
டிக்டாக் உடனான மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் டிக்டாக் நிறுவனத்துடன் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிக்டாக், வீசாட் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை
இந்தியாவை அடுத்து அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட உத்தரவை குறித்து பார்க்கலாம்.
சீன செயலியான டிக்டாக்கிற்கு தடை
அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்றவைகள் செயலி மூலமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்ள முடியும். இதுபோன்ற அச்சுறுத்தல் காரணமாக சீன செயலியான டிக்டாக்கிற்கு தடை விதித்துள்ளதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட்டால் தடை தொடராது
அமெரிக்க உத்தரவுபடி டிக்டாக் செயலியை அதன் தாய் நிறுவனமான சீனாவின் பைட்டான்ஸ் 90 நாட்களில் அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட்டால் தடை தொடராத என்பதாகும். அமெரிக்க நிறுவனத்திடம் விற்காதபட்சத்தில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும்.
மைக்ரோசாப்ட் வால்மார்ட்கைகோர்த்து முயற்சி
டிக்டாக் அமெரிக்க உரிமத்தை வாங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் டிக்டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கைகோர்த்து முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் உத்தரவின்படி சீன செயலியின் உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான காலக்கெடுவாக செப்டம்பர் 15 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த தினம் வரை அதுகுறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் காலக்கெடுவை நீட்டிக்கவில்லை. செப்டம்பர் 15-க்கு பிறகு டிக்டாச் செயலிக்கு காலக்கெடு நீட்டிப்பு இருக்காது என கூறினார்.
மைக்ரோசாப்ட், ஆர்க்கிள் நிறுவனமிடையே கடும் போட்டி
டிக்டாக் நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட், ஆர்க்கிள் நிறுவனமிடையே கடும் போட்டி நிலவியது. இதில் மைக்ரோசாப்ட் பின்வாங்கவே பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலியை ஆரக்கிள் வாங்குவதுதான் சரி எனவும், ஆரக்கிள் நிறுவனத்துக்குதான் டிக்டாக்கை நிர்வகிக்கும் திறன் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். 100 சதவீதம் தேசிய பாதுகாப்பு இருக்க வேண்டும். தற்போது தான் எதையும் கையொப்பமிடத் தயாராக இல்லை ஒப்பந்தத்தை முதலில் காண வேண்டும் என டிரம்ப் குறிப்பிட்டார்.
மதிப்பாய்வு செய்தபிறகே கையெழுத்திடப்படும்
இதுதொடர்பாக ஆரக்கிள் டிக்டாக் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்களின் தரவினை ஆரக்கிள் நிறுவனத்திடம் டிக்டாக் நிறுவனம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ஒப்பந்தம் குறித்த விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. அதேபோல் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்பட்சத்தில் அதை மதிப்பாய்வு செய்தபிறகே கையெழுத்திடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக