Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 16 செப்டம்பர், 2020

3,000 இந்தி நாவல்களுக்கு உயிர் கொடுத்த தமிழக ரயில்வே அதிகாரி!

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு பிரதானமாக இருக்கும் நிலையில், இந்தி புத்தகங்களுக்கு தமிழக அதிகாரி உயிரூட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இருமொழிக் கல்வி தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது புதிய கல்விக் கொள்கை என்ற வடிவில் காலடி எடுத்து வைக்கும் முயற்சித்தாலும் அனுமதிக்க யாரும் தயாராக இல்லை. சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரியாத அதிகாரி ஒருவர், இந்தி தெரியாத காரணத்தால் கனிமொழி எம்.பியை பார்த்து நீங்கள் இந்தியரா? என்று கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரயில்வே அதிகாரியாக பணியாற்றச் சென்ற சஞ்சய் குமார் என்ற நபர் 3,000 இந்தி நாவல்களுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஃபைரோஸாபாத் மாவட்டத்தில் உள்ள துண்ட்லா ஜங்ஷனில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள அறை ஒன்றில் ஏராளமான புத்தகங்கள் இறைந்து கிடந்தன. அவற்றில் பல புத்தகங்கள் தூசு நிறைந்தும், கரையான்களால் சேதமடைந்தும் காணப்பட்டன.

இவை சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. குறிப்பாக நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் எழுதிய “காந்திஜி கி டென்”, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ”தக் கார்”, ஆச்சார்யா சதுர்சென் எழுதிய “தேவாங்கனா” உள்ளிட்ட நூல்கள் அடங்கும்.

ஊரடங்கு நாட்களில் இந்த புத்தகங்களை சேகரித்து சக ஊழியர்களுடன் சேர்ந்து தங்கள் சொந்த செலவில் அவற்றை சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக ரூ.75,000 செலவிட்டுள்ளனர். ஒன்றரை மாத கடின உழைப்பால் புத்தகங்கள் உயிர்பிக்கப்பட்டுள்ளன.

இதைப் பற்றி தகவலறிந்த பிரயாக்ராஜ் மண்டல ரயில்வே மேலாளர் அமிதாபா, புதுப்பிக்கப்பட்ட புத்தகங்களுக்காக நூலகம் ஒன்றை ஏற்படுத்தி தந்துள்ளார். இது தற்போது ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக