Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 பிப்ரவரி, 2021

ராவணனின் சகோதரன் குபேரன் எப்படி செல்வங்களின் அதிபதி ஆனார்? - சிவனின் அருளைப் பெற்றது எப்படி?

இந்து சமயத்தில் பல கடவுள்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளும், அவர்களுக்கான புராண கதைகளும் உள்ளன. அந்த வகையில் செல்வங்களின் அதிபதியாக விளங்கக் கூடியவர் குபேரன். இராவணனின் சகோதரராக இருந்த குபேரன் எப்படி தெய்வமாக போற்றப்படுகிறார். அவருக்கு எப்படி செல்வங்கள் வந்தன என்ற புராண கதையை இங்கு பார்ப்போம்...

குபேரனின் தோற்றம்

வெள்ளை குதிரையை வாகனமாக கொண்ட இவர் மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சியும், அருளக்கூடியவர். கையில் தாமரை மலரை ஏந்தியும், வரத முத்திரை காடி வருபவர்களுக்கு வற்றாத செல்வத்தை அள்ளித் தருபவர்.

இவரது மடியில் கீரிப்பிள்ளை அமர்ந்து இருக்கும். வியாழக்கிழமைகளில் மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் ‘குபேர காலம்’ என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் இறைவனை வணங்கினால் குபேரனின் அருளாக செல்வ செழிப்பை பெறலாம்.

குபேரன் காயத்ரி மந்திரம்

ஓம் யக்ஷராஜாய வித்மஹே

வைஸ்ரவ ணாய தீமஹி!

தந்நோ குபேர ப்ரசோதயாத்

குபேரனின் பிறப்பு

பிரம்மனின் மகன் புலஸ்திய முனிவருக்கு பிறந்தவர் விச்ரவசு. இவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவியான இலவிதா சப்தரிஷிகளில் ஒருவரான பாரத்துவாசரின் மகள். விச்ரவசுவுக்கும் இலவிதாவுக்கும் பிறந்தவர் குபேரன். அவர் வைஸ்ரவணன் என அழைக்கப்பட்டார்.

இரண்டாவது மனைவி அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசிக்கு பிறந்தவர்கள் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன் ஆகியோர்.

இராவணனிடம் தோற்ற குபேரன்

இலங்கையை ஆண்டு வந்த வைஸ்ரவணன் செல்வ செழிப்புகளுடன், மக்களை மிக சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்.

ராவணன் கடும் தவம் செய்து வரங்கள் வாங்கி, அந்த பலத்துடன் குபேரனுடன் மோதி அவரை தோற்கடித்து இலங்கையைக் கைப்பற்றினான். நாட்டை இழந்த வைஸ்ரவணன் தவசியாக அலைந்து திரிந்து கொண்டிருந்தான். சிவபக்தன் என்பதால் சிவ வழிபாடு செய்து வந்தார்.

அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பிய பெற்றோர்கள் பெண் தேட தொடங்கினர். அவர்கள் பார்த்த பெண்கள் வைஸ்ரவணனுக்கு பிடிக்கவில்லை. அதனால் ஊர் ஊராக சென்று சிவாலயத்தில் வேண்டும் போது கூட நல்ல குணவதியாகவும், பேரழகு கொண்ட பெண் வேண்டுமென இறைவனை வேண்டி வந்தான்.

கடைசியாக காசி மாநகரை அடைந்த அவருக்கு அங்கு அமைதியும், பெருமையும் கிடைக்க அங்கேயே தங்கி விட்டார். மேலும் அங்குள்ள விஸ்வநாதரைக் கண்டதும் அவரையே துதிப்பதாக எண்ணம் மாறியது

பெண் தேடி அழைந்த குபேரன் செல்வ அதிபதி ஆனது எப்படி?

பெண் தேடி அழைந்து அதன் படி வேண்டி வந்த வைஸ்ரவணன், முழு மனதாக சிவ தியானத்தில் மூழ்கிவிட்டான். ஒன்றல்ல இரண்டல்ல 800 ஆண்டுகள் கடும் தவம் புரிந்ததாக புராணங்கள் கூறுகின்றது.

இதற்கிடையே பல இடையூறுகள் தாண்டி வைஸ்ரவணன் எந்த கோரிக்கையும் இன்றி இறைவனின் பெயரைச் சொல்லி தவம் மேற்கொண்டான்.

எந்த கோரிக்கையும் இல்லாததால் தேவர்களும் அவர்களுக்கு எந்த தீங்கும் நேராது என நினைத்து எந்த தொந்தரவும் செய்யவில்லை. ஆனால் வைஸ்ரவணனின் கடும் தவத்தால் எழுந்த அக்னிச் சூடு கைலாயம் வரை சென்றது.

இனியும் பக்தனுக்கு வேண்டியதை தராமல் இருந்தால் சரியல்ல என நினைத்து கிளம்பிய சிவபெருமானுடன் உமாதேவியும் சேர்ந்து எதையும் வேண்டாத எளிய பக்தனைக் காண புரப்பட்டார்.

கடும் தவம் செய்த வைஸ்ரவணன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என கேட்க, தனக்கு எதுவும் வேண்டாம் உங்களின் அருள் ஒன்றே போதும் என சொல்ல, அவருக்கு இழந்த இலங்கைக்கு பதிலாக அழகாபுரி பட்டணத்தை உருவாக்கி அளித்தார்.

குபேர ஆட்சி

குபேரனை அழகாபுரி அரசனாக்கியதோடு, எட்டுதிக்குகளில் வடக்கு திசைக்கு அதிபதியாக்கினார். எதையும் எதிர்பாராமல் தவம் செய்ததால் அவரிடம் உலகத்து நிதிகளை எல்லாம் அவரை நிர்வகிக்க ஒப்படைத்தார் ஈசன். மேலும் அவருக்கு சித்திரரேகை எனும் மங்கையையும் மணமுடித்து வைத்தார்.

சிவ பெருமானின் பிரியமான நண்பராக மாறியதால் குபேரனை ‘சிவசகா’ என அழைக்கப்படுகிறார்.

மனைவி சித்திரரேகையுடன் அமைர்ந்து அருள் வழங்கக் கூடிய குபேரனுக்கு நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

நவநிதிகளுக்கும் அதிபன்

 

பத்மம் நிதி

மஹாபத்ம நிதி

மகர நிதி

கச்சப நிதி

குமுத நிதி

நந்த நிதி

சங்க நிதி

நீலம நிதி

பத்மினி நிதி என நவநிதிகளை பாதுகாக்கக் கூடியவர். அதில் பத்மம் நிதி, சங்க நிதி ஆகிய தெய்வ மகளிருக்கு கணவரும் இவர்தான்.

அதுமட்டுமல்லாமல் இந்திர லோகத்துக்கு நிதி அமைச்சராக பொறுப்பேற்ற குபேரனை, செல்வங்களின் கடவுளான மகாலட்சுமி தேவிக்கு உதவியாக நியமித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக