யமஹா, எஃப்இசட்-எக்ஸ் என்ற புதிய பெயரை பதிவு செய்துள்ளது. இந்த பெயரை பெற்றுவரவுள்ள யமஹா பைக் எது? எந்தெந்த பைக்குகளுக்கு போட்டியாக விளங்கவுள்ளது என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
அட்வென்ச்சர் பைக்குகளில் இருந்து இந்திய சந்தை ஒரு காலத்தில் மிகவும் தூரத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களில் இந்திய வாடிக்கையாளர்களின் இரசனையும் மெல்ல மெல்ல மாறி வருகிறது.
இதனை வெளிப்படுத்தும் வகையில் ராயல் என்பீல்டின் ஹிமாலயன் 1550 யூனிட்களும், ஹீரோ மோட்டோகார்பின் எக்ஸ்பல்ஸ் 200 பைக் 1,372 யூனிட்களும் கடந்த 2020 நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கேடிஎம் பிராண்டில் இருந்து தொடர்ந்து அட்வென்ச்சர் பைக்குகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
சுஸுகியும் ஜிக்ஸெர் பைக் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்கை களமிறக்க திட்டமிட்டுவரும் நிலையில், மற்றொரு பிரபல மோட்டார்சைக்கிள் பிராண்ட்டான யமஹா 'எஃப்இசட்-எக்ஸ்' என்ற பெயரை இந்தியாவில் பதிவு செய்து கொண்டுள்ளது.
அநேகமான இது யமஹாவின் இந்தியாவிற்கான புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக இருக்கலாம். அதேபோல் தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் யமஹாவின் 250சிசி ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்வென்ச்சர் பைக் தயாரிக்கப்படலாம்.
ஏனெனில் இந்த எஃப்இசட்25 ப்ளாட்ஃபாரம் தான் புதியதாகவும், மலிவான தயாரிப்புகளை தயாரிப்பதற்கு ஏற்றதாகவும் யமஹாவை பொறுத்தவரையில் உள்ளது. இது அட்வென்ச்சர் பைக்கை வடிவமைக்க மிகவும் ஏற்றதாக இருக்கும், தயாரிப்பு செலவும் அவ்வளவு ஆகாது.
இதனால் தற்போதைய யமஹா 250சிசி பைக்குகள் பெறும் என்ஜினைதான் புதிய அட்வென்ச்சர் பைக்கும் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் அட்வென்ச்சர் பயணங்களுக்காக பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பில் தயாரிப்பு நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தும்.
தற்போதைய யமஹா எஃப்இசட்-25 மற்றும் எஃப்இசட்எஸ்-25 பைக்குகளுடன் ஒப்பிடும்போது புதிய அட்வென்ச்சர் பைக் கூடுதல் வளைவுகளுடன் தோற்றத்தில் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். இந்த அட்வென்ச்சர் பைக்கில் பிரத்யேகமாக முழுவதுமாக ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கூடிய ஏபிஎஸ் மற்றும் யமஹாவின் லேட்டஸ்ட் ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்டுவரப்படலாம்.
அதேபோல் அலாய் சக்கரங்களுக்கு மாற்றாக வயர்-ஸ்போக்டு சக்கரங்கள் இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கில் வழங்கப்படும் என தெரிகிறது. யமஹாவின் தற்போதைய 250சிசி பைக்குகளில் 249சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஸ்ஒஎச்சி என்ஜின் பொருத்தப்படுகிறது.
அதிகப்பட்சமாக 20.6 பிஎச்பி மற்றும் 20 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல் புதிய யமஹா அட்வென்ச்சர் பைக்கின் முன் & பின் பக்க சஸ்பென்ஷன் அமைப்புகள் மற்ற 250சிசி பைக்குகளை காட்டிலும் வித்தியாசப்படும்.
இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கிற்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கும் இடையே சிறிய இடைவெளி உள்ளது. அதனை நிரப்பும் வகையில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு போட்டியாக யமஹா புதியதாக எஃப்இசட்-எக்ஸ் அட்வென்ச்சர் பைக்கை கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக