Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 14 செப்டம்பர், 2020

அலட்சியத்திற்கு கிடைத்த பரிசு

 ஒரு நாள் முல்லா அயல் ஊருக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காகவே ஒரு பொது குளியல் அறை ஒன்று இருந்தது. முல்லா அழுக்கான ஆடையுடன் அங்கே குளிப்பதற்காகச் சென்றார். அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்காமல் அலட்சியமாக நடத்தினர். முல்லாவை சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவசரப்படுத்தினர்.

 குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதைக் கண்ட வேலைக்காரர்கள், இவர் பெரிய செல்வந்தர் என்பதை முன்னதாகவே தெரிந்து அவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருந்தால் இன்னும் நிறைய தங்கக் காசுகள் கொடுத்திருப்பார் என்று நினைத்தனர்.

 இரண்டு நாட்கள் கழித்து முல்லா மறுபடியும் அந்தக் குளியல் அறைக்குக் குளிக்கச் சென்றார். வேலைக்காரர்கள் முல்லாவை அடையாளம் கண்டு கொண்டு போட்டி போட்டுக் கொண்டு முல்லா தேய்த்துக் கொள்ள நறுமணப் பொடிகள், வாசனைப் பன்னீர், உடல் துவட்ட உயர்தரமான துவாலை, உடலில் பூசிக்கொள்ள வாசனை திரவியங்கள் கொடுத்து ராஜ உபசாரம் செய்தனர்.

 அன்றைய தினம் முல்லா தங்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஐந்தைந்து பொற்காசுகளாவது நிச்சயம் அன்பளிப்பாகக் கொடுப்பார் என்று வேலைக்காரர்கள் எதிர்பார்த்தனர். முல்லா ஆளுக்கு ஒரு செப்புக் காசு மட்டும் தான் கொடுத்தார்.

இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம் செய்ததற்கு இந்தச் செப்புக்காசுதானா பரிசு? என்று கேட்டனர். முல்லா, அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த பொற்காசு இன்று நீங்கள் செய்த உபசாரத்திற்கான பரிசு. இன்று கொடுப்பதோ அன்று நீங்கள் என்னை அலட்சியப்படுத்தியமைக்காகக் கொடுத்த பரிசு என்று கூறியவாறே குளியலறையை விட்டு வெளியே நடந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!