Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

துர்பாக்கியசாலி !(ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்)


மதுராந்தகன் சிறிது நேரம் பிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்த பிறகு திடீரென்று எழுந்து நின்று, அநிருத்தரைப் பார்த்து, 'முதன்மந்திரி! இதெல்லாம் உமது சூழ்ச்சி! எனக்கு அப்போதே தெரியும்! சுந்தர சோழரின் மக்கள், அதிலும் முக்கியமாக அருள்மொழிவர்மன் பேரில் உமக்குப் பிரியம். அவனுக்குப் பட்டங்கட்ட வேண்டும் என்பது உம்முடைய விருப்பம். அதற்காக, இப்படியெல்லாம் என் தாயாரிடம் பொய்யும் புனை சுருட்டும் கூறி அவருடைய உத்தமமான மனத்தைக் கெடுத்திருக்கிறீர்! அன்பில் பிரம்மராயரே! உமக்கு என்ன தீங்கு நான் செய்தேன்? எதற்காக எனக்கு இந்தத் துரோகம் செய்யப் பார்க்கிறீர்? உம்முடைய நோக்கத்துக்காக நான் என் தாயாருக்கு பிள்ளையில்லாமல் போக வேண்டுமா? இந்த மாதிரி ஒரு பயங்கரமான பாதகச் சூழ்ச்சி இந்த உலகில் இதுவரை யாரும் செய்திருக்க மாட்டார்களே? விஷ்ணு பக்தர்களின் குலத்தில் வந்த அந்தணராகிய நீர் இப்படிச் செய்ய வேண்டுமா? இல்லை, இல்லை! உமது பேரில் தவறு ஒன்றும் இல்லை. இளைய பிராட்டி குந்தவையும், அருள்மொழிவர்மனும் ஏதோ சூழ்ச்சி செய்து இப்படி உம்மைப் பாதகம் செய்யப் பண்ணியிருக்கிறார்கள்!" என்று கத்தினான்.

அநிருத்தர் சாவதானமான குரலில், 'இளவரசே! தங்கள் பேரில் எனக்கு அவ்வளவு துவேஷம் இருந்தால், கொட்டுகிற மழையில் மரத்தடியில் விழுந்து கிடந்த தங்களை எடுத்து வந்திருக்க மாட்டேன். அருள்மொழிவர்மரைப் பற்றியும் தாங்கள் குறைகூற வேண்டாம்.ஈழம் கொண்ட அவ்வீரர் இந்த நிமிஷத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? தஞ்சைக் கோட்டையைச் சூழ்ந்துள்ள படை வீரர்களிடத்திலும் மக்களிடத்திலும் சென்று நல்ல வார்த்தை சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்தி வருகிறார். அவருடைய சித்தப்பாவாகிய தாங்கள் உயிரோடிருக்கும்போது தாம் சிங்காதனம் ஏறுவது தர்மம் அல்லவென்றும், அம்மாதிரி வீரர்களும் மக்களும் கோரக்கூடாதென்றும் சொல்லி அவர்கள் மனத்தை மாற்றிச் சரிப்படுத்த முயன்று வருகிறார்."

'அப்படியானால், அப்படியானால், நீங்கள் சற்று முன் சொன்ன செய்தி அருள்மொழிக்குத் தெரியாது அல்லவா?"

'அருள்மொழிக்கும் தெரியாது. வேறு யாருக்கும் தெரியாது!"

'இனிமேல்தான் எதற்காகத் தெரியப்படுத்த வேண்டும். அநிருத்தரே! நீர் மட்டும் வாயை மூடிக் கொண்டிருப்பதாக ஒப்புக்கொள்ளும். சக்கரவர்த்தி தங்களுக்கு ஒரு கிராமத்தில் பத்து வேலி நிலந்தானே பட்டயத்தில் எழுதி மானிய சாஸனம் அளித்தார்? நான் உமக்குப் பாண்டிய நாட்டையே பரிசாக அளித்துவிடுகிறேன்...." 'ஐயா! என்னை வாயை மூடிக்கொண்டிருக்கச் செய்வதற்குப் பாண்டிய நாட்டைத் தரவேண்டியதில்லை, தங்களுடைய அன்னையின் கட்டளை ஒன்றே போதும் அவரிடம் சொல்லுங்கள்!"

மதுராந்தகன் தன்னை வளர்த்த அன்னையைப் பரிதாபமாகப் பார்த்தான். 'குழந்தாய்! மதுராந்தகா! அநிருத்தர் சொல்வது சரிதான். அவருக்கு இருபது வருஷத்துக்கு முன்னாலிருந்து என் இரகசியம் தெரியும். அன்றைக்கு அவர், 'மகாராணி! இது தங்களுடைய இரகசியம். தாங்கள் யாரிடமாவது சொன்னாலன்றி வேறு எவருக்கும் தெரிய முடியாது. என் வாய் மூலமாக ஒரு நாளும் வெளிப்படாது இது சத்தியம்!" என்று சொன்னார். அதை இன்று வரையில் நிறைவேற்றி வருகிறார். சோழ குலத்துக்கு உண்மையாக நடப்பதாக இவர் சத்தியம் செய்து கொடுத்தவர். ஆயினும் சுந்தர சோழ சக்கரவர்த்தியிடம் கூடச் சொன்னதில்லை. நீ சோழ சிம்மாசனத்தில் ஏற நான் சம்மதித்தால் இவரும் பேசாமலிருந்திருப்பார்..."

'ஆம் தாயே! பேசாமலிருந்திருப்பேன். ஆனால் உள்ளத்தில் பொய்யை வைத்துக் கொண்டு முதன்மந்திரி உத்தியோகம் பார்த்திருக்க மாட்டேன். ஸ்ரீரங்கநாதருக்குச் சேவை செய்யப் போயிருப்பேன்!" என்றார் அநிருத்தர்.

'ஆனால் அதற்கு அவசியம் ஒன்றும் நேரப் போவதில்லை. மதுராந்தகன் சிங்காதனம் ஏறமாட்டான். என் விருப்பத்தை நிறைவேற்றுவான். அவனே இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்! மகனே! 'ஆம்" என்று ஒப்புக்கொள்ளு!' என்றாள் பெரியபிராட்டி செம்பியன் மாதேவி.

'தாயே! அப்படியானால் நான் சிங்காதனம் ஏறத் தடையாயிருப்பது தாங்கள் ஒருவர்தானா? நான் தங்கள் வயிற்றில் பிறந்த மகனில்லையென்றே வைத்துக் கொள்கிறேன். இருபது வருஷத்துக்கு மேலாகத் தங்கள் வயிற்றில் பிறந்த மகனுக்கு மேல் அருமையாக வளர்த்தீர்கள். இப்போது எதற்காக எனக்கு இந்தத் துரோகம் செய்கிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன்?"

'குழந்தாய்! நீ எனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. நான்தான் உனக்கு பெருந்தீங்கு செய்துவிட்டேன். இத்தனை நாளும் உன்னை என் வயற்றில் பெற்ற மகனைப் போலவே வளர்த்து வந்துவிட்டு இப்போது 'நீ என் மகன் இல்லை!" என்று சொல்கிறேன். இதனால் உன் மனம் எத்தனை புண்ணாகும் என்பது எனக்குத் தெரியாதா? என் ஆயுள் உள்ள வரையில் இதை நான் வெளியிட்டுச் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் என் கணவருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். நான் புகுந்த சோழ குலத்துக்கு துரோகம் செய்யக் கூடாது. சோழ குலத்தில் பிறக்காதவனைச் சோழ குல சிங்காதனத்தில் நான் ஏற்றி வைக்கக் கூடாது. ஏற்றுவதற்கு நான் உடந்தையாகவும் இருக்கக் கூடாது. என் மனம் இதைப் பற்றி வேதனை அடையவில்லையென்றா நினைக்கிறாய்? 'நீ என் மகன் அல்ல" என்று சற்று முன்னால் சொன்னபோது என் நெஞ்சே உடைந்து போய்விட்டது. கடைசி வரையில் சொல்வதற்குத் தயங்கினேன், உள்ளம் ஒரே குழப்பமாயிருந்தது. என்னுடைய கடமை என்ன, தர்மம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காகவே நம்பியாண்டார் நம்பியிடம் போயிருந்தேன். அந்த மகான் தர்ம சூக்ஷுமத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னார். 'உலகிலுள்ள மாந்தர் அனைவரும் மகாதேவரின் புதல்வர்கள்தான். சிவ பக்த சிரோமணியான தாங்கள் 'சொந்தக் குழந்தை" என்றும், 'வளர்த்த குழந்தை" என்றும், பேதம் பாராட்ட மாட்டீர்கள். தங்களுடைய சொந்த சொத்துக்கள் எல்லாவற்றையும் வளர்த்த மகனுக்கே கொடுப்பீர்கள். ஆனால் இராஜ்யத்தின் சமாசாரம் வேறு. நம்முடைய பொய்யின் மூலம் இன்னொருவருடைய நியாயமான உரிமையைத் தடைசெய்வது பாவமாகும். சோழ குலத்தில் பிறக்காதவனைத் தெரிந்து சோழ சிங்காதனதில் ஏற்றி வைப்பது குலத்துரோகமாகும். தங்கள் மகனிடமும் சக்கரவர்த்தியிடமும் உண்மையைச் சொல்லி விடுவதுதான் தர்மம்" என்று உபதேசித்தார். கேட்டுக் கொண்டு திரும்பி வந்தேன். குமாரா! நீ என் சொந்த மகன் அல்ல என்று சொல்வதில் எனக்குச் சந்தோஷம் இருக்க முடியுமா? சக்கரவர்த்தியிடம் சொல்லும்போதுதான் இதை நான் பெருமையுடன் சொல்ல முடியுமா?"

அச்சமயம் மதுராந்தகன் திடீரென்று எழுந்து செம்பியன் மாதேவியின் காலில் விழுந்து, 'அன்னையே! எனக்கு இராஜ்யம் வேண்டாம், சிங்காதனமும் வேண்டாம். இங்கே இருக்கச் சொன்னால் இருக்கிறேன். தேசாந்திரம் போகச் சொன்னால் போய்விடுகிறேன். ஆனால் நான் தங்கள் மகன் அல்ல. தங்கள் திருவயிற்றில் பிறந்தவன் அல்ல என்று மட்டும் சொல்ல வேண்டாம்! யாரிடமும் சொல்ல வேண்டாம்! சொன்னீர்களானால் அந்த அவமானத்தினாலேயே என் நெஞ்சு வெடித்து இறந்து விடுவேன்!" என்று கதறினான்.

செம்பியன் மாதேவி கண்களில் நீர் ததும்ப மிகுந்த ஆவலுடன் மதுராந்தகனை வாரி எடுத்துத் தம் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

'குமாரா! உன்னை இந்தத் துன்பம் அணுகாதிருக்கும் பொருட்டுத்தான் இந்த உலக இராஜ்யத்தில் விருப்பமில்லாதவனாகவும், சிவலோக சாம்ராஜ்யத்தில் பற்றுள்ளவனாகவும் வளர்க்க முயன்று வந்தேன். அதில் தோல்வி அடைந்தேன். எந்தப் பாவிகளோ உன் மனத்தைக் கெடுத்து விட்டார்கள். இப்போதும் மோசம் போய்விடவில்லை. நீயாக உன் மனப்பூர்வமாக 'இந்த ராஜ்யம் எனக்கு வேண்டாம். சுந்தர சோழரின் மகன் அருள்மொழியே அரசாளட்டும்" என்று நாடு நகரமறியச் சொல்லி விட்டாயானால், 'நீ என் மகன் அல்ல!" என்று பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. உன் மனத்தை இப்போது புண்படுத்தியதே எனக்கு அளவிலாத வேதனை தருகிறது. இன்றைக்கு முதன்மந்திரி அநிருத்தரின் முன்னிலையில் ஒப்புக்கொள். மூன்று நாளைக்கெல்லாம் சிற்றரசர்களின் மகாசபை கூடும். அச்சபையின் முன்னிலையிலேயும் ஒப்புக்கொள். 'எனக்கு இராஜ்யம் ஆளும் விருப்பம் இல்லை. சிவபெருமானுடைய கைங்கரியத்திலும், சிவாலயத் திருப்பணியிலும் ஈடுபட விரும்புகிறேன். என் தந்தை தாயின் கட்டளையும் அதுதான்! அருள்மொழிவர்மனுக்கே பட்டம் கட்டுங்கள்!" என்று சொல்லி விடு. 'சோழ இராஜ்யத்துக்கு விரோதமாக எதுவும் செய்வதில்லை. சிற்றரசர்கள் யாரேனும் துர்ப்புத்தி கூறினாலும் செவி சாய்ப்பதில்லை" என்று சத்தியம் செய்துவிடு! அப்படிச் செய்துவிட்டால் நானாவது, முதன்மந்திரியாவது உன் பிறப்பைக் குறித்த இரகசியத்தை வெளியிடுவதற்கே அவசியம் இராது. நீ எப்போதும் போல் என் கண்ணின் மணியான அருமைப் புதல்வனாயிருந்து வருவாய். நாம் இருவரும் சேர்ந்து இந்தப் பரந்த பாரத தேசமெங்கும் யாத்திரை செல்வோம். ஆங்காங்கே சிவாலயத் திருப்பணிகள் செய்வோம். அருள்மொழிவர்மன் என்னிடம் அளவிலாத பக்தி உள்ளவன். உன்னைப் போலவே அவனையும் பெரும்பாலும் நான்தான் வளர்த்தேன். என் பேச்சுக்கு அவன் ஒருகாலும் மறுப்பு சொல்ல மாட்டான்?" என்றார் மழவரையர் மகளான செம்பியன் மாதேவி.

மதுராந்தகன் இதைக் கேட்டு நெற்றியை இரண்டு கைகளினாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். 'ஆகா! எனக்குப் பிராயம் தெரிந்தது முதல் ஏதேதோ உருவமில்லாத நிழல் போன்ற நினைவுகள் அடிக்கடி தோன்றி எனக்கு வேதனை அளித்து வந்தன. அவற்றுக்கெல்லாம் காரணம் இப்போதுதான் தெரிகிறது. என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் யார் உண்டு? என்ன வேளையில், என்ன ஜாதகத்தில் பிறந்தேனோ தெரியவில்லை. ஒரே நாளில், ஒரு கண நேரத்தில் தாய் தந்தையரை இழந்தேன். குலம் கோத்திரம் இழந்தேன். ஒரு பெரிய மகா இராஜ்யத்தை இழந்தேன். ஆயிரம் வருஷத்து வீர பரம்பரையில் வந்த சிங்காதனத்தை இழந்தேன். சிநேகிதர்கள் யாவரையும் இழந்தேன். ஆம். இந்த உண்மை தெரிந்தால் அப்புறம் எவன் எனக்குச் சிநேகிதனாயிருக்கப் போகிறான்? எனக்குப் பட்டம் கட்டுவதற்காக உயிரைக் கொடுப்பதாய்ப் பிரமாணம் செய்த சிற்றரசர்கள் எல்லாரும் ஒரு நொடியில் என்னைக் கைவிட்டு விடுவார்கள்!... ஆம், என்னைப் போன்ற துர்பாக்கியசாலி இந்த உலகம் தோன்றிய தினத்திலிருந்து யாரும் இருந்திருக்க முடியாது. அம்மா! என் அறிவு குழம்புகிறது. தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள், என் முடிவைச் சொல்லுகிறேன்!" என்றான்.

'குழந்தாய்! நீ யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? என் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் இதைச் சொல்கிறேன். ஒன்று நீயாக இராஜ்யத்தை துறந்து விடுவதாய் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது நீ என் வயிற்றில் பிறந்த மகன் அல்ல என்பதை நாடு நகரமெல்லாம் அறிய நான் ஒப்புக்கொள்ள வேண்டும். எப்படியும் நீ சிங்காதனம் ஏற முடியாது. நீ யோசித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?" என்றாள் பெரிய பிராட்டியென்று உலகமெல்லாம் போற்றி வணங்கிய உத்தமி.

அப்போது அநிருத்தர், 'அம்மா! இரண்டு நாள் அவகாசம் கொடுப்பதில் தவறு ஒன்றுமில்லை. மந்திராலோசனை சபையும் மகாஜன சபையும் கூடுவதற்கு இன்னும் மூன்று நாள் இருக்கிறது. அதுவரை இளவரசர் நிம்மதியாக யோசித்துப் பார்க்கட்டும்!" என்றார்.

'அம்மா! அம்மா! இந்த ரகசியம் தங்களையும் முதன்மந்திரியையும் தவிர வேறு யாருக்காவது தெரியுமா?" என்று மதுராந்தகன் திடீரென்று தோன்றிய ஆவலுடன் கேட்டான். அவன் உள்ளத்தில் என்ன தீய எண்ணம் தோன்றியதோ, எத்தகைய சூழ்ச்சி முளைவிடத் தொடங்கியதோ, நாம் அறியோம்.

மதுராந்தகனுடைய பரபரப்பு மழவரையர் மகளுக்குச் சிறிது வியப்பை அளித்தது. 'எங்களைத் தவிர இன்னும் மூன்று பேருக்கு மட்டும் தெரிந்திருந்தது. மகனே! அவர்களில் உன் தந்தை சிவநேசச் செல்வரான, என் சிந்தையில் குடிகொண்ட கணவர், காலமாகி விட்டார். தமக்கையும், தங்கையுமான இரண்டு ஊமை ஸ்திரீகளுக்குத் தெரியும். அவர்களில் ஒருத்தி உன்னைப் பெற்றவள் - இரண்டு நாளைக்கு முன்பு சுந்தர சோழர் அரண்மனையில் துர்மரணம் அடைந்தாள். அவளுடைய உயிரற்ற உடல் அடக்கம் செய்யப்படாமல் கிடந்தபோதே உன்னிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா என்று பார்த்தேன். ஆனால் மனம் வரவில்லை. உன்னை வேதனைப்படுத்த விருப்பமில்லாமல் சும்மாயிருந்து விட்டேன். மகனே! உன்னைப் பெற்றவளை நினைத்து நீ அழுவதாயிருந்தால் அழு! உன்னை அவள் பெற்றாளேயன்றி, அப்புறம் உனக்கும் அவளுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்கவில்லை. உன்னை வந்து பார்க்கவேண்டும் என்று கூட முயற்சி செய்யவில்லை. அவள் புத்தி சுவாதீனத்தை இழந்து பிச்சியாகி போய்விட்டாள். அவளை நினைத்து நீ கண்ணீர் விடுவதாயிருந்தால் விடு!" என்று சொன்னாள் தேவி.

'இல்லை, இல்லை, தங்களை தவிர வேறு யாரையும் அன்னையாக நினைக்க என்னால் முடியவில்லை. முன்னாலேயே தாங்கள் சொல்லியிருந்தாலும் அவள் அருகிலே கூடப் போயிருக்கமாட்டேன். இரகசியம் தெரிந்த இன்னொருவர் யார், அம்மா! அந்த இன்னொரு ஊமை ஸ்திரீ யார்?" என்று கேட்டான்.

'அவளுடைய தங்கைதான். இந்தத் தஞ்சைக்கு வெளியில் நந்தவனம் வைத்து வளர்த்து வருகிறவள். என் வயிற்றில் செத்துப் போய்க் கட்டை போல் பிறந்த சிசுவையும் உன்னையும் மாற்றிப் போட்டவள் அவள்தான். பிறவி ஊமையும் செவிடுமாதலால் யாரிடமும் சொல்லமாட்டாள். அவளுக்கும் ஒரு குமாரன் இருக்கிறான். தாயும் மகனும் தஞ்சைத் தளிக்குளத்தார் ஆலயத்துக்குப் புஷ்ப சேவை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மானியம் கொடுத்து நான்தான் ஆதரித்து வருகிறேன்."

'ஆகா! அவர்களை எனக்குத் தெரியும். தாய், மகன் இருவரையும் தெரியும். மகன் பெயர் சேந்தன் அமுதன். வந்தியத்தேவன் என்ற ஒற்றன் இங்கிருந்து தப்புவதற்கு உதவி செய்தவன். அம்மா! பிள்ளைக்கு இதைப்பற்றி ஏதாவது தெரியுமா?"

'தெரியாது, மகனே! தெரியாது! அவனுடைய தாயார் இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்வதில்லை என்று என்னிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாள். அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம். அவளைத் தவிர, நானும் முதன் மந்திரியுந்தான்!"

மதுராந்தகனுடைய உள்ளத்தில் அச்சமயம் பயங்கரமான தீய எண்ணங்கள் பல தோன்றின. இவர்கள் இருவரும் இவ்வுலகை விட்டு அகன்றால், உண்மையைச் சொல்லக் கூடியவர்கள் யாருமே இல்லை என்று எண்ணினான். முதன்மந்திரிக்கு நான் எந்தவிதத்திலும் கடமைப்பட்டிருக்கவில்லை. இந்த மாதரசியோ உண்மையில் என் அன்னை அல்ல. இவர்களிடம் எதற்காக நான் கருணை காட்டவேண்டும்? ஆகா! என் பிறப்பைக் குறித்த இரகசியத்தை அறிவிப்பதாகச் சுந்தர சோழரின் தோட்டத்தில் கூறினானே, அவன் யார்? பொக்கிஷ நிலவறையில் என்னை வந்திருக்கும்படி சொன்னவன் யார்? அவனை மட்டும் நான் சந்திக்கும்படி நேர்ந்தால்? சுந்தர சோழரைக் கொல்ல முயன்று அவன் அந்த ஊமை ஸ்திரீயைக் கொன்றுவிட்டான். அவன் பேரில் குற்றமில்லை. அவள்தான் என் தாயார் என்று இவர்கள் சொல்லுகிறார்கள். அவள் என் தாயார் என்றால், என் தகப்பனார் யார்? ஒருவேளை...ஒருவேளை இந்த வஞ்சனை நிறைந்த கிழவியும், இந்த வேஷதாரிப் பிரம்மராயனும் என்னை வஞ்சிக்கத்தான் பார்க்கிறார்களோ? உண்மையில் நான் சுந்தர சோழரின் குமாரன் தானோ?...ஆகா! இந்த உண்மையை எப்படி அறிவது?

'மகனே! நான் போய் வருகிறேன். நன்றாக யோசித்துச் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்துவிடு! பெற்ற, தாயைவிடப் பதின்மடங்கு அன்புடன் உன்னை இருபத்திரண்டு வருஷம் வளர்த்த நான் உனக்கு கெடுதலைச் சொல்ல மாட்டேன். இந்த நிலையற்ற பூலோக இராஜ்யத்தைத் தியாகம் செய்துவிடு! என்றும் அழியாத சிவலோக சாம்ராஜ்யத்தை அடைவதற்கு வழி தேடு!" என்று கூறினாள் பெரிய பிராட்டியார்.

இச்சமயம் அவர்கள் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அருள்மொழிவர்மன் அந்த அறைக்குள் வந்தான். நேரே செம்பியன் மாதேவியிடம் வந்து நமஸ்கரித்தான்.

'தேவி! தாங்கள் தங்களுடைய அருமைப் புதல்வருக்குக் கூறிய புத்திமதியை எனக்குக் கூறிய புத்திமதியாகவும் ஏற்றுக் கொண்டேன். இந்தச் சோழ சாம்ராஜ்யம் எனக்கு உரியதாக இருக்கும் பட்சத்தில் அதை நான் தியாகம் செய்துவிடச் சித்தமாயிருக்கிறேன். தங்களுடைய ஆசியினால் என் உள்ளம் சிவபெருமானுடைய பாத கமலங்களில் செல்லட்டும். சிவலோக சாம்ராஜ்யத்தில் ஒரு சிறிய இடம், தங்கள் கணவராகிய மகான் கண்டராதித்தர் இருக்கும் இடத்துக்கருகில், எனக்குக் கிடைக்கட்டும்! அவ்வாறு எனக்கு ஆசி கூறுங்கள்!" என்றான்.

இதைக் கேட்ட செம்பியன் மாதேவியும், முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள்.

'தேவி! சற்று முன்னால் தங்கள் செல்வப் புதல்வரிடம் தாங்கள் சொல்லிக் கொண்டிருந்ததை நான் விருப்பமின்றிக் கேட்கும்படியாக நேர்ந்துவிட்டது மன்னிக்க வேணும். இந்த மாளிகையைச் சுற்றி நின்ற ஜனங்களைக் கோட்டைக்கு வெளியே கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத் திரும்பி வந்தேன். முதன்மந்திரியைப் பார்த்து மேலே நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசுவதற்காக இந்த மாளிகையில் நுழைந்தேன். தாங்களும் இங்கு இருப்பதாக அறிந்ததும் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று என்று எண்ணிக் கொண்டு வந்தேன். தாங்கள் வழக்கத்தைக் காட்டிலும் உரத்த குரலில் பேசினீர்கள், மதுராந்தகத் தேவரும் சத்தம் போட்டுப் பேசினார். உள்ளே பிரவேசிக்கலாமா, வேண்டாமா என்று தயங்கி நிற்கையில் தங்களுடைய சம்பாஷணையில் ஒரு பகுதி என் காதில் விழுந்தது. தேவி! உயிரோடிருப்பவர்களில் தங்களுக்கும், முதன்மந்திரிக்கும், சேந்தன் அமுதனுடைய அன்னைக்கு மட்டும் மதுராந்தகருடைய பிறப்பைக் குறித்த இரகசியம் தெரியும் என்று சற்றுமுன் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். அது சரியல்ல. எனக்கும் என் தமக்கையாகிய இளைய பிராட்டிக்கும் கூட அது தெரியும். சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த மந்தாகினி தேவியை நான் ஈழ நாட்டில் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. சித்திர பாஷையின் மூலம் அவர் எனக்கு இதையெல்லாம் தெரிவித்தார். நான் என் தமக்கையாரிடம் கூறினேன். இரண்டு பேரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். என் சிறிய தகப்பனாராகிய மதுராந்தகத் தேவர் தான் சோழ சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டியவர். அவர் தங்களுடைய சொந்த மகனைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு ஆதரவுடன் வளர்க்கப்பட்டவர். என்னைக் காவேரி வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றியதோடு, பின்னரும் பல முறை உயிர் பிழைப்பதற்கு உதவி செய்த மந்தாகினி தேவி வயிற்றில் பிறந்த புதல்வர். ஆகையால், எப்படிப் பார்த்தாலும் சோழ சிங்காசனத்தில் ஏற உரிமை உள்ளவர். அவருடைய உரிமையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நான் அதைத் தீர்த்து வைப்பேன்! சோழ சிங்காசனத்தில் எனக்குள்ள பாத்தியதையைத் தங்கள் பாத தாமரைகளின் ஆணையாகத் தியாகம் செய்வேன். ஆகையால், தாங்கள் மதுராந்தகத் தேவர் தங்கள் புதல்வர் அல்லவென்று சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. மதுராந்தகர் சோழ சிங்காசனத்தைத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை!"

இவ்வாறு பொன்னியின் செல்வர் கூறியதைக் கேட்டு அந்த அறையில் மூவரும் தங்கள் வாழ்நாளில் என்றும் அடைந்திராத வியப்பையும், பிரமிப்பையும் அடைந்தார்கள். அவர்களில் அநிருத்தர் தான் முதலில் அறிவுத் தெளிவு பெற்றார்.

'இளவரசே! தாங்கள் இப்போது கூறிய வார்த்தைகள் காவியத்திலும், இதிகாசத்திலும் இடம் பெற வேண்டும். கருங்கல்லிலும், செப்பேட்டிலும், பொன் தகடுகளிலும் பொறிக்கப்பட வேண்டியவை. ஆனால் இங்கேயுள்ள நாம் மட்டும் இந்த விஷயத்தைப்பற்றித் தீர்மானம் செய்ய முடியாது. சக்கரவர்த்தியையும், மற்ற சிற்றரசர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னொரு காலத்தில் உண்மை வெளியானால் மக்கள் என்ன சொல்வார்கள் என்பதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இளவரசே! மகா சபை கூடுவதற்கு இன்னும் மூன்று தினங்கள்தான் இருக்கின்றன. அதுவரையில் நாம் ஒவ்வொருவரும் நிதானமாக ஆழ்ந்து யோசனை செய்து பார்ப்போம்!" என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக