திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உருவ தோற்றத்துடன் இருந்ததால் பெரிதும் பிரபலமானார். தோற்றத்தில் மட்டும் கலாமைப் போல் அல்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று அப்துல் கலாமின் அறிவுரைகளை மாணவர்களிடம் பரப்பி வந்தார்.
‘உடுமலை கலாம்’ எனப் பலராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஷேக் மைதீன், சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் கலாம் வேடத்திலேயே நடித்துள்ளார். " ‘சூரரைப் போற்று' படம் வெளியானதும் குடும்பத்தோடு தியேட்டர்ல போய் பார்க்கணும்" என சொல்லி வந்த உடுமலை கலாம், படம் ரிலீஸாவதற்கு முன்பே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
'சூரரைப் போற்று' படத்தை பார்த்த பலரும் உடுமலை கலாமிற்கு வாழ்த்துச் சொல்ல ஃபோன் செய்தபோதுதான், அவர் உயிரிழந்த தகவலே பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.
பள்ளி மாணவர்கள் மத்தியில் உடுமலை கலாம்பள்ளி மாணவர்கள் மத்தியில் உடுமலை கலாம்
உடுமலை கலாமின் மூத்த மகன் ஜெயிலானியிடம் பேசினோம். “அப்பா ஏழ்மையான குடும்பத்துல பிறந்து பெருசா படிக்கலைன்னாலும், கலாம் ஐயா மேலயும் அவரோட கொள்கைகள் மேலவும் தீவிர பற்றுள்ளவரா இருந்தாரு. பார்க்கிற குழந்தைங்ககிட்ட எல்லாம் ‘நான் படிக்காததால பெயின்டரா இருக்கேன்.
நீங்க நல்லா படிச்சி கலாம் ஐயா மாதிரி பெரிய ஆளா வரணும்’னு சொல்வாரு. கலாம் ஐயா மாதிரியே ஹேர்ஸ்டைலை மாத்திக்கிட்டு, மீசையை எடுத்துட்டு எங்க முன்னால ஒருநாள் வந்து நின்னாரு. நாங்களே அசந்து போயிட்டோம்.
அப்துல் கலாம் மாதிரியே இருந்ததால, அப்பா எங்க போனாலும் செல்ஃபி எடுக்க ஒரு கூட்டம் கூடிடும். சளைக்காம எல்லார் கூடவும் அப்பா போட்டோ எடுப்பார். பெயின்டர் வேலையில கிடைக்கிற காசுல குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம்னு வாங்கிக் கொடுப்பாரு.
உடுமலை கலாம்
“ஒரு தடவை உடுமலைப்பேட்டை பக்கத்துல உள்ள கணியூர் ஸ்கூலுக்கு கலாம் ஐயா வராருன்னு தகவல் தெரிஞ்சு அப்பா அங்க போனாரு. அப்பாவைப் பார்த்திட்டு அங்க இருந்த போலீஸ்காரங்க எல்லாம் திகைச்சுப் போயிட்டாங்க. ‘என்ன சார் பாதுகாப்பில்லாம நீங்க தனியா வர்றீங்க’ன்னு போலீஸார் பதற, அப்புறம்தான் அப்பா விஷயத்தைச் சொல்லியிருக்கார்.
அந்த நிகழ்ச்சி முடிஞ்சதும் கலாம் அய்யாவை அப்பா சந்திச்சார். ‘என்னப்பா என்னை மாதிரியே இருக்க. ஆச்சர்யமா இருக்கே’ன்னு அப்பாவை பார்த்து சந்தோஷப்பட்டதோட, அப்பாவோட செயல்பாடுகளையும் கலாம் ஐயா பாராட்டுனாங்க. இதற்கிடையில் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சரவணனின் இயக்கத்தில், அப்துல் கலாமின் வேடத்தில் அப்பா நடிக்க, மேலும் பிரபலமானார்.
அதன் மூலமாகவே 'சூரரைப் போற்று' திரைப்படத்திலும் நடிக்க அப்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தனக்கு ரொம்ப புடிச்ச கலாம் வேஷத்துல சினிமாவுல நடிச்சிருக்கேன்னு அப்பா சொல்லி சொல்லி சந்தோஷப்படுவாரு. ஜனவரி, தமிழ்ப் புத்தாண்டு, கொரோனான்னு படம் ரிலீஸ் ஆகாம தள்ளிப்போயிடுச்சி. ‘படம் ரிலீஸ் ஆனதும் குடும்பத்தோட போய் பார்க்கணும்’னு சொல்லிக்கிட்டே இருந்தார்.
ஆனா, கடைசி வரை அப்பாவோட ஆசை நிறைவேறாமலேயே போயிடுச்சி. ஜூலை மாசம் 17-ம் தேதி
அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்து போயிட்டாரு. இப்ப படம் ரிலீஸ் ஆனதும் அப்பா உயிரோட
இருக்காருன்னு நினைச்சு அவரை பாராட்ட நிறைய பேர் போன் பண்றாங்க.
இந்தப் பாராட்டையெல்லாம் அப்பா கேக்காமலேயே போய் சேர்ந்துட்டாருன்னு நினைக்கிறப்ப
சங்கடமா இருக்கு. 'சூரரைப் போற்று' படத்தைக் குடும்பத்தோட பார்த்தோம். கடைசி
வரைக்கும் கலாம் ஐயா மாதிரியே எங்க அப்பா வாழ்ந்து மறைஞ்சிருக்காரு” என கலங்கினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக