Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 23 மார்ச், 2021

வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில் - கோயில்வெண்ணி

 Venni Karumbeswarar Temple : Venni Karumbeswarar Venni Karumbeswarar Temple  Details | Venni Karumbeswarar - Koil Venni | Tamilnadu Temple |  வெண்ணிகரும்பேஸ்வரர்

மூலவர் : வெண்ணிகரும்பேஸ்வரர், (திரயம்பகேஸ்வரர், இரசபுரீஸ்வரர், வெண்ணிநாதர்)
அம்மன்/தாயார் : அழகிய நாயகி (சவுந்தர நாயகி)
தல விருட்சம் : நந்தியாவர்த்தம்
தீர்த்தம் : சூரிய, சந்திர தீர்த்தங்கள்
வழிபட்டோர் : கரிகாற்சோழன், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், முசுகுந்த சக்கரவர்த்தி, சங்ககாலப் புலவர் - வெண்ணிக் குயத்தியார், சூரியன், சந்திரன்,
தேவாரப் பாடல்கள் :- திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 102வது தலம்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 165 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையையும், ரவையையும் சம அளவில் கலந்து பிரகாரத்தை வலம் வந்து எறும்புக்கு உணவாக இடுகிறார்கள். இதனால் சர்க்கரை நோய் குணமாகிறது என்பது ஐதீகம்.

மிகவும் பழமையான இத்தலத்து இறைவனை 4 யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தலவரலாறு கூறுகிறது. பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது.

இறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்புக்கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு:

வினைதீர்க்கும் வெண்ணித் தொன்னகர், வெண்ணியூர் என்று அழைக்கப்பட்ட ஊர், இன்று கோவில் வெண்ணி என்ற சிற்றூராக இருக்கிறது. பழங்காலத்தில் இந்தத் தலம் இருந்த இடம் கரும்புக் காடாக இருந்தது. ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரையாக இங்கு வந்தனர். அப்போது கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனி இருப்பதை கண்டு அதனை பூஜித்து வழிபட்டனர். அவர்களில் ஒருவர், இங்குள்ள தல விருட்சம் கரும்பு என்றும், மற்றொருவர் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவட்டம் என்றும் வாதிட்டனர். அப்போது இறைவன் அசரீரியாக தோன்றி, ‘எனது பெயரில் கரும்பும், தல விருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும்’ என்று அருளினார். அன்று முதல் இத்தல இறைவன் கரும்பேசுவரர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

பெயருக்கு ஏற்றாற்போலவே, சுயம்பு உருவான இத்தல லிங்கத்திருமேனியின் பாணத்தில், கரும்பு கட்டாக இருப்பது போன்ற தோற்றத்தில் மேடு பள்ளமாக காட்சி தருவது பெரும் சிறப்பம்சமாகும்.

வெண்ணி என்பது வெண்ணிற மலர்கள் பூக்கும் நந்தியாவட்டம் செடியாகும். இதுதான் இத்திருக்கோவிலின் தல விருட்சமாகும். சிவனுக்குரிய அர்ச்சனை மலர்களில் மிக முக்கியமானது இந்த மலர். சுவாமியின் பெயரும், ஊரின் பெயரும் மலரின் பெயராலேயே ‘வெண்ணி’ என்று பெயர் பெற்றது.

‘வெண்ணிக் கரும்பே’ என்று போற்றிப் பாடியுள்ள சுந்தரர், ‘பிணி தீர்க்கும் பெருமானே...’ என்றும் துதிக்கின்றார்! ஆம்... கரும்பேஸ்வரர் கரும்புக்கட்டு வடிவிலிருந்து பக்தர்களின் சர்க்கரை நோயை அகற்றுகின்றார்!

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், வெண்ணி கரும்பேசுவரர் சன்னிதிக்கு வந்து, வெள்ளை சர்க்கரையும், ரவையும் கலந்து, பிரகாரத்தைச் சுற்றி போட்டு விட்டு வலம் வர வேண்டும். அதனை எறும்புகள் சாப்பிட்டு விடுவதால், போட்ட சர்க்கரை காணாமல் போனது போல, நம் உடம்பில் உள்ள சர்க்கரை நோயும்நீங்கி விடும் என்பது இந்த ஆலயத்தின் ஐதீகமாக உள்ளது.அகத்தியர் நூல் ஒன்றிலும் இந்த உண்மை கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

யுகம் கண்ட மூர்த்தி இவர் என்பதுடன், சூரசம்ஹாரம் முடிந்து, முருகன்-தேவசேனா திருமணத்திற்கு முன்பு இத்தலத்திற்கு முதல் முகூர்த்த ஓலையை முதலில் அனுப்புங்கள் என்று பூத கணங்களுக்கு உத்தரவு பிறப்பித்தாராம், சிவபெருமான்.

சங்க காலத்தில் இவ்வூரில் வெண்ணிக்குயத்தியார் என்ற பெரும்புலவர் அவதரித்தார். இவர் பாடிய புறநானுற்றுப்பாடல் கரிகாற் சோழனின்
 வெண்ணிப்போரைக் கூறுகிறது. கரிகாற்சோழன் தன் 18வது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேர, பாண்டிய மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றுள்ளான். கரிகாற்சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றியாக கல்வெட்டு கூறுகிறது. அவன் பேரரசனாக முடிசூட்டிக் கொண்ட இடம், ‘வெண்ணிப்பறந்தலை’ என்று இலக்கியங்களால் புகழப்பட்ட இன்றைய கோவில்வெண்ணி என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோவில் அமைப்பு:

பசுமையான கரும்புக்காடும், நெல் வயல்களும் சூழ்ந்த இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு ஒரு மரத்தடியில் கரிகாலன் இங்கு நடந்த போரின் போது வழிபட்டதாகச் சொல்லப்படும் பிடாரி அம்மன் திருஉருவம் காணப்படுகிறது. அதற்கு சற்றுதூரம் சென்றால் தீர்த்தகுளம் உள்ளது.

கிழக்கு நோக்கிய கோயில். எதிர்புறம் சூரியதீர்த்தம், மூன்று நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன.

கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் வெண்ணிக் கரும்பேசுவரர் அருள்பாலிக்கிறார். கருவறை அகழி அமைப்புடையது. சிவலிங்கத் திருமேனியின் பாணப் பகுதி ஒரு கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து கட்டியது போல் காணப்படுகிறது. அதே பெருமண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் சவுந்தர நாயகி என்னும் அழகிய அம்மை நின்ற கோலத்தி காட்சி தருகிறார். இறைவன் சன்னிதிக்கும், இறைவி சன்னிதிக்கு இடையே நடராஜ சபை இருக்கிறது. இத்தல அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது.

ஒரே ஒரு வெளி பிரகாரம் மட்டும் உள்ள இவ்வாலயத்தில் மேற்கு மண்டபத்தில் கன்னிமூலை கணபதி, வள்ளி– தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோரது சன்னிதிகள் இருக்கின்றன. கோவிலின் வடகிழக்கு மூலையில் பைரவர், நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றனர். பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேசர் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன. மேலும் சோழர் கால கல்வெட்டுகளும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. குறிப்பாக ராஜராஜ சோழன், குலோத்துங்கச் சோழன் ஆகியோரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

சிறப்புக்கள் :

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையையும், ரவையையும் சம அளவில் கலந்து பிரகாரத்தை வலம் வந்து எறும்புக்கு உணவாக இடுகிறார்கள். இதனால் சர்க்கரை நோய் குணமாகிறது என்பது ஐதீகம்.

திருவிழா:
நவராத்திரி 9 நாட்களும் திருவிழா கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது.

போன்:  -

குருக்கள் 9944169638, 9976813313

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு தஞ்சாவூரில் இருந்து சாலியமங்கலம், அம்மாபேட்டை வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில் சாலியமங்கலத்தை அடுத்து வரும் கோயில் வெண்ணி நிறுத்தத்தில் இறங்கி பிரதான சாலையில் இருந்து பிரியும் ஒர் கிளைச் சாலையில் சுமார் 1 கி மி. சென்று இத்தலத்தை அடையலாம்.

தஞ்சாவூரில் இருந்து சுமார் 26 கி.மி. தொலைவிலும், நீடாமங்கலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. நொலைவிலும் உள்ளது.

பூஜைப் பொருட்கள், சர்க்கரை, ரவை மெயின் ரோட்டில் ஆலயத்தின் எதிர்புறம் கடையில் கிடைக்கும் முன்பே வாங்கி செல்வது நல்லது .

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையையும், ரவையையும் சம அளவில் கலந்து பிரகாரத்தை வலம் வந்து எறும்புக்கு உணவாக இடுகிறார்கள். இதனால் சர்க்கரை நோய் குணமாகிறது என்பது ஐதீகம். மிகவும் பழமையான இத்தலத்து இறைவனை 4 யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தலவரலாறு கூறுகிறது இறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்புக்கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார். காற்சோழன் பேரரசனாக முடிசூட்டிக் கொண்ட இடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக