2020ஆம் ஆண்டில் இந்திய ரீடைல் சந்தையில் மிகமுக்கியமான வர்த்தக ஒப்பந்தமாக விளங்கும் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் இடையில் 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் ஒப்பந்தம் பல்வேறு தடைகளை, பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. இந்நிலையில் இறுதிக்கட்டமாக இரு நிறுவனங்கள் மத்தியிலான சொத்துப் பரிமாற்றம் குறித்துச் செபி ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இதற்கிடையில் அமேசான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி தனது முடிவை அறிவிக்கவிக்க முடியாமல் தடைப்பட்டு உள்ளது.
அமேசான் குற்றம்சாட்டு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் - கிஷோர் பியானியின் பியூச்சர் குரூப் வர்த்தக ஒப்பந்தத்திற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனமான அமேசான்.காம் தான்.
இரு நிறுவனங்கள் மத்தியில் நடைபெற்றுள்ள வர்த்தக ஒப்பந்தத்தில் தனக்கான உரிமையை மீறி முறைகேடாகச் செய்துள்ளது என அமேசான் குற்றம்சாட்டியுள்ளது.
இறுதி தீர்ப்பு
இந்நிலையில் அமேசான் நிறுவனம் சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் (SAIC) தொடுத்துள்ள வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரையில் செபி ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் குறித்த முடிவுகளைச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அறிவிக்கக் கூடாது என அமேசான் கேட்டுக்கொண்டுள்ளது.
செபி அமைப்பிற்குக் கடிதம்
அமேசான் நிறுவனம் செபி அமைப்பிற்குச் சமீபத்தில் அனுப்பிய கடிதத்தில், சிங்கப்பூர் நடுவர் அமைப்பின் உத்தரவுகள் அனைத்தும் இந்தியச் சட்ட திட்டத்தின் படி இந்தியாவில் செல்லுபடியாகும். இதை டெல்லி உயர் நீதிமன்றமே தெரிவித்துள்ள நிலையில், செபி இந்த ஒப்பந்தம் குறித்து இறுதி ஒப்புதல் அளிக்கும் முன் சிங்கப்பூர் நடுவர் அமைப்பின் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றம்
மேலும் டெல்லி உயர் நீதிமன்றம் அமேசானுக்கு ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்தில் பிரச்சனை இருந்தால் அதற்காக முறையிடுவதற்கும், வழக்கு தொடுப்பதற்கும் எவ்விதமான தடையும் இல்லை, சுதந்திரமாக அமேசான் இதில் செயல்படலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
அமேசான் 2019 முதலீடு
2019ல் அமேசான் நிறுவனம், பியூச்சர் குரூப் கடுமையான நிதிநெருக்கடி மற்றும் வர்த்தகச் சரிவில் இருக்கும் போது இக்குழுமத்தின் கிளை மற்றும் ஹோல்டிங் நிறுவனமான பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது.
அமேசான் உரிமை
இந்த 49 சதவீத பங்குகள் மூலம் அமேசான், பியூச்சர் ரீடைல் வர்த்தகத்தில் மறைமுகமாக 7.3 சதவீத பங்குகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இந்தப் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் கீழ் தான் உணவு மற்றும் மளிகை பொருட்களின் வர்த்தகம், பிக் பஜார் மற்றும் ஈசிடே ஆகிய வர்த்தகங்கள் உள்ளது.
அமேசான் போட்ட கண்டிஷன்
அமேசான் - பியூச்சர் குரூப் மத்தியில் நடந்த இந்த 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் அமேசான், பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட வால்மார்ட், அலிபாபா, சாப்ட்பேங்க், கூகிள், நேஸ்பர்ஸ், ஈபே, டாக்கெட், பேடிஎம், சோமேட்டோ, ஸ்விக்கி எனச் சுமார் 15 நிறுவனங்களை வெளிப்படையாகவே குறிப்பிட்டு, இந்த நிறுவனங்கள் எந்தக் காரணத்திற்காகவும் பங்குகளையோ, வர்த்தகத்தையோ கைப்பற்றக் கூடாது எனக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுதான் பிரச்சனை
அமேசான் - பியூச்சர் குருப் இடையிலான இந்த 1,500 கோடி ரூபாய் ஒப்பந்தம் மூலம் அடுத்த 3 முதல் 10 வருடத்தில் அமேசான் பியூச்சர் ரீடைல் வர்த்தகத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டுத் தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆனால் இதை அனைத்தையும் கருத்தில் கொள்ளாமல் அமேசான் - ரீலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் வர்த்தகப் போட்டியின் காரணமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக