ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.
ஆன்லைன் ஷாப்பிங் முறை
கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
ஆன்லைன் ஷாப்பிங் முறை அதிகரிக்க வாய்ப்பு
ஆன்லைன் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை 100 முதல் 110 மில்லியனில் இருந்து 2025 ஆம் ஆண்டு 300 முதல் 350 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது. இதில் ஆன்லைன் விற்பனையில் உள்ள மொழி சிக்கல் தீர்க்கப்பட்டால் மில்லியன் கணக்கான நுகர்வோரை அடைய நிறுவனத்துக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவு
இந்த நிலையில் அமேசான் நிறுவனம் மீதான மோசடி வழக்கில் 6 வருடங்களுக்கு பிறகு அமேசான் நிறுவனம் நுகர்வோருக்கு இழப்பீட்டு தொகை வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரிசாவை சேர்ந்த சுப்ரியா ரஞ்சன் என்ற சட்டக்கல்லூரி மாணவர் அமேசானில் காண்பிக்கப்பட்ட ஒரு சலுகையில் ஆர்டர் செய்துள்ளார்.
படிப்பு தேவைக்கு லேப்டாப்
அமேசானில் ரூ.190-க்கு லேப்டாப் என காண்பிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த ரஞ்சன் ஆச்சரியத்தில் மூழ்கி லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார். படிப்பு தேவைக்கு லேப்டாப் தேவைப்பட்டதால் அவர் இதை ஆர்டர் செய்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியான கோளாறு
அவர் ஆர்டர் செய்த ரூ.190 லேப்டாப் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் அதை அமேசான் ரத்து செய்ததாக ரஞ்சனுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதையடுத்து ரஞ்சன் வாடிக்கையாளர்கள் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தார். அதில் தொழில்நுட்ப ரீதியாக கோளாறு ஏற்பட்டதால் குழப்பம் ஏற்பட்டு லேப்டாப் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் கிடைக்காத லேப்டாப்
இதையடுத்து மீண்டும் ஒரு முறை ரஞ்சன் மற்றொரு லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார் அதுவும் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தால் தனது கல்லூரி பாடத்தை உரிய நேரத்தில் சமர்பிக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ரஞ்சன் நுகர்வோர் ஆணையத்தை அணுகியுள்ளார்.
ரூ.45000 செலுத்த வேண்டும்
இந்த நிலையில் நிதிமோசடி மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அமேசான் நிறுவனத்துக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இழப்பீடு தொகையாக ரூ.45000 செலுத்த வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக