இறைவர் திருப்பெயர் :
திரிநேத்ரசுவாமி, முக்கூடல்நாதர், முக்கோண நாதர்
இறைவியார் திருப்பெயர் : அஞ்சனாட்சி, மைமேவு கண்ணியம்மை
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : சோடஷ (முக்கூடல்) தீர்த்தம்
வழிபட்டோர் : ராமர், ஜடாயு, தபோவதனி என்னும் அரசி,
தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர்
தல வரலாறு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 149 வது தேவாரத்தலம் ஆகும்.
இத்தல வரலாறு இராமாயண இதிகாசத்தில்
வரும் ஜடாயுவுடன் தொடர்புடையதாதலால் இத்தலத்தை இங்குள்ள மக்கள் "குருவிராமேஸ்வரம்"
என்றும் கூறுகின்றனர்.
ஒரு முறை காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு
தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது.
இதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து, "இராவணன்
சீதையை எடுத்து வரும் நேரத்தில் நீ தடுப்பாய். அப்போது அவன் உன் சிறகுகளை வெட்ட நீ
வீழ்ந்து இறப்பாய்” என்றாராம். அது கேட்ட ஜடாயு "பெருமானே, அப்படியானால் நான்
காசி, கங்கை, இராமேஸ்வரம், சேது முதலிய தீர்த்தங்களில் மூழ்கித் தீர்த்தப் பலனை
அடைய முடியாமற்போகுமே, அதற்கு என்ன செய்வது" என்று வேண்ட, இறைவன் மூக்கூடல்
தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்குமாறு பணிக்க ஜடாயுவும் அவ்வாறே மூழ்கிப் பலனைப்
பெற்றது. இவ்வரலாற்றை யொட்டித்தான் மக்கள் பேச்சு வழக்கில் இப்பகுதியை
"குருவிராமேஸ்வரம்" என்று கூறுகின்றனர். இத்தலத்திலுள்ள முக்கூடல்
தீரத்தக் குளத்தின் உள்ளே 16 கிணறுகள் உள்ளன. இத் தீர்த்தம் கங்கை, யமுனை, சரஸ்வதி
ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு இணையானதால் முக்கூடல் தீர்த்தம் என
வழங்கப்படுகிறது. இதில் மூழ்குவோர்க்குப் பதினாறு மடங்கு (கங்கை, சேது) தீர்த்த
விசேஷப் பலனைத் தருவதால் இத்தீர்த்தம் "ஷோடசசேது" என்றும்
சொல்லப்படுகிறது. இதில் நீராடினால் மகாமக தீர்த்த்தில் நீராடிய பலன் கிடைக்கும்.
12 அமாவாசை இக்குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம்,
திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை. ராமர் தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம்
செய்த தலங்களில் இதுவும் ஒன்று.
முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன் கிடைக்கும்
என்பதால் இத்தலம் "கேக்கரை" என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் எதிரில்
உள்ள இக்குளம் பிருங்கி மகரிஷி காலத்தில் பிள்ளையாரால் வெட்டப்பட்டது என்பர்.
தபோவதனி என்னும் அரசி குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்து அஞ்சனாட்சி அம்மனை
வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாக
தோன்றினாள். அப்பெண் மணப்பருவம் வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம்
புரிந்தார் என கூறுப்படுகிறது.
ஒரு முறை சோழமன்னன் ஒருவன் வேட்டையாட குதிரை மீதேறி செல்லும் போது இவ்வூர் வழியாக சென்றான். இரவு நேரமாகி விட்டதால் இங்கு தங்க நேர்ந்தது. மன்னன் உணவருந்தும் போது சிவதரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டான். இதையறிந்த குதிரைக்காரன் குதிரைக்கு வைத்திருந்த கொள்ளுப்பையை சிவலிங்கமாக அலங்கரித்து, அதைக்காட்டி மன்னனை உணவருந்த செய்தான். பின் அப் பையை எடுக்க முயன்றபோது அதுவே சிவலிங்கமாக மாறியது என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.
கோவில் அமைப்பு:
இத்தலத்திற்கு இராஜகோபுரமில்லை. கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மதிற்சுவர் மாடங்களில் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். முகப்பு வாயில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரின் சுதை உருவங்கள் உள்ளன. உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் சூரியன் சந்திரன் ஆகியோரின் திருமேனிகள் காணப்படுகின்றன. உள் மண்டபத்தில் நுழைந்து சென்றால் நேரே மூலவர் அழகாக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி மாதத்தில் சிவராத்திரி நாளில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுவது இத்தலத்தின் சிறப்பம்சம். சுற்றுப் பிராகாரத்தில் நாகர், பைரவர், சனீஸ்வரர், வள்ளி, சூரியன், சந்திரன் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகர் சந்நிதியும், தனியே சுப்பிரமணியர் சந்நிதியும், கஜலட்சுமி சந்நிதியும் சுற்றுப் பிராகாரத்தில் உள்ளன.
சிறப்புக்கள் :
முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலம் "கேக்கரை" என்றும் அழைக்கப்படுகிறது.
கோவில் தீர்த்தம் கங்கை, யமுனை,
சரசுவதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு நிகராக கருதப்படுகிறது.
இதில் நீராடினால் மகாமக தீர்த்த்தில் நீராடிய பலன் கிடைக்கும்.
போன்:
98658 44677
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு திருவாரூரிலிருந்து கேக்கரை செல்லும் சாலையில் வந்து, ரயில்வே
லெவல்கிராசிங்கைத் தாண்டி கேக்கரையை அடைந்து, அங்கிருந்து அதே சாலையில் மேலும் 1
கி.மீ. சென்று சிறிய பாலத்தைத் தாண்டி சிறிது தூரம் சென்று, அங்கு இரண்டாகப் பிரியும்
பாதையில் இடப்பக்கமாகச் செல்லும் பாதையில் 1 கி.மீ. சென்றால் ஊரையடையலாம்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 11மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன் கிடைக்கும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக