Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 28 செப்டம்பர், 2020

செம்பாக்கம் செம்புகேசுவரர் - வடதிருவானைக்கா

 sembakkam Vada Thiruvanaika, vada thiruvanaikaval,செம்பாக்கம்,வடதிருவானைக்கா,ஈசனை  தேடி எனது பயணங்கள் ... ...:::குமரேசன்,Shiva Temples of Tamilnadu - Paadal  Petra Sivasthalangal - An Introduction ...

இறைவர் திருப்பெயர் : செம்புகேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : அகிலாண்டேஸ்வரி.

தல வரலாறு:

திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சம்புகேசுவரர் திருத்தலத்தை ஒத்திருப்பதால் வடதிருவானைக்கா என வழங்கப்படுகிறது. 

முற்காலச் சோழன், 63 நாயன்மார்களில் ஒருவரான செம்பியன் கோட்செங்கட் சோழ நாயனார் கட்டிய சம்புகேஸ்வரர் ஆலயம், (1700 வருடங்கள் பழமையானது) திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில், ஆறு கிலோமீட்டர் தொலைவில், இடப்புறமாயுள்ள சாலையில் சற்றே தள்ளி , அழகிய வயல் வெளிகளையும், வனப்பகுதியையும் சிறுசிறு குன்றுகளையும் உள்ளடக்கிய, இயற்கை அழகுடன் திகழும் செம்பாக்கம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. 

முருகப்பெருமான் சூரனை சம்மாரம் செய்தபோது சிரம் விழுந்த இடம் சிரம்பாக்கமாகும். சிரம்பாக்கம் என்பது மருவி செம்பாக்கம் என வழங்கலாயிற்று எனக் கூறப்படுகிறது. ஆயினும் சிலர், சோழ மன்னர்கள் செம்பியன் என்று அழைக்கப்படுவதால், சோழ மன்னனான கொச்செங்கனார் கட்டியதால், ‘செம்பியன் பாக்கம்’ என அழைக்கப்பட்டுப் பின்னர் செம்பாக்கம் என்றானது என்கின்றனர்.

இம் மன்னனின் பிறப்பு மிகவும் வியக்கத்தக்கது. கோச்செங்கணாரது தாய் சோழ அரசி கமலாவதிக்குப் பிரசவ வலி ஏற்பட்ட போது அரச ஜோதிடர்கள் இந்தக் குழந்தை இன்னும் சிறிது தாமதமாக பிறந்தால் உலகம் போற்றும் மாமன்னனாக இருப்பான அரசி, நல்ல நேரம் வரும்வரை தன்னை தலைகீழாகக் கட்டி, கால்களையும் சேர்த்துக் கட்டித் தொங்க விட ஆனையிட்டாள். 

 நல்ல நேரம் வந்ததும் அவிழ்த்து விடப்பட்ட அரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அரசி இறந்துவிட்டார். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டதனால் பிறந்த இக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. இப்படிச் சிவந்திருந்த கண்களைப் பெற்ற இக்குழந்தைக்குக் 'கோச்செங்கண்' எனப் பெயர் சூட்டினர்.

முன்னொரு காலத்தில், காவிரி நதிக்கரையில் ஒரு சோலையில் வெண் நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தை ஒரு வெள்ளை யானை பூஜித்து வந்ததாம். தும்பிக்கையினால் தண்ணீர் சுமந்து வந்து, பூக்களை கொய்து வந்து சாத்தி வணங்கி வந்ததாம். அதே வேளை ஒரு சிலந்தியானது, மரத்தின் இலைகள் ஈசனின் மேல் விழாமலிருக்கத் தன் வலைநூலால் பந்தலிட்டுக் காத்து வந்ததாம். தான் பூசித்து வந்த இடத்தில் சிலந்தியின் கூட்டை கண்டு அதனை அசுத்தம் என யானை அழித்து விடுமாம். சிலந்தி மீண்டும் சளைக்காமல் வலை பின்னிவிடுமாம். இவ்வாறாகப் பல நாட்கள் நடந்து வந்ததாம். 

தான் கட்டிய பந்தலை அழிப்பது யார் என பார்க்க சிலந்தி பூச்சி மறைந்திருந்து பார்த்து, யானை என்று அறிந்து கோபம் கொண்டதாம். உடன் அது யானையைக் கொல்ல நினைத்து, யானையின் துதிக்கைக்குள் நுழைந்து கடித்ததாம். துன்புற்ற யானை துதிக்கையைப் பலமுறை தரையில் ஓங்கி அடித்துச் சிலந்தியைக் கொன்றதாம். யானையும் சிலந்தியின் விஷத்தால் மாண்டதாம். ஒன்றுக்கொன்று சினம் கொண்டிருந்தாலும், மூலகாரணம் இருவருக்குள்ளும் இறைவன்பால் இருந்த பக்திதான் என்பதால் உமையொருபாகன் காட்சி தந்து திருவருள் புரிந்தாராம். 

யானை சிவபதம் அடைந்ததாம். சிலந்தி சோழவம்சத்தில் அரசனாக பிறந்ததாம். இரண்டுமே சிவபூசை செய்தாலும், சிலந்தி யானையை கொல்ல முதலில் நினைத்ததால் அது மீண்டும் பிறக்க நேரிட்டதாம். ஆயினும் முற்பிறப்பில் செய்த சிவத்தொண்டினால் மீண்டும் சிவத்தொண்டு செய்யும் பேறு கிட்டியதாம். சோழ அரசனாகப் பிறந்த அந்த சிலந்தியே இந்தக் கோச்செங்கணாராம். முற்பிறப்பின் உணர்வினாலும், யானையின் மீதுள்ள சினத்தினாலும் யானை புகாதவாறு குன்றுகளின் மீதும், கருவறைக்குச் செல்ல மாடம் போன்ற குறுகலான வழியையுமுடைய பல சிவாலயங்களைக் கட்டினான் அவன். இவ்வாறு அவன் கட்டிய கோயில்கள்தான் மாடக்கோயில்கள் எனப் பிற்காலத்தில் வழங்கப் பெற்றன.

புவியாண்ட மாமன்னன் கோச்செங்கட் சோழன்தான் இப்படியான மாடக்கோவில்களைக் கட்டிய முதல் மன்னன். இவன் யானைகள் நுழையாதபடி 70 சிவாலயங்களையும் மற்றும் 3 திருமால் கோவில்களையும் கட்டிய பெருமை பெற்றவன். மேலும் அதிக சிவன் கோவில்களைக் கட்டிய மன்னன் என்ற பெருமையையும் உடையவனாவான்.

தமிழகத்தில் உள்ள கோவில்களை கூடக்கோவில், கொடிக்கோவில், மாடக்கோவில் என மூன்று வகையாகப் கூறலாம். இவற்றில் மாடக்கோவில்களின் அமைப்பு மற்ற கோயில்களைவிட வேறுபட்டிருக்கும். மற்ற கோவில்களில் சுவாமி சன்னதி நுழைவு வாயில்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆனால் மாடக்கோவில்களின் நுழைவு வாயில்கள் குறுகலாகவே அமைக்கப்பட்டிருக்கும். இப்படியான கோயில்களுக்குள் யானைகள் நுழைந்து விடக்கூடாது என்பதே இதன் காரணமாம்.

திருமுறை ஆசிரியரான கண்டிராத்தித்த சோழர், மற்றும் விக்கிரம சோழர், செம்பியன் மாதேவி, விஜயநகர அரசர் ஆகியோரால் திருப்பணிகள் செய்யப்பட்ட நீர் அகழிக் குளத்தின் மையத்தில் அமைந்துள்ளது சிவாலயம். தற்போது சுற்றிலும் இந்த நீர் அகழி காணப்படாவிட்டாலும், ஒருபுறத்தே காணப்படுகிறது.

இங்கே ஆண்டுதோறும் சூரசம்மார விழா நடத்தப்படுவதோடு, திருப்போரூர் முருகப்பெருமான் திருக்கோயில் கொடியேற்றுவிழா ஆண்டுதோறும் இவ்வூர் மக்களால் நடத்தப்பட்டு வருகிறது. வீர சைவ மரபினரும், செங்குந்தர் மரபினரும் அதிகமாக வாழும் இவ்வூர் குன்றின் மேல் செவ்வேலால் அருள்புரியும் முருகப்பெருமான், சூரனை சம்மாரம் செய்ய திருப்போரூர் செல்லும் வழியில் நவவீரர்களுக்குக் கட்டளையிட்டதாக வரலாறு கூறுவதாலும் இவ்வூர்மக்கள் சைவ நெறியில் தழைத்து ஆன்மீக பற்று உடையவர்களாக விளங்குகிறார்கள்.

இப்புண்ணிய திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தல விருட்சம் போன்றவற்றில் திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சம்புகேசுவரர் திருத்தலத்தை ஒத்திருப்பதால் வடதிருவானைக்கா என்றும் உத்தரசம்புகேசுவரம் என வழங்கப்படுகிறது. இவ்வாலயம் சென்று வழிபட்டால் பஞ்சபூதத் தலங்கள், ஐந்து சபை நடராசர் திருத்தலங்கள் மற்றும் ஆறுபடை வீட்டு முருகன் திருத்தலங்களுக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்று ஆலயத்தின் தலபுராணம் கூறுகிறது. திருமணத் தடைகள், தீராப்பிணிகள் நீக்கும் தலமாகவும் உள்ளது எனக் கூறப்படுகிறது.


சிறப்புக்கள் :

63 நாயன்மார்களில் ஒருவரான செம்பியன் கோட்செங்கட் சோழ நாயனார் கட்டிய சம்புகேஸ்வரர் ஆலயம் .

வடதிருவானைக்கா என வழங்கப்படுகிறது.

திருமணத் தடைகள், தீராப்பிணிகள் நீக்கும் தலமாகவும் உள்ளது எனக் கூறப்படுகிறது.



போன்:

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

இத்திருத்தலம் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டு வட்டம்,திருப்போரூர்-செங்கற்பட்டு வழித்தடத்தில், திருப்போரூரிலிருந்து 7-வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.

திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சம்புகேசுவரர் திருத்தலத்தை ஒத்திருப்பதால் வடதிருவானைக்கா என வழங்கப்படுகிறது.

1700 வருடங்கள் பழமையானது.

63 நாயன்மார்களில் ஒருவரான செம்பியன் கோட்செங்கட் சோழ நாயனார் கட்டிய சம்புகேஸ்வரர் ஆலயம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக