Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 பிப்ரவரி, 2020

தசரதன் மிதிலைக்கு வருதல்

 வில் உடைந்த சத்தம் அண்டம் முழுவதும் கேட்ட போதிலும் சீதைக்கு கேட்கவில்லை. ஏனென்றால் சீதை இராமரை நினைத்து மனமுருகி கொண்டிருந்தாள். அப்பொழுது நீலமாலை என்னும் தோழி ஓடி வந்து சீதையிடம் இராமன் வில்லை முறித்த செய்தியைக் கூறுகிறாள். அன்று விசுவாமித்திர முனிவருடன் மிதிலைக்கு வந்த இராமன் தான் வில்லை முறித்தான் என்றாள். அப்படி என்றால் நான் அன்று கன்னி மாடத்தில் இருந்து பார்த்த அந்த கார்வண்ணன் தான் வில்லை முறித்தவன் என்ற செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தாள், சீதை.

 சபையில் ஒரு பெண்மணி சீதையைப் பார்க்க இராமருக்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்றாள். இன்னொருவள் இராமரைப் பார்க்க சீதைக்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்றாள். விசுவாமித்திர முனிவர், தசரத சக்கரவர்த்தியை வரவழைத்து திருமணம் செய்வதே சிறந்த முறையாகும். ஆதலால் ஜனகர் தூதர்களிடம் ஓலையை கொடுத்து அயோத்திக்கு சென்று இங்கே நிகழ்ந்தவற்றை தசரத சக்கரவர்த்தியிடம் கூறி, அழைத்து வரும்படி கட்டளையிட்டார். ஜனக மகராஜாவின் தூதர்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து அயோத்தியை அடைந்தார்கள்.

 தசதர மன்னரை பார்த்து, தசரத சக்ரவர்த்தி அவர்களே! ஜனக மகாராஜர் தங்களுக்கு ஓர் நற்செய்தியை அனுப்பியுள்ளார். விசுவாமித்திரருடன் மிதிலைக்கு வந்த இராமர் சீதையின் சுயம்வரத்தில் நாணை இழுத்து சிவதனுசை ஒடித்து விட்டார். ஜனக மகாராஜர் தங்கள் புத்திரனின் விவாஹ அனுமதியையும், தங்களின் வரவையும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் எனக் கூறினார்கள். இராமனின் வீரச் செயல்களும், இராமனால் சிவதனுசு முறிபட்டதும் கேட்ட சக்ரவர்த்தி பெரும் மகிழ்ச்சி அடைந்தார். நாட்டு மக்களுக்கு தசரதன் இராமனின் திருமணத்தை முரசறைந்து செய்தி அறிவித்தான். நாட்டு மக்களும் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர்.


 தசரதனின் ஆணைப்படி தேரும், யானையும், குடைகளும், கொடிகளோடும், சேனைகள் புறப்பட்டன. வீரர்களும் பெண்களும் மிதிலை நகர் நோக்கி பிரயாணம் புறப்பட்டனர். வழியெங்கும் ஆடல் பாடலுடன் தங்களுக்கே திருமணம் நடப்பது போல் உணர்ந்து மகிழ்ந்தனர். திருமணம் நடத்தி வைக்க அந்தணர்களும் சென்றனர். பெண்களின் சிலம்பொலி, குதிரைகள் கனைப்பொலி, மக்களின் சிரிப்பொலி என போகப்போக மக்கட்கூட்டம் நிறைந்து வழிந்தது.

 தசரத மன்னருடம் பட்டத்தரசிகளும் இசையொலியின் இரைச்சலோடும், படைகளின் ஒலியோடும் வழிநடையாக சென்றனர். கோசலை, கைகேயி, சுமத்திரை மூவரும் தோழிகளுடன் புடைசூழ தேரில் சென்றனர். சீர் கொண்டு செல்லும் பெண்கள் மொத்தம் அறுபதினாயிரம் பேர். தசரதன் நவரத்தின தேரில் வசிஷ்ட முனிவரும், பரதரும், சத்ருக்குனரும், அரச அதிகாரிகளும் சென்றனர். அன்றைய பொழுதை அவர்கள் இந்து சைல அடிவாரத்தில் தங்கி கழித்தனர்.

 மறுநாள் காலையில் அனைவரும் சந்திர சைலத்தை அடுத்துள்ள சோனையாற்றின் கரையை அடைந்தனர். அங்கு அனைவரும் நீராடி விட்டு புறப்பட்டனர். அந்தி மாலைப் பொழுதில் இளைஞர்களும், கன்னியர்களும் தங்களை அலங்கரித்து கொண்டு தங்களுக்கே திருமணம் என்பது போல் மகிழ்ச்சியோடு இருந்தனர். இவ்வாறு தசரதன் தன் பரிவாரங்களுடன் பயணம் செய்து ஐந்தாம் நாளில் மிதிலையை அடைந்தார்.

அவர்களுக்காக காத்து கொண்டியிருந்த ஜனகர் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார். ஜனக மகாராஜர், தசரத சக்கரவர்த்தியை வரவேற்று அழைத்து சென்றான். இராம இலட்சுமணர் தாய் தந்தையரிடன் ஆசி பெற்றனர். மிதிலை நகரின் வீதிகளில் இராமர் பவனி வரும்போது அவனைக் பார்ப்பதற்காக கூடியிருந்த பெண்களின் கண்களில் அவன் உருவம் புகுந்து வந்ததால் இவனுக்கு கண்ணன் என்று பெயர் வந்தது.

தொடரும்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக