சுசுகி நிறுவனத்தின் பைக்குகளில் விரைவில் அட்டகாசமான இணைப்பு தொழில்நுட்ப வசதி இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
நாட்டின் மிகவும் முக்கியமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சுசுகி மோட்டார்சைக்கிள், கடந்த 7ம் தேதி அன்று அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆகிய இரு ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ப்ளூடூத் இணைப்பு வசதிகொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல்களே அதில் சேர்க்கப்பட்ட புதிய தொழில்நுட்ப வசதியாகும்.
சுசுகியின் எந்தவொரு ஸ்கூட்டரும் இந்த வசதியைப் பெறாமல் இருந்தநிலையில், முதன் முதலாக அக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆகிய ஸ்கூட்டர்களில் சுசுகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தனது பிற பிரபலமான இருசக்கர வாகனங்களிலும் புதிய புதிய தொழில்நுட்பங்களையும் அது சேர்க்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பைக்வேல் எனும் ஆங்கில தளம் வெளியிட்டுள்ள செய்தியில், சுசுகி நிறுவனம், விரைவில் அதன் மோட்டார்சைக்கிள்களிலும் ப்ளூடூத் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியுள்ளது. குறிப்பாக, ஜிக்ஸெர் மற்றும் இன்ட்ரூடர் க்ரூஸர் பைக்குகளில் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளாக ஜிக்ஸெர் வரிசையில் இருக்கும் இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. இவை கடந்த சில மாதங்களாக, முந்தைய காலங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனைப் பெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக பூட்டுதல் நடைமுறையில் இருந்த காலத்தில்கூட சுசுகி ஜிக்ஸெர் நல்ல விற்பனை எண்ணிக்கையையேப் பெற்றது.
இம்மாதிரியான சூழ்நிலையில் விரைவில் ப்ளூடூத் இணைப்பு வசதி ஜிக்ஸெர் வரிசை பைக்குகளில் இடம்பெற இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் அதன் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே நல்ல விற்பனை விகிதத்தைப் பெற்றும் ஜிக்ஸெர் பைக்குகள், இந்த வசதியைப் பெறுவதன் மூலம் கூடுதல் விற்பனை அதிகரிப்பைப் பெறலாம் என யூகிக்கப்படுகின்றது.
ஜிக்ஸெர் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகள் குறைந்த விலையில் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டவையாக காட்சியளிக்கின்றன. மேலும், இந்த பைக்கின் தோற்றம் சற்றும் கவர்ச்சிக்கு குறையாமல் காட்சியளிக்கின்றது. இதுபோன்ற எண்ணற்ற சிறப்புகளை அப்பைக் பெற்றிருப்பதன் காரணத்தினாலயே இந்தியர்கள் நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர்.
தற்போது, ப்ளூடூத் வசதியுடன் களமிறக்கப்பட்டிருக்கும் ஸ்கூட்டர்களின் விற்பனையை சுசுகி நிறுவனம் கூர்ந்து கவனித்து வருகின்றது. இவற்றிற்கான வரவேற்பு எப்படி இருக்கின்றது என்பதைப் பொருத்தே பைக்குகளில் ப்ளூடூத் இணைப்பு வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
ப்ளூடூத் இணைப்பு வசதியை பெறுவதன் மூலம் பல விதமான தகவல்களை நம்மால் எளிதில் பெற முடியும். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே நமது செல்போனிற்கு ஏதேனும் அழைப்பு வந்தால், அதை ப்ளூடூத் வழியாக இணைக்கப்பட்டிருக்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் காட்டிக் கொடுக்கும். மேலும், குறுஞ்செய்தியைக்கூட எளிதில் படிக்க முடியும்.
இதுதவிர செல்போனின் சார்ஜ் அளவு, நேவிகேஷன், வாட்ஸ்ஆப் அலர்ட் உள்ளிட்ட ஏராளமான வசதிகளைப் பெற முடியும். இத்தனை வசதிகள் பைக்கில் இருந்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள். எனவேதான், இந்த வசதி சுசுகி பைக்கில் இடம்பெறுமேயானால் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என உறுதியாக நம்பப்படுகின்றது. ஆனால், இதனை தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஸ்கூட்டர்களின் வரவேற்பைப் பொறுத்தே சுசுகி, பைக்குகளுக்கு வழங்க இருக்கின்றது.
ரைட் கனெக்ட் எனும் செல்போன் செயலி வாயிலாகவே பைக்-செல்போன் இணைப்பு வசதியை சுசுகி வழங்குகின்றது. அவ்வாறு இணைக்கும் பட்சத்தில்தான் மேற்கூறிய தகவல்கள் மற்றும் இன்னும் பல வசதிகளை நம்மால் பெற முடியும். இத்துடன், கூடுதலாக பைக்கைக் கடைசியாக எங்கு பார்க் செய்தோம் என்கிற தகவலைக் கூட இந்த இணைப்பு வசதி மூலம் செல்போனிலேயே கண்டறிய முடியும்.
மேலே பார்த்த அனைத்து வசதிகளையும் தற்போது புதிதாக விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கும் அக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆகிய ஸ்கூட்டர்கள் பெற்றிருக்கின்றன. கார் மற்றும் உயர் ரக வாகனங்களில் மட்டுமே காணப்பட்டு வந்த இந்த வசதி வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மயமாதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வழக்கமான இரு சக்கர வாகனங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாகவும் ஆரம்பித்துவிட்டது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புதிய இணைப்பு தொழில்நுட்ப வசதியை அதன் தயாரிப்புகளில் வழங்க ஆரம்பித்துவிட்டன. இந்த வசதி மூலம் வாகன ஓட்டி அல்லது பயனர் பற்பல தகவல்களைப் பெற மற்றும் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
சுசுகியின் மோட்டார்சைக்கிள்களில் இந்த வசதி இடம்பெறுவதற்கு இன்னும் சில காலங்கள் இருப்பதால், அது அறிமுகமாகும்போது மேற்கூறியதைவிட கூடுதல் சிறப்பு வசதிகளைக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிய வண்ணமே இருக்கின்றன.
இதனை வாகன நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்கு மிகவும் தாராள மனதுடன் அதன் தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்தவகையிலேயே விரைவில் இணைப்பு தொழில்நுட்ப வசதி சுசுகியின் இன்ட்ரூடர் க்ரூஸர் மற்றும் ஜிக்ஸெர் வரிசை பைக்குகளில் இடம்பெற இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக