Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 9 மார்ச், 2021

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் - தாயுமானவர் - திருக்கோயில் - திருச்சி

 Thayumanavar Swami Temple,Thayumanavar Temple,Thayumanava Swami Temple, Trichy,Rock Fort,Malaikottai Uchipillayar Temple,Malaikottai,Malaikottai  Uchipillaiyar Temple,Rockfort,Trichy,Thayumanava Swami Temple,Trichy, Thayumanavar Temple, Rock Fort,Trichy ...

இறைவர் திருப்பெயர் :தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர், செவ்வந்திநாதர்
இறைவியார் திருப்பெயர் : சுகந்த குந்தளாம்பிகை, மட்டுவார் குழலியம்மை
தல மரம் : - வில்வம்
தீர்த்தம் : -
 பிரம்ம தீர்த்தம், காவேரி
வழிபட்டோர் : அருணகிரியார், தாயுமானவர், சாரமா முனிவர், விபீஷணன், விஜயரகுநாத சொக்கர் என்னும் மன்னர், அகத்தியர், அனுமன், அர்ச்சுனன், ராமர், இந்திரன், சப்தரிஷிகள், பிரம்மா, ஜடாயு
தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர், தாயுமான அடிகள்

இத்தலவிநாயகர் செவ்வந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன.பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.

கோட்டையுடன் கம்பீரமாக காட்சிதரும் கோவில்

திக்கற்றவர்களுக்கு இத்தலத்து ஈசன், தாயாக இருந்து அரவணைத்துக் காக்கிறார். தாயை இழந்தவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை. 

ரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். சுகப்பிரசவம் ஆவதற்கு இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும்.

குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் இத்தலத்தில் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

தும்பிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் விநாயகர் என மூன்று வடிவங்களில் காட்சியளிப்பது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம்.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்
தல வரலாறு:

திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த உச்சி பிள்ளையார் கோவிலில் 100 கால் மண்டபம், விமானம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன.

மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும். மலைக் கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இப்படி வடிவமைக்கப்பட்ட கோயிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது.
திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.

இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.

விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், இரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார்.

சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், இரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் கொட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது. இக்கதைக்கேற்றபடி, இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைக் காணலாம்.


தாயுமானவர் திருக்கோயில் தல வரலாறு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும்.

தாயுமானவர் திருக்கோயிலுக்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

தாயுமானவர்:-

இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். இத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வ்ரமுடியவில்லை.இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாக இந்த சிவஸ்தலம் விளங்குகிறது.

கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்ந்தியில் வாழைத்தாரைக் கட்டி அதை அர்ச்சகர் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக விநியோகிப்பார்கள்.

வாயுபகவான், ஆதிசேஷனுக்கிடைய தங்களில் யார் பெரியவர் என போட்டி வந்தது. ஆதிசேஷனை மீறி, கைலாய மலையை வாயு பகவான் பெயர்ப்பது என அவர்களுக்கு போட்டி வைத்துக்கொண்டனர். அப்போது கைலாயத்தின் ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்தது.

இம்மலையில், மூன்று தலைகளுடைய "திரிசிரன்' என்னும் அசுரன், சிவனை வேண்டி தவமிருந்தான். பல்லாண்டுகள் தவமிருந்தும் சிவன், அவனை சோதிப்பதற்காக காட்சி தரவில்லை. எனவே, அசுரன் தனது இரண்டு தலைகளை அக்னியில் போட்டுவிட்டு, மூன்றாவது தலையையும் போடத்துணிந்தான். அப்போது அவனுக்குக் காட்சி தந்த சிவன், இழந்த இரு தலைகளை மீண்டும் பெற அருள் செய்தார். பின்பு, அசுரனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.

அசுரனின் பெயராலேயே, "திரிசிரநாதர்' என்று பெயர் பெற்றார். தலம் "திரிச்சிராமலை' என்று அழைக்கப்பட்டு, திருச்சி என மருவியது.

உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது.

வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, "செவ்வந்தி நாதர்' என்ற பெயரும் உண்டு.

சுகப்பிரசவ வழிபாடு: மட்டுவார்குழலி அம்பாள் இவளுக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயருண்டு. வாசனையுடைய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள்.கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையை கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

வாழைத்தார்: குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் இத்தலத்தில் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.வாழை மரம், எப்போதும் அழிவில்லாமல் தழைத்துக் கொண்டே இருக்கும் தன்மையுடையது. இவ்வாறு வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு படைக்கிறார்கள். வாழையை மூலஸ்தானத்தில் வைத்து பூஜித்து, பின்பு அதை பிரசாதமாகக் கொடுத்துவிடுகிறார்கள்.

இத்தலத்தில் மலையே சிவனாகக் கருதி வழிபடப்படுவதால், மலைக்கு நேரே அடிவாரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் பெரிய நந்தி சிலை அமைத்து, தனிக்கோயில் எழுப்பியுள்ளனர். நந்திக்கோயில் என்றழைக்கப்படும் இங்கு, பிரதோஷத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நந்திக்கு பின்புறத்தில், மலையின் அளவிற்கேற்ப சுமார் 35 அடி உயரத்தில் கல் தீபஸ்தம்பம் ஒன்று இருக்கிறது.


கோவில் அமைப்பு:


இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குப் பார்த்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலையில் உள்ள பாறைகள் மீது மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் பழங்கால கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. முதல் தளத்தில் இறைவி மட்டுவார் குழலம்மை சந்நிதியும், இரண்டாம் தளத்தில் இறைவன் தாயுமானசுவாமியின் சந்நிதியும் அமைந்துள்ளன. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் மேற்குப் பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனிகளில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்றாகும். லிங்கத் திருமேனி சுமார் 5 அடி உயரம் உள்ளது.

கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்மனால் குடையப் பெற்ற இரண்டு குடவரைக் கோவில்கள் இங்கு உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் இருக்கிறது.

மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும். இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.

இத்தலத்தில் முருகப் பெருமான் குத்துக்குமாரசாமியாக பன்னிரு திருக்கரங்களும், ஆறு திருமுகமும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி, தெய்வசேனா தேவியர் இருபுறமும் விளங்குகின்றனர். மற்றொரு சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இத்தலத்து முருகர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றவராவார். திருப்புகழில் 16 பாடல்கள் உள்ளன.

கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது.

சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது.

சிவன் சன்னதி பிரகாரத்தில் மகாலட்சுமி, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது சிலை மரத்தில் செய்யப்பட்டதாகும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவளுக்கு பால், தேன், குங்குமப்பூ சேர்ந்த கலவையை படைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். வெள்ளி தோறும் இவளுக்கு "ஸ்ரீவேத சூக்த மந்திர ஹோமம்' நடத்தப்படுகிறது. மற்றோர் சன்னதியில் மரத்தில் செய்யப்பெற்ற, துர்க்கையும் காட்சி தருகிறாள்.

பிரகாரத்தில் அருகில் சாரமா முனிவர் வணங்கியபடி இருக்க விஷ்ணு துர்க்கை எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் இவளுக்கு ராகு காலத்தில் செவ்வரளி மாலை அணிவித்து, பாயசம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

சித்திரை பிரம்மோற்ஸவத்தின் 5ம் நாளில், சிவன் ரத்னாவதிக்கு பிரசவம் பார்த்த வைபவம் நடக்கிறது. அன்று, சோமாஸ்கந்தர் அருகில் கர்ப்பிணிப்பெண் ரத்னாவதியின் சிலையை வைக்கின்றனர். அப்போது, திரையிட்டு சிவன், ரத்னாவதி இருவரையும் மறைத்துவிடுவர். இவ்வேளையில் ரத்னாவதியின் மடியில் குழந்தை அமர வைத்து அலங்கரித்து, பின்பு திரையை விலக்கி தீபராதனை காட்டுவர். இந்த வைபவத்தின் போது, பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கும், மருந்து மற்றும் தைலமே பிரசாதமாக தரப்படும். இதைச் சாப்பிடும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

கோயில் கொடிமரத்திற்கும், பலி பீடத்திற்கும் இடையில் கையில் சங்கு வைத்து ஊதியபடி சிவகணம் ஒன்று இருக்கிறது. இதை, "சங்குச்சாமி' என்று அழைக்கிறார்கள். இவர் எப்போதும் சிவனின் பெருமைகளை சங்கு ஊதியபடி சொல்லிக் கொண்டிருப்பாராம். எனவே இவர், கையில் சங்குடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவருக்கு, "சங்கநாதர்' என்றும் பெயருண்டு. சிவன் இக்கோயிலில் இருந்து புறப்பாடாகும் வேளையில், இவர் சங்கு ஊதி அறிவிப்பார் என்றும் சொல்வதுண்டு.

சிறப்புக்கள் :

எந்த காரியங்கள் தொடங்கினாலும் இத்தல விநாயகரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி.

இத்தல விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.

தாயை இழந்தவர்கள் தாயுமானவர் திருக்கோயிலுக்கு வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை.

சுகப்பிரசவம் ஆவதற்கு தாயுமானவர் தாயுமானவர் திருக்கோயிலில் அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

போன்:  - -

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் திருச்சிக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.

கோட்டையுடன் கம்பீரமாக காட்சிதரும் கோவில் உச்சிப்பிள்ளையார் கோவில் இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. தாயுமானவர் திருக்கோயிலுக்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. 

கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும்.

குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் இத்தலத்தில் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்மனால் குடையப் பெற்ற இரண்டு குடவரைக் கோவில்கள் இங்கு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக