டெஸ்லா மாடல் எக்ஸ் காரின் போட்டியாக ஜே-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக ஜாகுவார் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஜாகுவார் காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
ஜாகுவார் ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு மேலே நிலைநிறுத்தப்படவுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் கார் ஜே-பேஸ் என்ற பெயரில் வெளிவரவுள்ளது. இந்த கார் டெஸ்லாவின் பிரபலமான மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் கார் மட்டுமின்றி போர்ஷே கேயெனேவிற்கும் போட்டியாக விளங்கும்.
இந்த போட்டியினை உறுதிப்படுத்தி இருந்த ஜாகுவார் பிராண்டின் புதிய சிஇஒ தியரி பொல்லோரே சமீபத்திய பேட்டியில் ஜாகுவார் பிராண்ட் முழு-எலக்ட்ரிக் வாகன பிராண்டாக மாற்ற பணியாற்றி வருவதாக தெரிவித்திருந்தார்.
ஜாகுவாரின் மிகவும் விலையுயர்ந்த கார்களில் ஒன்றாகவும் விளங்கவுள்ள ஜே-பேஸ் எலக்ட்ரிக் காரின் தொழிற்நுட்ப அம்சங்கள் பற்றிய எந்தவொரு தகவலும் தற்போதைக்கு இல்லை. நமக்கு தெரிந்தது எல்லாம் ஜாகுவார் எக்ஸ்ஜே மற்றும் ரேஞ்ச் ரோவரின் புதிய தலைமுறைகளின் அதே எம்எல்ஏ ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு இந்த எலக்ட்ரிக் வரவுள்ளது என்பது மட்டும்தான்.
இந்த ப்ளாட்ஃபாரம் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் முழு-எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடியும். ஜே-பேஸ் எலக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் உள்ள ஜாகுவாரின் கோட்டை ப்ரோம்விச் தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எலக்ட்ரிக் வாகனங்களுக்காக இந்த தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் சுமார் 1 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவாருக்கு இந்த ஒரு தொழிற்சாலையாவது முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும்.
எம்எல்ஏ ப்ளாட்ஃபாரம் 100kWh பெரிய பேட்டரி தொகுப்பை பொருத்த ஏதுவானது. இருப்பினும் விலையை குறைவாக நிர்ணயிக்க சிறிய பேட்டரி தேர்விலும் ஜே-பேஸ் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. 4-சக்கர ட்ரைவ் அமைப்புடன் வழங்கப்படவுள்ள இந்த ஜாகுவார் எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 482கிமீ-ல் வழங்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக