Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 டிசம்பர், 2020

அம்மா மினி கிளினிக்; வெடிக்கும் புதிய சர்ச்சை - யாருக்கு லாபம்?

 

மினி கிளினிக்குகளில் அவுட் சோர்சிங் முறை என்பது முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே கொண்டு வரப்பட்டுள்ளது என்று வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், அதனை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இரண்டாயிரம் மினி கிளினிக் தொடங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், 2000 மினி கிளினிக்கிற்கு, அவுட் சோர்சிங் முறையில் செவிலியர்களை நியமனம் செய்ய அதிமுக அரசு முடிவெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. அதாவது, 2000

மினி கிளினிக்குகளில் செவிலியர்களுக்கான பணியிடங்கள், தனியார் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக, காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் நிலையில், அவர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. அவர்களை பணி நியமனம் செய்யும் போதே, 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அரசாணையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த அரசாணை இன்று வரை நிறைவேற்றப்படாமல், செவிலியர்கள் ஒப்பந்த முறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு அதிமுக அரசு கொஞ்சம் கூட செவி சாய்க்கவில்லை. தற்போது, மினி கிளினிக்கிற்கு தனியார் நிறுவனத்தின் மூலம் செவிலியர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியிடங்களுக்கு, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விலை பேசி அந்த பணியிடங்களை விற்பதாக புகார் எழுந்துள்ளது.


இதன் காரணமாக, தகுதியற்றவர்கள் நியமிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த அவுட் சோர்சிங் முறை என்பது முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே கொண்டு வரப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த பணியிடங்கள் மார்ச் 2021 வரை என்று அரசாணை மூலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மினி கிளினிக் என்பது தேர்தலுக்காக, வாக்கு அரசியலுக்காக கொண்டு வரப்பட்டது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

அரசு மருத்துவமனைகளில், அவுட் சோர்சிங் முறையில் மருத்துவர்கள் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை அதிமுக அரசுக்கு இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, மினி கிளினிக்குகளில் தனியார் நிறுவனத்தின் மூலம் செவிலியர்களை நியமிக்கும் நடவடிக்கையை, அதிமுக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக