கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை பிரிவு வாரியாக வெளிவந்துள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.
கொரோனாவினால் மந்தமான மோட்டார்சைக்கிள்கள் விற்பனை கடந்த சில மாதங்களாகதான் மீண்டும் எழுச்சி பெற துவங்கியுள்ளது. இந்த வகையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் கணிசமான வளர்ச்சியினை விற்பனையில் கண்டு வருகிறது.
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ கடந்த மாதத்தில் 4,47,335 இருசக்கர வாகனங்களை மொத்தமாக (இந்திய சந்தை + ஏற்றுமதி) விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2019 டிசம்பர் மாதத்தின் 4,24,845-ஐ காட்டிலும் 5.29 சதவீதம் அதிகமாகும்.
மொத்தமாக இதுவரை நிறைவடைதுள்ள 2020-21ஆம் நிதியாண்டில் (ஏப்ரல்- டிசம்பர்) 42,23,225 ஹீரோ வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. அதுவே 2019-20ஆம் நிதியாண்டில் இதே 9 மாதங்களில் 50,75,208 யூனிட் வாகனங்களை இந்த நிறுவனம் விற்றிருந்தது.
இதன் மூலம் இந்த நிதியாண்டில் 16.79 சதவீத சரிவை விற்பனையில் கண்டுள்ளது. மோட்டார்சைக்கிள்களை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தால், கடந்த மாதத்தில் 4,15,099 பைக்குகளை ஹீரோ விற்பனை செய்துள்ளது. இது 2019 டிசம்பரை காட்டிலும் 2.84 சதவீதம் அதிகமாகும்.
கடந்த மாதத்தில் ஹீரோ ஸ்கூட்டர்கள் 32,236 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய 2019 டிசம்பரை காட்டிலும் இது சுமார் 51.91 சதவீதம் அதிகமாகும். கடந்த மாத மொத்த விற்பனையில் 4,25,033 யூனிட் வாகனங்கள் இந்திய சந்தையிலும், 22,032 வாகனங்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் பட்டுள்ளன.
குறிப்பாக கடந்த 2020 டிசம்பரில் ஹீரோவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஏனெனில் 2019 டிசம்பரில் 12,836 யூனிட் வாகனங்களையும், 2020 நவம்பரில் 15,134 யூனிட் வாகனங்களையும்தான் மற்ற நாடுகளுக்கு ஹீரோ ஏற்றுமதி செய்திருந்தது.
கொரோனாவுடன் உலகமே போராடிவரும் நிலையில் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோமொபைல் துறை தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இருந்து மீண்டும் இலாபத்தை பார்க்க ஆரம்பித்துள்ளது. இது 2021ஆம் ஆண்டிற்கும் தொடர விரும்புவதாக ஹீரோ மோட்டோகார்ப் கருத்து தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக