500 சிசி இன்ஜின் உடன் கேடிஎம் நிறுவனம் இரண்டு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
500 சிசி பேரலல் ட்வின் இன்ஜின் உடன் இரண்டு புதிய பைக் மாடல்களை உருவாக்கி வருவதாக கேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் பைரர் (Stefan Pierer) தெரிவித்துள்ளார். இந்தியாவின் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து இந்த 2 புதிய பைக் மாடல்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த புதிய பைக் மாடல்களில் பயன்படுத்தப்படவுள்ள புதிய இன்ஜின் புனேவில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உருவாக்கப்படுகிறது. கேடிஎம் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கேடிஎம் 490 ட்யூக் மற்றும் 490 அட்வென்ஜர் பைக்குகளில் இந்த புதிய இன்ஜின் பயன்படுத்தப்படும்.
கேடிஎம் நிறுவனத்தின் 390 மற்றும் 890 வரிசை பைக்குகளுக்கு இடையே இந்த 2 பைக்குகளும் நிலைநிறுத்தப்படும். இந்த புதிய 500 சிசி இன்ஜின் ஹஸ்க்வர்னா பைக்குகளிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பஜாஜ் நிறுவனமும் இந்த புதிய இன்ஜினை பயன்படுத்தி கொள்ளும் என கூறப்படுகிறது.
இந்த புதிய இன்ஜின் உடன் நேக்கட், ஸ்போர்ட் டூரிங் மற்றும் அட்வென்ஜர் பைக்குகளை பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டீபன் பைரர் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில் பார்த்தால், இந்த புதிய 500 சிசி பேரலல் ட்வின் இன்ஜின் வரும் 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம்.
இதுகுறித்து மோட்டாரிங் வேர்ல்டு செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே கேடிஎம் நிறுவனம் தனது 790 அட்வென்ஜர் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது தயாராகி வருகிறது. புனேவிற்கு அருகே கேடிஎம் நிறுவனம் இந்த பைக்கை சோதனை செய்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.
எனவே கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக் வரும் மார்ச் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற இந்தியா பைக் வீக் திருவிழாவில், 390 அட்வென்ஜர் மற்றும் 790 அட்வென்ஜர் பைக்குகளை கேடிஎம் நிறுவனம் காட்சிப்படுத்தியது.
இதில், 390 அட்வென்ஜர் பைக்கை கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டது. நடப்பாண்டு தொடக்கத்தில் கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன்பின் கடந்த நவம்பர் மாதம் 250 அட்வென்ஜர் பைக்கையும் கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ஆனால் 790 அட்வென்ஜர் பைக் இந்திய சந்தையில் இன்னும் விற்பனைக்கு அறிமுகமாகவில்லை. எனினும் கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக் வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்கள், அட்வென்ஜர் பைக் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக