இறைவர் திருப்பெயர் : ஆபத்சகாயேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : பவளக்கொடி அம்மை
தல மரம் : பவளமல்லிகை
தீர்த்தம் : சகாய தீர்த்தம் மற்றும் சூரிய தீர்த்தம்
வழிபட்டோர் : சுக்ரீவன்,பைரவர், அகஸ்தியர், அனுமார், அரதத்தர்
தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
தல வரலாறு:
இத்தலம் காவிரிதென்கரையில்
இருப்பதாலும், சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்று
வழங்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள்
சன்னதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது
பட்டுத் தழுவுகின்றது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 94 வது தேவாரத்தலம் ஆகும்.
இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுவாமி கருவறை அகழி அமைப்புடையது.
இதிகாச மாகிய இராமயணத்தில் வரும் இராம பக்தன். இவன் தென் குரங்காடுதுறையை அடைந்து சிவபெருமானை வழிபட்டு வரும் நாளில், பகைமை காரணமாகச் சுக்ரீவனைத் தேடிக் கொண்டு வாலி வந்தான். மிகவும் வல்லமை படைத்த அந்த வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன் ஆடுதுறை அரவச்சடை அந்தணனாகிய அரனை அடைக்கலம் புகுந்து நின்று தன்னைக் காப்பாற்றியருளுமாறு வேண்டிக் கொண்டான். அப்போது சிவபிரான் சுக்ரீவன் அன்னப் பறவையாகவும் அவன் தேவியைப் பாரிஜாத மரமாகவும் (பவள மல்லிகை மரம்) வேற்றுருக் கொள்ளச் செய்து காப்பாற்றியருளினான்.
சுக்ரீவனுக்கு வந்த ஆபத்தைப்
போக்கியருளி அவனுக்குச் சகாயம் செய்தமையால், இறைவன் ஆபத்சகாயேசுரர் எனவும்,
துன்பத்தில் துணைவர் எனவும் வழங்கப்படுகின்றார். அம்மையின் திருநாமம் பிரபாளவல்லி
என்றும் பவளக்கொடி என்றும் வழங்கப்படுகிறது.
நடராஜர்: தில்லைப் பொன்னம்பலத்தில் ஆனந்த நடனம் ஆடியருளினார். அந்த நடனத்தைக்
கண்டுகளிக்க இயலாத அகத்தியரும் ஏனைய முனிவர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க
குரங்காடுதுறைக் குழகனார் ஆனந்த நடனம் ஆடியருளினார்.
அகத்தியர் : சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக் கொண்டு வரும் போது இத்தலத்தை வந்தடைந்தார். இங்கே சுவர்ண பைரவர் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பல வரங்களைப் பெற்று மகிழ்ந்தார். சுவர்ண பைரவரைச் சிறப்போடு பூஜை செய்து அன்புடன் வழிபட்டால் நினைத்த காரியம் எளிதில் கைகூடும். தீராத நோய்கள் தீரும்; தனம் தானியம் பெருகும்; புகழ் உண்டாகும்.
அனுமார் : முன்னொரு சமையம் திருக்கயிலை மலையில் கல்லும் கரைந்து உருகும்படி இசைபாடிக் கொண்டிருந்தார். அவ்வழியே வந்த நாரதர் அந்த இசையைக் கேட்டு மெய்மறந்து அங்கே அமர்ந்திருந்தார். பிறகு அவர் புறப்படும் போது கீழே வைத்திருந்த "மகதி' என்னும் வீனை மீது பனி முடியதால் எடுக்க இயலாமல் புதைந்திருந்தது. அது கண்ட நாரதர் வெகுண்டு அனுமானை நோக்கி உன் இசையை நீ மறப்பாயாக என்று சபித்தார். பின்னர் மனம் வருந்திய அனுமார் தன்னுடைய மன்னவன் சுக்ரீவன் வழிபட்ட இத்தென்குரங்காடுதுறைக்கு வந்து ஆபத்சகாயேசுரரை மனமுருகி வழிபட்டார். மறந்து போன இசைஞானத்தை மீண்டும் பெற்றுக் களிப்படைந்தார்.
அரதத்தர் என்பவர் கஞ்சனூரில் அவதரித்த வைணவ பக்தராவார். இவர் இளம்பருவம் முதற்கொண்டே சிவபக்தி மிக்கவராகக் கஞ்சனூரில் உள்ள சிவாலயத்தில் எழுந்தருளி இருக்கும் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டுச் சிவஞானம் கைவரப் பெற்றவர். பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது ஏறி நின்று சிவபரத்துவத்தைத் தாபித்தவர். இவர் நாள்தோறும் கஞ்சனூர், திருக்கோடிக்கா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை, ஆகிய ஏழு சிவத்தலங்களையும் தரிசித்த பின்னரே உணவு கொள்ளும் நியமம் உடையவர், ஒரு நாள் வழக்கம் போல ஆடுதுறையை வழிபட்டு மீளும்போது மழை பெய்தது, இருளும் அடர்ந்தது வழியறியாமல் திகைத்து நின்றார்.
ஆபத்சகாயேசுரர் வயோதிக அந்தண வடிவங் கொண்டு, கோல் தாங்கிய கையினராய் அவருக்கு வழித் துணையாகச் சென்று அவரது இல்லத்தில் அவரைவிட்டு வந்ததாகக் கூறுவர்.
கோவில் அமைப்பு:
கோபுர வாயிலைக் கடந்து சென்றால்
கொடிமரத்து விநாயகரையும் பலிபீடத்தையும் சிறுமண்டபத்துள்ளே அமைந்துள்ள நந்தியையும்
காணலாம். அகன்ற வெளிப் பக்கத்துப் பெரிய பிரகாரத்தை வலம்வந்து உள்ளே சென்றால்
மணிமண்டபத்தைக் காணலாம். அம்மண்டபத்தின் தென்புறச் சுவரில் இத்தலத்தின் தேவாரப்
பதிகங்களையும் திருப்புகழ்ப் பாடல்களையும் கல்லெழுத்துக்களில் வடித்துள்ளதைக்
காணலாம்.
வெளிப் பிரகாரத்தில் விஸ்வநாதர், அம்பாள் விசாலாக்ஷி, விநாயகர், சூரியன்,
சந்திரன், நவக்கிரகம் மற்றும் முருகன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. அம்பாள்
பவளக்கொடி அம்மையின் சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் இரண்டாவது வாயிலுக்கு முன்னே
தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அதன் எதிரில் எழுந்தருளியுள்ள பிள்ளையாரையும்
தரிசிக்கலாம். உள்ளே சென்றால் எதிரில் தோன்றும் மண்டபத்தின் மேல் மாடப்பத்தியில் சுக்ரீவன்
ஆபத்சகாயேசுரரை வணங்கும் காட்சியும், சுக்ரீவனை இறைவன் அன்னப்பறவையாவும் அவன்
தேவியை பாரிஜாத (பவளமல்லிகை) மரமாகவும் உருமாற்றியருளிய தல வரலாற்றுக் காட்சி சுதை
வேலைப்பாட்டில் அமைந்துள்ளதைக் காணலாம்.
அடுத்துள்ள மூன்றாம் வாயிலைக் கடந்து சென்றால் நேரே பலிபீடமும் நந்தியும் உள்ளன.
கருவறை வாயிலில் கம்பீரமாகக் காத்து நிற்கும் புடைச் சிற்பமாக விளங்கும் இரண்டு
துவாரபாலகர்களையும் காணலாம். இறைவன் ஆபத்சகாயேஸ்வரரின் சந்நிதி இரண்டாவது உள்
பிரகாரத்தில் உள்ளது. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர்
குடிகொண்டுள்ள கருவறைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. கோஷ்ட
மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர்,
பிரம்மா, துர்க்கை உள்ளனர். இக்கோயிலைக் கற்கோயிலாக அமைத்த கண்டராதித்தியர்
தேவியாரான செம்பியன் மாதேவியார் சிவபிரானை வழிபடுவதாக அமைந்துள்ள
புடைச்சிற்பத்தையும் கருவறைச் சுற்றில் காணலாம்.
கருவறை சுற்றுப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப்
பெருமான் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி ஆகியவைவ உள்ளன. வடக்கு நோக்கிய சந்நிதியில்
எட்டுத் திருக்கரங்களோடு விளங்கிக் காட்சி நல்கும் துர்கா தேவியும், அருகில் கங்கா
விசர்சன மூர்த்தியும் பைரவ மூர்த்தியும் இருக்கின்றன. அவற்றின் அருகில் விஷ்ணு
துர்க்கை சந்நிதி உள்ளது.
அம்பாள் பவளக்கொடியம்மை சந்நிதியை வலம் வரும்போது பின்புறச் சுவரில் சுக்ரீவன்
சிவபூஜை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும், செம்பியன் மாதேவி சிவபூசை செய்யும்
புடைப்புச் சிற்பத்தையும் காணலாம்.
தென்குரங்காடுதுறைக்கு (ஆடுதுறைக்கு) அருகாமையிலுள்ள மருத்துவக்குடி என்னும் ஊரின்
பெயரும் இத்தல கல்வெட்டில் காணப்படுகிறது. இம்மருத்துவக்குடியே திருஇடைக்குளம்
என்னும் தேவார வைப்புத்தலமாகும்.
சிறப்புக்கள் :
தந்தை மகன் உறவில் பிரச்னை இருந்தால் சூரியன், சனி பகவானுக்கு சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துவழிபடுகின்றனர். தொழில் மற்றும் பொருளாதாரம்
மேம்பட இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். பவுர்ணமியில் அகத்தியருக்கு சந்தனாதி
தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள்
சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
போன்:
+91 - 94434 63119, 94424 25809
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடுகும்பகோணத்தில் இருந்து 12
கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும் ஆடுதுறை என்று
வழங்கப்படும் இடத்தில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில்
உள்ள ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் சிறிது தொலைவு
சென்றால் சாலையோரத்தில் உள்ள குளத்தையொட்டி இடப்புறமாகத் திரும்பிச் செல்லும்
சாலையில் சென்று வலப்பக்க வீதியில் திரும்பினால் ஆலயம் உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 முதல்12 மணி வரையிலும் மாலை 5-30 முதல் இரவு 8-30
மணி வரையிலும் திறந்திருக்கும். சுக்கிரீவன்
வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது.
தந்தை மகன் உறவில் பிரச்னை இருந்தால் சூரியன், சனி பகவானுக்கு சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துவழிபடுகின்றனர்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக