வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் உலகத்தில் ஆன்லைன் மூலம் பணத்தை நூதனமாகக் கொள்ளையடிக்கும் ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பணத்தைத் திருட முற்படும் இவர்கள் கையாளும் யுக்திகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
உஷார் மக்களே
இப்போது இவர்கள் கையாளும் புதிய யுக்தி வலையில் சிக்கி, தமிழ்நாட்டில் உள்ள பலரும் தங்களின் பணத்தை இழந்துள்ளனர். இனி நீங்கள் எப்படி உஷாராக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு தெரியாத நபர்கள் யாரேனும் உங்களை தொடர்புகொண்டு தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டதாகக் கூறி கால் அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் செய்தால் உஷாராக இருங்கள்.
போலி எஸ்எம்எஸ்
உங்கள் வங்கி அக்கௌன்ட் எண்ணிற்குப் பணம் போடப்பட்டதாகக் காட்டப்படும் ஒரு போலி எஸ்எம்எஸ்-சை காட்டி, உங்களிடமிருந்து அந்த பணத்தை மீண்டும் கேட்டால் இன்னும் கவனமாக இருங்கள். உங்களை நம்ப வைத்து ஏமாற்றப் பார்ப்பார்கள், எனவே கவனமாக இருங்கள்.
வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடும் கும்பல்
சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷ்னர் சமீபத்தில் இந்த பிரச்னை குறித்த எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார். மக்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடுவதற்கு, இந்த திருட்டு கும்பல் இப்படி ஒரு புதிய ரூட்டில் மோசடி செய்து வருகிறது. இந்த முறையைப் பின்பற்றி, இவர்களின் கட்டுக்கதையை நம்பி தமிழ்நாட்டில் பலரும் பணத்தை இழந்துள்ளனர். சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஏமாற்றப்பட்டுள்ளார்.
தவறுதலாக பணம் போடப்பட்டது..
சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிமணிக்கு வாட்ஸ்அப் மூலம் இந்த திருட்டு கும்பல் தொடர்புகொண்டுள்ளது. அதில், தவறுதலாக அந்த பெண்ணின் வங்கி கணக்கில் பணம் போட்டுவிட்டது என்று கூறி, பணம் கிரெடிட் செய்யப்பட்டதாகக் காட்டும் ஒரு போலி மெசேஜ்ஜின் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர். இந்த மெசேஜை பார்த்த பெண்மணி அதை நம்பி ஆம், இது என்னுடைய வங்கி எண் தான் என்று கூறி, பணத்தைத் திருப்பி தருவதா கூறியுள்ளார்.
மெசேஜ் ஸ்கிரீன் ஷாட் காட்டி மோசடி
வெறும் மெசேஜ் ஸ்கிரீன் ஷாட்டை மட்டும் பார்த்துவிட்டு, தனது வங்கி கணக்கை சோதனை செய்யாமல் அந்த பெண் அவர்கள் கேட்ட பணத்தை மீண்டு தருவதாகத் தெரிவித்திருக்கிறார். பணத்தை பேடியம் மூலம் அனுப்புமாறு அந்த திருட்டு கும்பல் கேட்டதை தொடர்ந்து அப்பெண்ணும் பணத்தை அனுப்பியுள்ளார்.
காவல்துறை எச்சரிக்கை
பிறகு தான் அவர் கணக்கிலிருந்த பணம் பறிபோனது தெரியவந்துள்ளது. இப்படி ட்ரிக்காக பணத்தைத் திருடும் மர்ம கும்பலிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கி தொடர்பான எந்த விஷயத்தையும் போனில் தொடர்பு கொண்டு பேசும் நபரிடம் எப்பொழுதும் உஷாராக இருங்கள். குறிப்பாக உங்கள் தகவல்களை தெரியாத நபர் யாரிடமும் பகிர வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக