இத்தனைக்கும் இந்தியாவும் சீனாவும், அதிகாரிகள் தொடங்கி பிரதமர் அதிபர் ரேஞ்சுக்கு பல முறை பேச்சு வார்த்தைகளை எல்லாம் நடத்தி இருக்கிறார்கள். ஆனாலும் சீனா, இந்தியா மீதான தன் பார்வையை மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை.
இப்போது, இந்த இந்தியா சீனா சண்டையில் தன் எதிர்காலத்தை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது இந்திய ஐடி கம்பெனிகள். அப்படி என்ன கவலை..?
சீனா பிரச்சனை
உலக அளவில் சீனா எல்லா நாடுகளுக்கும் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டு இருப்பதைப் போல, இந்தியாவையும் தொந்தரவு செய்து கொண்டு இருந்தது. குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில், ஜூன் மாதத்தில், சீனா எல்லை மீறிப் போய்விட்டது. 20 இந்திய ராணுவ வீரர்களைத் தாக்கி, அவர்கள் உயிரைப் பறித்தது. இந்தியா மட்டும் என்ன கை கட்டி வேடிக்கை பார்க்குமா..?
இந்தியா பதிலடி
இந்தியா, சீன கம்பெனிகளுக்கு கொடுத்த திட்டங்களில் பலதை ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து இந்திய கம்பெனிகள், சீன கம்பெனிகளைச் சார்ந்து இருப்பதை குறைத்துக் கொள்ளச் சொன்னது. இந்தியாவில், சீனா முதலீடு செய்வதை நெறுக்கும் விதத்தில் FDI சட்டங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். இதை எல்லாம் விட சீனாவின் 59 அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்து சீனாவை அலறவிட்டது இந்தியா.
ஐடி துறைக்கு வருத்தம்
இந்தியா எடுத்த நடவடிக்கைகளை, பல இந்தியர்கள் வரவேற்றார்கள். ஆனால் இந்திய ஐடி கம்பெனிகளுக்கு அத்தனை நல்ல விஷயமாகப் படவில்லை. காரணம் சீன சந்தை. ஆம். சீனாவுக்கு எப்படி இந்தியா மருத்துவம், பொறியியல், ரசாயனம் போன்ற துறைகளில் சந்தையாக இருக்கிறதோ, அதே போல, இந்தியாவின் ஐடி கம்பெனிகளுக்கு சீனா ஒரு மிகப் பெரிய சந்தை.
எவ்வளவு பெரிது
சீனா என்ன அவ்வளவு பெரிய சந்தையா எனக் கேட்கிறீர்களா? உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு இரண்டாவது பெரிய ஐடி மென்பொருள் மற்றும் ஐடி சேவைத் துறையைக் கொண்ட நாடு சீனா. சீனாவின் மொத்த software & information services industry மதிப்பு சுமாராக 493 பில்லியன் டாலர் இருக்கலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
சந்தை பறிபோகுமோ என்கிற பயம்
ஆக இத்தனை பெரிய ஐடி சந்தையை எந்த கம்பெனி தான் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கும். அதோடு எதிர்காலத்திலும் சீனாவில், இந்த ஐடி சந்தை இன்னும் அதிகரிக்கவே நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, இந்தியா சீனாவுக்கு இடையிலான பிரச்சனைகளால், கம்பெனிகள் கையை விட்டு சீனா சந்தைகள் போய்விடுமோ என்கிற பயம் இருக்கத் தானே செய்யும்?
இன்ஃபோசிஸ் கருத்து
சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் "இதுவரை இந்தியா சீனா சிக்கலால், ஐடி வியாபாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. சீனர்கள் தான் சீனாவில் இருக்கும் வியாபாரத்தை கவனிக்கிறார்கள். ஆனால் இந்த சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி ஓ ஓ ப்ரவீன். ஆக சீனர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்திய ஐடி கம்பெனிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். வருங்கால ப்ராஜெக்ட்களையும் இந்திய கம்பெனிகளுக்கு கொடுக்காமல் போகலாம் என்பது இதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.
வருவாய் குறைவு தான்
சரி சீனாவில் இருந்து பயங்கரமாக வருமானம் வருகிறது போல, அதான் ஐடி கம்பெனிகள் துடித்துப் போகிறார்கள் என நினைக்கிறீர்களா..? அதுவும் இல்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த ஐடி & பிபிஓ கம்பெனிகளின் மொத்த வருவாயில் வெறும் 3 % வருவாய் தான் சீனாவில் இருந்து வருகிறதாம். அதே போல, சீனாவில் இருக்கும் இந்திய ஐடி கம்பெனிகளில் சுமாராக 4,000 - 5,000 ஊழியர்கள் வேலை பார்ப்பார்க்கலாம் என்கிறது CII-ன் 2019 அறிக்கை.
20 ஆண்டுகளில் இவ்வளவு தான்
இதை விட இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால், இந்திய ஐடி கம்பெனிகள், சீனாவில் தங்கள் வியாபாரத்தை நிறுவ, கடந்த 20 ஆண்டுகளாக படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சீனாவின் கொள்கை முடிவுகள் மற்றும் பெரிய அளவிலான விலைப் போட்டி போன்ற காரணங்களால் இந்திய ஐடி கம்பெனிகளால் இன்று வரை பெரிதாக சீனாவில் கால் ஊன்ற முடியவில்லை. இருப்பினும் 493 பில்லியன் டாலர் சந்தையை கைவிடவும் இந்திய ஐடி கம்பெனிகளுக்கு விருப்பம் இல்லை.
சந்தை அவசியம்
"இந்திய ஐடி கம்பெனிகளுக்கு எதிர்காலத்தில் சீனா ஒரு முக்கிய சந்தையாக இருக்கும். இந்திய ஐடி கம்பெனிகள், சீனாவில் இருந்து வரும் வருவாயை அதிகரிக்க வேண்டும். அதற்கு இந்தியாவும் சீனாவும் சேர்ந்து பணியாற்ற வேண்டும்" எனச் சொல்லி இருக்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன்
ஐடி கம்பெனிகள் வருத்தம்
இப்போது, இரு நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் சூழலில், கிரிஸ் கோபால கிருஷ்ணன் சொன்னது சாத்தியமா? என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம். இந்திய ஐடி கம்பெனிகள், சீனாவில் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ, சீனா தங்கள் கம்பெனிகள் வைத்துக் கொள்ளுமா? விரட்டி விடுமா? என்கிற பயத்தில் இருக்கிறார்கள். என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக