பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலப்பதை முன்கூட்டியே செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
2030ம் ஆண்டு முதல் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் (Ethanol) கலக்க வேண்டும் என மத்திய அரசு முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த திட்டத்தை முன்கூட்டியே செயல்படுத்துவதற்கு தற்போது மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 2025ம் ஆண்டு அல்லது அதற்கும் முன்னதாக 2023ம் ஆண்டுக்கு காலக்கெடு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவும் இந்த விஷயத்தில் தற்போது அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளது. பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனாலை கலப்பதன் மூலம் இந்தியாவிற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது நம் அனைவருக்கும் தெரியும். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமாராக 8 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டு வருகிறது. இது பொருளாதார ரீதியில் இந்தியாவிற்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
ஆனால் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலக்கவுள்ளதால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை குறையும். அத்துடன் இதன் மூலமாக எத்தனால் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனாலை அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும் என்பதால், உள்நாட்டில் இதுதொடர்பான வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.
மேலும் எத்தனால் உற்பத்தி மூலமாக விவசாயிகளுக்கும் பல்வேறு நன்மைகள் ஏற்படும். இதுதவிர காற்று மாசுபாடு பிரச்னையையும் எத்தனால் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே செல்கிறது. தலைநகர் டெல்லி உள்பட முக்கியமான நகரங்கள் பலவும் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கலாம். இப்படி எத்தனாலின் நன்மைகளை அடுக்கி கொண்டே செல்லலாம். கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாடு ஆகிய 2 பிரச்னைகளையும் குறைப்பதற்கு இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருவது இதில் மிகவும் முக்கியமானது. மத்திய அரசு வழங்கி வரும் ஆதரவு காரணமாக இந்தியாவில் தற்போது ஏராளமான மின்சார வாகனங்கள் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. இது ஆரம்ப நிலைதான் என்றாலும், வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கைக்கு நிகராக எலெக்ட்ரிக் வாகனங்கள் வரப்போவது உறுதி.
மத்திய அரசு மட்டுமல்லாது, டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், மானியம் வழங்குதல், சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகளை போன்று இந்தியாவும் விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேசமாக மாறவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக