இரட்டை அடுக்கு பேருந்துகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு தீவிர முயற்சியில் குறிப்பிட்ட மாநில அரசு ஒன்று தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலைக் கீழே காணலாம்.
1990களில் இந்தியாவின் குறிப்பிட்ட நகர சாலைகளில் கலக்கி வந்த பொது போக்குவரத்து வாகனங்களில் டபுள் டக்கர் (இரட்டை அடுக்கு) பேருந்துகளும் ஒன்று. பல்வேறு காரணங்களுக்காக இந்த ரக பேருந்துகளை மாநில அரசுகள் கைவிட்டன. மேலும், பெரும்பாலான டபுள் பேருந்துகள் வாகன அழிப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிலவற்றை தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த இரட்டை அடுக்கு பேருந்துகளை விரைவில் ஓர் மாநில அரசு, தனது குறிப்பிட்ட நகரத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 20 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் தெலங்கானா மாநில அரசு இப்பேருந்துகளை மீண்டும் பயன்பாட்டில் களமிறக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தின் குறிப்பிட பகுதிகளில் மட்டும் இப்பேருந்துகளை மக்கள் பயன்பாட்டில் ஈடுபடுத்தத் திட்டமிட்டிருக்கின்றது.
முதல் கட்டமாக 25 யூனிட் ஏசி அல்லாத இரட்டை அடுக்கு பேருந்துகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்-6தரம், மத்திய மற்றும் மோட்டார் வாகன விதிகள் ஆகியவற்றிற்கு உட்பட்ட டீசல் வாகனமாகவே இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன. இதற்கான வரைமுறையையே தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (டிஎஸ்ஆர்டிசி) அறிவித்துள்ளது.
மேலும், உள்நாட்டு உதிரிபாகம் மற்றும் தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பதும் இந்த டெண்டரின் முக்கிய அறிவிப்பாக இருக்கின்றது. ஆகையால், இரட்டை அடுக்கு பேருந்துகள் முழுமையான உள்நாட்டு உற்பத்தியாகவே பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, இரட்டை அடுக்கு பேருந்துகள் இயங்குவதற்கான சாதக வழித் தடங்களை ஆராய தனிக்குழுவினை மாநில அரசு உருவாக்கியிருக்கின்றது. இந்த குழு ஹைதராபாத் மட்டுமின்றி செகந்திராபாத் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றது.
இவர்களின் ஆய்வைத் தொடர்ந்து இரட்டை அடுக்கு பேருந்துகள் இயங்குவதற்கு எந்த பகுதிகள் போதிய வசதிகள் கொண்டிருக்கின்றன என்பது பற்றிய தகவல் வெளியிடப்பட்டு, அதற்கேற்ப அந்தந்த பகுதிகளில் டபுள் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன.
பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க நேர்ந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மாநிலத்தின் ஐடி பிரிவு அமைச்சர் கேடி ராம ராவ் எடுத்த முயற்சியின் அடிப்படையிலேயே இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் மீண்டும் மாநிலத்தில் புத்துயிர் பெற இருக்கின்றன.
இதனால் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பெரும் பயனடைவார்கள் பெரிதும் நம்பப்படுகின்றது. குறிப்பாக, படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் அவலநிலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக