Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

ஸ்ரீவாஞ்சியநாதர் திருக்கோயில் - திருவாஞ்சியம்

 srivanjiyam Vanchinathar Srivanchiyam Vanchinatha Swamy ...
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீவாஞ்சியநாதர்
இறைவியார் திருப்பெயர் : வாழவந்தநாயகி, மங்களநாயகி
தல மரம் : சந்தனம்
தீர்த்தம் : குப்த கங்கை,யம தீர்த்தம்
வழிபட்டோர் : திருமால், பிரமன், யமன், இந்திரன், பராசரர், அத்ரி
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - வன்னிகொன்றை மதமத்தம்.
2. அப்பர் - படையும் பூதமும் பாம்பும்.
3. சுந்தரர் - பொருவனார் புரிநூலர்.


தல வரலாறு:

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவாஞ்சியம் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருசாய்க்காடு மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும். இவற்றில் திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது. பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். 


அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போதுதான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்கவடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டுவிட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும்.

தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப்படுகிறது. சுமார் 558 அடி நீளமும், 320 அடி அகலமும் உடைய இவ்வாலயம் 3 கோபுரங்களுடனும், 3 பிரகாரங்களும் உடையது. பிரதான இராஜ கோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.

இத்தலத்தில் யமதர்மனுக்கு தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சம். கோவிலின் அக்னி மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நிதி உள்ளது. அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவியை உடையதால் எமனை எல்லோரும் திட்டியதாலும், பல உயிர்களை எடுப்பதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டும் எமன் இத்தலம் வந்து தனக்கு ஏற்படும் பாவம் தீர சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இறைவனும் உயிர்களை எடுக்கும் பாவமும் பழியும் எமனை வந்தடையாது என்று வரம் அளித்தார். மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். 

அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும். மரணபயம், மனக்கிலேசம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும்.

குப்தகங்கை தீர்த்தம்; மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்கள் பாவங்கள் தீர்ப்பதால் தன்னிடம் சேர்ந்துவிட்ட பாவங்களைக் போக்கிக் கொள்ள கங்கை இறைவனை வேண்டினாள். இறைவனும் எமனுக்கே பாவவிமோசனம் தந்த இத்தலத்தில் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி கூறினார். கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற 999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள். இத்தலத்து தீர்த்தமும் குப்த கங்கை எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர்.

உட்பிரகாரத்தில் பைரவர் சந்நிதி உள்ளது. பைரவர் இங்கு யோகநிலையில் காணப்படுகிறார். பைரவர் சநிதிக்கு அடுத்து ராகு-கேது சந்நிதி இருக்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இவர்கள் உருவச்சிலையும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும். ராகு-கேதுவிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும். இத்தலத்தில் ராகு-கேதுவை வழிபடுவது திருமண தடைகளை நீக்கும் என்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். இத்தலத்தில் சிவபெருமானே அனைத்துமாக அருள் பாலிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை. தலவிநாயகர் அபயங்கர விநாயகர் என்ற பெயருடன் இங்கு விளங்குகிறார். இக்கோவிலின் சண்டிகேஸ்வரர் யம சண்டிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தலவிருட்சம் சந்தன மரம்.

கருவறை சுற்றில் உள்ள தெற்குப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் உருவச்சிலைகள் உள்ளன. மஹாலக்ஷ்மி மற்றும் மகிஷாசுரமர்தினியின் சந்நிதிகளும் இங்குள்ளன. சிம்ம வாகனத்துடன் நின்ற நிலையில் எட்டு கைகளுடன் காட்சி தரும் மகிஷாசுரமர்தினியை இராகு காலத்தில் 108 தாமரை மலர்களால் அர்ச்சிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லக்ஷ்மி தீர்த்தத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமை நீராடுவதால் ஒருவன் தான் பிரிந்து வந்த குடும்பத்துடன் மீண்டும் சேருவான் என்றும் நாக தீர்த்தத்தில் வைகாசி மாதம் திருவோணம் நடசத்திர நாளன்று நீராடுதல் நாக தோஷத்தைப் போக்கும் என்றும் ஆவணி மாதம் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் சக்கர தீர்த்தத்தில் நீராடுதல் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குமென்றும் தலபுராணம் கூறுகின்றது.

சிறப்புக்கள் :

இத்தல தீர்த்தம் (குப்தகங்கை), அத்திரி, பரத்துவாசர், ஜமதக்கினி, விசுவாமித்திரர், வசிட்டர், கௌதமர் ஆகியோர் நிறுவியருள் பெற்ற சிறப்புடையது. காசியில் கங்கைதன்னிடம் மக்கள் போக்கிக்கொள்ளும் பாவங்கள் சேர்ந்ததைத் தீர்க்க கங்கை வந்து இத்தலத்தில் தங்கி வழிபட்டுப் பாவங்களை நீக்கிக் கொண்டாள். இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சிறப்பால் உயர்வு பெற்ற சிறப்புடையத் தலமாகும். நான்கு யுகங்களில் முறையே புண்ணிய தீர்த்தம், அத்திரி தீர்த்தம், பராசர தீர்த்தம், முனி தீர்த்தம் என்ற நாமங்களைக் கொண்டு விளங்கியுள்ளது. கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இறைவன் இங்குத் தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பஞ்சமா பாதகம், பிரமகத்தி, நோய்கள், பிற பீடைகள், சிவத்துரோகம் முதலிய பாவங்கள் அனைத்தையும் நீக்கி வெற்றி, ஆனந்தம், வீடுபேறு முதலிய பயன்களை அளிக்கவல்லது இத்தலம். இத்தீர்த்தக் கரையில் தருமம் செய்வோர் சிறந்த பலன்களைப் பெறுவர்.

இத்தலம் மூவர்த் தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 70-வது திருத்தலமாகும். மாணிக்கவாசகரும் கீர்த்தித் திருவகவலிலும், திருக்கோவையாரில் 268-வது பாடலிலும் இத்தலத்தைக் குறித்துள்ளார். இஃது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பிலும் சிறந்து விளங்குகிறது. இத்தலம் ஸ்கந்தபுராணம், பிரும்மாண்டபுராணம், ஆக்நேயபுராணம் ஆகிய வடமொழி நூல்களில் மிகவும் சிறப்புடன் போற்றப்பட்டுள்ளன. பாவங்களை ஏற்று அகற்றும் கங்கா நதியானவள் தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் வைத்து மீதி 999 கலைகளுடன் இத்தல தீர்த்தத்தில் வசிப்பதால் இத்தல தீர்த்தம் "குப்தகங்கை" என வழங்குகின்றது. தல விருட்சம் சந்தனமாகும்.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இரண்டு உள்ளன. தலபுராணங்கள் வடமொழியிலும், தமிழிலும் உள்ளன. தமிழில் தலபுராணம் பாடியவர் களந்தைக் குமரன் ஆவார். சிவராமசுந்தரம் பிள்ளை பாடிய மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் உள்ளது. இராமலிங்க சுவாமிகள் பாடலும், முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனையும் உள்ளன. தருமை குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தர் சிவபோகாசாரத்தில் முத்தித் தலங்களில் ஒன்றாக இதனைக் குறித்தருளுகிறார்.

இத்தலத்தில் 27 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுளன. பிற்கால சோழர்கள் கல்வெட்டுகள் ஏழும், பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் ஏழும், நாயக்கர்கள் கால கல்வெட்டு ஒன்றும், ஏனைய பொது. கல்வெட்டுக்களில் முறையே - குலோத்துங்கச் சோழவள நாட்டில் பனையூர் நாட்டில் ஸ்ரீவாஞ்சியம் என்ற குறிப்பு உள்ளது. இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது. விற்பனை நில தானம், வரி தள்ளுபடி முதலிய தகவல்கள் உள்ளன.


போன்:  
+91-4366 291 305, 94424 03926, 93606 02973.

அமைவிடம் மாநிலம் :


தமிழ் நாடு கும்பகோணத்தில் இருந்து 28 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக நன்னிலம் செல்லும் சாலை வழியில் உள்ள அச்சுதமங்கலம் என்ற ஊரிலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருவாரூர், நன்னிலம் ஆகிய ஊர்களில் இருந்தும் திருவாஞ்சியம் அடைய முடியும். அருகிலுள்ள பெரிய ஊர் நன்னிலம். நன்னிலத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது.
இத்தலத்தில் யமதர்மனுக்கு தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சம்.
குப்தகங்கை தீர்த்தம்
எமனுக்கே பாவவிமோசனம் தந்த தலம்
இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக