ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது அங்கிருந்த பிராணிகளை தன் உணவுக்காக தொடர்ந்து வேட்டையாடியது. இதனால் காட்டில் உள்ள பிராணிகள் பயத்துடனேயே வாழ்ந்து வந்தன. நாளுக்கு நாள் சிங்கத்தின் தொல்லை அதிகரித்தது. அதனால் எல்லாப் பிராணிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தன.
சிங்கத்திடம் சென்று, நீங்கள் சாப்பிடுவதற்காக எங்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் உங்கள் இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். இனிமேல் வேட்டையாடுவதற்கு வெளியில் வரவேண்டிய அவசியம் இல்லை என்றது. அதற்கு சிங்கமும் சரி என்றது.
முயல் செல்ல வேண்டிய முறை வந்தது. நண்பர்களே! எனக்கு சற்று அவகாசம் தாருங்கள். எனது தந்திரத்தால் நீங்களும் சிங்கத்தின் அநியாயத்திலிருந்து தப்ப வழி பிறக்கும். வருங்கால சந்ததிகள் காட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்றது.
பிறகு முயல்; தாமதமாகச் சிங்கம் இருக்கும்; இடத்திற்கு சென்றது. சிங்கம் முயலை நோக்கி அட அயோக்கிய பயலே, அறிவு கெட்டவனே ஏன் இவ்வளவு தாமதம்? என்று கேட்டது. முயல், அரசே நான் வரும் வழியில் என்னை இன்னொரு சிங்கம்; தாக்க வந்தது. அதனிடம் இருந்து நான் தப்பித்து வர தாமதமாகி விட்டது என்றது.
என்னைப்போல் ஒருவனா? இந்த காட்டிற்கு நான் மட்டும் தான் ராஜாவாக இருக்க வேண்டும். முதலில் அவனை அழித்தால் தான் நமக்கு தினமும் சரியாக உணவு கிடைக்கும் என்று சிங்கம் நினைத்தது. அதனால் புதிதாக காட்டுக்குள் வந்திருப்பவனை கொல்ல நினைத்து முயலிடம் அவன் இருக்கும் இடத்தைக் காட்டு, முதலில் அவனைக் கொன்றுவிட்டுப் பிறகு உன்னை சாப்பிடுகிறேன் என்றது.
முயல் தந்திரமாக சிங்கத்தை தூரத்தில் தெரியும் கிணற்றுக்கு அழைத்துச் சென்றது. இந்த கிணற்றில் தான் அந்த சிங்கம் பதுங்கியிருக்கிறது என்றது. சிங்கம் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தது. அதில் சிங்கத்தின் முகம் தெரிந்தது. அது தன்னுடைய முகம் தான் என்று அறியாத சிங்கம் தன்னுடைய எதிரி என்று நினைத்து அவனை அழிக்க நினைத்து கிணற்றுக்குள் குதித்தது.
சிங்கம் கிணற்றுக்குள் விழுந்த பின் முயல் மற்றப் பிராணிகளை நோக்கி சந்தோஷத்தால் துள்ளிக் குதித்து ஓடியது. சிங்கம் இறந்து போனது.
மற்ற பிராணிகளிடம் சென்று நம்முடைய எதிரி அழிந்து விட்டான் என்று சந்தோஷத்தில் கத்திச் சொன்னது. முயலின் இச்செய்தியைக் கேட்ட பிராணிகள் அனைத்தும் ஒன்று கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. காட்டு மிருகங்கள் அனைத்தும் முயலுக்கு மரியாதை செய்தன. அனைத்து மிருகங்களும் நிம்மதியாக வாழ்ந்தன.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக