அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மருமகளான மேரி ட்ரம்ப் எழுதிய ‘டெல் ஆல்’ புத்தகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நியூ யார்க் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன்படி, மேரி ட்ரம்ப் எழுதிய 240 பக்கம் கொண்ட டெல் ஆல் புத்தகத்தை வெளியிட சைமன் & ஷுஸ்டர் புத்தக வெளியீட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தந்தை ஃப்ரெட் ட்ரம்பின் எஸ்டேட் சொத்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப், அவரது சகோதரர் ராபர்ட் ட்ரம்ப், மேரி ட்ரம்பின் தந்தை ஃப்ரெட் ட்ரம்ப் ஜேஆர் ஆகியோருக்கு இடையே 2001ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி சில குடும்ப ரகசியங்களை வெளியிடக்கூடாது என அனைத்து தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஒப்பந்தத்தை மீறி மேரி ட்ரம்பின் டெல் ஆல் புத்தகத்தில் குடும்ப ரகசியங்கள் வெளியிடப்படுவதாக ராபர்ட் ட்ரம்ப் வழக்குத் தொடுத்தார்.
இதையடுத்து புத்தகத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, 2001ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தில், புத்தக வெளியீட்டு நிறுவனமான சைமன் & ஷுஸ்டர் ஒப்பந்ததாரராக இல்லை என கூறி, புத்தகத்தை வெளியிடுவதற்கு இருந்த தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும், ஒப்பந்தத்தை மீறி குடும்ப ரகசியங்களை மேரி ட்ரம்ப் தனது புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறாரா என்பது மேற்கொண்டு விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
மேரி ட்ரம்ப் ஒரு மருத்துவ உளவியலாளராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் கடந்தகாலத்தில் தனது தாத்தா குடும்பத்தில் சந்தித்த இன்னல்களை பற்றி இப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இதற்கு ட்ரம்ப் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக