முக்கிய சில கோயில்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்ற நடைமுறை உள்ளது. ஆன்லைனில் டிக்கெட் எப்படி முன்பதிவு செய்வது என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கலாம். அதுகுறித்த தெளிவான விளக்கங்களை பார்க்கலாம்.
பொது இடங்களில் சமூகஇடைவெளி
திருப்பதி போன்ற கோவில்களில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு முறை முன்னதாகவே அமலில் இருந்தாலும். கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக பொது இடங்களில் சமூகஇடைவெளி கடைபிடிக்கவேண்டியது கட்டாயமாக உள்ளது. கோவில் உட்பட பொது இடங்களில் கூட்டம் சேராத வண்ணம் பார்த்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பழனியில் குவியும் பக்தர்கள்
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரக்கூடிய கோவிலாக அமைந்துள்ளது பழனி. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு
கொரோனா ஊரடங்குக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தே பக்தர்கள் பழனி முருகனை தரிசித்து வருகிறார்கள். அதேபோல் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு பக்தர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மின்இழுவை ரயில்கள் இயக்கப்பட தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யப்படும் நபர்கள் மட்டுமே மின்இழுவை ரயில்களில் ஏற்றப்பட உள்ளனர்.
இணையதள விவரங்கள்
https://tnhrce.gov.in/eservices/dharshanbooking என்ற இணையதளத்திற்கு சென்று பழனி அருள்மிகு தண்டாயுதபானி தருத்தலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது கூகுளில் நேரடியாக பழனி ஆன்லைன் முன்பதிவு என தேடி tnhrce.gov.in என்று காண்பிக்கப்படும் இணையத்தை தேர்ந்தெடுக்கலாம். இதில் சென்று இலவச தரிசனம் அல்லது கட்டண தரிசனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் முன்பதிவு இருப்பு இருக்கும் தேதிகள் பச்சை நிறத்தில் காண்பிக்கப்படும் அதை கிளிக் செய்தவுடன் பெயர், அடையாள சான்று, இருப்பிட விலாசம், மின்னஞ்சல் உள்ளிட்டவைகளை பதிவிட்டு சமர்பிக்க வேண்டும். பின் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து சரியான நேரத்துக்கு கோவிலுக்கை செல்லலாம்.
சபரிமலை ஐயப்ப தரிசனம்
சபரிமலை சீசன் ஆரம்பமாகி பக்தர்கள் மாலை அணிவித்து ஐயப்ப தரிசனத்திற்கு சபரிமலை சென்று வருகின்றனர். இதற்கு ஆன்லைன் டிக்கெட் மற்றும் கொரோனா பரிசோதனை என்பது அவசியமாகும். https://sabarimalaonline.org. என்ற இணையதளத்துக்கு சென்று டிக்கெட்டுகளை தனிநபர் ஆதாரங்களுடன் முழுவிவரங்களை பதிவிட்டு முன்பதிவு செய்யலாம். அதேபோல் தாங்கள் செல்லும் வாகனத்துக்கு இபாஸ் பெறுவது அவசியம்.
மகர விளக்கு பூஜைக்கு பக்தர்கள் அனுமதி
தங்கள் பகுதியில் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனைக்கான காலஅவகாசம் முடியும் பட்சத்தில் சபரிமலை பகுதியில் பக்தர்களுக்கு ரூ.675 என்ற கட்டணத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரை பக்தர்களை அனுமதிக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமலை ஏழுமலையான் தரிசனம்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க இலவச ஆன்லைன் முன்பதிவுக்கு தினசரி 10,000 டோக்கன்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் ஏழுமலையானின் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.300 செலுத்தியும் முன்பதிவு செய்யலாம்.
ஆன்லைன் டிக்கெட் கட்டாயம்
https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து நேரடியாக கணக்கு உள்ளவர்கள் தங்களது மெயில் ஐடி, கடவுச்சொல்லை பதிவிட்டு உள்நுழைய வேண்டும். அல்லது புதிதாகவும் பதிவு செய்து உள்நுழையலாம். இந்த தேர்வுக்குள் சென்று இலவசம் அல்லது கட்டண தரிசனத்தை தேர்வு செய்து செல்லும் அனைத்து பக்தர்களின் சுயவிவரத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் டிக்கெட் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக