Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 16 மார்ச், 2021

ரொம்ப சந்தோஷம்... ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

ரொம்ப சந்தோஷம்... ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.


இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல பிரபலமாகி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விலக்கு போன்ற நடவடிக்கைகள் அடக்கம்.


இந்த வகையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களுக்கு, அம்மாநில மின்சார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி மேற்கண்ட கட்டிடங்களில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 5 சதவீத பார்க்கிங் இடவசதியை ஒதுக்க வேண்டும்.

100 அல்லது அதற்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்த கூடிய இடவசதியை கொண்டிருக்கும் அனைத்து கட்டிடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மேற்கண்ட கட்டிடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பார்க்கிங் இடவசதியை ஒதுக்கும் அதே நேரத்தில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் வசதியையும் செய்து தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என டெல்லி அரசு நம்புகிறது. தங்களது பார்க்கிங் ஏரியாவில் மேற்கண்ட மாற்றங்களை செய்வதற்காக மேற்கண்ட கட்டிடங்களின் நிர்வாகங்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த மாற்றங்களை செய்ய வேண்டும் என உத்தரவிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேற்கண்ட கட்டிடங்களில் பொருத்தப்படும் ஒவ்வொரு சார்ஜிங் பாயிண்ட்டிற்கும், டெல்லி மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், 6 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில், மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் டெல்லி முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.


முன்னதாக ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், ஹோட்டல்கள் மற்றும் இதர கட்டிடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டும் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பலர் திட்டமிட்டு வருகின்றனர்.


ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால், தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாகனங்களையே பயன்படுத்தும் நிலை பலருக்கு உள்ளது. எனவேதான் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, டெல்லி மாநில அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே காற்று மாசுபாடு பிரச்னையால், தலைநகர் டெல்லிதான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் தீவிரமாக உள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக