கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பை வெளியிடும் போது ஏற்பட்ட மனவலி எனக்கு மட்டும்தான் தெரியும் என நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்..
வரும் 31 ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்த நடிகர் ரஜினி தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று தனது ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக ரஜினி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``என் உயிரே போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலுபேர் நாலுவிதமாக என்னைப் பற்றிப் பேசுவார்கள். என்பதற்காக என்னை நம்பி கூட வருபவர்களை பலிகடா ஆக்க நான் விரும்பவில்லை.
ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்’’ என்று தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) December 29, 2020
ஹைதராபாத்தில் அண்ணாத்த (Annaatthe) திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார் ரஜினிகாந்த். அப்போது, படப்பிடிப்பு குழுவினர் சிலருக்கு, கொரோனா தொற்று (Coronavirus) ஏற்பட்டதை அறிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால், திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கடந்த வாரம் பரிசோதனைக்கு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த அழுத்தத்தில் (Blood pressure) மிகுந்த வேறுபாடு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, கடந்தவாரம் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டதை தொடர்ந்து நேற்று சென்னை வந்தடைந்தார்.
இதையடுத்து தற்போது நடிகர் ரஜினி தனது ட்விட்டர் மூலம், கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன்" என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மீண்டும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக