Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

கௌசலை பரதனை காண ஓடி வருதல்...!

இராமர் குறித்த காலத்திற்குள் வர கால தாமதமானதால் பரதர், அண்ணன் இராமரை இன்னும் காணவில்லையே! அவருக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்துவிட்டதோ! என எண்ணினார். இல்லை பகைவர்களால் ஏதேனும் துன்பம் நேர்ந்ததோ! ஆனால் அண்ணனுடன் இலட்சுமணன் இருக்கிறாரே அதனால் அவருக்கு ஏதும் நேராது மன அமைதி அடைந்தார்.

இல்லை பரதனே அயோத்தியை ஆளட்டும் என நினைத்து வராமல் இருக்கிறாரோ! அண்ணன் இராமர் வரவில்லையெனில் நான் உயிர் வாழ மாட்டேன். இனி நான் உயிர் வாழ்வது சிறந்தது அல்ல. நான் உயிர் துறக்க வேண்டும் என எண்ணி பரதர் உயிர் விடத் துணிந்தார். அதன்பின் தன் ஏவலாட்களை அழைத்து சத்துருக்கனை அழைத்து வர கட்டளையிட்டார். அவ்வாறே சத்ருக்கனும் அங்கு வந்து பரதரை பணிந்து நின்றான்.

பிறகு பரதன் சத்ருக்கனை பார்த்து, தம்பி! பதினான்கு ஆண்டு வனவாச காலம் முடிந்த பின்பும் அண்ணன் இராமர் குறிப்பிட்டப்படி நாடு திரும்பவில்லை. அதனால் நான் உயிர் திறக்க போகிறேன். நீ எனக்கு தீ வார்த்திக் கொடு எனக் கேட்டார். சத்ருக்கன், பரதர் இவ்வாறு கூறியதைக் கேட்டு துடிதுடித்து போனான். சத்ருக்கனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அண்ணா! தாங்கள் இல்லா இவ்வுலகில் நான் மட்டும் இருந்து என்ன பயன்? நானும் தங்களுடன் வருகிறேன். இருவரும் ஒன்றாக உயிரைத் துறப்போம். நீங்கள் இல்லாத இவ்வுலகில் இந்த இராஜ்ஜியம் மட்டும் எனக்கெதற்கு? தாங்கள் தீயில் விழுந்தால் நானும் தீயில் விழுந்து மாள்வேன் எனக் கூறி அழுதான்.

பரதன், தம்பி சத்ருக்கனா! நீ இவ்வாறு சொல்லுதல் கூடாது. எனக்காக நீ உயிர் வாழ வேண்டும். என் பொருட்டு தான் இராமர் வனவாசம் சென்றுள்ளார். வனவாச காலம் முடிந்த பின்பும் இராமர் இன்னும் நாடு திரும்பவில்லை. நான் அயோத்தியை ஆட்சி புரிவதால், தம்பி பரதனே ஆட்சி புரியட்டும் என இராமர் வராமல் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. நான் இறந்துவிட்டால் அயோத்தியை ஆட்சி புரிய எவரும் இருக்க மாட்டார்கள்.

 அப்பொழுது இராமர் அரசு புரிய இங்கு வந்து ஆக வேண்டும். அதனால் தான், நான் என் உயிரை விட துணிந்துள்ளேன் எனக் கூறினான். என் செயலை நீ புரிந்துக் கொள்ள வேண்டும். அதனால் நீ எனக்கு தீ மூட்டி கொடு. இது என் கட்டளை எனக் கூறினான். பரதன் இவ்வாறு கூறியதால் சத்ருக்கனால் எதுவும் செய்ய முடியவில்லை. கண்களில் கண்ணீர் தழும்ப பரதரின் கட்டளைப்படி தீமூட்டினான்.

பரதன் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்தி அயோத்தி முழுவதும் பரவியது. மக்கள் அனைவரும் பரதனை காண ஓடி வந்தனர். இச்செய்தி கௌசலைக்கு தெரிவிக்கப்பட்டது. கௌசலை கண்களில் கண்ணீர் தழும்ப பரதனை காண நந்தி கிராமத்திற்கு ஓடி வந்தாள். பரதனை பற்றி கதறி அழுதாள். என் அன்பு மகனே! என்ன காரியம் செய்ய துணிந்துள்ளாய். இராமன் இன்று வரவில்லையென்றால் நாளை வருவான். இராமன் இங்கு வந்து உன்னைப் பற்றி கேட்டால் நாங்கள் என்ன சொல்வது.

இச்செய்தியை அறிந்து இராமனும் மாள மாட்டானா? நீ இராமன் மேல் வைத்த அன்புக்கும், உன் பண்புகளுக்கும் ஆயிரம் இராமர்கள் வந்தாலும் உனக்கு ஈடாகா மாட்டார்கள். உன்னைப் போல் ஒருவன் இவ்வுலகில் பிறக்கப் போவதில்லை. உன் அன்பு மேரு மலையைக் காட்டிலும் மிகப் பெரியது. நீ உன் உயிரை தீயிக்கு இரையாக்கி விடாதே எனக் கூறி புலம்பி அழுதாள்.

பரதன், அன்னையே! அண்ணன் இராமர், பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்த பின்பு திரும்பி வருவேன் என உறுதியளித்தார். அப்பொழுது நான் தாங்கள் பதினான்கு ஆண்டு முடிந்து வரவில்லையென்றால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என சபதம் செய்துக் கொண்டேன். இன்று அண்ணன் இராமரின் பதினான்கு ஆண்டு வனவாசம் காலம் முடிந்துவிட்டது. ஆனால் அவர் இன்னும் இங்கு வரவில்லை. அதனால் நான் ஏற்றுக்கொண்ட சபதத்தின்படி உயிர் விடுவேன்.

தந்தை, என் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் பொருட்டு சத்தியத்திற்காக உயிரைவிட்டவர். அதுபோல் நானும் என் சபதத்திற்காக உயிரை விடுவேன் என்றான். பரதன் கூறிய சொற்களை கேட்டு கௌசலை துடிதுடித்து போனாள்.

கௌசலை, பரதனை எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தும், அத்தனையும் தோல்வியில் முடிந்தன. பரதன் தீயில் இறங்குவதில் உறுதியாக இருந்தான். பரதன், அக்னிக்கு அருகில் சென்று பூஜையை செய்தான். அக்னிக்கு தன் உயிரை காணிக்கையாக கொடுக்க முன்னே வந்தான். அப்பொழுது அனுமன் பரதன் இருக்கும் நந்தி கிராமத்தை அடைந்தான். அனுமன், பரதன் தீயில் இறங்க முன் வந்திருப்பதை கண்டு இவர் தான் பரதர் என்பதை உகித்துக் கொண்டான்.

அனுமன், இராமர் வந்துவிட்டார், ஸ்ரீ இராம சந்திர மூர்த்து வந்துவிட்டார் எனக் கூறிக் கொண்டு வேகமாக வந்து இறங்கி பரதனை தடுத்தான். அனுமன் வந்து இறங்கிய வேகத்தில் அக்னித்தீயும் அணைந்தது. பரதரே! ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி வந்துவிட்டார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்துவிடுவார். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு ஆசிரமத்தில் தங்கியிருக்கின்றார்.

பிறகு அனுமன், பரதரே! தாங்கள் என்ன காரியம் செய்ய துணிந்துள்ளீர்கள். தாங்கள் உயிர் விட்ட செய்தியை அறிந்து இராமர் மட்டும் மகிழ்ச்சியாக உயிர் வாழ்வாராக என நினைத்தீர்களா? நிச்சயம் இல்லை. அவரும் தங்களுடன் உயிரை மாய்த்துக் கொள்வார். தாங்கள் அவசரப்பட்டு இச்செயலை செய்வது சரியானது அல்ல. ஸ்ரீராமர் பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்து அயோத்திக்கு வருவதற்கு இன்னும் நாற்பது நாழிகை பொழுது மீதம் இருக்கிறது. அதற்குள் இராமர் இங்கு வந்துவிடுவார். தாங்கள் யாரும் வருந்த வேண்டாம். நான் செல்வது அனைத்தும் உண்மை. பரதரே! ஸ்ரீராமர் அவர்கள் அவரின் அடையாளமாக இந்த கணையாழியை தங்களிடம் காண்பிக்க சொன்னார் எனக் கூறிவிட்டு இராமர் கொடுத்த கணையாழியை பரதரிடம் காண்பித்தான்.

பரதன், அக்கணையாழியை பார்த்து இது என் அண்ணல் இராமரின் கணையாழி தான் எனக் கூறி அக்கணையாழியை வாங்கி கண்ணீரால் அபிஷேகம் செய்தார். பிறகு அக்கணையாழியை அனைவரிடமும் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார். அனைவரும் இராமரின் கணையாழியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பிறகு பரதன் அனுமனை பார்த்து, ஐயனே! எங்களுக்கு உயிரினும் மேலான இத்தகையை இன்பச் செய்தியை கூறிய தாங்கள் யார்? என்று எங்களிடம் கூறவில்லையே! நீங்கள் வந்த வேகத்தில் அக்னித்தீயும் அணைந்துவிட்டது. அப்படியென்றால் நீங்கள் மும்மூர்த்திகளில் ஒருவரா? எனக் கேட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக