடு தழுவி, மகனே! உன் வீரம் மேருமலையை விடச் சிறந்தது. நீ போரில் இராமனையும், இலட்சுமணனையும் கொன்று வெற்றி மாலை சூடி திரும்புவாயாக எனக் கூறி விடைக் கொடுத்தான். பிறகு இராவணன், ஐந்து கோடி சேனைகளை உடன் அனுப்பி வைத்தான்.

மகரக்கண்ணன், சேனைகள் புடைசூழ, முரசொலிகள் முழங்க போர்களத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு இராமரை பார்த்து கோபங்கொண்டு, இராகவா! நீ என் தந்தையைக் கொன்று அரக்க குலத்திற்கு பழியை தேடி தந்து உள்ளாய். அதே போல் நான் உன்னையும், உன் தம்பியையும் கொன்று என் பழியை தீர்த்து கொள்ள போகிறேன் என்றான்.

பிறகு தன் மாய உருவினால் நெருப்பு மழை சிந்தியும், புயல்காற்று வீசியும், வானத்தில் இடி விழச் செய்தும் தன் உருவத்தினை மறைத்து பல மகரகண்ணன்கள் இருப்பது போல் தோற்றமளித்து போர் புரிந்தான். இவ்வாறு அவன் தன் உருவினை மாற்றி மாற்றி போர் புரிந்துக் கொண்டிருந்தான். இராமர் அவனை நோக்கி அம்புகளை ஏவினார்.

அதில் ஓர் அம்பு பட்டு அவன் உடம்பில் இருந்து இரத்தம் வலிந்தது. இதைப் பார்த்த இராமர், இரத்தம் சிந்தும் உருவமே மகரக்கண்ணனின் உண்மையான உருவம் என்பதைக் கண்டு கொண்டார். பிற உருவங்களில் இரத்தம் இல்லாததைக் கண்டார். மகரக்கண்ணனை தவிர மற்றவைகள் எல்லாம் மாயம் என்பதை உணர்ந்த இராமர், ஒரு தெய்வீக கணையை அவன் மீது ஏவினார்.

இதனால் அவனின் வலிமை குறைந்து அவன் மாண்டான். அரக்க தூதர்கள் இராவணனிடம் சென்று மகரக்கண்ணன் இராமனால் மாண்டான் என்னும் செய்தியைக் கூறினார்கள். இதைக்கேட்டு இராவணன் துன்பக்கடலில் ஆழ்ந்தான். இலங்கையில் அரக்கியர்கள் தங்கள் கணவர்கள் போரில் மாண்டதை அறிந்து கதறி அழுதுக் கொண்டிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக