ஒரு ஆமை ஓடைக் கரையில் இருந்த ஒரு பொந்தில் வசித்து வந்தது. அதற்குப் பக்கத்தில் உள்ள புற்றில் ஒரு நாகம் குடியிருந்தது. ஆமையும் நாகமும் நண்பர்கள். இரண்டும் சேர்ந்தே இரை தேடப் போவதும் சேர்ந்தே இருப்பிடத்திற்குத் திரும்புவதுமாக இருந்தன.
ஒரு நாள் காலை ஆமையும் நாகமும் ஓடைக்கரை புல்வெளியில் இரை தேடிக் கொண்டிருந்தன. அப்போது சற்று தூரத்தில் மனிதக் காலடி ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தது ஆமை. ஒரு மனிதன் கையில் கம்புடன் வந்து கொண்டிருக்கிறதைப் பார்த்த ஆமை நாகத்தைப் பார்த்து ஆபத்து வேகமாக ஓடி மறைந்து கொள் என்றது. ஏன் என்று கேட்டது நாகம். அதோ ஒருவன் கையில் கம்புடன் வந்து கொண்டிருக்கிறான். அவன் நம்மைப் பார்த்தால் அடித்துக் கொன்றுவிடுவான் என்றது ஆமை.
பாம்பு சொன்னது ஆமையைப் பார்த்து அவனுக்கு நீ வேண்டுமானால் பயப்படலாம். நான் பயப்படமாட்டேன். என் பல்லில் கொடிய நச்சு இருக்கிறது. நான் கடித்தால் அவனுக்கு இறப்பு உறுதி. அதனால் அவன்தான் என்னைப் பார்த்ததும் பயந்து ஓடவேண்டும் என்றது நாகம்.
காலடி ஓசை, அருகில் கேட்டது. ஆமை தனது கால்களையும் கழுத்தையும் உள்ளே இழுத்துக் கொண்டு அசையாமல் கிடந்தது. அசைவு இல்லாததால் வந்தவனின் பார்வை அதன் மீது பதியவில்லை. அவனது மேலோட்டப் பார்வையில் ஓடோ அல்லது பெரிய இலைச் சருகோ கிடப்பது போல் தோன்றியது. அதனால் அவன் ஆமை கிடந்த இடத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தான்.
மெல்ல கழுத்தை வெளியே நீட்டிப் பார்த்தது ஆமை. அங்கே அருகில் வந்துவிட்ட அந்த மனிதனைப் பார்த்த நாகம், உச்...ச்..ச்.. சென்று சீறிக்கொண்டே தலையை உயர்த்தி எழும்பி படத்தை விரித்தது. அதைப் பார்த்த அவன் சட்டென்று தனது கையில் இருந்த கம்பினால் நாகத்தை அடித்தான். அந்த அடி, நாகத்தின் உடம்பில் பலமாக விழுந்தது. அய்யோ! என்று அலறிக் கொண்டே கோரைகளுக்கிடையில் புகுந்து ஊர்ந்து போனது நாகம். அவனும் நாகம் போன வழியில் தொடர்ந்து கோரைகளை விலக்கிப் பார்த்துக் கொண்டே விரைந்தான். அடிபட்ட நாகம், தப்பித்தால் போதும் என்று ஓடி புதருக்குள் இருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்துவிட்டது. பாம்பைத் தேடிப் பார்த்து அலுத்துப் போன அவன், தப்பித்து எங்கோ மறைந்துவிட்டது என்று போய்விட்டான்.
நாகத்தைத் தேடிவந்தது ஆமை. புதரைவிட்டு வெளியில் வந்த நாகம், நண்பா, அந்த மனிதன் என் முதுகில் பலமாக அடித்து விட்டான். இன்னொரு அடி விழுந்திருந்தால் நான் செத்திருப்பேன் என்றது. நல்லவேளை! தப்பித்துவிட்டாய். அது போதும். காயத்தை ஆற்றிவிடலாம் வா என்று அதற்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றது ஆமை. அன்று, வழக்கம் போல் ஆமையும் நாகமும் புல்வெளியில் இரை தேடிக் கொண்டிருந்தன. பின்னால் காலடி ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தது ஆமை. முன்பு பார்த்த அதே மனிதன் வந்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவனது கையில் கம்பு இல்லை.
நாகத்தைப் பார்த்து, நண்பா! முன்பு உன்னை அடித்த அதே மனிதன் வந்து கொண்டிருக்கிறான். அவனைப் பார்த்தால் பாம்பு பிடிக்கும் வித்தைக்காரனாகத் தெரியவில்லை. அதனால், இப்போது உன் வீரத்தைக் காட்டலாம் என்றது ஆமை. சீறிக் கொண்டே அவனை நோக்கிப் பாய்ந்தது நாகம். நடுங்கிப் போன அவன், அதனிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓடத் தொடங்கினான். அவன் ஓடுவதைப் பார்த்து, வயிறு குலுங்கச் சிரித்தன ஆமையும் நாகமும். அப்போது என்னை அடித்துக் கொல்ல வந்தவன், இப்போது என்னைக் கண்டு நடுங்கி ஓடுகிறான் என்றது நாகம். அப்போது அவனது கையில் கம்பு இருந்தது. எட்ட இருந்தே உன்னை அடித்துவிடலாம். அது, அவனுக்குச் சாதகமான நிலைமை. இப்போது அவனிடம் எந்த ஆயுதமும் இல்லை. உன்னை நெருங்கினால் கடித்துவிடுவாய். அதனால் அவன் தப்பித்து ஓடவேண்டி இருக்கிறது. இது உனக்குச் சாதகமான நிலைமை என்றது ஆமை.
நீ எல்லாமும் தெரிந்து வைத்திருக்கிறாயே என்றது நாகம். ஆம். ஒருவருக்குச் சூழ்நிலை சாதகமாக இல்லாதபோது என்னைப் போல் சுருட்டிக் கொண்டு அடங்கி இருக்கவேண்டும். சாதகமாக இருந்திடும்போது உன்னைப் போல் சீறிப் பாயவேண்டும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இதை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும் என்றது ஆமை. நீ அறிவாளிதான் என்றது நாகம். புரிந்து கொண்டால் சரிதான் என்றது ஆமை. இரண்டும் மகிழ்ச்சியுடன் சிரித்தன.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக