Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

திரிபுராந்தகர் சுவாமி திருக்கோவில் - திருவிற்கோலம் - கூவம்

 Thiripuranthakar Temple,THIRUPURANTHAGAR temple,THIRUVIRKOLAM,THIRUPURANTHAGAR  SWAMY ,Thiripuranthakeswarar temple,Sri Thiripuranthakeswarar temple, Thiripuranthakar Temple,Tripuranthaka Swamy Temple,Thiruvirkolam,Thiruvallur  district ...

இறைவர் திருப்பெயர் : திருவிற்கோல நாதர், திரிபுராந்தகேஸ்வரர்,தீண்டாத் திருமேனி நாதர்
இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி அம்பாள்
தல மரம் : - வில்வம்
தீர்த்தம் : - அக்னி தீர்த்தம்
வழிபட்டோர் : முஞ்சிகேசர், கார்கோடர் , தேவர்கள்
தேவாரப் பாடல்கள் :- திருஞானசம்பந்தர்

மூலவர் தீண்டாத் திருமேனி; சுவாமியின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயத்தழும்பு இருப்பதால், லிங்கத்தை தொட்டு பூஜை செய்வதில்லை. தலைக்கு மேல் பச்சைக் கற்பூரம் மட்டும் தூவி, பாலபிஷேகம் செய்கின்றனர்.

இப்பகுதியில் மழை வரும்போது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சிவப்பு நிறமாகவும் மாறுவதாக சொல்கிறார்கள்.

சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது "அக்னி தலம்' ஆகும்.

தல வரலாறு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 247 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர சம்ஹாரத்துடன் சம்பந்தம் கொண்டதாகும். சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட போது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு கிளம்பாததால் சிவன் ஏறிய தேரின் அச்சு முறிந்து விட்டது. பிறகு விநாயகர் வழிபாடு செய்து புறப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் வில் கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் திருவிற்கோலம் என்ற பெயரில் ஒரு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர். இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது. திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்து தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களை காப்பதற்காக சிவன் அசுரர்களை அழிக்க ஒரு வில்லை ஏந்திக்கொண்டு தேரில் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதிலாவது நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி.

இது சிவனுக்கும் பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன வேண்டும்? என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர், அச்சிறுப்பாக்கம் தலத்தில் தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார். அப்போது தேரின் கூரம் (ஏர்க்கால்) இத்தலத்தில் முறிந்து நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். பின், விநாயகர் தேர் அச்சை சரிசெய்ய, சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். கூரம் (ஏர்க்கால்) பூமியில் பதிந்த இடத்தில் சிவன் சுயும்புவாக எழுந்தருளினார். கூரம் முறிந்து நின்ற இடமென்பதால் இத்தலம் "கூரம்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் "கூவம்' என்று மருவியது.

திரிபுராந்தக வதத்திற்கு சென்ற சிவன் என்பதால் சுவாமி "திரிபுராந்தகர்' என்றும், அம்பாளை "திரிபுராந்தகி அம்மன்' என்றும் பெயர் பெற்றுள்ளனர். சக்கர அச்சு முறிந்து நின்றபோது, போருக்கு கையில் வில்லுடன் சென்ற சிவன், தேரில் இருந்து இறங்கி கையில் வில் ஏந்திய கோலத்திலேயே இங்கு நின்றார். எனவே, இங்குள்ள சிவனுக்கு "திருவிற்கோலநாதர்' என்றும், தலத்திற்கு "திருவிற்கோலம்' என்றும் பெயர் உள்ளது. சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் போது மட்டும் சுவாமி வில்லை ஏந்தியபடி காட்சி தருகிறார். சிவனின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

முஞ்சிகேசர், கார்கோடர் என்ற இரு முனிவர்களின் வேண்டுதலுக்காக சிவன், திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவ நடனம் ஆடி காளியின் செருக்கை அடக்கினார். அவளிடம் சிவன், தான் இத்தலத்தில் ரக்ஷா (காத்தல்) நடனம் ஆடப்போவதாகவும், அப்போது தன்னை தரிசித்து கோபம் அடங்கி மகிழும்படி கூறினார். அதன்படி சிவன் இத்தலத்தில் காத்தல் நடனம் ஆடியபோது, காளி சுவாமியை தரிசித்து அமைதியடைந்தாள்.

 

இவள் இக்கோயிலுக்கு அருகில் சற்று தூரத்தில் தனிச்சன்னதியில் "தர்க்க மாதா' என்ற பெயரில் அருளுகிறாள். சிவனுடன், தர்க்கம் புரிந்து அவருடன் போட்டியிட்டவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.


கோவில் அமைப்பு:


தெற்கு திசையிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் தான் இவ்வாலயத்தின் பிரதான வாயிலாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியாக அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகள் உள்ள பகுதிக்குள் செல்லலாம். முதலில் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியும், அதையடுத்து திரிபுராந்தக சுவாமி சந்நிதியும் கிழக்கு நோக்கு அமைந்துள்ளன.

சுவாமி சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வர பிரகாரம் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகளுக்கு தனித்தனியே கொடிமரம், பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது.

சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் வலதுபுறம் தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி உள்ளது. வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தட்சினாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களும் பார்க்க வேண்டியவை. சுவாமி கருவறை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பமும் கலையழகுடன் உள்ளது. மஹாவிஷ்னு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் ஜோதி உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் லிங்கோத்பவர் சிற்பத்தில் காணலாம். பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன.

இந்த கோவிலிலுள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் (கூபாக்கினிதீர்த்தம் ) எனப்படும். ஆலய அர்ச்சகர்கள் இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே தினசரி பூஜைகள் செய்வார்கள். கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 4 கி.மி தொலைவிலுள்ள கூவம் ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரால் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை அர்ச்சகர்கள் கடைபிடித்து வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்றேனும் இவ்வாறு கூவம் ஆற்று நீர் அபிஷேகத்திற்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பகல்நேர அபிஷேகம் செய்ய அருகில் உள்ள பிஞ்சவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பயன்படுத்தப்படுகிறது.

சிறப்புக்கள் :


திரிபுராந்தகரிடம் வேண்டிக்கொண்டால் ஆளுமைத் திறன் வளரும், தீய குணங்கள், ஆணவம், துன்பங்கள் நீங்கும்,

புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.

அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


போன்:
  - 94432 53325

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக கூவம் செல்கிறது. கூவம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 1கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.

மூலவர் தீண்டாத் திருமேனி; சுவாமியின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயத்தழும்பு இருப்பதால், லிங்கத்தை தொட்டு பூஜை செய்வதில்லை. இப்பகுதியில் மழை வரும்போது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சிவப்பு நிறமாகவும் மாறுவதாக சொல்கிறார்கள்.  சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது "அக்னி தலம்' ஆகும்.  திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக