இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கடந்த மார்ச் முதல் LOCKDOWN என்ற பெயரிலும், ஜூன் முதல் UNLOCK என்ற பெயரிலும் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் வைரஸ் தொற்றைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இருப்பினும் வைரஸ் பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட முடியவில்லை. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் 32,31,754 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 24,67,252 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். அதேசமயம் 59,612 பேர் பலியாகியுள்ளனர். 7,04,322 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கி ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சில நாடுகள் வைரஸ் தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டு வந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். உலகின் நன்மைக்காக பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இந்தியாவின் பங்கும் உண்டு. நமது நாட்டைப் பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. நாளுக்கு நாள் கோவிட்-19 பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
அமலுக்கு வந்த ஊரடங்கு
இந்த எண்ணிக்கையில் பல்வேறு புதிய உச்சங்களைத் தொட்டு மக்களுக்கும், அரசிற்கும் அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் பேரில் உரிய தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் LOCKDOWN என்ற பெயரில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. பல்வேறு தொழில்களும் முடங்கி பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.
படிப்படியாக தளர்வுகள் அறிவிப்பு
இதனைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் முதல் UNLOCK என்ற பெயரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது UNLOCK 3.0 உத்தரவுகள் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கின்றன. இந்த சூழலில் UNLOCK 4.0 தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று கூறப்படுகிறது. இதில் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும் மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் அறிவுறுத்தலின் பேரில் தளர்வுகள் அறிவிக்கப்படக்கூடும்.
UNLOCK 4.0 அறிவிப்பு எப்போது?
அதன்படி, புறநகர் ரயில்கள், தனித்திருக்கும் திரையரங்குகள், அசெம்பளி ஹால்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவற்றை செயல்படுத்த அனுமதிக்குமாறு மாநில/ யூனியன் அரசுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் படி, UNLOCK 4.0 உத்தரவு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
புதிதாக என்னென்ன அறிவிப்புகள்?
இதில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் முழுவதுமாக முடக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதில் தற்போதைய நடவடிக்கைகள் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சாரம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்த தொடர்ந்து தடை விதிக்கப்படக்கூடும். பயணக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தனியாகவும், குழுவாகவும், சரக்குகளைக் கொண்டு செல்லவும் எந்தவித தடையுமில்லை. இதுதொடர்பாக அனைத்து மாநில/ யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு
இதனை பல்வேறு மாநிலங்களும் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளன. அதேசமயம் ஹாட்ஸ்பாட் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளுக்கு இ-பாஸ் உள்ளிட்ட எந்தவித அனுமதியுமின்றி மக்கள் சென்று வரலாம் என்று அறிவிக்கப்படலாம். உள்நாட்டு விமானப் போக்குவரத்து, பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தும் பல்வேறு மாநிலங்களில் செயல்படத் தொடங்கியுள்ளன. இது உரிய சுகாதார நடவடிக்கைகளுடன் மேலும் விரிவுபடுத்தப்படக்கூடும். வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து புறநகர் ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ சேவைக்கு அனுமதி?
இதேபோல் மெட்ரோ சேவைக்கு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது. இதனை படிப்படியாக தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மெட்ரோ ரயில் பயணத்திற்கு டோக்கன்கள் வழங்கப்படாது. அதற்குப் பதிலாக கார்டுகளைப் பயன்படுத்தி தொடர்பற்ற டிக்கெட் முறை செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மதுபானக் கடைகள் முழுவதுமாக திறக்கப்பட்டு வாங்கிச் செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்படலாம். ஆனால் பார்கள் திறக்கப்பட வாய்ப்பில்லை. மேலும் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளும் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
தொடரும் சுகாதாரக் கட்டுப்பாடுகள்
உடல் வெப்பநிலையை பரிசோதித்து அனுமதித்தல், போதிய சரீர இடைவெளியைப் பின்பற்றுதல், குறைவான எண்ணிக்கையில் நபர்களை அனுமதித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் ஹால்கள், ஆடிட்டோரியங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புண்டு. சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வண்ணம் விருந்தினர் அரங்குகளில் 50 சதவீத எண்ணிக்கையில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படலாம். மேலும் தங்கும் விடுதிகள் திறக்கவும் அனுமதி அளிக்க வாய்ப்புண்டு. பள்ளி, கல்லூரிகள் திறப்பைப் பொறுத்தவரை தற்போதைக்கு வேண்டாம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் கல்வியே சரி
எனவே ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்த தொடர்ந்து ஊக்குவிக்கப்படும். அதேசமயம் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களை மட்டும் திறக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதேபோல் பொழுதுபோக்கு பூங்காக்கள், மல்டிபிளக்ஸ் போன்றவற்றிற்கும் அனுமதி அளிக்க வாய்ப்பில்லை. சர்வதேச விமான பயணங்களைப் பொறுத்தவரை வந்தே பாரத் மிஷன் மூலம் தற்போதைய சேவை தொடரும். இதில் புதிதாக எந்தவித மாற்றங்களும் செய்யப்படாது என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக