இந்திய டெலிகாம் சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்க முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் போட்டிப்போட்டு வரும் பார்தி ஏர்டெல் கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 763.2 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்த நிலையில் தற்போது லாபத்தை அடைந்துள்ளது.
இதன் மூலம் டெலிகாம் சந்தையில் நீண்ட காலமாக நடந்து வரும் வர்த்தகம் மற்றும் விலை போட்டியில் இருந்து பார்தி ஏர்டெல் மீண்டு லாபத்தை அடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல் Vs ரிலையன்ஸ் ஜியோ
இந்தியா டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் 4ஜி சேவை அறிமுகத்திற்குப் பின் வர்த்தக மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. இதன் கடந்த சில காலாண்டுகளாகவே தொடர் நஷ்டத்தை எதிர்கொண்டு வந்த பார்தி ஏர்டெல் டிசம்பர் காலாண்டில் லாபத்தை அடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல்-ன் லாபம்
2021ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பார்தி ஏர்டெல், இக்காலாண்டில் சுமார் 853.6 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் வர்த்தகப் போட்டியின் காரணமாகச் சுமார் 763.2 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் அளவீடுகள்
மேலும் டிசம்பர் காலாண்டில் பார்தி ஏர்டெல் 6 சதவீத வளர்ச்சியில் சுமார் 26,517.8 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இக்காலாண்டில் ஏர்டெல் 222 கோடி ரூபாய் லாபமும், 26,387 கோடி ரூபாய் வருமானத்தையும் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கணிப்புகளை உடைத்து அதிக லாபத்தை அடைந்துள்ளது
4ஜி வாடிக்கையாளர்கள்
டிசம்பர் காலாண்டில் பார்த் ஏர்டெல் 4ஜி சேவை பிரிவில் புதிதாக 12.9 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றதன் மூலம் சுமார் 165.6 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும் இக்காலாண்டு முடிவில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மொத்த எண்ணிக்கை 336 மில்லியனாக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ செப்டம்பர் காலாண்டை விடவும் 15.5 சதவீதம் வளர்ச்சியில் டிசம்பர் காலாண்டில் சுமார் 3,489 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது. இது ஏர்டெல் நிறுவனத்தின் லாபத்தை விடச் சுமார் 4 மடங்கு அதிகமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக