இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இஇஎஸ்எல் நிறுவனம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
2020-21ம் நிதியாண்டில் இந்தியாவில் இன்னும் கூடுதலாக குறைந்தபட்சம் 500 சார்ஜிங் ஸ்டேஷன்களையாவது அமைக்க வேண்டும் என இஇஎஸ்எல் (EESL - Energy Efficiency Services Limited) திட்டமிட்டுள்ளது. இஇஎஸ்எல் என்பது மத்திய அரசின் நிறுவனமாகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் முயற்சிகளை இஇஎஸ்எல் நிறுவனம் தற்போது மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து இஇஎஸ்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜாட் சூட் கூறுகையில், ''கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த நிதியாண்டின் தொடக்கம் மிகவும் கடினமாக இருந்தது.
இஇஎஸ்எல் நிறுவனத்தின் சப்ளையர்களும் ஊரடங்கின்போது, உதிரிபாகங்கள் மற்றும் பணியாளர்களில் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிட்டது. எனினும் தற்போது உற்பத்தியாளர்களிடம் இருந்து சப்ளை மற்றும் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ள காரணத்தால், நிதியாண்டின் இறுதிக்குள் குறைந்தபட்சம் 500 சார்ஜிங் ஸ்டேஷன்களையாவது அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் நாங்கள் நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறோம்'' என்றார். இதுதவிர அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள், இந்தியா முழுவதும் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவும் இஇஎஸ்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்.
பெட்ரோல், டீசல் வாகனங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. இதையும், பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு பிரச்னையையும் குறைப்பதற்கு, மின்சார வாகனங்கள் அருமையான தீர்வாக பார்க்கப்படுகின்றன.
எனினும் பெட்ரோல் பங்க்குகளை போன்று, சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலர் தயக்கம் காட்டுகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை காரணமாக, தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாகனங்களையே வாங்கும் நிலை பலருக்கு உள்ளது.
ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் இஇஎஸ்எல் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக வரும் காலங்களில் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை ஆர்வமாக வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. பொது சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, ஏராளமான தனியார், அரசு பொது துறை நிறுவனங்களுடன் இஇஎஸ்எல் தற்போது கூட்டணி அமைத்துள்ளது.
இதில், அப்பல்லோ மருத்துவமனைகள், பிஎஸ்என்எல், மஹா-மெட்ரோ, பெல், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்டவை முக்கியமானவை. அத்துடன் ஹைதராபாத், நொய்டா, அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களின் உள்ளாட்சி அமைப்புகள் உடனும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல்வேறு நகர நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக