சென்னை பாரிஸ் கார்னரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது முருகப்பா குழுமம். 1900-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாரம்பரிய குழுமம், சுமாராக 38,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக வளர்ந்து இருக்கிறது.
பாரிஸ் சர்க்கரை, டிஐ சைக்கிள்ஸ், சோழமண்டலம் ஃபைனான்ஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், சோழமண்டலம் இன்சூரன்ஸ், கோரமண்டல் இன்ஜினியரிங், சாந்தி கியர்ஸ், கோரமண்டல் இண்டர்நேஷனல் உரக் கம்பெனி... என சுமாராக 28 வியாபாரங்களைச் செய்து வரும் ஒரு தமிழ் நாட்டு வணிக சாம்ராஜ்ஜியம்.
பொதுவாகவே தமிழகத்தில் இருந்து குறைவான கம்பெனிகளே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் எனவும் ஒரு பேச்சு உண்டு. அதிலிருந்தும் முருகப்பா குழுமம் மாறுபட்டு இருக்கிறது. இந்த முருகப்பா குழுமத்தின் 10 கம்பெனிகள், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகின்றன.
ஹோல்டிங் கம்பெனி - Ambadi Investments Ltd (AIL)
என்ன தான் முருகப்பா குழுமத்துக்குச் சொந்தமாக பல கம்பெனிகள், பல்வேறு வியாபாரங்களைச் செய்தாலும், இந்த Ambadi Investments Ltd (AIL) என்கிற கம்பெனி தான், ஹோல்டிங் கம்பெனியாக (Holding Company) இருந்து செயல்படுகிறது. எனவே, அம்பதி இன்வெஸ்மெண்ட்ஸ் கம்பெனியின் இயக்குநர் குழு முருகப்பா குழுமத்தின் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே எவரும் அம்பதி இன்வெஸ்மெண்ட்ஸ் கம்பெனியின் இயக்குநர் குழுவில் இடம் பிடிக்கவே விரும்புவார்கள்.
எம் வி முருகப்பனின் மூத்த மகள் வள்ளி அருணாசலம்
கடந்த 2017-ம் ஆண்டு வரை முருகப்பா குழுமத்தை, எம் வி முருகப்பன் அவர்கள் தலைவராக இருந்து நிர்வகித்து வந்தார். எம் வி முருகப்பன் 2017-ம் ஆண்டு மறைந்த பின், அவருடைய மூத்த மகளான வள்ளி அருணாச்சலம், அம்பதி இன்வெஸ்மெண்ட்ஸ் கம்பெனியின் இயக்குநர் குழுவில், இயக்குநராக தன்னை நியமிக்குமாறு கேட்டார். சீட் மறுக்கப்பட்டது. பிரச்சனை மெல்ல வெளி வரத் தொடங்கியது.
சட்ட ரீதியிலான நடவடிக்கைகள்
இந்த 2020-ம் ஆண்டில் தொடக்கத்தில் "என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. ஒரு சரியான தீர்வு வழங்கப்படவில்லை என்றால், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும்" எனச் சொன்னார். அதோடு தான் ஒரு பெண் என்கிற ஒரே காரணத்தால், இயக்குநர் குழுவில் இடம் கொடுக்க மறுக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தார் வள்ளி அருணாச்சலம்.
முருகப்பா குழும இயக்குநர் குழுவில் பெண்களுக்கு இடம் இல்லை
பிசினஸ் டுடே பத்திரிகையில், 28 ஜனவரி 2020 அன்று வெளியான கட்டுரையில் "23 வயது மட்டுமே நிறைவடைந்த, குடும்ப வியாபாரத்தில் எந்த முன் அனுபவமும் இல்லாத, ஒரு கல்லூரி மாணவன் (ஆண்) அம்பதி இன்வெஸ்மெண்ட் கம்பெனியின் இயக்குநர் குழுவில் நியமிக்கப்படுக்கிறார். எனக்கு 23 ஆண்டு கால பணி அனுபவமே இருக்கிறது. ஆனால் எனக்கு அம்பதி கம்பெனியின் இயக்குநர் குழு மறுக்கப்படுகிறது" எனச் சொல்லி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Nuclear Engineer
இத்தனை திடமாக தன் கருத்துக்களை முன் வைக்கும் வள்ளி அருணாச்சலம் அவர்களுக்கு, என்ன பணி அனுபவம் இருக்கிறது? வள்ளி அருணாச்சலம் அமெரிக்காவில் செட்டிலான ஒரு அணுசக்தி பொறியாளர் (Nuclear Engineer). அதே துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்கிறது அவுட் லுக் இந்தியா பத்திரிகை. உலகின் டாப் 500 கம்பெனிகளாக சொல்லப்படும் Fortune 500 கம்பெனிகள், சிலவற்றில் 23 ஆண்டு காலம் வேலை பார்த்த அனுபவம் இருக்கிறது என அவரே அவுட் லுக் இந்தியா பத்திரிகைக்குச் சொல்லி இருக்கிறார்.
8.15 சதவிகித பங்குகள்
இந்த பணி அனுபவம் போக, வேறு ஏதாவது இருக்கா? ஆம். முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரான எம் வி முருகப்பனின் மனைவி வள்ளி முருகப்பன், மூத்த மகள் வள்ளி அருணாச்சலம், இளைய மகள் வெள்ளச்சி முருகப்பன் என, இந்த மூவர் பெயரிலும் சேர்ந்து, முருகப்பா குழுமத்தின் ஹோல்டிங் கம்பெனியான, அம்பதி இன்வெஸ்மெண்ட்ஸ் கம்பெனியின் 8.15 சதவிகித பங்குகளை வைத்து இருக்கிறார்களாம்.
ஆண்டுப் பொதுக் கூட்டம்
இத்தனை பஞ்சாயத்துக்களுக்குப் பின், கடந்த 21 செப்டம்பர் 2020 அன்று, முருகப்பா குழுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், வள்ளி அருணாச்சலம் அவர்களை, அம்பதி இன்வெஸ்மெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இயக்குநராக நியமிப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தது. 91.37 % வாக்குகள் வள்ளி அருணாச்சலம், அம்பதி இன்வெஸ்மெண்ட் கம்பெனியில் இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு எதிராக பதிவானது.
நீதிமன்றம் போக நான் ரெடி
முருகப்பா குழுமத்தில் இருக்கும் பாலின பாகுபாடு தொடர்பாக வள்ளி அருணாச்சலம் ஒரு ஸ்டேட்மெண்ட் வெளியிட்டு இருக்கிறார். அதில் "எப்படியும் எங்களுக்கான நீதியைப் பெறுவோம். அதற்கு என்ன வழிமுறைகளை எல்லாம் கையாள வேண்டுமோ அவைகளை எல்லாம் கையாளுவோம். குடும்ப பிரச்சனைகளை, குடும்பத்துக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்ளத் தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் குடும்பமோ, தன் கடுமையான பழக்க வழக்கங்களை பாதுகாப்பதிலேயே கவனமாக இருக்கிறது. எங்களை நீதிமன்றம் நோக்கித் தள்ளுகிறது. இந்த முறை நாங்கள் விட மாட்டோம்" என உணர்வுப் பூர்வமாகச் சொல்லி இருக்கிறார்.
முருகப்பா குழுமம்
119 ஆண்டு பழமையான கம்பெனி, வியாபாரத்தை சரியாக செய்து நல்ல பெயர் எடுத்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், ஆண் பெண் பாகுபாடு பிரச்சனையால் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு பெண்ணை இயக்குநர் குழுவில் சேர்த்துக் கொள்வதில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்று தெரியவில்லை.
சாதித்த பெண்கள்
இந்திரா நூயி, அருந்ததி பட்டாச்சார்யா, இந்து ஜெயின், கிரன் மசும்தார், ஷிக்கா சர்மா, சுனிதா ரெட்டி, மல்லிகா ஸ்ரீனிவாசன், லட்சுமி வேனு, நிஷா கோத்ரேஜ், சாந்தி ஏகாம்பரம் என வியாபாரத் துறையில் கலக்கிக் கொண்டு இருக்கும் பல பெண்களை உதாரணமாகச் சொல்லலாம். இந்த பிரச்சனை நீதிமன்றம் செல்வதற்கு முன், முருகப்பா குழுமம் ஒரு முறைக்கு பல முறை ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக