உத்தரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: உச்ச நீதிமன்றத்தில் மனு
புதிய பொடியன்
திங்கள், அக்டோபர் 05, 2020
உத்தரபிரதேசத்தில் குடியரசுத்
தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ்
பகுதியில் 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால்
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில்,
சிகிச்சை பெற்று வந்த அப்பெண் பரிதாபமாக சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
இதையடுத்து, இறுதிச் சடங்கிற்காக அப்பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல்
போலீசாரே எடுத்துச் சென்று அவசர அவசரமாக நள்ளிரவில் தகனம் செய்துள்ளனர். இந்த
விஷயத்தில் போலீசார் தங்களை கட்டாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்
குற்றம்சாட்டியுள்ளனர்.
பல்ராம்பூர் பகுதியில் 22 வயதான மற்றொரு படியலினப் பெண் கூட்டுப் பாலியல்
வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அதேபோல், அம்மாநிலத்தில் 17 வயதுடைய மேலும் ஒரு
பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில்
விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்களுக்கு அரசியல் கட்சியினர், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள்,
பொது மக்கள் என ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச
மாநிலத்தில் பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவது
அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரி உச்ச
நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பாலியல்
வன்கொடுமைகள் புகார் கொடுப்பவர்களை தொடர்ச்சியாக அரசு அதிகாரிகளே துன்புறுத்துவது
என அங்கு நிலைமை கைமீறி போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக