
வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பிரபல ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் 2022 மாடல் க்ரோம் மினி பைக் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது.
ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, அதிக திறன் வாய்ந்த மற்றும் தொழில்நுட்பங்கள் அடங்கிய இருசக்கர வாகனங்களை உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது.
இந்த நிலையில், ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் இருக்கும் வாகன ஆர்வலர்களையும் கவரும் வகையில் ஓர் விநோத உருவம் கொண்ட இருசக்கர வாகனத்தை நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. க்ரோம் (Grom) என பெயர் கொண்ட மோட்டார்சைக்கிளையே நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இப்பைக்கை 2022ம் ஆண்டிற்கு ஏற்ப உருவாக்கியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகையால், இந்த விநோத உருவம் கொண்ட வாகனம் 2022 ஆண்டிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வித்தியாசமான உருவத்தைக் கண்டு பலர் இப்பைக்கை மங்கி ஸ்டைல் (குரங்கு தோற்றம்) மோட்டார்சைக்கிள் என கூற தொடங்கியிருக்கின்றனர்.
விநோத உருவத்திற்கு ஏற்ப வித்தியாசமான நிறத் தேர்வை இப்பைக்கில் ஹோண்டா வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், பியர்ல் வெள்ளை நிறத்துடன் டிரெண்டிங்கான கிராஃபிக்குகள் இவ்வாகனத்தில் இடம்பெற இருக்கின்றன. இதேபோன்று இன்னும் சில விநோத நிறம் மற்றும் ஸ்டிக்கர்களுடனேயே இவ்வாகனம் விற்பனைக்கு வர இருக்கின்றது.
அதாவது, ராணி தேனி மஞ்சள் மற்றும் மேட் கருப்பு ஆகிய நிறங்களில் இது விற்பனைக்கு வரும். இதுதவிர அதிக சொகுசான பயணத்தை வழங்கும் வகையில் முன் மற்றும் பின் பக்கத்தில் சிறப்பு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த சஸ்பெஷனைக்கூட விட்டு வைக்காமல் ஸ்பெஷல் தங்க நிறத்தால் அலங்கரித்திருக்கின்றது ஹோண்டா.
தொடர்ந்து, வீல் மற்றும் பிரேக் காலிபர்களையும் இச்சிறப்பு நிறத்தால் நிறுவனம் அலங்கரித்திருக்கின்றது. இந்த பைக்கை ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் அல்லாத மாடல் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதில், ஏபிஎஸ் கொண்ட பைக்கில் மட்டும் கூடுதல் நிற தேர்வாக மிட்டாய் நீல நிறம் வழங்கப்பட இருக்கின்றது.
இது ஓர் சிறிய ரக பைக் என்பதால் 5.5 அல்லது 6 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கே இடம்பெற இருக்கின்றது. தொடர்ந்து, க்ரோம் பைக்கில் பல்வேறு தகவல்களை வழங்கும் வகையில் எல்சிடி திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன்மூலம், பெட்ரோலின் அளவு, மின் விளக்குகளின் இயங்கு நிலை மற்றும் பிற முக்கிய தகவல்களை ரைடர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் 2020 வெர்ஷன் சுமார் 3,399 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத் தகுந்தது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 2.49 லட்ச ரூபாய்க்கு இந்த பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு கிடைத்து வந்தது. ஆகையால், 2022 வெர்ஷன் இதைவிட சற்று கூடுதல் விலையிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. குறிப்பாக, க்ரோம் பைக்கின் இந்திய வருகை பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக